Published:Updated:

‘‘ஆண்களே தனியாகச் செல்லத் தயங்கும் சமூகத்தில் வசிக்கிறோம்!’’ - பாரதி கிருஷ்ணகுமார்

‘‘ஆண்களே தனியாகச் செல்லத் தயங்கும் சமூகத்தில் வசிக்கிறோம்!’’ - பாரதி கிருஷ்ணகுமார்
‘‘ஆண்களே தனியாகச் செல்லத் தயங்கும் சமூகத்தில் வசிக்கிறோம்!’’ - பாரதி கிருஷ்ணகுமார்

செங்கல்பட்டில் நடந்து வரும் ‘செங்கை புத்தகத் திருவிழா’வில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொள்ளும் ஆளுமைகள் புத்தகங்கள் படிக்க வேண்டிய அவசியம் குறித்தும், சமூக விழிப்புஉணர்வு குறித்தும் உரையாற்றுகிறார்கள். அவர்களின் உரையைக் கேட்பதற்காகவே, பொதுமக்கள் அதிக அளவில் வரத்தொடங்கிவிட்டனர். இதில் கலந்து கொண்ட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் சுதந்திரம் பெற்றபோது நடந்த பாலியல் கொடுமைகளையும், சுதந்திர இந்தியாவில் அரங்கேறிவரும் பாலியல் கொடுமைகளையும் பற்றி வேதனை பொங்கப் பேசினார்.

புத்தகத்திருவிழாவில் சிறப்புரையாற்றிய பாரதி கிருஷ்ணகுமார், “உலகின் பெரும்பகுதியை ஆண்ட ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியா பெற்ற சுதந்திரம் என்பது இந்தியாவிற்கான சுதந்திரம் மட்டும் இல்லை. உலக நாடுகளில் ஒன்றில் கூட அவர்களுக்கெதிரான எதிர்க்குரல் எழுப்பாத தருணத்தில் சுதந்திரத்தின் முதல் குரலை எழுப்பிய பெருமை இந்தியாவிற்கு உண்டு. அதுதான் சிப்பாய்க் கலகம். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகே உலகிலுள்ள 90க்கும் மேற்பட்ட நாடுகள் சுதந்திரமடைந்தன. இந்தியாவின் சுதந்திரத்திற்காகத் தங்கள் மானத்தை இழந்தும், செல்வத்தை இழந்தும் போராடியவர்கள் இந்த மண்ணில் உண்டு.

1942ல் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தை காந்தி அறிவித்திருந்தார். நாடு முழுவதும் காந்தியின் அழைப்பை ஏற்று பொதுமக்கள் வீதிகளில் வந்து போராடினார்கள். மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் கிழக்குக் கோபுர வாயில் பக்கத்தில் 6 ஏழை நெசவாளப் பெண்கள் கதர் ஆடை அணிந்து கையில் கொடியோடு வெள்ளையர்களுக்கு எதிராக கோஷமிட்டனர். பிரிட்டிஷ் காவல்துறையினர் அவர்களை கலைந்து போகச் சொல்லியும், தொடர்ந்து கோஷமிட்டனர். அப்போது அவர்களை கைது செய்த விஸ்வநாதன் என்ற காவல் அதிகாரி, ‘நீங்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதில்லை என வாய்மொழியாகச் சொன்னால் போதும், உங்களை விட்டுவிடுகிறேன்’ என்றார். தீச்சட்டி கோவிந்தன் என்று அழைக்கப்பட்ட மாபெரும் கொள்ளையனை கன்னிவைத்து பிடித்ததாலேயே பிரிட்டிஷ்காரரால் பாராட்டப்பட்டவர் அவர். பெண்கள் போராட்டத்தை கைவிட மறுத்ததால், கோபமுற்ற அந்த அதிகாரி, மதுரைக்கு அருகே உள்ள அழகர் கோயில் காட்டுப்பகுதியில் அவர்களை கொண்டு சென்று பொழுது சாயும் வேளையில், அவர்களை ஒட்டுத்துணி இல்லாமல் இறக்கிவிட்டுவிட்டு சென்றார்.

இரவு முழுவதும் ஒட்டுத்துணி இல்லாமல் காட்டில் நிராதரவாக அந்தப் பெண்கள் தவித்தனர். விடிந்ததும் அந்த வழியாக ஆடுமேய்த்துக் கொண்டு வந்த சிறுவன் ஊருக்குள் சென்று அந்தத் தகவலை சொன்னான். அப்பகுதி பெண்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தங்கள் மாற்று உடைகளைக் கொடுத்து உதவினார்கள். அந்த ஆறு பேரும் மீண்டும் மதுரை கிழக்குக் கோபுரவாயிலை நோக்கி பயணித்தார்கள். பிரிட்டிஷ் காரர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடினார்கள். பெண்கள் அவமானப்படுத்தப்பட்ட சிறுமை கண்டு கொதித்தெழுந்தான் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன்.  பெரும் குடுவை நிறைய திராவகம் கொண்டுசென்று அந்தக் காவல் அதிகாரியின் முகத்தில் வீசினான். முகம் கருகி, விகாரமாகி தன்வாழ்நாளில் இறுதிவரை வெளியே வராமல் இறந்து போனார் விஸ்வநாதன். அந்த அதிகாரியின் மகள்தான் இன்றைய ஆட்சியாளர்களின் கோபத்திற்கு உள்ளாகி திராவகம் வீசப்பட்ட சந்திரலேகா என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி. 1992ல் அவர் மீது திராவகம் வீசப்பட்ட கொடுமை இங்கே நடந்தது.  

