Published:Updated:

”எரிச்சல் பார்ட்டி பன்னீர், பழனிசாமி... ’துரியோதனன்’ தினகரன்.. நான் கர்ணன்!” 2017 தங்கதமிழ்ச்செல்வனுக்கு எப்படி இருந்தது? #2017ViralCelebs #ThrowBack2017

”எரிச்சல் பார்ட்டி  பன்னீர், பழனிசாமி...  ’துரியோதனன்’ தினகரன்.. நான் கர்ணன்!”  2017 தங்கதமிழ்ச்செல்வனுக்கு எப்படி இருந்தது? #2017ViralCelebs #ThrowBack2017
”எரிச்சல் பார்ட்டி பன்னீர், பழனிசாமி... ’துரியோதனன்’ தினகரன்.. நான் கர்ணன்!” 2017 தங்கதமிழ்ச்செல்வனுக்கு எப்படி இருந்தது? #2017ViralCelebs #ThrowBack2017

ருடத்தின் இறுதியில், சென்ற ஆண்டில் கடந்துவிட்ட நாள்களை ஒருமுறை திரும்பிப் பார்ப்பது என்பது இயல்பான ஒன்றுதான். அப்படி நினைத்துப் பார்க்கும்போது, "நாம் மகிழ்ச்சி அடையக்கூடிய செயல்பாடுகள் இருக்கிறதா?" என்பதுதான் விடைபெறும் ஆண்டுக்குரிய முக்கியத்துவமாக அமையும். அதுபோன்ற முக்கியத்துவத்தை எத்தனைப் பேரால் சொல்ல முடியும் என்பதுதான் நம் கேள்வி. அந்த வகையில் தமிழக அரசியல்களத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-வும், டி.டி.வி. தினகரன் ஆதரவாளருமான தங்க தமிழ்ச்செல்வனை தொடர்பு கொண்டு, 'இந்த ஆண்டின் செயல்பாடுகள், மறக்கமுடியாத நினைவுகள்' பற்றிய சில கேள்விகளை முன் வைத்தோம்.

"உங்களுக்கு இந்தாண்டில் மிகவும் சந்தோஷமளித்த ஒரு விஷயம்?"

"நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக நின்ற, டி.டி.வி தினகரன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுதான். அவரின் இந்த வெற்றியைக் கண்டு, மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இந்த வெற்றியின் மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை மக்கள் விரும்பவில்லை என்பது உறுதியாகியுள்ளது. எனவே, ஆர்.கே.நகர் மக்கள் அளித்த தீர்ப்புதான் இந்த ஆண்டின் என்னுடைய மிகப் பெரிய சந்தோஷம்". 

"2017-ல் உங்களுக்கு மிகவும் வேதனையளித்த ஒரு விஷயம்?"

"முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட விரும்பவில்லை. எனவே, அவரை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவைச் சந்தித்து கடிதம் அளித்திருந்தோம். எங்களுடைய இந்த நடவடிக்கையால் கட்சித்தாவல் தடைச்சட்டதின் கீழ், நான் உள்பட 18 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் ப.தனபால், தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். எங்களை நீக்குவதற்கான எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில், அவரின் இந்த நடவடிக்கை எங்களுக்கு மிகவும் வேதனையளித்தது. சபாநாயகரின் இந்தச் செயலை எண்ணி, மிகுந்த வருத்தம் அடைந்தேன்." 

"2017-ம் ஆண்டில் நீங்கள் அடிக்கடி கேட்ட வார்த்தை?"

"புரட்சித்தலைவி அம்மா...புரட்சித்தலைவி அம்மா...புரட்சித்தலைவி அம்மா...என்ற வார்த்தைதான்."

"உங்களுக்குப் பிடித்த ஒருவர்...எரிச்சலூட்டிய ஒருவர்?" 

"அரசியல் வாழ்வில் எளிமையைக் கடைப்பிடித்து, இன்றும் நேர்மை தவறாமல்,நெறியோடு வாழ்ந்து வரும் தோழர் நல்லக்கண்ணு அய்யா எனக்குப் பிடித்த மனிதர். ஒருமுறை நான் அவரைச் சந்தித்தபோது வணக்கம் கூறினேன்... அவரும் பதிலுக்கு வணக்கம் சொல்விட்டுச் சென்றார். 

எரிச்சலூட்டியவர்கள் என்றால், ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும்தான்...'சின்னம்மா, தினகரன் ஆகியோரின் தயவால் பதவி சுகத்தை அனுபவித்துவரும் அவர்கள் இருவரும், துரோகம் இழைத்து, தற்போது நேரெதிராகச் செயல்பட்டு வரும் அவர்கள்தான் இந்த வருடத்தில் என்னை மிகவும் எரிச்சலூட்டியவர்கள்."

"இந்த வருடத்தில் உங்களைப் பற்றிய கிண்டலில் நீங்களே ரசித்தது எது?"

"ஆர்.கே.நகர் இடைத்தோதல் முடிந்த இரண்டு நாள்களில், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து, மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து என்னை நீக்குவதாக அறிவித்தனர். எட்டு மாதங்களுக்குப் பிறகு அவர்கள் எடுத்த அந்த நடவடிக்கைதான், நான் மிகவும் ரசித்த கிண்டல். அவர்கள் இருவரின் நடவடிக்கையை நினைத்து ஒருநாள் முழுவதும் விழுந்து, விழுந்து சிரித்தேன். இதில் மிகவும் வேடிக்கை என்னவென்றால், என்னை நீக்கிவிட்டு, இன்றுவரை, தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க. இருப்பதாகக் கூறுகிறார்கள்.. இது மேலும் காமெடியானது."

"இந்த வருடத்தின் பயணம்..."

"கர்நாடக மாநிலம் கூர்க் மலைப்பகுதிக்குப் பயணம் செய்தது மிகவும் சிறப்பாக இருந்தது. காவிரி ஆறு தொடங்கும் தலைக்காவிரியைப் பார்க்கும்போது, எனக்குள் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. தமிழகத்துக்கு வரும் காவிரி ஆற்றின் பயணக்காட்சி மன நிறைவைத் தந்தது."

"வாசித்த புத்தகம்..."

'முதல்வர் ஜெயலலிதா மறைவு என்னை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியது. அந்தத் துயரத்தில் நாள்கள் ஓடிக்கொண்டே இருந்த நிலையில், அ.தி.மு.க. அரசின் அடுத்த முதல்வராக ஓ பன்னீர்செல்வம். இப்படியான சூழலில் ஏதாவது வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்தது. 'சூழலுக்குத் தகுந்தவாறு புத்தகங்களை வாசிப்போம்' என முடிவு செய்தேன். அவ்வாறு தேர்வு செய்ததில் மகாபாரதம் படிக்கலாம் என்ற எண்ணம் வந்தது. அதில், அரசவையில். 'ராஜ வம்சத்துக்குள் நீ வரமாட்டாய். எனவே, இந்த நிகழ்வில் நீ பங்கெடுக்கக்கூடாது'  என கர்ணனைப் பாண்டவர்கள் புறக்கணித்து, அவமானப்படுத்துவார்கள்... அப்போது குறுக்கிட்ட துரியோதனன் கர்ணனை குறுநில மன்னராக முடிசூட வைத்து ராஜ வம்சத்துக்குள் அழைத்து வருவார். இதனால் இருவருக்குமான நட்பு பலமாகி விடும். கர்ணன் - துரியோதனின் நட்பைச் சொல்லும், அந்த வரிகள் மிக அழகானவை. மேலும், குறிப்பாக, "துரியோதனன் மனைவியும், கர்ணனும் அரண்மனையில் தாயம் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அப்போது ஆட்டத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு கிளம்புவார் துரியோதனின் மனைவி. திடீரென தடுக்கப் போனவரின் கை, துரியோதனின் மனைவி மீது பட்டுவிடும். கர்ணனின் கைப்பட்ட வேகத்தில் அவர் அணிந்திருந்த ஆடையில் இருந்த மணிகள் உதிர்ந்து விழும். அப்போது அங்கு எதிர்பாராதவிதமாக துரியோதனன் உள்ளே வர, 'முத்தை எடுக்கவா, கோர்க்கவா' என்று கேட்பார். இப்படியொரு காட்சியை பார்த்த பின்பும் கர்ணன்மேல் சந்தேகம் கொள்ளாமல் உதவி செய்வதாகப்பேசும் வார்த்தைகள் மிகவும் அருமையானவை. தன் ஒட்டுமொத்த நம்பிக்கையுமாக துரியோதனன் இருப்பதை  கர்ணன் காண்பார். அந்த ஆழமான நட்பு, அதில் மிக அழகாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும். இந்த சம்பவங்களை மிகவும் ரசித்துப் படித்தேன். இறுதியில் போரிடுவது தன் சகோதரர்களுக்கு எதிராகத்தான் எனத் தெரிந்தும் செஞ்சோற்றுக் கடனுக்காக துரியோதனனின் பக்கம் தொடர்ந்து களத்தில் நின்று கர்ணன் உயிரைக் கொடுப்பார். எனவே, அழுத்தமான நட்பைச் சொல்கிற அந்த மகாபாரத புத்தகம், இந்த வருட வாசிப்பின் மிகவும் பிடித்த புத்தகமாகிப் போனது"

  மகாபாரத நட்பு காட்சிகளை தங்க தமிழ்ச்செல்வனின் வைப்பதன் மூலம் தினகரனுக்கும் இவருக்கும் உள்ள நட்பைச் சொல்ல வருகிறாரா ??  என்பதே இங்கு எழுந்துள்ள கேள்வி ...