Election bannerElection banner
Published:Updated:

நாட்டையே உலுக்கிய கலவரம்.. பீமா கோரிகான் ஒளித்திருக்கும் உண்மைகள்!

நாட்டையே உலுக்கிய கலவரம்.. பீமா கோரிகான் ஒளித்திருக்கும் உண்மைகள்!
நாட்டையே உலுக்கிய கலவரம்.. பீமா கோரிகான் ஒளித்திருக்கும் உண்மைகள்!

நாட்டையே உலுக்கிய கலவரம்.. பீமா கோரிகான் ஒளித்திருக்கும் உண்மைகள்!

மகாராஷ்ட்ரா மாநிலத்தின் முக்கிய நகரமான பூனேவில் இருந்து வெறும் 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சிறிய கிராமம் பீமா கோரிகான். இன்று இந்தியா முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறது இந்தக் கிராமம். பீமா கோரிகானில் 1927-ம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர், நினைவு அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் அவர் மக்களிடையே பேசும்போது, 'பீமா கோரிகான் கிராமத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் தலித் மக்கள் வருகை தந்து, தங்கள் முன்னோரை நினைவுகூர்ந்து, வரலாற்றை மீட்க வேண்டும்' என்றார். அதன்படி ஒவ்வொரு வருடமும் இங்கு தலித் மக்கள் கூடி, தங்கள் முன்னோர்களுக்கு அமைதியான முறையில் மரியாதை செலுத்தி வந்தனர்.

மராட்டிய மாநிலத்தின் தலித் மக்களான ‘மகர்’ சமூகத்தினர், பீமா கோரிகான் கிராமத்தை வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதுகின்றனர். 17-ம் நூற்றாண்டின் இறுதியில் மராட்டியத்தை ஆண்ட பேஷ்வா மன்னர்களின் கீழ் 'மகர்' சமூகத்தினர் பல்வேறு சாதிக் கொடுமைகளைச் சந்தித்தனர். பொதுத் தெருக்களில் நுழைவதற்கு அனுமதி மறுப்பு. காலையிலும், மாலையிலும் 'மகர்' மக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்குத் தடை என பல சாதிக் கொடுமைகள் அரங்கேற்றப்பட்டன. அதற்கு சொல்லப்பட்ட காரணம் – 'மகர்' மக்களின் நிழல் உயர்சாதியினர் மீது விழுந்து விடக்கூடாது என்பது. மேலும், 'மகர்' சமூக மக்கள் தெருக்களில் நடக்கும்போது உடலோடு துடைப்பத்தைக் கட்டிக் கொண்டும், எச்சில் விழாமல் இருக்க பாத்திரம் ஒன்றைக் கட்டிக் கொண்டும் செல்வதற்கு நிர்பந்திக்கப்பட்டிருந்தனர்.

கிழக்கு இந்திய கம்பெனி தோற்றுவிக்கப்பட்ட பிறகு, 'மகர்' சமூகத்தினர் தங்களுக்கு குறைந்தபட்ச மரியாதையை எதிர்பார்த்து, பெருமளவில் பம்பாய் ராணுவப் பிரிவில் இணைந்தனர். இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ஆங்கிலேய அரசுக்கு, மராட்டியத்தில் 'பேஷ்வா' மன்னர்களுடன் போரிட வேண்டிய சூழல் இயல்பாகவே அமைந்தது.

1818-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி 'ஸ்டாண்டன்' என்ற வெள்ளைக்கார தளபதியின் ஆணையின் கீழ், 900 வீரர்கள் மராட்டியத்தின் சேரூர் நகரத்தில் இருந்து பூனேவுக்குச் சென்று கொண்டிருந்தனர். பீமா நதியின் கரையோர கிராமமான கோரிகான் வழியாக அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத தாக்குதல் அவர்கள்மீது தொடுக்கப்படுகிறது. 20,000 வீரர்களைக் கொண்ட பேஷ்வா படையினர் அவர்களைத் தாக்கினர். இந்தத் தாக்குதலை 'பேஷ்வா' மன்னரே முன்னின்று நடத்தினார்.

