Published:Updated:

எடப்பாடியின் நெஞ்சு எப்போது சுடுமோ? - ஸ்டாலின் காட்டம்

எடப்பாடியின் நெஞ்சு எப்போது சுடுமோ? - ஸ்டாலின் காட்டம்
எடப்பாடியின் நெஞ்சு எப்போது சுடுமோ? - ஸ்டாலின் காட்டம்

எடப்பாடியின் நெஞ்சு எப்போது சுடுமோ? - ஸ்டாலின் காட்டம்

தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தன் ஃபேஸ்புக் பக்கத்தில், “அதிகாரத்தில் இருப்பதால், காவல்துறையின் ஒத்தாசையோடும், மத்திய பா.ஜ.கவின் அனுசரணை இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் பாராமுகத்தோடும், ஒரு வாக்குக்கு ஆறாயிரம் ரூபாய் என ஜனநாயகத்தை பட்டப்பகலிலும், நள்ளிரவிலும் விலைபேசியும், ஹவாலா டோக்கன் சிஸ்டத்தாரிடம் இடைத்தேர்தலில் தோல்வியடைந்த அ.தி.மு.க., "சாத்தான் வேதம் ஓதுகிறது" என்பதற்கொப்ப, திடீர் ஞானோதயம் வந்ததைப் போல வேதாந்தம் என நினைத்து உண்மைக்கு மாறானதை ஓதுகிறது.சட்டப்பேரவையில் பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் இல்லாத இந்த "மைனாரிட்டி ஆட்சி” இன்னமும் ஆட்சியில் நீடிப்பதற்கும், ஊழல் - கொள்ளையைத் தொடர்வதற்கும் காரணம் கூட பா.ஜ.க.வுடனான கூட்டணிதான் என்பது, எப்போது இந்த ஆட்சி தொலையும் என எதிர்பார்த்துக் காத்திருக்கும் தமிழக மக்களுக்குத் தெரியும். இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பவர்களே இந்த மறைமுகக் கூட்டணி குறித்து என்ன காரணத்தினாலோ விமர்சனங்களை பொதுமேடைகளில் வைக்கத் தொடங்கிவிட்டதால், அமைச்சரவை சகாக்களின் அணுகுமுறையை மாற்றவும், தமிழக மக்களை ஏமாற்றித் திசை திருப்பிடும் வகையிலும், பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்றும், கூட்டணிக்கான தேவை இருந்தால் அது தேர்தல் நேரத்தில் ஆலோசிக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்திருப்பதை யாரும் நம்பப் போவதில்லை. “கேழ்வரகில் நெய்வடிகிறது” என்ற பழமொழியைத்தான் நினைத்துக்கொள்வார்கள்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அமோகமான பண விநியோகத்துடன் வாக்குப்பதிவு நடந்தது வரை, அனைத்திலும் பா.ஜ.க.வுடனான கூட்டணியின் பலனையும், ஆதாயத்தையும் அதன் கிளைக்கட்சி போல செயல்படும் அ.தி.மு.க அனுபவித்தது.

இவையெல்லாம் அப்பப்பட்டமாக மக்கள் மனதில் பதிந்துள்ள நிலையில், பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று முதலமைச்சர் சொல்வதை நம்புவதற்குத் தமிழக மக்கள் தயாராக இல்லை. தமிழகத்தில் ஏற்படும் இயற்கை பேரிடர்களில் தொடங்கி அடிப்படை உரிமைகள் வரை எல்லாவற்றிலும் மத்திய அரசுக்கு அஞ்சி, அடிமைப்பட்டு நடந்து, தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை எனப் பசப்பு வார்த்தைகளை வெளிப்படுத்துகிறார் என்பதையும், முதலமைச்சர் நாற்காலியில் ஒட்டிக்கொண்டே இருக்க எடப்பாடி எதையும் செய்வார், என்ன வேண்டுமானாலும் பேசுவார் என்பதையும் எல்லோரும் எளிதில் புரிந்துகொள்வார்கள்.

அனைத்து நிலைகளிலும் தமிழ்நாடு பின்னடைவைச் சந்தித்து, பெரும் கடன்சுமையில் தத்தளிக்கும் நிலையில், ஆட்சியைக் காப்பாற்றி, பதவிச்சுகத்தை அனுபவித்துக் கொள்வதை மட்டுமே ஒரே லட்சியமாகக் கொண்டு செயல்படும் இரட்டைக்குழல் அல்ல, ‘இருட்டுக் குழல்’ துப்பாக்கிகளான இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவரும், அவர்களைச் சார்ந்தவர்களும் பலவகை லாபங்களுக்காக கூச்சமே இல்லாமல் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து, அதன் அங்கமாகவே செயல்படும் கிளைக்கட்சியாக, அ.தி.மு.க.வை மாற்றிவிட்டார்கள். இதனை எத்தகைய பசப்பு வார்த்தைகளாலும், பொய்யுரைகளாலும் அவர்களால் மறைக்கவே முடியாது. ”தன்னெஞ்சறிவது பொய்யற்க” என்ற அய்யன் திருவள்ளுவரின் வாக்கிற்கொப்ப, பொய்சொல்லும் எடப்பாடியின் நெஞ்சு எப்போதுதான் சுடுமோ?” என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு