Published:Updated:

மோடியை வீழ்த்திய த்ரீ இடியட்ஸ்!

ப.திருமாவேலன்

மோடியை வீழ்த்திய த்ரீ இடியட்ஸ்!

ப.திருமாவேலன்

Published:Updated:

ந்தியாவின் சகல பிரச்னைகளுக்கும் சர்வரோக நிவாரணியாக விளம்பரம் செய்யப்பட்ட மோடி பிராண்ட், பீகாரில் வேலை செய்யவில்லை; ஏற்கெனவே அது டெல்லியிலும் செல்லுபடியாகவில்லை. படா படா வாக்குறுதிகளை எல்லாம் அள்ளித் தெளித்து ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி, 18 மாத காலத்தில் சிறு சலனத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை, பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவு காட்டியிருக்கிறது.

இந்தக் குரல், பா.ஜ.க-வுக்கு வெளியே அல்ல... உள்ளேயே கேட்கிறது. ' டெல்லி சட்டமன்றத் தேர்தல் தோல்வியில் இருந்து கட்சி பாடம் கற்காததையே, பீகார் சட்டமன்றத் தேர்தல் தோல்வி காட்டுகிறது’ என அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அருண் ஷோரி, யஷ்வந்த் சின்கா, சாந்தகுமார், கே.என்.கோவிந்தாசார்யா உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் தங்களது கோபத்தையும் கொந்தளிப்பையும் வெளிக்காட்டியுள்ளார்கள். அத்வானியும் ஜோஷியும் அந்தக் கட்சியை உருவாக்கியவர்களில் முக்கியமானவர்கள்; மோடி, இந்த அளவுக்கு வளர பாதயாத்திரைப் பாதை போட்டுக்கொடுத்தவர்கள். இவர்கள் வெளியிட்ட அறிக்கைதான், பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைவிட மோடிக்கு மோசமானது.

மோடியை வீழ்த்திய த்ரீ இடியட்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'நானே’, 'நான் மட்டுமே’, 'நான் போதுமே’ என்ற முடிவுகளோடு செயல்படும் மோடி மாதிரியான ஆட்கள், எல்லா வெற்றிகளுக்கும் தங்களுக்குத் தாங்களே மகுடம் சூடிக்கொள்வார்கள். சிறு தோல்வியையும் அடுத்தவர் மீது போடுவார்கள். 'வெற்றிக்குக் காரணம் இருவர்; தோல்வி என்றால் கட்சி!’

பீகார் சட்டமன்றத் தேர்தலை, மினி நாடாளுமன்றத் தேர்தல்போல உருவகப்படுத்தியவர்கள் மோடி - அமித் ஷா இருவரும்தான். கடந்த இரண்டு மாத காலமாக பீகாருக்குள் 30-க்கும் மேற்பட்ட கூட்டங்களில் மோடி பேசினார். 80-க்கும் மேற்பட்ட கூட்டங்களில் அமித் ஷா பங்கேற்றார். நிதீஷ்குமாரை வீழ்த்துவது என்பது தனது வாழ்நாள் லட்சியங்களில் ஒன்று என மோடி நினைத்தார். அதற்கு தனிப்பட்ட காரணம் ஒன்று இருந்தது. அகில இந்தியாவிலேயே நரேந்திர மோடிக்கு எதிராக முதல் எதிர்ப்புக் குரல் எழுப்பியவர் நிதீஷ்குமார்.

தன்னை பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிலைப்படுத்திக்கொள்ள முன்னேறி வந்தபோது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம்வகித்த நிதீஷ்குமார், 'மோடியை நாங்கள் ஏற்க மாட்டோம்’ என, முதலில் அறிவித்தார். மோடிதான் வேட்பாளர் என முடிவானதும் அந்தக் கூட்டணியில் இருந்தே விலகினார். எனவேதான் பீகாரில் பா.ஜ.க ஆட்சியை உருவாக்குவதைவிட, நிதீஷ்குமாரை அழிப்பதே மோடியின் முதல் இலக்காக இருந்தது. அதனால்தான், நிதீஷ் - லாலு - காங்கிரஸ் ஆகியோர் அடங்கிய கூட்டணியை 'த்ரீ இடியட்ஸ்’ எனத் தரம்தாழ்ந்து விமர்சிக்கும் அளவுக்கு மோடி தரையில் தவழ்ந்தார். ஆனாலும் தரைதட்டியது பா.ஜ.க கப்பல். மதச்சார்பற்ற மகா கூட்டணி, மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.

