Published:Updated:

சீனத் தொல்லைக்கு நேருவின் வரலாற்றுத் தவறு காரணமா? - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன்.. பகுதி -7

சீனத் தொல்லைக்கு நேருவின் வரலாற்றுத் தவறு காரணமா? - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன்.. பகுதி -7
சீனத் தொல்லைக்கு நேருவின் வரலாற்றுத் தவறு காரணமா? - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன்.. பகுதி -7

சீனத் தொல்லைக்கு நேருவின் வரலாற்றுத் தவறு காரணமா? - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன்.. பகுதி -7

டந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19 - வது மாநாட்டில், இன்னும் ஐந்தாண்டுகளுக்கு மீண்டும் சீன அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜின்பிங், அடுத்த 30 ஆண்டுகளுக்குள் சீனாவை உலக  வல்லரசாக ஆக்க வேண்டும் என்ற தனது கனவை வெளியிட்டு, அதற்கான இலக்கை நோக்கி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார். இதன்மூலம், சீனாவின் மாபெரும் தலைவர்களாகப் போற்றப்படும் மாவோ மற்றும் டெங் ஜியோ பிங் வரிசையில் சீனாவின் வல்லமைமிக்க தலைவராக ஜின்பிங் விஸ்வரூபம் எடுத்து நிற்பதோடு, உலகத் தலைவனாக தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கான வியூகங்களையும் வகுத்து வருகிறார்.

வழக்கமாக புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க கூட்டப்படும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், அதிபராக ஒருவர்  தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், கட்சியின் பொலிட்பீரோ நிலைக்கமிட்டியின் ஏழு உறுப்பினர்களில் ஒருவர் அடுத்த அதிபராக அடையாளம் காணப்பட்டு, அப்பதவிக்குத் தயாராவதற்கு ஏதுவாக அவருக்குச் சில பொறுப்புகள் கொடுக்கப்படும். ஆனால், இந்த முறை அப்படி யாரும் அடையாளம் காணப்படவில்லை என்பதால், மூன்றாவது முறையாகவும் ( 2022 - 2027 ஆண்டுகளுக்கும்)  அதிபராக பதவி வகிக்கும் அளவுக்கு ஜின்பிங் தன்னைக் கட்சியில் பலப்படுத்திக் கொண்டு விட்டதாகவும், 2022 க்குப் பின்னரும் அவர்தான் அதிபர் பதவியில் தொடரப் போகிறார் என்றும் கூறுகிறார்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியினர். 

ஜின்பிங் இப்படித் தொடர்ந்து அதிபர் பதவியில் நீடிக்க வேண்டும் என விரும்புவதற்கு முக்கிய காரணம்,  தனது உலக வல்லரசு கனவை சாத்தியமாக்குவதற்கான நடவடிக்கைகளை தங்கு தடையின்றி மேற்கொள்வதற்காகத்தான் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.   

போர் அச்சத்தை ஏற்படுத்திய டோக்லாம் மோதல் 

இத்தகைய பலம் வாய்ந்த அண்டை நாட்டு அதிபராக ஜின்பிங் இருக்கும் சூழலில்தான், சீனாவுடன் ஆண்டாண்டு காலமாக தொடரும் பல்வேறு பிரச்னைகளுக்கு முகம் கொடுத்து வருகிறது இந்தியா. அதிலும், 2017-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் டோக்லாம் எல்லை பிரச்னையை மையமாக வைத்து இந்தியாவும் சீனாவும் படைக் குவிப்பில் ஈடுபட்டபோது, கிட்டத்தட்ட எங்கே இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டுவிடுமோ என்ற பதைபதைப்பு ஏற்பட்டதென்னவோ நிஜம். அந்த அளவுக்கு இந்தியாவும் சீனாவும் பகையுணர்வுடன் முறைத்துக்கொண்டு நின்றன. 

அதுகுறித்த ஒரு சின்ன நினைவூட்டல் இங்கே...

இந்தியாவின் சிக்கிம் மாநிலத்துக்கும் பூடான் நாட்டுக்கும் இடையே இருக்கும் ஒரு சிறிய பள்ளத்தாக்குப் பகுதி  சீனாவுக்குச் சொந்தம். இங்கு உள்ள டோக்லாம் பீடபூமியில், தங்கள் நாட்டின் எல்லையோரமாக இருக்கும் டோகா லா என்ற ராணுவ முகாமுக்குச் சாலை அமைத்தது சீனா. தங்கள் ராணுவ முகாமுக்கு சீனா சாலை அமைத்தது பிரச்னை இல்லை; ஆனால்,  மலைப்பாங்கான தங்கள் நாட்டுப்பகுதியில் ரோடு போடுவது சாத்தியமில்லை என்பதால், அதை பூடான் நாட்டு வழியாகப் போட்டதுதான் பிரச்னை ஏற்பட வழிவகுத்தது. பூடானுக்கும்  இந்தியாவுக்கும் ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் இருப்பதை சுட்டிக்காட்டி, இந்திய ராணுவத்தினர் அங்கு போய்  எதிர்ப்புத் தெரிவித்து, ரோடு போடும் பணியை நிறுத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த சீன ராணுவம், டோகா லா எல்லையில் இருந்த இரண்டு இந்திய ராணுவ முகாம்களைத் தாக்கி அழித்தது. அங்கு எல்லையைத் தாண்டி இந்தியப் பகுதிக்குள் சீன ராணுவம் வர முயன்றபோது, இந்திய ராணுவத்தினர் மனிதச்சங்கிலி போல கைகோத்து நின்று தடுத்தனர். இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டனர். ஆயுத தாக்குதல் இல்லாத சண்டைபோல அது இருந்தது. அங்கு இந்திய ராணுவம் எல்லை தாண்டி ஊடுருவி இருப்பதாகக் குற்றம் சாட்டும் சீனா, இந்தியர்கள் திரும்பிப் போக வேண்டும் என்றது. 

இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் இரண்டு நாள்கள் பயணமாக சிக்கிம் சென்று நிலைமையைக் கண்காணிக்க, இன்னொரு பக்கம் சீன ராணுவம், திபெத் எல்லையில் போர்ப்பயிற்சி மேற்கொண்டது.  

கூடவே 1962-ம் ஆண்டு போரில் வாங்கிய அடியை இந்தியா மறந்துவிட்டதா, அதனை நினைத்துப் பார்த்து, இந்தியா  பாடங்கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சீன ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் கூற... பதிலுக்கு இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, "1962- ம் ஆண்டில் இருந்த நிலை வேறு என்று குறிப்பிட்டுள்ளார். 2017-ல் இருக்கும் இந்தியா,1962- ம் ஆண்டில் இருந்ததிலிருந்து முற்றிலும் வேறுபட்டது"  பதிலடி கொடுத்தார். அதன் பின்னர் ஒரு வழியாக இருதரப்பு பேச்சு வார்த்தைக்குப் பின்னர் பிரச்னை முடிவுக்கு வந்தது.  

பிடிவாத ஜின்பிங்... தீராத பிரச்னைகள் 

காஷ்மீரை மையமாக வைத்து பாகிஸ்தானால் இந்தியாவுக்குத் தீரா தலைவலி என்றால், சீனா உடனான  பிரச்னைகள் எனப் பட்டியலிட்டால், டோக்லாம் பிரச்னையைத் தவிர்த்து,  அருணாச்சலப் பிரதேசத்துக்கு  உரிமை  கொண்டாடுவது, சிக்கிமிலும் அவ்வப்போது அத்துமீறலில் ஈடுபடுவது, தலாய் லாமா மற்றும் திபெத் பிரச்னை,  இந்தியப் பெருங்கடலைச் சுற்றி துறைமுகங்கள், கடற்படைத் தளங்களை அமைப்பது, பிரம்மபுத்திரா நதி நீரைப்  பங்கிட்டுக்கொள்வதில் நீடிக்கும் பிரச்னை, அணு எரிபொருள் சப்ளை செய்யும் நாடுகளில் இந்தியா உறுப்பினர் ஆவதைத் தொடர்ந்து தடுத்து வருவது, இந்தியாவில் தீவிரவாதத்தைத் தூண்டி விடும் பாகிஸ்தானைத் தொடர்ந்து ஆதரிப்பது மற்றும் ஜெய்ஷ் இ மொகமத் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாருக்கு எதிராக ஐ.நா. மூலம் பொருளாதார தடை விதிக்க இந்தியா மேற்கொள்ளும் முயற்சிக்குத் தொடர்ந்து முட்டுக்கட்டை போடுவது மற்றும்  பாகிஸ்தானுடன் தீர்க்கப்படாமல் இருக்கும் காஷ்மீர் எல்லையையொட்டிய சில பகுதிகளின் வழியாக CPEC எனப்படும் சீன- பாகிஸ்தான் பொருளாதார வழிப்பாதை திட்டத்தைச் செயல்படுத்தி இந்தியாவின் இறையாண்மையில் தலையிடுவது எனக் குறைந்தது பத்து பிரச்னைகளையாவது பட்டியலிடலாம். 

