Published:Updated:

’திருமணம் செய்துகொள்ளும் உரிமை ஏன் இல்லை?’- மாற்றுப்பாலினத்தவர் உரிமையை மசோதா மீட்குமா - பகுதி 5

’திருமணம் செய்துகொள்ளும் உரிமை ஏன் இல்லை?’- மாற்றுப்பாலினத்தவர் உரிமையை மசோதா மீட்குமா - பகுதி 5
’திருமணம் செய்துகொள்ளும் உரிமை ஏன் இல்லை?’- மாற்றுப்பாலினத்தவர் உரிமையை மசோதா மீட்குமா - பகுதி 5

மறுக்கப்படும் திருமணம் மற்றும் குழந்தை தத்தெடுத்தல் உரிமை :

“கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்… தன்னைப் பெண்ணாக அங்கீகரிக்க, தனது பாலின அடையாளமான பிறப்புறுப்பை வெட்டி எறிந்து பெண்ணாக மாறுகிறாள் திருநங்கை. முழுமையாகப் பெண்னாக மாறிய அவளுக்குத் திருமணம் செய்துகொள்ள உரிமை இல்லையா” என்று அழுத்தமாகப் பேச ஆரம்பித்தார் திருநங்கை கல்கி சுப்பிரமணியம். 

“ஒரு திருநங்கைக்கான உரிமைகளில் பிரதானமானது திருமணம் மற்றும் குழந்தை தத்தெடுத்தல் உரிமை. அதைப் பற்றி இதுவரை யாருமே பேசியதில்லை. இவ்வளவு ஏன், மத்திய அரசு கொண்டுவந்துள்ள மாற்றுப் பாலினத்தவர்களின் (உரிமைப் பாதுகாப்பு) மசோதாவில்கூடப் பேசப்படவில்லை. இது, மிகப்பெரிய ஏமாற்றம்தான். நான் 2010-ம் ஆண்டில் திருநங்கைகளுக்கான திருமண இணையதளத்தை உருவாக்கினேன். இது, ‘உலகின் முதல் திருநங்கைகள் மேட்ரிமோனியல் வெப்சைட்’ என்று சொல்லப்படுகிறது. அந்தத் தளத்தில் சில திருநங்கைகளின் புகைப்படங்களைப் பதிவேற்றி ‘மணமகன்’ வேண்டும் என்று குறிப்பிட்டோம். சொன்னால் நம்ப மாட்டீர்கள், உலகம் முழுவதிலுமிருந்து சுமார் இரண்டாயிரம் பேர் வரை விருப்பம் தெரிவித்தார்கள். அதில், தேர்ந்தெடுத்து சிலரிடம் பேசினோம். அவர்கள் திருநங்கைகளைத் திருமணம் செய்துகொள்ளத் தயாராக இருந்தார்கள். அவர்களிடம், ‘பொது இடத்தில்தான் இந்தத் திருமணம் நடக்கும்’ என்று சொன்னோம். அனைவரும் பின்வாங்கினார்கள்; ‘ரகசியத் திருமணம் செய்துகொள்கிறோம்’ என்றார்கள். ரகசியமாகத் திருமணம் செய்துகொள்ள நாங்கள் என்ன கள்ளக்காதலிகளா? இந்தியத் தண்டனைச் சட்டம் 377 (IPC 377) தான் அவர்கள் மறுக்கக் காரணம். இதனால், நமக்கு எதுவும் பிரச்னை வருமோ என்று அனைவரும் பயப்படுகிறார்கள். இதனால் எங்கள் முயற்சி பாதியில் நின்றது. ஆனால், நம்பிக்கையை இழக்கவில்லை. ஒருநாள் இந்தியாவில் மாற்றுப் பாலினத்தவர்களின் நிலை மாறும். அதற்காகத் தொடர்ந்து போராடுவோம்” என்றார்.

பழைமை பேசும் IPC 377 :

தனது கள ஆய்வின் மூலம், ஆண்களுக்கிடையிலான பாதுகாப்பற்ற உடலுறவின் மூலமே ஹெச்.ஐ.வி பரவல் அதிகரிக்கிறது என்று நிரூபித்து, IPC 377 சட்டமானது தனது ஹெச்.ஐ.வி விழிப்பு உணர்வு பணிகளுக்குத் தடையாக இருக்கிறது எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்கிறார் சமூகச் செயற்பாட்டாளர் அஞ்சலி கோபாலன். மனு ஏற்கப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் முறையிடுகிறார். பின்னர், உயர் நீதிமன்றத்தில், மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. வருடம் 2009. விசாரணை முடிவில், ஒருபால் ஈர்ப்புடையவர்கள் (Same Sex) (ஆண் - ஆண் அல்லது பெண் - பெண்) உடலுறவுகொள்வது சட்டப்படி குற்றமாகாது என்று தீர்ப்பளிக்கிறது நீதிமன்றம். பின்னர் பல்வேறு சட்டப்போராட்டங்கள் நடைபெற்று அந்தத் தீர்ப்பு முடக்கப்பட்டது.

இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 377, பிரிட்டிஷ் அரசால் கொண்டுவரப்பட்ட சட்டமாகும். பிறப்புறுப்பைத் தவிர்த்து, வாய் மற்றும் ஆசனவாயில் புணர்வில் ஈடுபடுவது குற்றம் என்கிறது சட்டம். இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் வரை திருநங்கைகள், நம் சமூகத்தில் மிகவும் மரியாதையுடன்  நடத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கான உரிமைகள் காக்கப்பட்டிருக்கின்றன.  சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு திருநங்கைகளைக் குற்றவாளிகளாகச் சித்திரித்தது. நிரந்தரமாக அவர்கள் மீது குற்றவாளிகள் முத்திரை குத்தியது பிரிட்டிஷ் அரசாங்கம். அதன் பின்னர்தான் திருநங்கை சமூகத்தினருக்கான உரிமைகள் பறிக்கப்பட்டு பிச்சை எடுக்கவும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படவுமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் எனப் பல ஆய்வுகள் மீண்டும் மீண்டும்  நிரூபிக்கின்றன.

இதனைச் சற்று விரிவாகப் பார்க்கும்போது, பிணங்களுடனும், விலங்குகளோடும் வல்லுறவு வைத்துக்கொள்வதும் தண்டனைக்குரிய குற்றம் என்கிறது IPC 377. இதில் ’ஒருபால் ஈர்ப்புடையவர்கள்’ என்ற வார்த்தை குறிப்பிடப்படவில்லை. இந்த நேரத்தில், திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் ஒருபால் ஈர்ப்புடையவர்களா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இதனைக் கருத்தில்கொண்ட பல திருநங்கைகள் செயற்பாட்டாளர்கள், மத்திய அரசை முறையிட்டனர். நிலைக்குழுவின் முன் கோரிக்கை மனுக்களைக் கொண்டுவந்து அடுக்கினர்... திருமண உரிமை கோரினர். ஆனால், இதுவரை எந்தப் பதிலும் மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. சட்டத்தை இயற்றிய பிரிட்டிஷ் அரசாங்கமானது, 60-களிலேயே இந்தச் சட்டத்தைத் தனது நாட்டில் வாபஸ் பெற்றுக்கொண்டது இங்கிருக்கும் எத்தனை பேருக்குத் தெரியும்? பல நாடுகளில் மாற்றுப் பாலினத்தவர்களுக்கு முழு உரிமை அளித்து அவர்களைத் தங்களில் ஒருவராகப் பார்க்கிறது. இன்னும் சில நாடுகள் தங்கள் அமைச்சரவையில் இடம் கொடுக்கிறது. இவ்வளவு ஏன், பல திருநங்கைகளும், திருநம்பிகளும் நாட்டின் அதிகார மட்டத்தில் அமர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம், பழம்பெரும் வரையறைகளை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதே யதார்த்தமான உண்மை.

மாற்றுப் பாலினத்தவர்களுக்குத் திருமணம் ஒரு சவாலான விஷயம் என்றால், குழந்தை தத்தெடுத்தல் இன்னொரு சவாலான விஷயம். சாதாரண நபர்கள் ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து குழந்தையைத் தத்தெடுக்க வேண்டும் என்றாலே ஆயிரம் கேள்விகளோடு, பல்வேறு கட்டுப்பாடுகளைச் சந்திக்க வேண்டும். இதில் திருநங்கைகளின் நிலை பற்றி சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. தன்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடிந்தால் திருநங்கைகள் ஏன் குழந்தையைத் தத்தெடுக்க உரிமை கோருகிறார்கள்? கட்டுப்பாடுகள் இருக்கட்டும். உரிமை இல்லை என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. இதனை மத்திய அரசின் மசோதா பேசத் தவறிவிட்டது என்றே பெரும்பாலும் கருத்துத் தெரிவிக்கப்படுகிறது. 

இந்தியாவில் தமிழகத்தைத் தவிர, வேறெந்த மாநிலங்களிலும் திருநங்கைகள் குறித்த விழிப்பு உணர்வும், அதனையொட்டிய ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளும் பெரிய அளவில் இல்லை என்பதே உண்மை. ஒருகாலத்தில் திருநங்கைகள் உரிமை சார்ந்து பேச இந்தியாவில் யாரும் இல்லாத நேரத்தில் தமிழகத்திலிருந்து குரல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. கல்வி, மருத்துவம், அடிப்படை வசதிகள் சார்ந்து மாநில அரசுடன் போராடிக்கொண்டிருந்தார்கள். விளைவு, 2008 தி.மு.க. ஆட்சியின்போது ’அரவாணிகள் நலச் சங்கம்’ என்ற அமைப்பை அரசு உருவாக்கியது. இதன்மூலம், திருநங்கைகளுக்கு நலவாரிய அட்டை வழங்கப்பட்டது. அதனைவைத்து இலவச வீட்டுமனைப் பட்டா, இலவச ரேஷன் பொருள்கள், இலவச தையல் மிஷின்கள், இலவசக் கல்வி, காப்பீடு, இவ்வளவு ஏன், பால் மாற்று அறுவைச்சிகிச்சைகூட இலவசமாகச் செய்துகொள்ள முடியும். மேலும் பல்வேறு நலத் திட்டங்கள் திருநங்கைகளுக்குக் கிடைத்தன. தமிழக அரசு ஏற்படுத்திய நலவாரியமானது இப்போது எப்படிச் செயல்படுகிறது? தமிழக அரசின் நலவாரியம் இந்திய அளவில் உதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட என்ன காரணம்? 

(தொடர்ந்து அலசுவோம்…)

இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க...
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4