Published:Updated:

“காட்டிக் கொடுத்த டூவீலர்..!” - கௌசல்யா - சங்கர் வழக்கு : ஒரு திட்டமிட்ட ஆணவப் படுகொலையின் சாட்சியங்கள் பகுதி 2

“காட்டிக் கொடுத்த டூவீலர்..!” -  கௌசல்யா - சங்கர் வழக்கு : ஒரு திட்டமிட்ட ஆணவப் படுகொலையின் சாட்சியங்கள் பகுதி 2
“காட்டிக் கொடுத்த டூவீலர்..!” - கௌசல்யா - சங்கர் வழக்கு : ஒரு திட்டமிட்ட ஆணவப் படுகொலையின் சாட்சியங்கள் பகுதி 2

சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் காலை சுறுசுறுப்பாக நிகழும் காய்கறி வியாபாரங்களுக்கிடையே பரபரப்பாக அரங்கேறும் மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி உள்ளிட்ட கந்துவட்டிக் களேபரங்களையும் கவனிக்கலாம். காலையில் 9,000 ரூபாய்க் கடனாக வாங்கிச் செல்பவர் மாலைக்குள் வட்டியுடன் சேர்த்து 11,000 ரூபாயாக அதனைத் திருப்பித் தரவேண்டும். சரி, கந்துவட்டியைப் பற்றி இங்கே எதற்குப் பேச வேண்டும்? கந்துவட்டிக்கும் கௌசல்யா - சங்கர் வழக்குக்கும் என்ன தொடர்பு?  தொடர்பு இருக்கிறது. அதுதான், கௌசல்யாவையும் சங்கரையும் அரிவாளால் தாக்கிய குற்றவாளிகளைக் காட்டிக் கொடுத்தது.

தாக்குதல் சம்பவம் பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன்பு கௌசல்யாவின் அப்பா சின்னசாமியைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்... சின்னசாமி. தந்தை பெயர் பாலுச்சாமி. அம்மா பெயர் அம்சவேணி. மனைவி அன்னலட்சுமி, 19 வயது மகள் கௌசல்யா மற்றும் 16 வயது மகன் கௌதமனுடன் பழனி திருநகரில் வசித்துவந்தார். கூடவே, பழனியில் அவரது பெயரையும் அன்னலட்சுமி பெயரையும் சேர்த்து, ‘சி.ஏ டிராவல்ஸ்’ என்கிற டிராவல் நிறுவனத்தையும் நடத்திவருகிறார். அதே திருநகர் பகுதியில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டில் பல ஆட்டோ ஓட்டுநர்கள் இவருக்குப் பழக்கம். அவ்வப்போது அவர்களுடன் சேர்ந்து சூதாட்டத்திலும் ஈடுபடுவார். அப்போதுதான் தங்களது குலதெய்வமான உசிலம்பட்டி 18-ம்படி கருப்பசாமி கோயிலுக்குச் செல்வதன் வழியாகத் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஜெகன் (எ) ஜெகதீசனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கூடவே மதன் (எ) மைக்கேலும் செல்வக்குமாரும் உறவினர்களாக நெருக்கமாகியிருக்கிறார்கள். அத்துடன் மணிகண்டன் என்பவரும் பழக்கமாகியிருக்கிறார். பணம் வட்டிக்கு விடும் பழக்கமுள்ள சின்னசாமிக்கு பழனி தாலுக்கா காவல் நிலையத்திலும், கஞ்சா தொடர்பாகத் திண்டுக்கல் போதைப்பொருள் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவிலும் ஏற்கெனவே ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருக்கிறது. 

வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களிடையே, ‘மொய்விருந்து வைத்தல்’ என்னும் நிகழ்வும் வழக்கத்தில் உண்டு. அதாவது, மொய் விருந்து வைத்து ஊரையே அழைத்து உணவளிப்பார்கள். சாப்பிட்டவர் உணவளித்தவருக்கு இரட்டிப்பாகப் பணத்தை இலையின்கீழ் வைத்துவிட்டு வரவேண்டும். சாப்பிட்டவர் உணவளித்தவரிடம் வட்டிக்கும் பணம் பெற்றிருப்பார் என்னும் சூழலில்தான் வட்டிக்கு வாங்கிய பணத்துடன் சேர்த்து இரட்டிப்பாக பணத்தைத் தந்துவிட்டு வரவேண்டும். அப்படி  மொய்விருந்து வைத்துக் கிடைத்த ரூ. 13 லட்சத்தில் தனியாக ஒரு வீட்டைக் கட்டியிருக்கிறார் சின்னசாமி. 

கந்துவட்டி சின்னசாமியிடம் பழனி அருகேயுள்ள பாப்பம்பட்டி குப்பம்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் வட்டியாக 70,000 ரூபாய் பணம் வாங்கியிருந்தார். அதில் 20,000 மட்டுமே கார்த்திகேயனால் திருப்பிக் கொடுக்க முடிந்தது. அதனால் அவரது டி.என்.57 ஏ.ஆர்- 0569 என்கிற எண்ணுடைய பஜாஜ் டிஸ்கவர் வண்டியைப் பறிமுதல் செய்துவைத்திருந்தார் சின்னசாமி. வண்டியைப் பறிமுதல் செய்தவர் அடையாளம் தெரியக் கூடாது என்பதற்காக நம்பர் பிளேட்டில் உள்ள எண்ணை அழித்துவிட்டு மறைத்து வைத்துள்ளார்.   

இந்த வண்டிதான் சின்னசாமி தனது கூட்டாளிகளை ஏவி கௌசல்யா சங்கரை கொலை செய்யத் திட்டமிட்டதுக்கும் உதவியது; போலீஸார் கொலையாளிகளைக் கண்டுபிடிக்கவும் உதவியது. பெற்ற மகளை ஏன் கொலை செய்யத் துணிந்தார் சின்னசாமி... கௌசல்யா காதல் திருமணம் செய்தது தவறா... உண்மையில் என்ன நடந்தது? 

(தொடர்ந்து பேசுவோம்...)

இந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க...