இந்தப் பிரச்னைகள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன என்றபோதிலும், தென் சீனக் கடல் விவகாரம், தலாய்  லாமா, டோக்லாம், அருணாச்சல பிரதேச பிரச்னைகள் மற்றும் மசூத் அசார் போன்ற பாகிஸ்தான் தீவிரவாத தலைவர்களை ஆதரிப்பது போன்றவற்றில் ஜின்பிங்கின் பிடிவாதமான நிலைப்பாடு, இந்தியாவின் அயலுறவுக் கொள்கைகளை வகுப்பவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. 

கவலையில் மேற்குலக நாடுகள்

இது ஒருபுறமிருக்க அமெரிக்காவை அசால்ட்டாக அப்புறப்படுத்திவிட்டு, 2050 ல்  உலக வல்லரசாக்கிவிட வேண்டும்  என்ற எண்ணத்தில் சீனா தன்னை மிக வசதியான நிலைக்கு உயர்த்திக் கொண்டிருப்பதும், அடுத்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவைப் பொருளாதார ரீதியாக சீனா முந்திவிடலாம் என்ற நிலை உருவாகிக் கொண்டிருப்பதும் பல மேற்குலக நாடுகளை மிகுந்த கவலை கொள்ள வைத்துள்ளன. கடந்த முறை உலக வல்லரசு என்ற பட்டத்தை அமெரிக்காவிடமிருந்து தட்டிப் பறிக்கப் போட்டி போட்டதும் சோவியத் யூனியன் என்ற கம்யூனிஸ்ட் தேசம்தான். சுமார் 45 ஆண்டு காலம் மேற்குலக நாடுகள் அந்தப் பனிப்போரை எதிர்கொண்டன. இந்நிலையில், இதோ ஜின்பிங் தலைமையிலான இன்னொரு கம்யூனிஸ தேசத்திலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட அதே மேற்குலக நாடுகள் அதே அச்சுறுத்தலை எதிர்கொண்டு நிற்கின்றன. 

சீனாவும் இரண்டு உண்மைகளும்

இத்தகைய சூழலில், அண்மையில் டோக்லாமை அடிப்படையாக வைத்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே  ஏற்பட்ட மோதல் இரண்டு உண்மைகளை வெளிப்படுத்தியது. ஒன்று, நிலத்தை ஆக்கிரமிக்கும் குணம் சீனாவின்  அடிப்படையான குணாதிசயங்களில் ஒன்றாகிவிட்டது. அது நிலமோ அல்லது கடலோ, அந்தப் பகுதி கிடைக்கும் வரை இன்னொரு நாட்டின் பகுதியில் ஊடுருவுவதை அது தொடரத்தான் செய்யும். இரண்டு, சீனா அப்படி ஆக்கிரமிக்கும்போது அதனை எதிர்த்தால் டோக்லாமில் செய்தது போன்று பின்வாங்கும். ஆனால், அதற்கு அர்த்தம் சீனா மீண்டும் அதனைச் செய்ய முயற்சி செய்யாது என்ற அர்த்தமல்ல; மீண்டும் அதைத் தொடரத்தான் செய்யும்.  

