Published:Updated:

"எங்கள் ஆற்றை எங்களுக்குத் தாருங்கள்" - எண்ணூர் மக்களின் கலகக் குரல்

"எங்கள் ஆற்றை எங்களுக்குத் தாருங்கள்" - எண்ணூர் மக்களின் கலகக் குரல்
"எங்கள் ஆற்றை எங்களுக்குத் தாருங்கள்" - எண்ணூர் மக்களின் கலகக் குரல்

"எங்கள் ஆற்றை எங்களுக்குத் தாருங்கள்" - எண்ணூர் மக்களின் கலகக் குரல்

" அக்கா...அங்கப் பாரு ரெண்டு வெண்ணிலாவும் பக்கத்து, பக்கத்துலேயே நின்னுட்டிருக்காளுக...இப்பப் பாருங்களேன்."

"ஏய் வெண்ணிலா..."

நான்கு படகுகள் தள்ளியிருந்த அந்த நீலப் படகில் இருந்த அந்த இரு பெண்களும் ஒரே சமயத்தில்  திரும்பிப் பார்த்தனர். 

"ஹா..ஹா.. க்கா பார்த்தீங்களா ரெண்டு பேருமே எப்படி திரும்பிப் பார்க்குறாளுங்க. இந்தாங்கடி ஏலக்காய் மிட்டாய், எதையாவது தின்னுட்டு வந்தீங்களா இல்லையா? இன்னிக்கு கத்துற சத்தத்துல கம்பெனிகாரனுங்க பயந்து ஓடிடனும், மயக்கம் போட்டு விழுந்திடாதீங்கடி..." என்றபடி தன் மணி பர்ஸை திறந்து சில மிட்டாய்களையும், பக்கத்திலிருந்த பையிலிருந்து சில வாட்டர் பாக்கெட்களையும் அந்தப் படகை நோக்கி தூக்கி எறிந்தார்கள்."வெண்ணிலாக்கள்" அதை மிகச் சரியாக கேட்ச் செய்தார்கள். 

"போன போராட்டத்துல, அதோ அந்தப் பாலத்துக்கு மேல தான். பாவம் காலையில சோறு திங்காம வந்துட்டாளுங்க, போராட்டம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலேயே மயங்கி விழுந்துடுச்சுங்க. பேரு தான் ஒரே மாதிரிதான்னு பார்த்தா, உடம்ப பாருங்க எலும்பும் தோலுமா எப்படி இருக்காளுங்க.." 

"டேய் கதிரு...இன்னா உங்கக் குப்பத்துலருந்து சும்மா 4 பேரு மட்டும் தான் வந்திருக்கீங்க? எங்கடா புள்ளைங்க?"

"இதோ வந்துடுவாங்க அத்தை....எப்படியும் ஒரு 5 போட்டு வந்துடும்" 

இப்படியான உரையாடல்கள் அங்கிருந்த பல படகுகளிலும் கேட்டுக் கொண்டிருந்தது. அரை மணி நேரத்திற்குள்ளாகவே அங்கு பல படகுகள் வந்து சேர்ந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் அங்கு வந்து குவிந்த வண்ணமிருந்தனர். எல்லாப் படகுகளிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தது. 

வந்திருந்த பலரும் ஆற்றில் இறங்கி மனிதச் சங்கிலியாக கைபிடித்தபடி நின்றார்கள். வெயில் இல்லை. தண்ணீர் குளிர்ச்சியாக இருந்தது. பல சிறுவர்களும், பெண்களும் குளிரில் நடுங்கியபடியே ஆற்றில் நின்று கொண்டிருந்தார்கள். 

போராட்டம் தொடங்கியது. 

"ஆறு எங்க உசுரு... ஆறு எங்க உசுரு..."

"மேப்ல அதை தொலைச்சது யாரு...மேப்ல அதை தொலைச்சது யாரு"

"பார்த்துக்கோ...பார்த்துக்கோ..."

"மேப்ல தொலைஞ்ச ஆத்த...பார்த்துக்கோ, பார்த்துக்கோ"

அத்தனைப் பேரும் சேர்ந்து கொடுத்த அந்தக் குரல் காற்றின் சத்தத்தைக் கிழித்து பல தூரத்திற்கு கேட்டது. 

இது பல ஆண்டுகளாகக் கேட்டுக் கொண்டிருக்கும் குரல் தான். அதுவும் சமீபமாக சமூக ஆர்வலர்களின் வழியாகவும், நடிகர் கம்லஹாசனின் வழியாகவும், எம்.பி. கனிமொழி வழியாகவும் உரக்க, உரக்க கேட்ட குரல். 