தாங்கள் வெல்வோம் என ஆரம்பத்தில் லாலுவுக்கே நம்பிக்கை இல்லை. மாட்டுத் தீவன ஊழலில் சிக்கிய லாலுவுக்கு அந்தப் பெயர் இன்னமும் அழியவில்லை. தொடர் தோல்விகளில்தான் உட்கார்ந்துகொண்டிருந்தார். நிதீஷ்குமார் ஒன்றும் பீகாரில் மிகச் சிறந்த ஆட்சியைக் கொடுத்துவிடவில்லை. இந்தச் சூழ்நிலையில் மாஞ்சியிடம் விவரமே இல்லாமல் முதலமைச்சர் பதவியைக் கொடுத்து, பரிதாபமாக மாட்டிக்கொண்டார் நிதீஷ். காங்கிரஸைப் பற்றி சொல்லவே வேண்டாம். 'லாலு-நிதீஷ் கூட்டணியில் தங்களுக்கு இடம் கிடைத்தால் போதும்’ என நினைத்தது காங்கிரஸ்.

மோடியை வீழ்த்திய த்ரீ இடியட்ஸ்!

இப்படிப்பட்ட மூன்று பலவீனங்கள் சேர்ந்து வென்று காட்டியதற்குக் காரணம் மோடி - அமித் ஷா கூட்டணியின் அதிகப்படியான பிரசாரங்களே. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரையும் வீழ்த்தி வென்ற மோடி, இந்த 18 மாதங்களிலும் 'படம்’ மட்டுமே காட்டிக்கொண்டிருக்கிறார். 'வளர்ச்சி’, 'வல்லரசு’ போன்ற வார்த்தைகளைத் தாண்டி யதார்த்தத்துக்கு அவர் இன்னும் வரவே இல்லை. மக்களுக்கு முதலில் தேவை அடிப்படை வசதிகள்; அடுத்து அமைதி. இந்த இரண்டையும் தருபவர்களே மக்கள் மனதை ஈர்க்க முடியும். 'வளர்ச்சியைக் கொண்டுவருகிறேன்’, 'வல்லரசு ஆக்குகிறேன்’ என மோடி, 18 மாதங்களும் சாஃப்ட்வேர் கம்பெனி பிசினஸ் ஹெட்போல ஆர்டர்கள் பிடிக்க அயல்நாட்டில் அலைந்தாரே தவிர, சொந்த நாட்டுப் பிரச்னைகளைத் தீர்க்க நேரம் செலவிடவில்லை.

நாடாளுமன்றத்துக்குச் சரியாக வரவில்லை... வந்தாலும் விவாதங்களில் பேசவில்லை. 'நாடாளுமன்றக் கூட்டம் நடக்கும்போதே வெளிநாட்டில் இருந்த பிரதமர்’ எனப் பெயர் எடுத்துவிட்டார் மோடி. எந்தப் பெரிய பிரச்னைக்கும் தனது ஆட்சியின் கருத்தாக, சொந்தக் கருத்தாக மறந்தும்கூட எதையும் சொல்வது இல்லை... பத்திரிகையாளர்களைச் சந்திப்பதும் இல்லை. வெளிநாட்டுப் பயணத்தின்போது பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று விளக்கம் தருவது வழக்கம். அதுவும் இப்போது மெள்ள மறைகிறது.

'கறுப்புப் பணம் மீட்கப்படும்’ என்றார்கள். கறுப்புப் பணம் எவ்வளவு இருக்கிறது என்ற முழு விவரமே வெளியாகவில்லை. 'விலைவாசி குறையும்’ என்றார்கள். அது ஏகத்துக்கும் எகிறிக்கிடக்கிறது. வெளிநாட்டு முதலீடுகளின் பூஜ்ஜியங்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறதே தவிர, முதலீடு பளிச்செனத் தெரியவில்லை. 'பாகிஸ்தான் இந்தியாவை அடிக்கிறது’ என்றால், 'பலவீனமான பிரதமர் இருந்தால் அடிக்கத்தான் செய்யும்’ எனக் கிண்டலடித்தார் மோடி. ஆனால், அவர் பிரதமரான பிறகும் பாகிஸ்தான் அடிக்கவே செய்கிறது. எல்லை தாண்டிய ஊடுருவல் தொடர்கிறது. இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படை இழுத்துச் செல்வதற்கு நிரந்தரத் தீர்வு இல்லை... நித்தமும் நடக்கிறது. 'கடலோர மாநிலங்களைச் சேர்த்து கூட்டமைப்பு அமைக்கப்படும். தமிழ்நாட்டுக்கு இலங்கையால் பிரச்னை என்பதைப்போல, குஜராத் மீனவர்களுக்கு பாகிஸ்தானால் பிரச்னை’ என மோடி சொன்னதைக் கேட்டபோது நன்றாக இருந்தது. ஆனால், அப்படி ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்படவே இல்லை. வாக்குறுதிகள் அப்படியேகிடக்கின்றன.