சுதந்திரத்திற்கு முன்பாக பிரிட்டிஷ்காரர்கள் திட்டமிட்டு மதக்கலவரங்களை உருவாக்கிவிட்டு சென்றனர். மக்கள் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு இடம் மாறிய சம்பவம் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்தது. லட்சக்கணக்கான இந்துக்களும், முஸ்லிம்களும் எதிரும் புதிருமாக இடம் பெயர்ந்தார்கள். அவர்களுக்குள் மோதலை பிரிட்டிஷ் அரசு திட்டமிட்டு உருவாக்கியது. இந்து பெண்களை முஸ்லிம்களும், முஸ்லிம் பெண்களை இந்துக்களும் பாலியல் வன்புணர்பு செய்தனர். தங்களிடம் அகப்பட்ட பெண்ணை கூட்டம் கூட்டமாக வண்புணர்வு செய்து, அவர்களின் உடலில் தங்கள் மதத்தின் சின்னத்தை நெருப்பால் சுட்டெழுதினார்கள்.

அப்போது பாகிஸ்தானிலிருந்து தனது மகளோடு இந்தியா வந்தார் ஒரு தகப்பன். பெரும் கலவரத்தில் தன் மகளை தொலைத்துவிட்டார். எங்கு தேடியும் அவள் கிடைக்கவில்லை. கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு முகாமாக தேடுகிறார். அவன் மகளையொத்த பெண் ஒருவர், அங்கிருக்கும் முகாமில் இருப்பதாக தகவலறிந்து அந்த முகாமிற்கு செல்கிறார். பாதிமயக்கமுற்ற நிலையில் மகள் தரையில் கிடக்கிறாள். மகளைப் பார்த்த சந்தோஷத்தில் மகளின் கால்களைப் பிடிக்கிறார். இத்தனை நாள் தன்னை வன்புணர்வு செய்த யாரோ ஒருவன், மீண்டும் தன்னை அழைக்கிறான் என அவனுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதற்காக தன்உடலை அசைத்துக் காட்டினாள். அவர் மார்பகம் ஒன்று அறுக்கப்பட்டிருந்தது. மகளின் மீது துணியைப் போர்த்தி கதறி அழுதார் அந்தத் தகப்பன். சிலநாள்களில் மகள் இறந்தாள்.

எல்லோரையும் சமமாக பாவித்த தன்மகளுக்கு ஏற்பட்ட கொடுமைக்கு வஞ்சம் தீர்க்க, ஒரு முஸ்லிம் பெண் தனிமையில் கிடைப்பாளா என டெல்லி நகரம் முழுக்க தேடினான். ஒருநாள் நிராதரவான ஒரு முஸ்லிம் பெண் கிடைத்தாள். தன்னையே விற்று பிழைத்து வந்த அந்த பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து செல்கிறான். தனது மகளுக்கு ஏற்பட்ட கொடுமைக்கு, வஞ்சம் தீர்க்க எண்ணி மகிழ்ந்தான். அந்தப் பெண்ணிடம் ஆடையை அவிழ்க்கச் சொல்கிறான். இடுப்பிற்கு கீழேயுள்ள ஆடையை அவள் அவிழ்க்கிறாள். முழுவதையும் அவிழக்கச் சொல்லி மிரட்டுகிறான். அவள் அழுதுகொண்டே தயக்கமாக மேலாடையை அவிழ்த்தாள். அவளது ஒரு மார்பு அறுக்கப்பட்டிருப்பதை அவன் பார்த்து அதிர்ந்தான். அந்தப் பெண்ணின் கால்களில் மண்டியிட்டு, மகளே… மகளே… எனக் கதறி அழுதான் என்பது வரலாறு. இவ்வளவு கொடுமைகளையும் அனுபவித்தபிறகுதான் நாம் இந்தச் சுதந்திரத்தை பெற்றிருக்கிறோம்.

ஆனால் இன்று மூன்று வயது பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகச் செய்திகள் வருகின்றன. எங்கே போகிறது இந்தச் சமூகம்? எங்கே போனது நமது பண்பாடு? விளையாட கொடுக்கும் மரப்பாச்சி பொம்மைக்குக் கூட துணிசுற்றிக் கொடுக்கும் நம் நாட்டில் இந்தக் கொடுமைகள் யார் செய்கிறார்கள்? தேசிய போலீஸ் கமிஷனில்தான் மூவரால் பாலியல் வன்புணர்வு செய்ப்பட்டதாக ஒரு தாய் கண்ணீர் வாக்கு மூலம் கொடுக்கிறாள். பாலியல் கொடுமைக்கு மூன்று வயது பெண்குழந்தையும் தப்பவில்லை. 62 வயது தாயும் தப்பவில்லை. நமது வீட்டு பெண்களை இந்தச் சமூகத்தில் தனியாகச் செல்ல அனுமதிக்க தயங்குகிறோம். ஆண்களே தனியாகச் செல்ல தயங்கும் சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோம். கல்லுக்குள் தேரைக்கும், கருப்பைக்குள் உயிருக்கும் தேடித்தேடி உணவளிக்கும் கடவுளுக்கே, இந்த சமூகத்தில் பாதுகாப்பில்லை.” என்றார் வேதனை பொங்க.