ராணுவ ஊடுருவல் மூலமாக தைவானை பல ஆண்டுகளாக சீனா அச்சுறுத்தி வருகிறதே தவிர, பெரிய அளவில்  எதையும் செய்யவில்லை. அதேப்போன்றுதான் ஹாங்காங்கில் தங்களுக்கு உண்மையான ஜனநாயகம் மற்றும் சுயாட்சி கோரி அங்குள்ள மக்கள் நடத்திய போராட்டத்தை நசுக்கப் பார்த்தது. ஆனால் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக அதிலிருந்து பின்வாங்கியது. (பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருந்த, உலகின் முக்கிய வர்த்தக  நகரான ஹாங்காங், 1997-ம் ஆண்டு சீனா வசம் ஒப்படைக்கப்பட்டது. அப்போதிருந்து 'ஒரு நாடு இரு ஆட்சியமைப்பு'  என்ற கொள்கையின் கீழ் ஹாங்காங், சீனாவின் ஆளுமைக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது.) இருப்பினும்  இவ்விரு பிரதேசங்களிலும் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளையும், அது தொடர்பான  நடவடிக்கைகளையும் அது நிறுத்தவில்லை.

அதேப்போன்றுதான் டோக்லாமில் இந்தியாவின் எதிர்ப்பு காரணமாக சீன ராணுவம் தனது சாலை அமைக்கும்  பணியை தற்காலிகமாக கைவிட்டதே தவிர, எதிர்காலத்தில் சாலை அமைக்க மாட்டோம் என்ற உத்தரவாதம்  எதையும் தரவில்லை.  டோக்லாம் மோதலை பொறுத்தவரை முதல் சுற்றில் இந்தியா வெற்றி பெற்றுவிட்டதாகவும், 1962 ல் நடந்த போரினால் ஏற்பட்ட அவமானத்தை, டோக்லாமில் சீன ராணுவத்தைத் துணிவுடன் நேருக்கு நேர் நின்று 'வருவதை எதிர்கொள்ள தயார்' என்பதுபோன்று எதிர்த்ததன் மூலம் இந்தியா  ஓரளவுக்குத் துடைத்துவிட்டதாகவும் சீனா கருதுகிறது. 

'நேரு செய்த வரலாற்றுத் தவறு' 

இந்நிலையில், “டோக்லாமில் காட்டிய இந்த எதிர்ப்பையும் துணிச்சலையும் 1950-ம் ஆண்டு, இந்தியாவின் அண்டை  நாடாக விளங்கிய திபெத்தை சீனா ஆக்கிரமித்தபோது காட்டியிருந்தால், இத்தனை ஆண்டு காலம் இந்திய  நிலப்பகுதிகளில் சீனாவின் ஆக்கிரமிப்பை அவ்வப்போது எதிர்கொண்டிருந்திருக்க வேண்டிய அவசியம்  இருந்திருக்காது. ஆனால், அதனை அப்போதைய பிரதமர் நேரு செய்யத் தவறி,  திபெத்துக்குள் சீன படையெடுப்பை வேடிக்கைப் பார்த்த வரலாற்றுத் தவறு ஒன்றை இழைத்துவிட்டார்" என்கிறார் பிரபல பொருளாதார வல்லுநர்  பிரசென்ஜித் கே பாசு. இவர், தான் எழுதியுள்ள 'Asia Reborn: A Continent Rises from the Rages  of Colonialism and War to a New Dynamism' என்ற புத்தகத்தில் ஆசியாவின் கடந்த கால மற்றும்  நிகழ் கால வரலாற்றுச் சம்பவங்கள் குறித்தும், எதிர்கால நிகழ்வுகள் எப்படி இருக்கும் என்பது குறித்தும் ஆழமான மாற்றுக் கோணத்தில் அலசியுள்ளார். 