அதிகப்படியான வாக்குறுதி, விளம்பரங்களால்தான் ஆபத்தே. தகுதிக்கு மீறி மோடி விளம்பரப்படுத்தப்பட்டதால்தான், விழி பிதுங்கி நிற்கிறார். உடை மாறிக்கொண்டே இருக்கிறது. இறுக்கமான முகம் இன்னமும் மாறவே இல்லை.

ஏற்கெனவே சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர்கள், மக்களை அச்சப்படுத்தும்

மோடியை வீழ்த்திய த்ரீ இடியட்ஸ்!

தேவையற்ற வாக்குறுதிகளை தினமும் தந்தார்கள். பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன சம்பந்தம்? 'பா.ஜ.க தோற்றால், பாகிஸ்தானில் வெடி வெடித்துக் கொண்டாடுவார்கள்’ எனப் பேசினார் அமித் ஷா. தலித் சிறுவர்கள் இருவர் எரிக்கப்பட்டது தொடர்பான கேள்வி கேட்டபோது, 'நாய் மீது கல் எறிந்தால்கூட மத்திய அரசு பொறுப்பேற்க முடியுமா?’ எனக் கேட்டவர் மத்திய அமைச்சர் வி.கே.சிங். மாட்டு இறைச்சியை தேசியப் பிரச்னையாக மாற்றி, மற்ற பிரச்னைகளைப் பின்னுக்குத் தள்ளினார்கள். 'இடஒதுக்கீட்டை ரத்துசெய்ய வேண்டும்’ என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார்.

'இது எங்கள் கருத்து அல்ல’ என விளக்கம் சொல்வதிலேயே பா.ஜ.க-வின் பெரும்பாலான நேரம் கழிந்தது. பீகார் வாக்காளர்களை பீதி அடையவைத்தவை இந்த வாக்குறுதிகள்தான். இதை அருண் ஜெட்லியால்கூட மறைக்க முடியவில்லை. 'பா.ஜ.க தலைவர்கள் வாய்க்கு வந்தபடி பேசியது தேர்தலில் எதிரொலித்துள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்’ என அவரே புலம்பியிருக்கிறார்.

'எங்களின் தேர்தல் தோல்விக்கு யாரும் பொறுப்பு அல்ல. கட்சி, கூட்டாகவே வெற்றி பெறுகிறது; கூட்டாகவே தோல்வி அடைகிறது’ என்றும் அருண் ஜெட்லி சொல்லியிருக்கிறார். ஆனால், இதை அத்வானியும் ஜோஷியும் ஏற்கவில்லை.

'பீகார் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க ஒருவேளை வெற்றிபெற்றிருந்தால் அதன் மொத்தப் புகழும் யார் யாருக்கு எல்லாம் உரித்தாகியிருக்குமோ... அவர்களே இந்தப் படுதோல்விக்குப் பொறுப்பு ஏற்க வேண்டும்’ என மோடி - அமித் ஷா பக்கமாக பந்தை உருட்டியிருக்கிறார்கள் இந்தப் பழம்பெரும் தலைவர்கள்.

பீகார் சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு நடந்த தேசியச் சட்டப்பணிகள் ஆணையத்தின் ஆண்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, 'எந்த அமைப்பும் நிலையாக இருந்துவிட முடியாது. ஒவ்வோர் அமைப்பும் மாறிக்கொண்டே இருக்க வேண்டும். காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் தவிர்க்க முடியாதது. நாம் சிந்திக்கும் முறையே மாறவேண்டியது அவசியம்’ எனச் சொல்லியிருக்கிறார்.

முதலில் மாறவேண்டியது மோடியும் அமித் ஷாவும்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism