Published:Updated:

தினமும் இருவேளை குளியல், 5 கி.மீ.வாக்கிங்... யானைகள் நலவாழ்வு முகாமில் ஒருநாள்! #SpotVisit

தினமும் இருவேளை குளியல், 5 கி.மீ.வாக்கிங்... யானைகள் நலவாழ்வு முகாமில் ஒருநாள்! #SpotVisit
தினமும் இருவேளை குளியல், 5 கி.மீ.வாக்கிங்... யானைகள் நலவாழ்வு முகாமில் ஒருநாள்! #SpotVisit

யானைகள்.... பார்க்கப் பார்க்க சலிக்காத பேரதிசயம். ஒரேயொரு யானையையே வைத்தகண் வாங்காமல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்க்கலாம். ஒரே இடத்தில் 33 யானைகளைப் பார்த்தால். சொல்லவா வேண்டும்? கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்து உள்ள தேக்கம்பட்டியில் துவங்கப்பட்டுள்ள யானைகள் நலவாழ்வு முகாமுக்கு சென்று திரும்பினால் சுவாரஸ்யத்துக்கும் குதூகலத்துக்கும் இருக்கவே இருக்காது பஞ்சம்.

அ.தி.மு.க ஆட்சியின் அடையாளங்களுள் ஒன்றான  யானைகள் நலவாழ்வு முகாம் துவங்கிவிட்டது.  அ.தி.மு.க ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் எப்பாடுபட்டாவது யானைகளுக்கு நலவாழ்வு முகாம் நடத்திவிடுவார்கள். ஏனென்றால், கோயில் யானைகளுக்கு நலவாழ்வு முகாம் நடத்தப்பட வேண்டும் என்பது ஜெயலலிதாவின் கட்டளை. 2003-ம் ஆண்டு முதல் இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் நடைபெறுவது 10-வது முகாம்.  ஜெயலலிதா இல்லாமல் நடத்தப்படும் முதல் முகாமும்கூட.  ஜனவரி 4-ம் தேதியில் ஆரம்பித்து பிப்ரவரி 20-ம்தேதி வரைக்கும் மொத்தம் 48 நாள்கள் நடக்க இருக்கும் இந்த முகாமில் தமிழகத்தில் உள்ள கோவில் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான 31 யானைகள்  மற்றும் புதுச்சேரியில் இருந்து 2 யானைகள் என மொத்தம் 33 யானைகள் கலந்துகொண்டுள்ளன. இந்துசமய அறநிலையத்துறை, 1,50,76,000 ரூபாய் செலவில் இந்த முகாமை நடத்துகிறது. 

"வருஷம் முழுக்க ஒரே கோயிலில் இருப்பதால், அதுங்க மனதளவிலும் உடலளவிலும்  சோர்ந்து போயிடும். நாம எப்படி வருஷத்துக்கு ஒருமுறை ஊட்டி, கொடைக்கானல் போய் ஜாலியா சுத்திட்டு மனச லேசாக்கிகிட்டு வர்றோமோ அதுபோலதான் கோயில் யானைகளுக்கு இந்த கேம்ப்” என்று ஒரு யானைப் பாகன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. 3-ம் தேதியிலிருந்தே முகாமுக்கு தமிழகத்தின்  பல ஊர்களிலிருந்தும் யானைகள் வரத்துவங்கிவிட்டன. யானைகளைப் பக்கத்தில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் இறக்கிதான் யானைகளை முகாமுக்கு அழைத்து வந்தார்கள். நெடுந்தொலைவிலிருந்து வந்த யானைகளுக்கு பயண அசதி (ட்ராவல் ஸ்ட்ரெஸ்) இருக்கும். ஓரிரு நாள்களுக்கு அந்த ஸ்ட்ரெஸ் தொடருமாம். ஆனால், முகாமுக்குள் நுழைந்ததும் ஸ்ட்ரெஸ்ஸையும் கடந்து சந்தோஷமாகிவிட்டன எல்லா யானைகளும். வருடாவருடம் வருவதால் நாம் எங்கே வந்திருக்கிறோம் எதற்காக வந்திருக்கிறோம் என்று அதற்கு தெரியும் போல! அப்படிதான் இருந்தது அவற்றின் செயல்பாடுகள். பள்ளிக்கூடத்துச் சிறுவர்கள் தன் நண்பர்களோடு எப்படி விளையாடுவார்களோ அப்படி இருக்கிறது ஒவ்வொரு யானையும் அடிக்கும் லூட்டிகளைப் பார்த்தால். ஒன்றோடு ஒன்று தும்பிக்கையால் பிணைத்துக் கொண்டு கொஞ்சும் காட்சியெல்லாம் உச்சகட்ட உணர்ச்சிப் பெருக்கு. பழைய ப்ரெண்ட்ஸ்-ஐ மீட் பண்ணறாங்கள்ல அதான் இப்படி என்று  தும்பிக்கை தழுவல் காட்சிக்கு விளக்கம் கொடுக்கிறார்கள் யானை பாகன்கள். இப்படியாக முகாம் ஆரம்பிப்பதற்கு முதல்நாளே ஆஜாரான யானைகள் கொண்டாட்டம் ஆரம்பித்துவிட்டது. 