எண்ணூர்...கொசஸ்தலை...அனல்மின் நிலையங்கள்...ஹிந்துஸ்தான் மற்றும் பாரத் பெட்ரோலியம்...காமராஜர் துறைமுகம்...சாம்பல் கழிவுகள்...ஆக்கிரமிப்பு...அழிவு. இந்தக் கதைகளை வார்த்தைகளாகவாவது சமீபகாலங்களில் கடந்திருப்போம். புத்தாண்டின் தொடக்கம் பலருக்கும் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கலாம். ஆனால், எண்ணூரைச் சுற்றியிருக்கும் மக்களுக்கு இந்தப் புத்தாண்டு பெரும் போராட்டத்தோடே தொடங்கியிருக்கிறது. 

"இது இன்னா சார் அநியாயமா இருக்குது. இது என்ன சினிமாவா? ஒரு ஆத்தையே மேப்லருந்து தூக்கியிருக்காங்க. சிட்டிசன் படத்துல வர்ற 'அத்திப்பட்டி கிராமம்' கதை மாதிரி ஆக்கிட்டாங்க. வந்துப் பாக்கச் சொல்லுங்க எங்க ஆத்த...இது எவ்வளவு பெரிய துரோகம். ஏமாத்து வேலை? ஒரு கவருமெண்டே இப்படி ஏமாத்தலாமா?" என்று கொந்தளிக்கும் கலையரசனின் கேள்வியிலிருந்து,  அந்தப் பிரச்னை குறித்த அடிப்படையைத் தேடலாம். 

இது இந்தியாவின் மிகப் பெரிய நீர் மோசடி. ஒரு நாட்டின் அரசாங்கம் தன் குடிமக்களைப் பெரும் முட்டாள்களாக்கிய கதை இது.
உயர் அலை எழும் பகுதியை ஒட்டியிருக்கும் 500மீ தூர கடற்கரை மற்றும் கடலின் அருகே இருக்கும் சிற்றோடைகள் , கடற்கழிகள் ஆகியவற்றின் 100மீ தூர கரையை  'கடலோர கட்டுப்பாட்டு மண்டலம்'  ( Coastal Regulation Zone - CRZ ) என்று சொல்கிறார்கள்.இந்தப் பகுதியின் சூழலியல் முக்கியத்துவத்தைக் கொண்டு இதை CRZ 1, CRZ 2, CRZ 3 மற்றும் CRZ 4 என நான்கு வகைப்படுத்துகின்றனர். இதில் எண்ணூர் CRZ - 1ன் கீழ் வருகிறது. அதாவது, மிகவும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. 

இந்த CRZ - 1 யின் வரைபடத்தை 2009யில் ஜேசு ரத்தினம் எனும் சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வாங்குகிறார். அது 1996யில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வரைபடம். பின்னர், 2017யில் சூழலியலாளர் நித்தியானந்த் ஜெயராம் மீண்டும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வரைபடத்தைக் கேட்டு வாங்குகிறார். அதில் 16கிமீ நீளமுள்ள எண்ணூர் கடற்கழியைக் காணவில்லை. ஆம்...ஆறு இருந்த பகுதி முழுக்க நிலமாகக் காட்டப்பட்டிருந்தது. (இது குறித்த முழுமையான விவரங்களைத் தெரிந்துக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்).

இந்த ஏமாற்றப்பட்ட வரைபடத்தை அடிப்படையாக வைத்து இந்தப் பகுதியில் காமராஜர் துறைமுகம் ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கான விரிவாக்கப் பணிகளை முன்னெடுத்தது. வள்ளூர் அனல்மின் நிலையம் தன் சாம்பல் குட்டையை விரிவாக்க திட்டமிட்டுள்ளது. இந்தப் பிரச்னைகளோடு, எண்ணூரில் வடசென்னை அனல்மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் கொசஸ்தலையில் கலப்பது, முகத்துவாரப் பகுதியை ஆக்கிரமித்து ஹிந்துஸ்தான் மற்றும் பாரத் பெட்ரோலிய நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளது எனப் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. 

கடந்த வருடம் தொடர் மக்கள் முன்னெடுத்த தொடர் போராட்டங்கள், கமல்ஹாசன் மற்றும் எம்.பி. கனிமொழி ஆகியோரின் நேரடி விசிட் ஆகியவை இந்தப் பிரச்னையை எண்ணூர் தாண்டி கேட்க வைத்தது. ஆனால், எந்தத் தீர்வுகளும் இது நாள் வரை எட்டப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை. 

காமராஜர் துறைமுகத்தின் விரிவாக்கம் திட்டத்திற்கு எதிராக வந்திருந்த புகார்களின் அடிப்படையில், திட்டத்தின் சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் சாத்தியங்களை ஆய்விட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திலிருந்து நிபுணர் குழு ஒன்று ஜனவரி மாதம், 5-6 தேதிகளின் எண்ணூர் பகுதியை பார்வையிட்டு, மனுதாரர்களையும் சந்திக்கும் என்று தெரிவித்துள்ளது. 

