Published:Updated:

``ஓட்டுக்குப் பணம் கொடுக்கலைனா, மக்களே வேட்பாளர்களை விரட்டி விரட்டி அடிப்பார்கள் !" - புதுக்கோட்டையில் சீமான் விரக்தி

``ஓட்டுக்குப் பணம் கொடுக்கலைனா, மக்களே வேட்பாளர்களை விரட்டி விரட்டி அடிப்பார்கள் !" - புதுக்கோட்டையில் சீமான் விரக்தி
``ஓட்டுக்குப் பணம் கொடுக்கலைனா, மக்களே வேட்பாளர்களை விரட்டி விரட்டி அடிப்பார்கள் !" - புதுக்கோட்டையில் சீமான் விரக்தி

``ஓட்டுக்குப் பணம் கொடுக்கலைனா, மக்களே வேட்பாளர்களை விரட்டி விரட்டி அடிப்பார்கள் !" - புதுக்கோட்டையில் சீமான் விரக்தி

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 'நாம் தமிழர் கட்சி' ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று புதுக்கோட்டை வந்திருந்தார். வடகாடு பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்குப் புறப்படுவதற்கு முன்பாக அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். பல்வேறு கேள்விகளுக்கு உற்சாகமும் துடிப்புமாகப் பதில் தந்த சீமான், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து பேசும்போது ரொம்பவே வேதனையுடன் பேசினார். ஆனாலும், அவரது அதிரடி பாணி குறைவில்லாமல் தெறித்தது.

``ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் கடுமையாக உழைத்தது என்றால், அது நாங்கள்தான். தம்பிகளும் நானுமாக இரவு பகல் பாராமல் மிகக் கடுமையாக உழைத்தோம். பணம் வாங்கும் பழக்கத்தை மக்களிடமிருந்து மறக்கச் செய்ய வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடாக இருந்தது. ஆனாலும் ஓட்டுக்கு ரூ.10,000 கொடுத்தவர்கள் வரலாற்றுச் சாதனையோடு வெற்றி பெற்றிருக்கிறார்கள். வெட்கக்கேடு. இதுதான் ஜனநாயகமா என்ற கேள்வி வருகிறது. இதே அ.தி.மு.க-வினர் கேரளாவில் தேர்தல் நடந்தபோது, அங்கு பணம் கொடுத்தார்கள். அப்போது அங்குள்ள வாக்காளர்கள் தங்களுக்குப் பணம் கொடுத்தவர்களை ஓட ஓட விரட்டி அடித்தார்கள். ஆனால், இங்கு பணம் கொடுக்கலேன்னா மக்கள் விரட்டி விரட்டி அடிப்பாங்கபோல. இது ஒவ்வொரு தமிழனும் தலைகுனிய வேண்டிய விஷயம். தேச அவமானம்.

கேரளாவில் அ.தி.மு.க-வினரை விரட்டி அடித்தார்களே... அப்படி ஒரு நிலைமை தமிழ்நாட்டுக்கு வர வேண்டும். இல்லையென்றால் ரொம்பவும் கஷ்டம். நல்ல நிர்வாகம். நல்ல சேவை. நல்ல கட்டமைப்பு. இப்படி எதையுமே நாம் நினைத்துப் பார்க்க முடியாது. ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்டவர்கள் பணம் கொடுத்து வெற்றி பெற்றிருப்பது மக்களுக்கு சேவை செய்யவா, இல்லை. தங்களது அரசியல் பிழைப்பைத் தக்கவைத்துக்கொள்ள அவர்கள் பணம் கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதனால் அந்தத் தொகுதி மக்களுக்கு எந்த நன்மையும் நடக்கப்போவதில்லை. நலத்திட்டங்களைச் செய்துகொடுக்கும்படி அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடம் மக்கள் வாய் திறந்து கேட்க முடியாது. இதற்குத்தானா இந்தத் தேர்தல். இந்தியாவிலேயே தலைகுனிவை ஏற்படுத்தும் செயலை தமிழ்நாட்டு மக்கள் செய்கிறார்கள். இந்தத் தேர்தலில் 10 ஆயிரம் கொடுத்து வெற்றி பெற்றவர்கள், அடுத்தமுறை பதினைந்தாயிரமோ இருபதாயிரமோ  ஓட்டுக்கு விலை வைப்பார்கள். அதையும் வாங்கிக்கொண்டு எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் வெட்கமும் இல்லாமல் ஓட்டு போடுவார்கள். இது மாற வேண்டும். அதற்காக நாம் உழைக்க வேண்டும். இதில் நீங்களும் ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் சமூக மாற்றத்துக்கான முன்னெடுப்புகளை முனைப்புடன் கொண்டுசெல்ல முடியும்" என்றவரிடம், `தமிழகத்தின் பெரிய கட்சியான தி.மு.க டெபாசிட் இழந்திருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?" என்று கேட்கப்பட்டது. "நான் களத்தில் இருந்ததை வைத்துச் சொல்கிறேன். தி.மு.க ஆர்.கே.நகர் தேர்தலில் வேலை செய்யவே இல்லை. வேலை செய்யாதபோது, எப்படி டெபாசிட் வாங்க முடியும்?" என்றார் சீமான்.

அடுத்த கட்டுரைக்கு