Published:Updated:

ரசிகர்களின் பேரன்புக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்! நெகிழ்ந்த ரஜினி

ரசிகர்களின் பேரன்புக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்! நெகிழ்ந்த ரஜினி
ரசிகர்களின் பேரன்புக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்! நெகிழ்ந்த ரஜினி

ரசிகர்களின் பேரன்புக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்! நெகிழ்ந்த ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஐந்தாவது நாளாக ரசிகர்களைச் சந்தித்து வருகிறார். 


கடந்த மே மாதத்தில் ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, தற்போது இரண்டாவது முறையாகக் கடந்த 26-ம் தேதி முதல் ரசிகர்களைச் சந்தித்து வருகிறார். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட மாவட்ட ரசிகர்களைச் சந்தித்து, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொள்கிறார் ரஜினி. அந்தவகையில் 5-ம் நாளான இன்று மத்திய சென்னை, வட சென்னை மாவட்ட ரசிகர்களுக்கு ரஜினி புகைப்படம் எடுத்து வருகிறார். அதற்கு முன்பாக சென்னை ரசிகர்கள் முன்பாக பேசிய ரஜினி, தனது திரை வாழ்க்கை குறித்து பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். 

அவர் பேசுகையில், ‘1960-களில் மெட்ராஸ் குறித்து கர்நாடகாவில் பெருமையாகப் பேசிக்கொள்வார்கள். நீதிமன்றங்களானாலும் சரி, கல்வி நிலையங்கள் ஆனாலும் சரி, அரசாக இருந்தாலும் சரி மெட்ராஸ் போல் இருக்க வேண்டும் என்று பேசிக்கொள்வார்கள். எனக்குள் இருக்கும் நடிகனை முதன்முதலில் அடையாளம் கண்டுகொண்டது என் நண்பன் ராஜ் பகதூர். நாடகங்களில் நடிக்கச் செல்லும்போது அவன், என்னையும் அழைத்துச் செல்வதுண்டு. நாடகங்களில் துரியோதனன் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று அவன் விருப்பப்பட்ட போதும், பீஷ்மர் வேடமே அவனுக்குக் கிடைக்கும். அந்த நாடகத்தை நடத்தியவர்கள் என்னை துரியோதனனாக நடிக்க வைத்தனர். கர்நாடகாவிலிருந்து சென்னைக்குக் கடந்த 1973-ல் வந்தேன்.

இங்கு வந்தபின்னர் இயக்குநர் பாலசந்தரைப் பார்க்கச் சென்றிருந்தேன். ஒரு சில காட்சிகள் நடித்துக் காட்ட அவர் சொன்னார். ஆனால், தமிழ் தெரியாது என்று கூறியவுடன், உனக்குத் தெரிந்த சில வசனங்களைப் பேசு என்று கூறினார். அதன்பின்னர், ஒரு சில நிமிடங்கள் கழித்து தமிழ் மட்டும் கற்றுக்கொள் உன்னை நான் வேறு உயரத்துக்குக் கொண்டு செல்வேன் என்றார். சொன்னபடியே சினிமாவில் நடிப்பதற்கு பாலசந்தர் என்னைத் தயார் செய்தார். அபூர்வ ராகங்கள் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்துவைத்த அவர், என்னை தத்தெடுத்துக் கொண்டார்.

அவருக்குப் பின்னர் பஞ்சு அருணாச்சலம், முத்துராமன், பி. வாசு உள்ளிட்டோர் என்னை ஸ்டாராக்கினார்கள். அதன்பின்னர், சுரேஷ் கிருஷ்ணா மற்றும் மணிரத்னம் போன்றவர்கள் என்னை சூப்பர் ஸ்டாராக்கினார்கள். அதன்பிறகு, இந்தியாவையே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு நடிகனாக ஷங்கர், என்னை மாற்றினார். கிராபிக்ஸ் வேலைகளால் 2.0 படம் தாமதமாகிறது. 2018 ஜனவரி 26-ல் வெளியிடத் திட்டமிட்டிருந்த படம், ஏப்ரல் 14-ம் தேதிக்குத் தள்ளிப் போயிருக்கிறது. காலாவில் இதுவரை பார்க்காத ரஜினிகாந்தை ரஞ்சித் காட்டியிருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கும்போது, விரும்பி அதில் நான் நடித்தேன்.

ரசிகர்கள் என் மீது செலுத்தும் அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. சிங்கப்பூரில் நான் சிகிச்சைக்குச் சென்றிருந்தபோது எனக்காக ரசிகர்கள் செய்த நேர்த்திக் கடன்கள் என்னைக் கலங்கச் செய்தது. அதிலும் ஒரு ரசிகர் எழுதியிருந்த கடிதம், இன்று நினைத்தாலும் எனக்குக் கண் கலங்குகிறது. அதில், ‘’நீங்கள் சினிமாவில் நடித்து எங்களை மகிழ்விக்க வேண்டாம். அரசியலுக்கு வந்து எங்களைக் காப்பாற்ற வேண்டாம். உயிரோடு வந்தால் மட்டும் போதும் தலைவா’’ என்று எழுதப்பட்டிருந்தது’ என்று நெகிழ்ந்தார்.  
 

அடுத்த கட்டுரைக்கு