Published:Updated:

அரசியலிலிருந்தே அகற்றப்பட வேண்டிய தினகரன், ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ-வா?” - கொதிக்கும் இயக்கம்

அரசியலிலிருந்தே அகற்றப்பட வேண்டிய தினகரன், ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ-வா?” - கொதிக்கும் இயக்கம்
அரசியலிலிருந்தே அகற்றப்பட வேண்டிய தினகரன், ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ-வா?” - கொதிக்கும் இயக்கம்

இடைத்தேர்தல் வரலாற்றில் இப்படியான காட்சிகள் அரங்கேறியிருக்குமா என்பது சந்தேகம்தான். அப்படியான அதிரவைக்கும் காட்சிகளை அரங்கேற்றிவிட்டுச் சென்றுள்ளது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை உள்ளடக்கிய அ.தி.மு.க-வுக்கும், தினகரன் தரப்புக்கும் இடையே நடந்த இரட்டை இலைச் சின்னம் தொடர்பான போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்ட இடைத்தேர்தலை மீண்டும் நடத்துவதாக அறிவித்தது தேர்தல் ஆணையம். ஆட்சி அதிகார பலத்துடன் அ.தி.மு.க-வும், எதிர்க்கட்சிக்கே உரித்தான பலம், உள்ளூரைச் சேர்ந்த வேட்பாளர் என்ற கோஷத்துடன் தி.மு.க-வும் இத்தேர்தலைச் சந்தித்தன. இரட்டை இலைச் சின்னத்தையோ, கட்சியின் பெயரையோ டி.டி.வி. தினகரன் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டதால், ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டார் அவர். ஏற்கெனவே ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்ட தேர்தலில் தனக்கு ஒதுக்கப்பட்ட தொப்பிச் சின்னமோ அல்லது கிரிக்கெட் மட்டைச் சின்னமோ வேண்டும் எனக் கேட்ட தினகரனுக்கு இந்தமுறை 'பிரஷர் குக்கர்' சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டது. 'எதிரணியினருக்கு 'பிரஷர்' கொடுக்கவே இந்தச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது' என்ற கோஷத்துடன் களமிறங்கினார் தினகரன். 

டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 24-ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியானபோது ஆளும் தரப்பினருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் மிகப்பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றிலிருந்தே சுயேச்சையாகப் போட்டியிட்ட தினகரன் முன்னிலை வகித்தார். தினகரன் முன்னிலை பெறுவதை ஏற்க முடியாமல், அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்ட மதுசூதனன் ஆதரவாளர்கள் தகராறில் ஈடுபட்டனர். கைகலப்பும் ஏற்பட்டதால், வாக்கு எண்ணிக்கை சுமார் ஒருமணி நேரம் வரை நிறுத்தப்பட்டது.

பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாருடன், துணை ராணுவத்தினரும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் வரவழைக்கப்பட்டு, பதற்றம் தணிந்த நிலையில், மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தபோது, 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் தினகரன். அவரின் இந்த வெற்றி குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துகொண்டிருக்கின்றன. அதுவும் குறிப்பாக அதிகாரத்தில் உள்ள அ.தி.மு.க, எதிர்க்கட்சியான தி.மு.க ஆகிய இரண்டு பெரிய கட்சிகளின் வேட்பாளர்களையும் பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றுள்ளார் தினகரன் என்பதுதான் இதில் முக்கியமான அம்சம்.

தினகரன் எப்படி ஜெயித்தார் என்பதைவிட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த உறுப்பினர் எப்படிபட்டவர் என்பதை விவாதங்களில் ஈடுபடுவோர், நினைவு கூரவில்லை என்பதே சமூக ஆர்வலர்கள் வைக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டு. அந்த வகையில் தினகரன் யார், அவர் எப்படிப்பட்டவர் என்பது குறித்து மக்களிடையே தெளிவுபடுத்த சமூக இயக்கங்கள் தயாராகி வருகின்றன. அதன்படி, சட்டப்பஞ்சாயத்து இயக்கம், "தில்லாங்கடி தினகரன்" என்ற விரிவான கையேடு ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. அந்தக் கையேட்டில் தினகரனின் கணக்கில்வராத சொத்துகள் மற்றும் வழக்குகள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. 

இதுதொடர்பாக, சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர், சண்முக ஆனந்திடம் பேசியபோது, "ஜெயலலிதா, சசிகலா

இருவரும் செய்த ஊழல்கள் மூலம் சேர்க்கப்பட்ட சொத்துகளின் பினாமியாக இருந்தவர் தினகரன். தமிழகத்தில் அவர்கள் இருவரும் கொள்ளையடித்த அந்தச் சொத்துகளை வெளிநாடுகளில் தினகரன் எப்படிப் பதுக்கினார் என்பதை தகுந்த ஆவணங்களுடன் வெளியிட்டுள்ளோம். டிப்பர் இன்வெஸ்மென்ட், கேர் அண்டு தேசாய், மீர், வெஸ்ட் பேக் லிமிடட் உள்ளிட்ட நிறுவனங்களை வெளிநாடுகளில் போலியாக உருவாக்கி, தமிழகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை, அந்த நிறுவனங்களில் எவ்வாறு முதலீடு செய்தார் என்பது குறித்தும் தெரிவித்துள்ளோம். அந்நியச் செலாவணி மோசடி வழக்குகளின்கீழ், தினகரன்மீது ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு வழக்குகள் மட்டுமே தீவிரமடைந்தன. அந்த வழக்குகளும் மேல்முறையீடு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் தற்போது விசாரணை நடந்துகொண்டிருக்கின்றன. மற்ற 3 வழக்குகளை அப்படியே மழுங்கடித்துக் கொண்டிருக்கிறது தினகரன் தரப்பு. 

இந்தச் சூழலில் இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் அவர். அப்படிப்பட்ட நபர்தான் தற்போது ஆர்.கே. நகர் தொகுதியிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாகி உள்ளார். தினகரன் குறித்து மக்களிடையே சட்டப்பஞ்சாயத்து இயக்கம், தகவல்களைக் கொண்டு செல்லவிருக்கிறது. இந்த ஒரு தொகுதியோடு தினகரனின் செயல்பாடு நின்றுவிடாது. அடுத்து, தமிழகத்தின் முதலமைச்சராவதற்கான அரசியல் காய்நகர்த்தல்களை அவர் மேற்கொள்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. குற்றவாளிகள்தாம், தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்றால் நீதிமன்றங்களும், சிறைச்சாலைகளும் எதற்கு என்ற கேள்வி எழுகிறது. அதுமட்டுமன்றி, தினகரனின் இந்த வெற்றி தவறு செய்பவர்களுக்கும் முன்னுதாரணமாக அமைந்துவிடும். எனவே, அவர் அரசியல் களத்திலிருந்து அகற்றப்பட வேண்டியவர். அதற்காக, தினகரன் செய்த குற்றங்களைப் பொதுவெளியில் வைத்து மக்களிடையே தெளிவுபடுத்த இருக்கிறோம்" என்றார்.