Published:Updated:

“சாவித்திரி பாய் பூலேவின் கடிதம்..!” - கௌசல்யா-சங்கர் வழக்கு: ஒரு திட்டமிட்ட ஆணவப் படுகொலையின் சாட்சியங்கள் பகுதி 3

“சாவித்திரி பாய் பூலேவின் கடிதம்..!” - கௌசல்யா-சங்கர் வழக்கு: ஒரு திட்டமிட்ட ஆணவப் படுகொலையின் சாட்சியங்கள் பகுதி 3
“சாவித்திரி பாய் பூலேவின் கடிதம்..!” - கௌசல்யா-சங்கர் வழக்கு: ஒரு திட்டமிட்ட ஆணவப் படுகொலையின் சாட்சியங்கள் பகுதி 3

ன்று சாவித்திரி பாய் பூலேவின் 187- வது பிறந்த தினம். கௌசல்யா- சங்கர் வழக்கைப் பற்றிக் குறிப்பிடும்போது சாவித்திரி பாயைத் தவிர்த்துவிட்டு நாம் விவாதிக்க முடியாது. அவர் தாழ்த்தப்பட்டவர்களுக்கான கல்வி உரிமைக்காக தனது கணவர் மகாத்மா ஜோதிராவ் பூலேவுடன் இணைந்து பாடுபட்டவர். சாவித்திரிபாய்க்கும் ஆணவக் கொலைகளுக்கும் அப்படியென்ன தொடர்பு இருந்துவிடப் போகிறது...? 

உடல்நிலை சரியில்லாத காலங்களில், தனது தாய் வீட்டில் தங்கியிருக்கும் சாவித்திரி பாய், ஜோதிராவ் பூலேவுக்குச் சில கடிதங்களை எழுதுகிறார். இருபது வருட காலங்களில் அவ்வப்போது எழுதப்பட்ட இந்தக் கடிதங்கள் தொகுக்கப்பட்டு 'சாவித்திரிபாய் பூலே' பெயரிலேயே புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளது. இது வெறும் காதல் கடிதம் என்று சுருக்கிவிட முடியாத அளவுக்கு அக்கால இந்தியாவின் சான்றாக இருக்கிறது. சொல்லப்போனால், இன்றைய இந்தியாவுடன் அந்தக் காலம் எப்படிப் பொருந்திப் போகிறது என்பதற்கான சிறந்த வரலாற்று ஆவணமாக இருக்கிறது. அவற்றில் 1868 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி அவர் ஜோதிராவுக்கு எழுதிய கடிதம் மிக முக்கியமானது. அதில் இவ்வாறு குறிப்பிடுகிறார்...

'அன்புக் கணவர் ஜோதிராவுக்கு,

 

என் வணக்கங்கள்... 

 

உங்கள் கடிதம் கிடைத்தது. நான் இங்கு நலமாக இருக்கிறேன். நான் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி உங்களைக் காண வருகிறேன். அதுபற்றி நீங்கள் மேலதிகமாக எதுவும் கவலைகொள்ள வேண்டாம். இங்கே ஒரு விநோதமான சம்பவம் நிகழ்ந்தது. அதைப்பற்றி உங்களுடன் பகிர்ந்தாக வேண்டும். இங்கே ஊரில், கணேஷ் என்கிற இளைஞன் கோவிலில் வேலை பார்த்துவருகிறான். கோவிலில் கடவுளுக்கு ஆரத்தி காண்பிப்பதும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நல்ல குறி சொல்லுவதும்தான் அவனது வேலை. அதுதான் அவனுக்கான உணவை ஈட்டித் தருகிறது. அவனும் தாழ்த்தப்பட்ட  வகுப்பைச் சேர்ந்த சார்ஜா என்கிற பெண்ணும் காதலித்து வந்திருக்கிறார்கள். அது அந்தப் பெண் கர்ப்பமான நிலையில் தெரியவந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ஊர் மக்கள் அவர்கள் இருவரையும் கட்டியிழுத்து ஊர் தெருக்களில் அழைத்துச் சென்றார்கள். ஊர்நடுவே அவர்கள் இருவரையும் கட்டிவைத்து உயிர்போகும் வரை அடிப்பதாகயிருந்த அந்த மக்களின் குரூர திட்டத்தை நான் எப்படியோ அறிந்துகொண்டேன்.

உடனே அந்த இடத்துக்குச் சென்று, அந்த மக்களிடம் பேசினேன். சக மனிதர்களைக் கொல்லுவது ஆங்கிலேய அரசின் சட்டதிட்டங்களின்படி எவ்வளவு தண்டனைக்குரியது என்பதைக் கூறி அவர்களை அச்சுறுத்தினேன். கணேஷும் சார்ஜாவும்கூடத் தங்களை விட்டுவிடும்படியும் ஊரைவிட்டே சென்றுவிடுவதாகவும் கூறினார்கள். இதையடுத்து ஊர் மக்கள் இந்தத் திட்டத்தைக் கைவிட்டார்கள். தற்போது இந்தக் கடிதத்துடன் உங்களைக் காணவரும் கணேஷையும் சார்ஜாவையும் உங்கள் பாதுகாப்பில் இருக்கும்படி அனுப்பிவைக்கிறேன். வேறு என்ன இதற்கு மேல் எழுத....?

 

உங்கள், 

சாவித்திரி'

 

இப்படியாக கடிதம் முடிகிறது. இந்தக் கடிதம் தற்போதைய காலச்சூழலுக்கும் எப்படிப் பொருந்திப் போகிறது! 150 ஆண்டுகாலமாக ஆணவக் கொலை செய்யும் கூட்டத்தாரிடம் எந்தவித மாற்றமுமே ஏற்படாமல்தான் இந்திய தேசம் முன்னேற்றம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறது. ஆழ்ந்த கல்வி அறிவில்லாதவர்களை விலங்குகளின் மனநிலையுடன் ஒப்பிடுகிறார் சாவித்திரிபாய்.

தற்காலத்துக்கு வருவோம். கௌசல்யா-சங்கர் வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்டவர் அன்னலட்சுமி. சங்கர் கொலை சம்பவம் நடந்தபோது அவருக்கு வயது 35. மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த அன்னலட்சுமிக்கு சொந்த ஊர் பாப்பம்பட்டு அருகே உள்ள மயிலாடும்பாறை. அன்னலட்சுமியின் அப்பா ஜெயராமன், கஞ்சா விற்றதாக அவர் மீது பழனி தாலுகா காவல்நிலையத்தில் வழக்குகள் உள்ளன. ஜெயராமனின் தங்கை மகனான சின்னச்சாமியுடன் 1995-இல் அன்னலட்சுமிக்குத் திருமணம் நடந்தது. திருமணத்தை அடுத்து கௌசல்யா என்கிற மகளும் கௌதம் என்கிற மகனும் பிறந்திருக்கிறார்கள். பழனி திருநகரில், வாடகை வீடு ஒன்றில் குடும்பமாக வசித்து வந்திருக்கிறார்கள். சின்னச்சாமி வாடகைக்கார் ஓட்டி வந்திருக்கிறார். கூடவே சின்னச்சாமி குடும்பத்தார் வட்டி வரவு செலவும் செய்து வந்திருக்கிறார்கள்.

வட்டி வரவு செலவில் கிடைத்த பணத்தையும் சின்னச்சாமி சொன்னதுபோல மொய்விருந்தில் கிடைத்தப் பணத்தையும் கொண்டுதான் பழநி திருநகரில் உள்ள இடத்தில் வீடுகட்டிக் குடிபெயர்ந்திருக்கிறார்கள். தொடக்கத்தில், கோவை கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில், கவுன்சலிங் வழியாகச் சேர்ந்த கௌசல்யாவுக்கு விடுதியில் தங்கியிருப்பது பிடிக்காமல் போகவே, பழநியில் இருக்கும் வீட்டிலிருந்தே சென்று படித்து வருவதற்கு ஏதுவாக பொள்ளாச்சி பி.ஏ பொறியியல் கல்லூரியில் சேர்த்துள்ளார்கள். கல்லூரி முடிந்ததும் மாலை ஜப்பானிய மொழிப் பயிற்சி வகுப்பு. அதை முடித்துவிட்டுத் தனியார் பேருந்தில்தான் வீட்டுக்குத் திரும்புவார் கௌசல்யா. அப்படி வரும்போது பழக்கமானவர்தான் அதே கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்துவந்த சங்கர். குமரலிங்கத்தைச் சேர்ந்தவர். குமரலிங்கத்தைச் சேர்ந்த ஜாதகம் பார்க்கும் மகேஸ்வரன் என்பவருக்கு வட்டிக்குப் பணம் கொடுத்திருந்ததால், அன்னலட்சுமிக்கும் அடிக்கடி குமரலிங்கம் போய்வரும் வேலை இருந்துள்ளது.

பொள்ளாச்சியிலிருந்து பேருந்தில் வரும் கௌசல்யா ஒருமுறை கல்லூரி ஐ.டி கார்டை பேருந்திலேயே தவறவிட்டுள்ளார். இதையடுத்து ஐ.டி.கார்டை வந்து பெற்றுக்கொள்ளும்படி கௌசல்யாவின் அம்மாவிடம் கூறியிருக்கிறார் பேருந்து நடத்துநர். ஐ.டி. கார்டு வாங்க வந்தவரிடம், கௌசல்யா ஓர் ஆணுடன் பேருந்தில் ஒன்றாக அமர்ந்து வருவதைக் கூறி அவரை எச்சரித்திருக்கிறார் பேருந்து நடத்துநர். வீடு திரும்பிய அன்னலட்சுமியும் இவ்விஷயம் குறித்து கௌசல்யாவிடம் விளக்கம் கேட்டிருக்கிறார். ஆனால், அதற்கு கௌசல்யாவிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. ஆனால், இந்தச் சம்பவம் நடந்த இரண்டு நாள்கள் கழித்து கௌசல்யா திடீரெனக் காணாமல் போயிருக்கிறார். இதையடுத்து, கௌசல்யா கடத்தப்பட்டதாக பழனி டவுன் காவல்நிலையத்தில், புகாரும் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. சரியாக மறுநாள் (12.07.2016) காலை 10 மணிக்கு உடுமலை மகளிர் காவல்நிலையத்திலிருந்து அன்னலட்சுமிக்கும் சின்னச்சாமிக்கும் அழைப்பு வந்துள்ளது. இதையடுத்தே, கௌசல்யாவும் சங்கரும்  சாதிமறுத்து காதல் திருமணம் செய்துகொண்ட விவரம் அவர்களுக்குத் தெரியவந்துள்ளது. 