4-ம் தேதி, விடிவதற்குள்ளாக  அனைத்து யானைகளும் வந்துசேர்ந்துவிட்டன. சரியாக 7 மணிக்கு யானைகளின் குளியல் படலம் ஆரம்பித்தது, அதுதான் கண்கொள்ளாக் காட்சி! யானைகளை குளிப்பதற்கென்று பிரத்யேகமாக பவானி ஆற்றங்கரையோரம்  ஷவர் அமைத்திருக்கிறார்கள். ஷவரில் குளிக்காத யானைகளுக்கு பாகன்களே  குளிப்பாட்டிவிடும் வகையில் தண்ணீர் ட்யூப்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரிசையாக யானைகள் குளிப்பதைப் பார்த்தால் பலமடங்கு பரவசம் பற்றிக்கொள்கிறது. 48 நாள்களில் ஒவ்வொரு நாளும் இருவேளையும் இப்படியான குளியல் யானைகளுக்கு கட்டாயம். அதுமட்டுமல்லாது யானைகளை தினமும் 5 கிலோமீட்டர் வாக்கிங் அழைத்துச் செல்ல இருக்கிறார்கள் (முகாம் உள்ளேயே). யானைகள் வாக்கிங் போனா எப்படி இருக்கும்? சும்மா யோசிச்சிப் பாருங்களேன். கோயில்களில் தரப்பட்டுக் கொண்டிருந்த ரெகுலர் உணவுகளுக்கு இங்கே லீவ். விதவிதமான பசுந்தீவனங்கள், பழவகைகள் கொடுக்கப்பட உள்ளன. அதுமட்டுமல்லாது யானைகளுக்குத் தேவையான அத்தனை சிகிச்சைகளும் இங்கே தரப்பட உள்ளன. ஒவ்வொரு யானையையும் பரிசோதனை செய்து ஒவ்வொரு யானைக்கும் பிரத்யேக உணவும் உடற்பயிற்சியும் வழங்க உள்ளோம். இங்கிருந்து போகும்போது யானைகள் புதுரத்தம் பாய்ச்சப்பட்டதைப்போல செல்லும் என்கிறார்கள் வனத்துறை அதிகாரிகள்.

  யானைகள் லூட்டி அடிக்கும் புகைப்படங்களைக் காண க்ளிக் செய்க 

சந்தோஷம் இருக்கும் இடத்தில் சவால்களும் இருக்கும் என்கிற விதிப்படி இந்த முகாமுக்கு மிகப்பெரிய சவால் இருக்கிறது. அச்சுறுத்தும் காட்டு யானைகள்தான்  எப்போது வேண்டுமானாலும் முகாமுக்குள் நுழையலாம். தங்கள் எல்லைக்குள் தங்களுக்குச் சம்பந்தம் இல்லாத கோயில் யானைகள் நுழைந்தால் காட்டு யானைகளுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடுமாம்.  அதனால், எப்போது வேண்டுமானாலும் காட்டு யானைகள் காட்டுக்குள் இருந்து முகாமை நோக்கி படையெடுக்கலாம்.  இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. முகாமில் இருக்கும் கோயில் யானைகள் எல்லாம் பெண் யானைகளாக இருப்பதால்  அந்த ஈர்ப்பினால்  சில ஆண் காட்டு யானைகள் முகாமை நோக்கி வரலாம் என்கிறார்கள். என்ன காரணத்துக்காக காட்டு யானைகள் வெளியே வந்தாலும் நிச்சயம் அது ஆபத்துதான். கோயில் யானைகளுக்கும், அங்கு உள்ள மக்களுக்கும். இதற்கு வனத்துறையினர் என்ன சொல்கிறார்களென்றால், “முகாமைச் சுற்றியும் ஐந்து கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்துள்ளோம். அதில் கண்காணிப்புப் பணிக்கு போடப்பட்டுள்ள நபர்களின் கண்களிலிருந்து காட்டு யானைகள் தப்ப முடியாது; காட்டுக்குள் இருந்து யானைகள் வெளியேறினால், அவர்கள் மீண்டும் காட்டுக்குள்ளேயே அனுப்பிவிடுவார்கள். அதுமட்டுமல்லாது, வனத்தையொட்டிய பகுதிகளைச் சுற்றியும் வேட்டைத் தடுப்புக் காவலர்களை பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ளோம். அவர்கள் கண்ணில்பட்டாலும் காட்டு யானையை மீண்டும் காட்டுக்குள்ளேயே துரத்திவிடுவார்கள். எல்லாவற்றையும் தாண்டி காட்டு யானைகள் முகாமை நோக்கி வருமேயானால் தொங்கும் மின்வேலி இருக்கிறது பாதுகாப்புக்கு.  அந்த வேலியை  காட்டு யானை உரசினால் திரும்பவும் ஓடிவிடும். ஷாக் அடித்தால் பயந்து வந்த பாதையிலேயே காட்டுயானைகள் திரும்பிவிடும் என்கிறார்கள். எந்த பிரச்னையும் இல்லாமல்  48 நாள்களும் நல்லபடியாக  நலவாழ்வு முகாம் நடக்க வேண்டும் என்பதுதான் எல்லோரின் விருப்பமும்.

பின் செல்ல