தங்களை சூழ்ந்துள்ள பிரச்னைகளுக்கு எதிராக எண்ணூர் பகுதியின் காட்டுக்குப்பம், முகத்துவாரக்குப்பம், சிவன்படை வீதி குப்பம், எண்ணூர் குப்பம் போன்ற கிராமங்களிலிருந்து வந்த மக்கள் கொசஸ்தலை ஆற்றில் இறங்கி நின்று, மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர். அவர்கள் முக்கியமாக நான்கு கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்:

1. ஆறே இல்லை என்று பொய் சொல்லி ஏமாற்றப்பட்ட அந்த CRZ வரைபடம் திரும்ப்பப் பெற வேண்டும். உண்மையான வரைபடத்தை அடிப்படையாக வைத்து தான் இனி இந்தப் பகுதியின் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். அந்த வரைபடத்தின் அடிப்படையை வைத்து இதுவரை செய்யப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பை நீக்க வேண்டும்.

2. வள்ளூர் அனல்மின் நிலையம் தன் சாம்பல் கழிவுகளைக் கொட்டும் "சாம்பல் குட்டை"யை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். 

3. கொசஸ்தலை ஆற்றை தூர்வாரி, சுத்தம் செய்து கொடுக்க வேண்டும்.

4. காமராஜர் துறைமுகத்தின் விரிவாக்கப் பணிகள் கைவிடப்பட வேண்டும்.

"இந்த ஆறுதான் சார் எங்க வாழ்வாதாரம். நாங்க பாட்டுக்கு நிம்மதியா வாழ்ந்திட்டிருந்தோம். என்னிக்கு இந்த கம்பெனிங்க வந்துச்சோ, அன்னிக்கு ஆரம்பிச்சது பிரச்னை. ரெண்டு ஆளு மூழ்குற அளவுக்கு இருக்கும் இந்த ஆத்தோட ஆழம் . ஆனா, இப்போ பாருங்க முட்டிகால் கூட நனைய மாட்டேங்குது. சும்மா கையவிட்டு எடுத்தாக் கூட சாம்பல் கழிவு தான் வெளிய வருது...ஜீவா அத்த எடுத்துக்காட்டுறா" என்று வனம் சொல்லவும் அவரின் பேரன் ஜீவா, நின்று கொண்டிருக்கும் ஆற்றில் குனிந்து கைகளில் அந்த சாம்பலை எடுத்துக் காண்பிக்கிறான். 
"பாரு சார்...எப்படி இருக்குது. இப்படி இருந்தா எப்படி சார் மீன் புடிக்கிறது? அதோ ஆத்த ஒட்டி தெரிதே...அது சதுப்பு நிலப்பகுதி. அங்கத் தான் மீனு, இறால் எல்லாம் குஞ்சுப் பொறிக்கும். ஆனா, அதையும் இந்த போர்ட்டுகாரங்க எடுத்துக்கிட்டு அங்க எதையோ கட்டப் போறாங்க. அங்கெல்லாம் கட்டடம் கட்டுனாங்கன்னு ஆறு மொத்த சமாதியாயிடும். ஆனா, இவங்களுக்கு ஒண்ணு மட்டும் புரிய மாட்டேங்குது. ஆறு சமாதியாகுதுன்னா, கொஞ்ச நாள்லயே அது அடுத்த புயலோ, வெள்ளமோ வரும் போது மொத்த இடத்தயும் ஜல சமாதியாக்கிடும். " என்று சொன்னபடியே நெற்றியில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு, ஆற்றுக்குள் இறங்குகிறார் காட்டுக்குப்பம் வனம்.

மீண்டும் அவர்களின் போராட்டம் தொடங்குகின்றது. தங்கள் வாழ்வைக் காப்பாற்றிட, தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட, அவர்களின் எதிர்காலத்தைக் காத்திட அந்த மக்கள் தங்கள் எதிர்ப்பையும், கோரிக்கையையும் அறவழியில் முன்வைத்து கோஷமிடுகின்றனர். அவர்கள் போராடுவது அவர்களுக்காக மட்டுமல்ல...அந்தப் போராட்டம் எல்லாருக்குமானது தான்.

கிளம்பும் நேரம்...காட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 102 வயது கிருஷ்ணவேணி பாட்டி அந்தப் படகில் இருந்து...

"இந்த ஆறு இல்லன்னு சொல்றவன் எவன்னாலும் எம் முன்னாடி வந்து நிக்கச் சொல்லு... அவனுக்கான கூலிய நான் தர்றேன்... வந்து பாக்கச் சொல்லு இந்த ஆத்த. நான் பிறந்ததுலருந்து பார்த்திட்டிருக்கேன் ...இதை ஒழிக்கணும்ன்னு நினைக்குற எவனா இருந்தாலும் எம் முன்னாடி வந்து நில்லு. எனக்கு மேல இருக்குறவ அவனுக்கான தண்டனையக் கொடுப்பா... ஆத்த கொஞ்சம், கொஞ்சமா கொன்னதோடு இல்லாம, ஆறே இல்லைன்னு வேற சொல்லுவானுங்களா? " என்று பெரும் கோபம் கொண்டு கத்தினார். 

பதில்?!

அடுத்த கட்டுரைக்கு