குறிப்பாக, இந்தியாவின் திபெத் கொள்கை குறித்து அவர் கூறுகையில், “ஜவஹர்லால் நேரு ஒரு புத்திசாலித்தனமான வரலாற்று ஆசிரியர் என்பதில் ஐயமில்லை. ஆனால் ஆட்சி நிர்வாகத்தில் அவர் ஓர் அப்பாவியாகவே இருந்துள்ளார் என்பது அதிர்ச்சிகரமான விஷயம்தான். ஆட்சி நிர்வாகத்தில் அவர் மேற்கொண்ட  அணுகுமுறையும், கடைப்பிடித்த அயலுறவுக் கொள்கையும் அவரது வரலாற்று அறிவுக்கு முற்றிலும் வேறுபட்டதாகவே இருந்தது. ஆனால் நேரு தலைமையிலான ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார்  படேலின் பார்வை வேறாக இருந்தது. இந்தியாவின் பாதுகாப்புக்கும் எதிர்கால நலனுக்கும் திபெத் நமது முக்கிய  நட்பு நாடாகத் திகழும் என்றும், எனவே திபெத்தை சீனா ஆக்கிரமிப்பதை தூதரக ரீதியாகவோ அல்லது ராணுவ  நடவடிக்கை மூலமாகவோ தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஆனால் நேரு அதனைக்  கேட்கவில்லை. இத்தனைக்கும் அப்போது திபெத்தில் இந்தியாவையும் சேர்த்து நான்கு நாடுகள் மட்டுமே தங்களது தூதரகங்களை அமைத்திருந்தன. சீனாவுக்குத் தூதரகம் இல்லை. இந்த நிலையில் சீனாவின் இந்த திபெத் ஆக்கிரமிப்பு நடவடிக்கையைப் பெரும்பாலான உலக நாடுகள் ஆதரிக்கவில்லை. எனவே, இந்தியா அப்போது  சீனாவின் அந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தால், மற்ற உலக நாடுகளும் அதற்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கும். சீனாவும் திபெத்திலிருந்து பின்வாங்கியிருக்கும் என்பதோடு, பிற்காலத்தில் இந்தியப்  பகுதிகளையும் ஆக்கிரமிக்கும் அல்லது ஊடுருவும் எண்ணமும் சீனாவுக்கு வந்திருக்காது. ஆனால், அதைச்  செய்யாமல்போன இந்த வரலாற்று தவறுதான் கடந்த பல தசாப்தங்களாக சீனாவை இந்தியாவிடம் ஒரு ரவுடி தேசமாக நடந்துகொள்ள வைத்தது. 

இருப்பினும் தற்போது டோக்லாம் ஆக்கிரமிப்பில் சீனாவுக்கு இந்தியா காட்டிய எதிர்ப்பு, அப்போதைய வரலாற்று  தவற்றைச் சரி செய்யும் நடவடிக்கையின் ஒரு தொடக்கமாகப் பார்க்கலாம்" என்கிறார். 

இருப்பினும் தீவிரவாதத்தால் சின்னாபின்னமாகி பொருளாதாரத்திலும் கீழே விழுந்து கிடக்கும் அண்டை நாடான  பாகிஸ்தானே அவ்வப்போது இந்தியாவுக்குப் போர் சவால் விட்டுக்கொண்டிருக்கும்போது, இன்னும் சில  தசாப்தங்களில் உலக வல்லரசாக ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் தன்னைக் கட்டமைத்துக் கொண்டிருக்கும்  சீனா, நிச்சயம் டோக்லாம் பின்னடைவுக்குப் பழிவாங்க தக்க தருணத்தை எதிர்பார்த்துக்கொண்டுதான் இருக்கும். ஆனால் அது எப்போது, எங்கே, எப்படி நிகழும் என்பது ஜின்பிங்கின் முடிவைப் பொறுத்தே அமையும். எனவே,  இந்தியாவும் எதையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்க வேண்டும். 

=================================================================

தலாய்லாமா: சீனாவின் நெருஞ்சி முள்

சீனாவில் ஏற்பட்ட கலாசார புரட்சியைத் தொடர்ந்து 1949 -ம் ஆண்டு அக்டோபர் மாதம்  சீன கம்யூனிஸத் தலைவர் மா சே துங் தலைமையிலான கம்யூனிச ஆட்சி மலர்ந்தது. புதிய சீன அரசாங்கம் சீனாவின் எல்லைகளை விரிவுபடுத்தத் தொடங்கியபோது, 'சீனா கண்காணிக்க வேண்டும்' என்று ஆங்கிலேயர் ஒப்படைத்திருந்த பகுதிகளை சீனாவிற்கு உட்பட்ட பகுதி என சீனா பகிரங்கமாக அறிவித்தது. 1950 அக்டோபர் மாதம் சீனப்படைகள் திபெத்திற்குள் புகுந்தன. திபெத்தின் தலைநகர் லாஸாவிற்க்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் சீனா தனது படைகளை நிறுத்தியது. அப்போழுது 16 வயது நிரம்பிய தலாய் லாமா, சீனப்படையை எதிர்க்குமாறு தனது படைகளுக்கு ஆணையிட, திபெத்தியர்களும் ஆவேசத்துடன் போரிட்டனர். ஆனால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீனப் படையுடன் 10,000 த்துக்கும் குறைவான நவீன ஆயுதங்கள் இல்லாத காரணத்தால் திபெத்தியர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

இதன் காரணமாக திபெத் அரசு சீன அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டது. எனவே, சீன அரசின் மேலாதிக்கம் திபெத்தின் மீது இருக்க வேண்டும் என்ற ஒப்பந்தம், சீனாவின் பயமுறுத்துதல் பேரில் கையொப்பமானது. அந்த ஷரத்தின் படி, சீனா திபெத்தின் மத விவகாரங்களிலோ உள்நாட்டு ஆட்சியிலோ தலையிடாது. ஆனால், திபெத்தின் உள் நாட்டு விவகாரங்களிலும் முழுமையான குறுக்கீடுகளுடனும் சீனப் படைகள் திபெத்தில் முழுமையாக இறங்கியது. இதை அடுத்து திபெத்தில் உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டது. ஆங்காகே சீன ராணுவத்துக்கு எதிராக மக்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். கலவரத்தை நிறுத்த ஆணையிடுமாறு சீனா, தலாய் லாமாவிற்கு உத்தரவிட்டது. ஆனால் தலாய் லாமா 'இது சுதந்திர போராட்டம்' என அறிவிக்க, அவரைச் சிறைப்பிடிக்கும் நோக்கத்துடன் தலைநகர் லாஸாவில் முகாமிட்டிருந்த சீன ராணுவம் அரண்மனையைக் கைபற்றி லாமாவை பிடிக்கும் யோசனையுடன் 1959 -ம் ஆண்டு மார்ச் 17 -ம் தேதி அரண்மனைமீது கடுமையான பீரங்கித் தாக்குதல் நடத்தியது. 

ஆனால், அதற்கு முன்னதாகவே தலாய் லாமா, சாதாரண அரண்மனை சிப்பாய் போல் வேடமிட்டு அரண்மனையின் ரகசிய வழியாக வெளியேறி, 31 நாள்கள் பயணம் செய்து இந்தியா வந்து சேர்ந்தார். அவருக்கு இந்தியா தஞ்சமளித்து அரவணைத்துக் கொண்டது. 

இதனையடுத்து, “தலாய் லாமாவை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று இந்தியாவிடம் சீனா கோரியது. ஆனால் அதற்கு நேரு மறுத்துவிட்டார். இதனால், இந்தியா மீது சீனா ஆத்திரமடைந்து, 1962 செப்டம்பர் மாதத்தில் இந்தியா மீது படையெடுத்தது. லடாக் பகுதியிலும், வடகிழக்கு எல்லைப் பகுதியிலும் நடந்த போரில், இந்தியாவின் சில பகுதிகளை சீனா கைப்பற்றிக்கொண்டது. சீனாவின் போக்கை உலக நாடுகள் கண்டித்தன. அதனால், சீனப்படைகள் வாபஸ் ஆயின. திபெத், சீனாவுடன் இணைக்கப்பட்டு விட்டது. 

இந்நிலையில் தலாய் லாமா, இந்தியாவில் தற்போது இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவிலிருந்து செயல்படுகிறார். 

===================================================================

ஜின்பிங் வருவார்....
 

அடுத்த கட்டுரைக்கு