ஆங்கிலேயரின் படையில் ஏறத்தாழ 700 பேர் 'மகர்' சமூகத்தினர் பங்கேற்று இருந்தனர். வெற்றியும், தோல்வியும் இருபக்கமும் நிர்ணயிக்கப்படாத நிலையிலும், 'ஸ்டாண்டன்' தலைமையிலான ஆங்கிலேயர்களின் படை சேரூர் நகரத்தைச் சென்றடைந்தது. அதன்மூலம், பேஷ்வாக்களுக்கு எதிரான போரில் வென்ற ஆங்கிலேயப் படை, மராட்டியத்தில் கிழக்கு இந்திய கம்பெனியின் கொடியைப் பறக்கவிட்டது.

'பீமா கோரிகான் போர்' ஆங்கிலேயர்களுக்கு பம்பர் பரிசாக அமைந்திருந்தது. எனவே, அதில் பங்கேற்ற வீரர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக, போர் நிகழ்ந்த கிராமத்தில் நினைவுச் சின்னம் அமைத்தது அன்றைய ஆங்கிலேய அரசு. பிரிட்டிஷ் அரசின் நாடாளுமன்ற விவாதங்களிலும் பீமா கோரிகான் வெற்றிக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

1857-ம் ஆண்டு நாடு முழுவதும் எழுந்த ‘சிப்பாய்க் கலகத்தில்’ பம்பாய் ராணுவப் படையில் இருந்த 'மகர்' சமூகத்தினருள் சிலரும் பங்குகொண்டனர். அதன் காரணமாக, ஆங்கிலேய அரசு 1892-ம் ஆண்டு முதல் 'மகர்' சமூகத்தினரை ராணுவத்தில் சேர்ப்பதற்கு அனுமதியை விலக்கியது.

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் தந்தை சுபேதார் ராம்ஜி சக்பால், 'மாவ்' என்ற பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ராணுவ முகாம் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்தார். 1927-ம் ஆண்டு, ஜனவரி முதல் நாள், அம்பேத்கர் 'பீமா கோரிகான்' கிராமத்துக்கு வருகை தந்தார். அன்று அவர் மக்களிடையே பேசி, வெளியிட்ட அழைப்பை ஏற்று, ஆண்டுதோறும் தலித் மக்கள் 'பீமா கோரிகானு'க்கு வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். பீமா கோரிகான் போரை, தங்களை அடக்கிய 'பேஷ்வா' உயர்சாதியினரை நேரடியாக தலித் மக்கள் வீழ்த்தியதின் குறியீடாகக் கருதி வருகின்றனர்.

இந்த ஆண்டு, பீமா கோரிகான் போரின் 200-வது ஆண்டு என்பதால், குஜராத்தில் புதிதாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜிக்னேஷ் மேவானி, ரோஹித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலா முதலான செயற்பாட்டாளர்கள் பங்கேற்பில், 2017 டிசம்பர் 31 அன்று பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. பீமா கோரிகானில் நினைவு அஞ்சலி செலுத்துவது ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக அனுசரிக்கப்படும் நிகழ்ச்சி எனவும், அது தடைசெய்யப்பட வேண்டும் எனவும் பல்வேறு இந்துத்துவ அமைப்புகள் குரல்கொடுத்து வந்தனர். எனினும், வழக்கம்போல பீமா கோரிகானில் தலித் மக்கள் கூடினர்.

பல்வேறு எதிர்ப்புகளை மீறி கூடிய மக்கள்மீது, இந்துத்துவ அமைப்புகளான சமஸ்த் ஹிந்து அகாதி மற்றும் ஷிவ் பிரதிஷ்தான் ஹிந்துஸ்தான் தொண்டர்கள் பங்கேற்று வன்முறையில் ஈடுபட்டதாக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த அமைப்புகளின் தலைவர்களான மிலிந்த் எக்போடே மற்றும் சம்பாஜி பிடே ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ’அமைதியாக கூடிய மக்கள்மீது வன்முறையை ஏவியதற்காக குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைதுசெய்யப்பட்டு, யாகும் மேமனுக்கு அளிக்கப்பட்டது போல தண்டனை தரப்பட வேண்டும்’ எனக் கூறியுள்ளார் அம்பேத்கரின் பேரன், பிரகாஷ் அம்பேத்கர்.

குற்றம் சாட்டப்பட்ட சம்பாஜி பிடே, பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர் எனக் கூறப்படுகிறது. தலித் மக்களின் ஒற்றுமையையும் அரசியல்மயப்படுவதையும் தடுப்பதற்காகவே இந்த வன்முறைகள் ஏவப்படுவதாக ஜிக்னேஷ் மேவானி உட்பட பல்வேறு சமூக செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு