Published:Updated:

‘சமூக பிரச்னையில் ரஜினியின் நிலைப்பாடு அவருக்கே தெரியாது!’ சாடும் சட்டப் பஞ்சாயத்து

‘சமூக பிரச்னையில் ரஜினியின் நிலைப்பாடு அவருக்கே தெரியாது!’ சாடும் சட்டப் பஞ்சாயத்து
‘சமூக பிரச்னையில் ரஜினியின் நிலைப்பாடு அவருக்கே தெரியாது!’ சாடும் சட்டப் பஞ்சாயத்து

ஜினி அரசியலுக்கு எப்போது வருவார் என்று அவரது ரசிகர்களும், மீடியாக்களும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த காலகட்டம் மாறி,  இன்று, ஏன் அவர் அரசியலுக்கு வந்தார் என்பதுதான் தற்போதைய பேச்சாக இருக்கிறது. பொதுவாக அரசியல் களத்தில் உள்ளவர்கள் எந்தவொரு பிரச்னைக்கும் எதிர்ப்பு தெரிவிப்பது என்பது இயல்பானது. அதேநேரத்தில், அரசியலைப் பற்றி அரசியலாளர்கள் சொல்வதைக் கேட்கவே வேண்டாம். ஆனால், சாமான்ய மக்களும், ரஜினி ரசிகர்களுமே அவருடைய அரசியல் பற்றி விமர்சிக்கத் தொடங்கியிருப்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது.

'இப்போது ரஜினிக்கு எதற்கு அரசியல்' என்று கேட்கும் அவரது ரசிகர்களும், சாமான்யர்களும் 'அவர் அரசியலுக்கு வரவே வேண்டாம்' என்றுதான் திட்டவட்டமாகச் சொல்கின்றனர். அவர்கள் சொல்வது ரஜினிக்கு கவலையைத் தரக்கூடிய விஷயமாக இருந்தாலும், அதை ரஜினி அவ்வளவு எளிதில் புறம் தள்ளிவிட முடியாது. அந்த அளவுக்கு அவர்களுடைய கருத்துகள் அனைத்தும் வலிமையுடன் வாய்ப்பொத்தி சிரிக்கின்றன.

சாமான்யர்களும், ரஜினி ரசிகர்களும் சொல்லும் விமர்சனங்கள் குறித்து  சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்

ஆறுமுகத்திடம் பேசினோம். ''நடிகராக இருக்கும் ரஜினி அரசியலுக்குத் தேவையில்லை என்ற கண்ணோட்டமோ எங்கும் பரவலாக இருக்கிறது. அனைவரும்அரசியலுக்கு வருவதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வழிவகை உள்ளது. அப்படியிருக்கும்போது அவரை அரசியலுக்கு வரக்கூடாது எனச் சொல்வது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அதேநேரத்தில் அவர் அரசியலுக்கு வருவதைப் பச்சைக் கம்பளம் விரித்து வரவேற்கவும் முடியாது. காரணம்... 'அரசியலுக்கு வாருங்கள்' என உச்சிமுகர்ந்து வரவேற்கும் அளவுக்கு அவர் சமூக, அரசியல் விவகாரங்களில் ஈடுபடவில்லை. சமகாலப் பிரச்னைகள் குறித்துப் பேசவில்லை... ஏன், தமிழகத்தின் எந்தப் பிரச்னைகளுக்காவது மக்களோடு மக்களாக நின்று போராடி இருக்கிறாரா... சமூகப் பிரச்னைகள் குறித்து அவருடைய நிலைப்பாடு என்னவென்று அவருக்கே தெரியுமா என்பது சந்தேகம்தான். எனவே நடிப்பு, பட பூஜை, பட ரிலீஸ் என்ற வட்டத்தைத் தாண்டி வெளியில் வராதவரை எப்படி இருகரம் கூப்பி வரவேற்க முடியும்'' என்று சொல்லும் அவர், “சமூகப் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுக்காதவரை அரசியலுக்கு வாருங்கள் என அழைக்க முடியாது” என்கிறார் மிகத் தெளிவாக. 

 தமிழர் முன்னேற்றப் படையின் நிறுவனரான வீரலட்மியிடம் பேசினோம். “ரஜினி அரசியலுக்கு வருவதாகக் கடந்த ஆறு மாதங்களுக்கு

முன்பு தகவல் வெளியானது. அப்போதே அவருடைய  நடவடிக்கையை எதிர்த்து நாங்கள் போராட்டம் நடத்தினோம். அதை உறுதிப்படுத்தும் விதமாக ரஜினியும், தன்னுடைய ரசிகர்கள் சந்திப்பை நடத்தி... அதில் தமது அரசியல் ஆசையை வெளிப்படுத்தி இருந்தார். அப்போது, 'போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்' என்று அறைகூவல் விடுத்த ரஜினி, இலங்கையில் தமிழர்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டபோது ஏன் சிங்களர்களுக்கு எதிராகப் போர் பிரகடனம் செய்யவில்லை என்பதுதான் அவரிடம் நான் கேட்கும் கேள்வி? 

அப்போதெல்லாம் சிங்களர்களின் திரைப்பட நிறுவனங்களில் படத்தை நடித்துக் கொடுத்து பணம் பார்த்தவர் தற்போது அரசியல் ஆதாயத்துக்காக, 'நான் பச்சைத் தமிழன்' என்று சொல்கிறார். அவருடைய இந்தப் பேச்சு, அரசியல் ஆதாயத்துக்காக என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. அதுமட்டுமல்லாது, கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது வாயைத் திறக்காத ரஜினி, இப்போது தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என நினைப்பது மக்களின் நலனுக்காகவா? 

48 வருடங்களாகத் தமிழகத்தில் இருந்து பணம் சம்பாதித்தவர், இங்குள்ள மக்களுக்கு என்ன செய்துள்ளார்? தமிழகத்தில் சம்பாதித்த பணத்தைக் கர்நாடகத்தில் சொத்துக்களாகவும், வணிக நிறுவனங்களாகவும் மாற்றி அங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். அப்படித் தமிழகத்தில் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யாதவர் அரசியலுக்கு வருவதாகச் சொல்வது லாபநோக்கத்துக்காக மட்டுமே. அவரை, அரசியலுக்கு வர வேண்டாம் எனச் சொல்லவில்லை... அவர், அரசியல் செய்ய வேண்டுமென்றால் கர்நாடகம் மற்றும்  மகாராஷ்ரா மாநிலங்களில் போய் அரசியல் செய்யட்டும்'' என்றார் காட்டமாக.

 பெரியார், காமராஜர், அண்ணா போன்றோர் மக்களுக்காகச் சேவையாற்றிப் பிறகு அரசியலில் பெரிய மனிதர்கள் ஆனார்கள்... அவர்களைப்போல், இன்று அரசியலுக்கு வர ஆசைப்படுபவர்கள் முதலின் மக்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு மேடையேற வேண்டும் என்பது சாமான்யர்களின் குரலாக இருக்கிறது.