Published:Updated:

‘தமிழ்நாட்டை ஆண்டவனாலயும் காப்பாத்த முடியாது!’ என ரஜினி சொன்ன பிறகு அரசியலுக்கு வந்த 16 பேர்!

‘தமிழ்நாட்டை ஆண்டவனாலயும் காப்பாத்த முடியாது!’ என ரஜினி சொன்ன பிறகு அரசியலுக்கு வந்த 16 பேர்!
‘தமிழ்நாட்டை ஆண்டவனாலயும் காப்பாத்த முடியாது!’ என ரஜினி சொன்ன பிறகு அரசியலுக்கு வந்த 16 பேர்!

'அரசியலுக்கு வருவது உறுதி. சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் புதியக் கட்சி துவங்குவேன்'  என,  கால்நூற்றாண்டுகளாக தன் அரசியல் பிரவேசத்துக்காக காத்திருக்கும் ரசிகர்களிடம் சொல்லியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். 'தமிழ்நாட்டின் வெற்றிடத்தை நிரப்புவார். புதுக்கட்சியைத் தொடங்குவார்' என்ற ஆர்வமும், பரபரப்பும் ரசிகர்களிடம் நிரம்பி இருப்பதை பார்க்க முடிகிறது. 

 ”பதவிக்கு ஆசைப்பட்டவன் நான் அல்ல. அப்படி பதவி ஆசை இருந்திருந்தால் பல ஆண்டுகளுக்கு முன்னரே நான் நாற்காலியில் அமர்ந்திருப்பேன். 45 வயதில் இல்லாத பதவி ஆசை இப்போது வருமா? நான் இப்போது அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைப்பது ஜனநாயக ரீதியாக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அரசியல் கெட்டு போய்விட்டது. பிற மாநிலங்கள் நம்மை பார்த்து சிரிக்கின்றன. இந்த நேரத்திலும் நான் மக்களுக்காக அரசியலுக்கு வரவில்லை என்றால், நான் சாகும்வரை குற்றவுணர்ச்சி இருக்கும்.  அனைத்து சிஸ்டத்தையும் மாற்ற வேண்டும். ஆண்டவனின் அருளும் மக்களின் நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும். இது இரண்டும் எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். சாதி மத பேதமற்ற ஆன்மீக அரசியலை முன்னெடுக்க வேண்டும். ’உண்மை, உழைப்பு, உயர்வு இது தான் என் மந்திரம். வருகிற சட்டமன்ற போரில் நம் படையும் இருக்கும். நான் ஜெயித்து நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் மூன்று ஆண்டுகளில் ராஜினாமா செய்வேன்’” என்கிறார் ரஜினிகாந்த். 

தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஆந்திராவில் என்.டி.ஆர். என அரசியலில் வெற்றி பெற்ற சினிமா நடிகர்கள் முன்மாதிரிகள் இருக்கிறார்கள். இவர்கள் வாய்ப்புகள் வந்தபோது தயங்காமல் அரசியலில் குதித்தவர்கள். தமிழகத்தில் ரஜினிகாந்த் அரசியல்குறித்த தன் கருத்தைத் தெரிவிக்கத் தொடங்கிய பின்னர், தமிழகத்தில் நடிகர்களில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் எண்ணிக்கை விரல் எண்ணிக்கையில் அடங்காதவை. அவர்கள் யார், அரசியல் களம் கண்டு அவர்கள் என்னவானார்கள் என்பதைதான் பார்க்கப்போகிறோம்.

நடிகர் சரத்குமார்

1995-ம் ஆண்டு `பாட்ஷா' பட விழாவில், அவர் அரசியல் குறித்து பேசத் தொடங்கினார். அப்போது ஊழல் புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளால் ஜெயலலிதா அரசு சிக்கலுக்குள்ளாக... ஜெயலலிதாவுக்கு மாற்றாக முன்வைக்கப்பட்டார் ரஜினிகாந்த். 1996 தேர்தலில் ரஜினி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், அவர் போட்டியிடாமல் தி.மு.க.வை ஆதரித்தார். அப்போது அரசியலில் கால்பதித்தவர் நடிகர் சரத்குமார். தி.மு.க.வில் இணைந்த அவர், 1998 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இருந்தாலும் 2002-ல் மாநிலங்களவை உறுப்பினரானார். 2006-ல் தி.மு.க.வில் இருந்து வெளியேறிய சரத்குமார், அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். பின்னர் அ.தி.மு.க-வில் இருந்து விலகியவர், 2007-ம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொடங்கினார். 2011-ல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து இரட்டை இலைச்  சின்னத்தில் போட்டியிட்ட சரத்குமார் எம்.எல்.ஏ.வானார். 2016-ல் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட அவர், தோல்வியைத் தழுவினார்.

விஜயகாந்த் 

ரஜினிகாந்த்துக்கு வெகுநாள்கள் பின்னரே அரசியல் ஆசை துளிர்விட்டது விஜயகாந்த்துக்கு. ரசிகர் மன்றங்களை பலப்படுத்தி, அதன் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தி வந்த விஜயகாந்த், 2005-ம் ஆண்டு அதிரடியாக அரசியலில் களமிறங்கினார். தே.மு.தி.க. எனும் கட்சியைத் தொடங்கிய அதேவேகத்தில் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகவும் ஆனார். தொடர்ந்து 2011 சட்டமன்ற தேர்தலில் தன் கட்சி பிரதான எதிர்க்கட்சியாக, தி.மு.க.வை பின்னுக்குத்தள்ளி எதிர்க்கட்சித்தலைவரானார் விஜயகாந்த். தொடர்ந்து கூட்டணி குழப்பம், உடல் நலக்குறைவு என வீழ்ச்சியை சந்திக்கத்துவங்கியவர், 2016 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

நடிகர் நெப்போலியன்

ரஜினிக்குப் பிறகு அரசியலில் களம் கண்ட நடிகர்களில் ஒருவர் நெப்போலியன். 1990களின் இறுதியில் தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்ட நடிகர் நெப்போலியன், 2001-ம் ஆண்டு முதல் முறையாக வில்லிவாக்கம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அடுத்து 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மயிலாப்பூரில், எஸ்.வி.சேகரிடம் தோல்வியைச் சந்தித்த நெப்போலியன், 2009-ம் ஆண்டு பெரம்பலூர் மக்களவைத்தொகுதியில் வென்று, மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். ஸ்டாலின் - அழகிரி மோதலால் கட்சியை விட்டு வெளியேறிய நெப்போலியன் இப்போது பி.ஜே.பி.யின்  மாநிலத் துணைத்தலைவர்.

ஜெ.கே.ரித்தீஷ்

கானல் நீர், நாயகன், பெண் சிங்கம் போன்ற படங்களில் நடித்தவர் ஜெ.கே. ரித்தீஷ், திடீரென தி.மு.க.வில் இணைந்து அரசியல் களம் கண்டார். அதேவேகத்தில் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 2014-ம் ஆண்டு ஸ்டாலின் - அழகிரி மோதலின்போது, தி.மு.க.வின் மீது பல குற்றச்சாட்டுகளைக் கூறி கட்சியில் இருந்து வெளியேறியவர், அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

வடிவேலு

சுமார் இருபது ஆண்டுகளாக சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்திவந்த இவர், 2011-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், திடீரென அரசியலில் பிரவேசித்தார். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தைக் கடுமையாக விமர்சித்து, தி.மு.க. கூட்டணிக்குப் பிரசாரம் செய்த இவர், அந்தத் தேர்தலில் தி.மு.க. படுதோல்வியைச் சந்திக்க பெரும் நெருக்கடிக்குள்ளானர். தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் கிட்டத்தட்ட இரு ஆண்டுகள் சினிமாவில் தலைகாட்டாமல் இருக்கும் அளவுக்கு அரசியலால் கடும் சரிவை சந்தித்தார்.

குஷ்பு

தொண்ணூறுகளில் தமிழகத்தின் முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகை குஷ்பு. அரசியலில் கால்பதித்தது 2010-ல். கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்ட குஷ்புதான், 2011 சட்டமன்ற மற்றும் 2014 நாடாளுமன்ற தேர்தலின் ஸ்டார் பேச்சாளர். அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவுக்கு எதிராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட குஷ்பு, 2014-ம் ஆண்டு தி.மு.க.வில் ஏற்பட்ட உட்கட்சி குழப்பத்தில் கட்சியைவிட்டு வெளியேறினார். பின்னர் சோனியாகாந்தி, ராகுல்காந்தியை சந்தித்து காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டவர், இப்போது காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர்.

விஜயசாந்தி

ரஜினி அரசியல் பேசத்தொடங்கிய நேரத்தில், ரஜினியுடன் மன்னன் படத்தில் இணைந்து நடித்தவர் விஜயசாந்தி. 1998-ல் பி.ஜே.பி.யில் தன்னை இணைத்துக்கொண்ட விஜயசாந்தி, பி.ஜே.பி. மகளிர் அணிச் செயலாளராக பதவி வகித்தார். 1999 நாடாளுமன்ற தேர்தலில், கடப்பா தொகுதியில் சோனியா காந்தி போட்டியிடுவார் என சொல்லப்பட்டபோது, அவருக்கு எதிராக வேட்புமனுத்தாக்கல் செய்தார் விஜயசாந்தி. சோனியா வேறு தொகுதியில் போட்டியிட... வேட்புமனுவை திரும்பபெற்றார் விஜயசாந்தி.
தனிக்கட்சியைத் தொடங்கி, பின்னர் அதை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியுடன் இணைத்த, விஜயசாந்தி, 2004 வரை அரசியல், சினிமா இரண்டிலும் கவனம் செலுத்திவந்தார். 2004க்கு அரசியலில் மட்டும் கவனம் செலுத்தத் தொடங்கியவர், தெலுங்கானா மாநிலத்துக்காக தொடர்ச்சியாக போராடினார். தெலங்கானா ராஷ்ட்டிர சமிதி கட்சியின் சார்பில் மேடக் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாகவும் தேர்வானார் விஜயசாந்தி. தெலுங்கானா அமைந்த பின்னர், சந்திரசேகர் ராவின் கட்சியிலிருந்து வெளியேறி சோனியாவைச் சந்தித்து காங்கிரஸில் இணைந்தார். அதன்பின்னர் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இப்போது அரசியலில் இருந்து கொஞ்சம் ஒதுங்கியிருக்கிறார் விஜயசாந்தி.

ரோஜா

வீரா படத்தில் ரஜினியோடு நடித்த ரோஜா, 2000-ம் ஆண்டின் துவக்கத்தில் அரசியலில் கால்பதித்தார். தெலுங்கு தேசம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட ரோஜாவுக்கு, தெலுங்கு தேச மகளிர் அணித்தலைவர் பதவி வழங்கப்பட்டது. 2004, 2009 என அடுத்தடுத்து இரு தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர். தெலுங்கு தேசக்கட்சியில் இருந்து விலகி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். 2014 சட்டமன்ற தேர்தலில் நகரி தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிட்டு வென்றார். 

ரம்யா @ திவ்ய ஸ்பந்தனா

குத்து படத்தின் மூலம் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமான ரம்யா என்கிற திவ்ய ஸ்பந்தனா, 2012-ம் ஆண்டு இறுதியில் இளைஞர் காங்கிரஸில் இணைந்தார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகி 2013 இடைத்தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டவர் தோல்வியைத் தழுவினார். தற்போது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தளம் மற்றும் டிஜிட்டல் குழுவில் பொறுப்பு வகிக்கிறார். 

நக்மா

ரஜினி முதன்முறையாக அரசியல் பேசத்துவங்கியது பாட்ஷா படத்தின் வெளியீட்டு விழாவில் தான். அந்தப்படத்தின் நாயகி நக்மா, தொண்ணூறுகளில் தமிழின் நம்பர் ஒன் நாயகியாக வலம் வந்தவர்.  பின்னர் அரசியல் அவதாரம் எடுத்த நக்மா, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீரட் தொகுதியில் போட்டியிட்டார். தொடர்ந்து, சோனியா, ராகுல் செல்வாக்கில் படிப்படியாக அரசியலில் உச்சம் பெற்ற நக்மா, இப்போது அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர். தனது நீண்ட கால நண்பர் ரஜினி எனச்சொல்லி அண்மையில் ரஜினியை நக்மா சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

சிம்ரன்

இவர் அரசியலில் ஈடுபட்டாரா என்பது பலருக்கும் சந்தேகம் இருக்கலாம். அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக களமிறக்கி விடப்பட்ட நடிகர், நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சிம்ரன். ஒரு பக்கம் குஷ்பு தி.மு.க.வுக்கு பிரசாரம் செய்ய... விந்தியாவுடன் கூட்டணி போட்டு அ.தி.மு.க. மேடையேறினார் சிம்ரன். தன் செல்லத்தமிழால் தேர்தல் பிரசாரம் செய்த சிம்ரன், பின்னர் அரசியலில் இருந்து விலகினார். 'அரசியலில் நுழைந்து நிறைய அனுபவப்பட்டு விட்டேன். அரசியலே வேண்டாம்' என்றது இவரது கடைசி அரசியல் ஸ்டேட்மென்ட்.

நமிதா

'அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே..' என ஒலித்துக்கொண்டிருந்த மேடையை 'ஹாய் மச்சான்ஸ்' என தன் செல்ல மொழியால் மாற்றியமைத்தவர் நமிதா. 'அரசியல்ல எனக்கு ஆசை இருக்கு' கொஞ்சு தமிழில் சொல்லிக்கொண்டிருந்தவர், கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் நேரத்தில் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். இவரைப் பார்க்கவே அ.தி.மு.க. பிரசாரங்களில் கூட்டம் கூட... திடீரென அரசியலில் இருந்து ஒதுங்கினார். விரைவில் வேறு கட்சியில் சேருகிறார் என சொல்லப்பட்டுக்கொண்டிருக்க... கல்யாணம் ஆகி செட்டில் ஆனார் நமிதா. 

ஆர்த்தி

பிக்பாஸ்க்கு முன்னர் ஆர்த்தி மக்கள் மத்தியில் பரவலாக அறிமுகமானது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில்தான். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி அ.தி.மு.க.வுக்கு தீவிர பிரசாரம் செய்த ஆர்த்தி, ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார். 'அம்மா இல்லாத கட்சியில் இருக்க மனமில்லை' என்ற மனநிலையில் ஆர்த்தி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

விந்தியா

சங்கமம் படத்தில் அறிமுகமான நடிகை விந்தியா, மக்கள் மத்தியில் நேரடி அறிமுகமானது 2009 நாடாளுமன்ற தேர்தலில்தான். அதன் பின்னர் 2011, 2014, 2016 தேர்தல்களில் அ.தி.மு.க.வின் ஸ்டார் பேச்சாளர் விந்தியாதான். கருணாநிதி, ஸ்டாலின், விஜயகாந்த் என முக்கியத் தலைவர்களை கடுமையாக விமர்சித்த இவரது பேச்சு பிரசார களத்தில் பெரிதும் எடுபட்டதாகவே சொல்லப்பட்டது. ஜெயலலிதா மறைவையடுத்து, அவரது நினைவிடத்துக்கு ஒருமுறை வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற விந்தியா, அரசியலை விட்டு ஒதுங்கியே இருக்கிறார்.

சி.ஆர்.சரஸ்வதி

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஊடகங்களில் அதிகளவில் தலைகாட்டத்துவங்கியிருக்கும் இவர், கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். 2000க்குப் பின்னர் அ.தி.மு.க. தேர்தல் பிரசாரங்களில் தலைகாட்டத் தொடங்கிய சி.ஆர்.சரஸ்வதி, இப்போது அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவர். ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, அம்மா நன்றாக இருக்கிறார்' என இடைவிடாது பேட்டி கொடுத்த சி.ஆர்.சரஸ்வதி, இப்போது இருப்பது தினகரன் பக்கம். இதனால் அண்மையில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். 

விஷால்

ரஜினி அரசியலுக்கு வருவார் எனச்சொல்லத் தொடங்கியதற்கு 10 ஆண்டுகளுப்பின்னர் சினிமாவுக்கு வந்தவர் நடிகர் விஷால். நடிகர் சங்கத் தேர்தல், தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் என இரு தேர்தல்களை அடுத்தடுத்து சந்தித்து வெற்றிகண்ட விஷாலுக்கு அரசியல் ஆசை துளிர்க்க... ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிரடியாகக் களமிறங்கினார். வேட்பு மனுத்தாக்கல் தள்ளுபடியாக அதுவே சர்ச்சையானது. இதன் பின்னரும் அறிக்கை, பேட்டி என அரசியலில் பரபரக்கிறார் விஷால். அடுத்த தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியில் விஷாலை எதிர்பார்க்கலாம் என சொல்லப்பட., சினிமாவிலும் பிசியாகவே இருக்கிறார் விஷால்.

இவர்கள் மட்டுமில்லாமல், இன்னும் சிலரும் இந்த காலகட்டத்தில் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். ரஜினி இன்னும் அரசியல் கட்சி துவங்கவில்லை. அரசியல் கட்சி துவங்கும் வரை அரசியல் பற்றி பேசப்போவதில்லை என அறிவித்திருக்கிறார்.