சாதி, காதலித்தால் எச்சரிக்கும்.... மிரட்டும்... காதலித்துத் திருமணம் செய்துகொண்டால், ஒருபடி மேலே சென்று கொன்று குவிக்கும். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சங்கரை விட்டுவிட்டு வந்துவிடும்படி காவல்நிலையத்திலேயே கெஞ்சியிருக்கிறார்கள் கௌசல்யாவின் பெற்றோர். அவர் வர மறுத்திருக்கிறார். குமரலிங்கத்தில் நேரடியாக சங்கரின் வீட்டுக்குச் சென்று கேட்டும் பயனில்லை. அன்னலட்சுமியின் அப்பா ஜெயராமன், குமரலிங்கம் சென்று தந்திரமாக கௌசல்யாவை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார். கௌசல்யாவின் மனதை மாற்றுவதற்காகத் திண்டுக்கல், வருசநாடு... என்று மாந்திரீகம் செய்யக் காரிலேயே சுற்றியிருக்கிறார்கள் சின்னச்சாமியும் அன்னலட்சுமியும். அதுவும் பயனில்லாமல் போனது. இதற்கிடையே சங்கர், தனது மனைவியைக் காணவில்லை என்று மடத்துக்குளம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து கௌசல்யாவைக் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள் அவரது பெற்றோர். 

‘தான் சும்மாயிருந்தாலும் சுற்றமும் சமூகமும் சும்மா விடுவதில்லை' என்பது கௌசல்யாவின் பெற்றோர் விவகாரத்தில் நூறு விழுக்காடு உண்மை. பெரும்பாலான சாதி ஆணவப் படுகொலைக்குப் பின்னணியில் சுற்றத்தின் தூண்டுதல்களும், சுற்றம் என்ன சொல்லுமோ? என்கிற அச்சமும் இருப்பது நிதர்சனம். பழனிக்குத் திரும்பிய சின்னச்சாமி மற்றும் அன்னலட்சுமியைச் சுற்றத்தார் விட்டுவைக்கவில்லை. அவர்களின் மகள் வேறுசாதியில் திருமணம் செய்துகொண்டுவிட்டாள் என்று தெரிந்ததும் சத்தம் போட்டிருக்கிறார்கள். வீட்டு விசேஷத்துக்கு அழைப்பதற்காக அன்னலட்சுமியின் வீட்டுக்கு வந்த அவரது அண்ணன் பாண்டித்துரை, ''நல்ல புள்ளைய வளர்த்து வெச்சிருக்கீங்க. வேறு சாதி பையனுடன் ஓடிப்போய் அசிங்கப்படுத்திட்டா. இதுவே என்னுடைய புள்ளையா இருந்திருந்தா கொன்னே போட்டுருப்பேன்'' என்று சொல்லித் திட்டியிருக்கிறார்.

இதனால் கோபம் கொண்ட சின்னச்சாமி குடும்பத்தினர் இறுதியாக ஒருமுறை குமரலிங்கம் சென்று கௌசல்யாவைத் தங்களுடன் வரச்சொல்லி வற்புறுத்தியிருக்கிறார்கள். அப்போதும் வர மறுத்திருக்கிறார் கௌசல்யா. இத்தனை அவமானத்துக்குப் பிறகும் தன் மகள் தன்னுடன் வர மறுத்துவிட்டாளே என்று ஆத்திரமடைந்துள்ளார் சின்னச்சாமி. அதே அவமானமும் ஆத்திரமும் அன்னலட்சுமியிடமும் இருந்துள்ளது. அதுதான் தன் மகளை எப்படியாவது கொன்றுவிடும்படி உறவுக்காரரும் வன்முறைத் தொழிலில் ஈடுபட்டு வந்தவருமான மைக்கேல் (எ) மதனிடம் கெஞ்ச வைத்துள்ளது. சாவித்திரி பாய் பூலே சொன்னதை மீண்டுமொருமுறை படித்துப்பாருங்கள். ஆழ்ந்த கல்வி அறிவில்லாதவர்கள் விலங்குகளின் மனநிலைக்கு ஒப்பானவர்களாக இருப்பார்கள்!

ஊரே வேடிக்கைப் பார்க்க.. ஊர் மத்தியில் இருந்த கடையின் சி.சி.டி.வி கேமரா உற்று நோக்க... அந்தக் கொடூரக் கொலைச் சம்பவத்தை எப்படி அரங்கேற்றினார்கள் மைக்கேல் மற்றும் அவனது கூட்டாளிகள்...?

(தொடர்ந்து பேசுவோம்..)

இந்த தொடரின் முந்தைய பகுதிகள்: