Published:Updated:

பக்கெட்டில் அள்ளிய எண்ணெய்... கனவான அனிதா... கந்துவட்டிக் கொடூரம்... - தமிழகம் 2017 ஒரு மீள்பார்வை! #2017Rewind

பக்கெட்டில் அள்ளிய எண்ணெய்... கனவான அனிதா... கந்துவட்டிக் கொடூரம்... - தமிழகம் 2017 ஒரு மீள்பார்வை! #2017Rewind
பக்கெட்டில் அள்ளிய எண்ணெய்... கனவான அனிதா... கந்துவட்டிக் கொடூரம்... - தமிழகம் 2017 ஒரு மீள்பார்வை! #2017Rewind

ன்னும் மூன்று நாள்களுடன் முடிவுபெறக் காத்திருக்கிறது 2017. இந்த ஆண்டில் எத்தனையோ நிகழ்வுகளை உலகம் சந்தித்திருக்கிறது. அதிலும் குறிப்பாகத் தமிழகம் சந்தித்த விஷயங்கள் பற்றி ஒரு பட்டியலே போடலாம். அந்தப் பட்டியலில் அதிர்ச்சிக்குள்ளாக்கிய முக்கியமான சில நிகழ்வுகளை இங்கே பார்ப்போம்...

சூடுபிடித்த மதுவிலக்குப் போராட்டங்கள்!

‘‘தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாகக் குறைக்கப்படும்” என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியின்போது சொல்லியிருந்தார். அதன்படி, சில கடைகளும் மூடப்பட்டன. ஆனால், அவருடைய மரணத்துக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் மீண்டும் அந்தக் கடைகளைத் திறக்க முயற்சி செய்தனர். இதுதவிர, மதுவிலக்கால் மரணங்கள் அதிகமாகியதால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகத் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் டாஸ்மாக் கடைகளுக்குள் புகுந்த பெண்கள், அந்தக் கடைகளை அடித்து நொறுக்கியதுடன்... கடைக்குள் இருந்த மதுப்பாட்டில்களையும் தூக்கிக் கொண்டுவந்து வெளியே போட்டு உடைத்தனர். குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் திருப்பூர் சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராடியபோது... ஈஸ்வரி என்ற பெண்ணை ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன் (அப்போது அங்கு பணியில் இருந்தார்)  கன்னத்தில் அறைந்த வீடியோ காட்சி நாட்டில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. 

தீயில் கருகிய சென்னை சில்க்ஸ்!

சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் மிகவும் பிரபலமானதாகவும், பிரமாண்டமானதாகவும் காட்சியளித்தது சென்னை சில்க்ஸ். இந்தக் கடையில் கடந்த மே மாதம் 31-ம் தேதி விடியற்காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், அந்தக் கட்டடம் முழுதும் தீக்கிரையானது. இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சாம்பல் ஆயின. அந்தக் கட்டடத்தின் ஏழு தளங்களும் சேதமடைந்தன. தீயை அணைக்கும் பணியில் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும், போலீஸாரும் ஈடுபட்டனர்.  இரண்டு நாள்களுக்குப் பிறகு முழுவதுமாகத் தீ அணைக்கப்பட்டது. தீயினால் கட்டடம் உறுதியில்லாததை அடுத்து அந்தக் கட்டடத்தை இடிக்க அரசு உத்தரவிட்டது. பின்னர் ராட்சத இயந்திரங்கள்மூலம் கட்டடம் முழுவதுமாக இடிக்கப்பட்டது. இந்தக் கட்டடம், விதிமுறையை மீறிக் கட்டியதாகப் புகார்கள் எழுந்தன.

கடலில் கலந்த எண்ணெய்க் கசிவு!

சென்னை அருகே எண்ணூர் துறைமுகத்தில் கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்டன. ஈரானில் இருந்து எரிவாயுவை ஏற்றிக்கொண்டு வந்த ‘எம்.டி.பி.டபிள்யூ மேப்பிள்’ என்ற கப்பலும், மும்பையில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு வந்த ‘எம்.டி. டான் காஞ்சிபுரம்’ என்ற கப்பலும் எண்ணூர் துறைமுகத்தில் மோதிக்கொண்டன. துறைமுகத்துக்கு வெளியே ஒரு கடல்மைல் தொலைவில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக இரண்டு கப்பல்களும் பயங்கர சத்தத்துடன் நேருக்குநேர் மோதிக்கொண்டன. மும்பையில் இருந்து வந்த கப்பலின் பாகங்கள் உடைந்ததால், அதில் கொண்டுவரப்பட்ட எண்ணெய்ப் பீப்பாய்களிலிருந்து கச்சா எண்ணெய்க் கசிந்து கடலில் கலந்தது. இந்தக் கச்சா எண்ணெய்க் கசிவு, எண்ணூரில் இருந்து திருவான்மியூர்வரை பரவியிருந்தது. 65 டன் எடைகொண்ட கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இது, கடலில் கலந்து, கடல்நீரை மாசுபடுத்தியதோடு கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழக்கக் காரணமாக அமைந்தது. மீன்வளத்துக்குப் பாதிப்பை உண்டாக்கியது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவக் குடும்பங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டன. 

நள்ளிரவில் அகற்றப்பட்ட சிவாஜி சிலை!

சென்னைக் கடற்கரைச் சாலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தி.மு.க. ஆட்சியில் வெண்கல உருவச் சிலை நிறுவப்பட்டது. ‘‘இந்தச் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் அதனை அகற்ற உத்தரவிட வேண்டும்’’ என்று நாகராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதன் காரணமாக, ‘சிவாஜி சிலையை அகற்றுவது’ பற்றி முடிவெடுக்கும்படி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், ‘விரைவில் சிவாஜி சிலை அகற்றப்படும்’ என்று தமிழக அரசு சார்பில் சொல்லப்பட்டது. இதற்குப் பயங்கர எதிர்ப்புக் கிளம்பியது. இந்த நிலையில், தமிழக அரசு, நடிகர் சங்கம் மூலம் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட இடம் ஒதுக்கிக் கொடுத்தது. நடிகர் சங்கம், சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டாத நிலையில், தமிழக அரசே அதைக் கட்டியது. ஜெ-வின் மறைவுக்குப் பிறகு, விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ‘சிவாஜி கணேசனுக்கு அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. அதன் பணிகள் நிறைவடைந்த பிறகு, சிலை வேறு இடத்தில் நிறுவப்படும். சிவாஜி சிலை மே 18-ம் தேதிக்குள் வேறு இடத்துக்கு மாற்றப்படும்’ என்று தமிழக அரசு தனது மனுவில் உறுதியளித்தது. இதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம்... அந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்தது. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி நள்ளிரவு, அந்தச் சிலை அகற்றப்பட்டு அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டது. 

மருத்துவக் கனவைப் பறித்த அனிதாவின் மரணம்!

ஓர் ஊரின் மருத்துவக் கனவைச் சுமந்ததோடு... தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நிற்கும் மாணவர்களின் பிரதிநிதியாக உச்ச நீதிமன்றம்வரை சென்று சட்டரீதியாகப் போராடிய அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா, தனது மருத்துவக் கனவு தகர்ந்ததால் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் 12-ம் வகுப்பில் 1,176 மதிப்பெண்கள் மற்றும் கட்ஆப் மதிப்பெண் 196.5 பெற்று மருத்துவராக வேண்டுமென்பதையே லட்சியமாக வைத்திருந்தார். இவரின் இந்த ஆசைக்கு மத்திய அரசு கொண்டுவந்த நீட் தீர்வு பெரும் இடியாக விழுந்தது. இருப்பினும் நீட் தேர்வு எழுதிய அனிதா, அதில் 700-க்கு 86 மதிப்பெண்களே பெற்றார். இதனால் மருத்துவப் படிப்பு என்பது வெறும் கனவாகப் போய்விடுமோ என்ற நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்றார். ஆனால், ஒரு மாநிலத்துக்கு மட்டும் நீட் தேர்வு விலக்கு அளிக்க முடியாது என தமிழக மாணவர்களின் கனவைச் சிதைத்தது உச்ச நீதிமன்றம். இந்தத் தீர்ப்பால் மன அழுத்தத்தில் இருந்த அனிதா, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை உண்டாக்கியதோடு, நீட் தேர்வுக்காக எதிராகப் போராட்டங்களும் நடைபெற்றன. 

கந்துவட்டிக் கொடுமையால் உயிரிழந்த குடும்பம்!

கந்துவட்டிக் கொடுமை காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு குடும்பமே தீக்குளித்தது. நெல்லை மாவட்டம் காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் முத்துலட்சுமி என்பவரிடம் கடன் வாங்கினார். அதற்கு கந்து வட்டி வசூலித்ததால் பணத்தைச் செலுத்த முடியாமல் இசக்கிமுத்து திணறினார். இந்த நிலையில், காவல் துறையினரும் கடன் கொடுத்தவர்களுக்கு ஆதரவாக இசக்கிமுத்து குடும்பத்தினரை மிரட்டினார்கள். இதுதொடர்பாக நெல்லை ஆட்சியரிடம் 5 முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், கந்துவட்டிக் கும்பலின் நெருக்கடி ஒருபக்கம், காவல் துறையினரின் நெருக்குதல் மறுபக்கம் என இசக்கிமுத்து மற்றும் அவர் மனைவி சுப்புலட்சுமி ஆகியோர் மன அழுத்தத்துக்கு உள்ளானார்கள். இதனால் ஆட்சியரிடம் 6-வது முறையாக மனு அளிக்க வந்த அவர்கள், திடீரென குழந்தைகளுடன் சேர்ந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டனர். இதில் அந்தக் குடும்பமே பலியாகியது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கந்துவட்டி புகார்மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்ட பிரிட்ஜோ!

இலங்கைக் கடற்படையினரின் கொடூரக் கொலைவெறிக்குப் பலியானார் 21 வயதே ஆன மீனவர் பிரிட்ஜோ. இவர் ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்தவர். கடந்த மார்ச் 6-ம் தேதி மாலை, ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார் மீனவர் பிரிட்ஜோ. அன்று இரவு கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மீனவர் பிரிட்ஜோவின் கழுத்தின் பின்புறம் குண்டுபாய்ந்தது. ரத்த வெள்ளத்தில் மிதந்த பிரிட்ஜோவுக்கு இந்தியக் கடற்படையினரின் உதவி கிட்டாததால் பரிதாபமாக உயிரிழந்தார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் பலியாகியிருந்தது மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 


தற்கொலை செய்துகொண்ட 4 மாணவிகள்!
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகிலுள்ள பனப்பாக்கத்தில், 11-ம் வகுப்பு படித்த மாணவிகள் தீபா, மனிஷா, சங்கரி, ரேவதி என்ற நான்கு பேர், கடந்த நவம்பர் 24-ம் தேதியன்று ஒரே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். ஆசிரியர்கள் அந்த மாணவிகளைத் திட்டியதாகவும் பள்ளிக்குப் பெற்றோரை அழைத்து வருமாறும் கூறியுள்ளனர். இதைப் பெற்றோரிடம் கூறாத மாணவிகள் 4 பேரும், வழக்கம்போல் பள்ளிக்குச் சென்று புத்தகப் பைகளை வகுப்பில் வைத்துவிட்டு யாரிடமும் சொல்லாமல் வெளியே கிளம்பிச் சென்று கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதுதொடர்பாக நான்கு ஆசிரியைகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தமிழக அளவில் அதிர்ச்சி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

தமிழகத்தை உலுக்கிய தஷ்வந்த்!

தமிழகம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத பெயர் ‘தஷ்வந்த்’.  சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரின் ஆறு வயது மகள் ஹாசினி. இவர், கடந்த பிப்ரவரி மாதம் காணாமல் போனார். ஹாசினியின் தந்தை பாபு அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை நடத்திவந்தனர். பாபு வசித்துவந்த அதே குடியிருப்பைச் சேர்ந்த தஷ்வந்த் என்ற 24 வயது இளைஞரின் மீது சந்தேகம் வரவே போலீஸார் அவரைக் கைதுசெய்தனர். தஷ்வந்த், சிறுமி ஹாசினியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டு, உடலை அனகாபுத்தூர் அருகே எரித்தது விசாரணையில் தெரியவந்தது. கொலை மற்றும் பலாத்காரம் வழக்கில் கைதுசெய்யப்பட்ட தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், தஷ்வந்த் மீதான குண்டர் சட்டம் தொடர்பாக போலீஸ் தரப்பிலிருந்து உரிய விளக்கமளிக்காததால் நீதிமன்றம் குண்டர் சட்டத்தை ரத்து செய்தது. இதனால் சிறையில் இருந்து வெளியேவந்த தஷ்வந்த் தனது பெற்றோருடன் வசித்துவந்தார். தஷ்வந்த்துக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பெரும் எதிர்ப்பும் கிளம்பியது. இந்த நிலையில், தனது தாய் சரளாவைக் கொன்றுவிட்டு வீட்டிலிருந்த நகை, பணத்துடன் தலைமறைவாகிவிட்டார் தஷ்வந்த். இதையடுத்து போலீஸாரின் தீவிரத் தேடுதலில் சிக்கிய தஷ்வந்த், அவர்களிடமிருந்து தப்பிச் சென்றான். பின்னர், மீண்டும் போலீஸின் பிடியில் சிக்கிய தஷ்வந்த் சென்னை அழைத்துவரப்பட்டு விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்டான். 

மீனவர்களைப் பலி வாங்கிய ஒகி! 

கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி வங்காள விரிகுடா கடலில் உருவான ஒகி புயல் தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவுகளைத் தாக்கியது. இதனால் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் காணாமல் போனார்கள். புயல், மழை காரணமாகப் பல ஏக்கர் பயிர்கள் நாசமாயின. ரப்பர், தேக்கு, தென்னை எனப் பலவகை மரங்கள் முறிந்து விழுந்தன. மின் கம்பங்கள் பல சாய்ந்து விழுந்தன. சாலைகள் சேதமடைந்தன. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வுசெய்தார். பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்தப் புயலால் பல மீனவர்கள் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.