Published:Updated:

வெளியேறுகிறார் விவேக் ஜெயராமன்! - வீணாகிப்போனது தினகரனுக்கான சசிகலா சமரசம் #VikatanExclusive

வெளியேறுகிறார் விவேக் ஜெயராமன்! - வீணாகிப்போனது தினகரனுக்கான சசிகலா சமரசம் #VikatanExclusive
வெளியேறுகிறார் விவேக் ஜெயராமன்! - வீணாகிப்போனது தினகரனுக்கான சசிகலா சமரசம் #VikatanExclusive

வெளியேறுகிறார் விவேக் ஜெயராமன்! - வீணாகிப்போனது தினகரனுக்கான சசிகலா சமரசம் #VikatanExclusive

டி.டி.வி.தினகரன்-விவேக் ஜெயராமன் மோதல் கிளைமாக்ஸை நெருங்கிவிட்டது. பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் நடந்த விவாதத்தின் விளைவாக ஒட்டுமொத்த நிர்வாகத்திலிருந்தும் விவேக் ஜெயராமன் விலக இருக்கிறார். ‘அவர்தான் என்னைத் திட்டுகிறார் என்றால், நீங்களும் என்னைத் திட்டுகிறீர்கள். உங்களுக்காகத்தான் நான் இவ்வளவு செய்கிறேன். நீங்களே என்னைப் புரிந்து கொள்ளாமல் இருந்தால் எப்படி?’ என சசிகலாவிடம் நேரடியாக கொதிப்பைக் காட்டியிருக்கிறார் விவேக்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சசிகலா செல்வதற்கு முன்பாக, கட்சி நிர்வாகத்தை டி.டி.வி.தினகரனிடம் ஆட்சி நிர்வாகத்தை எடப்பாடி பழனிசாமியிடமும் ஒப்படைத்தார். இதுதவிர, கார்டன் கணக்கு வழக்குகள், கோடநாடு எஸ்டேட் வரவு செலவுகள், ஜெயா டி.வி நிர்வாகம், ஜாஸ் சினிமாஸ் நிர்வாகம் ஆகியவற்றை இளவரசி மகன் விவேக் ஜெயராமனிடம் ஒப்படைத்தார் சசிகலா. தொடக்கத்தில் நல்லவிதமாகச் சென்று கொண்டிருந்த தினகரன்-விவேக் உறவு, அடுத்துவந்த காலகட்டங்களில் பெரும் முட்டல் மோதல்களுக்கு வழி வகுத்துவிட்டது. “ஒட்டுமொத்த நிர்வாகத்திலிருந்தும் விவேக் வெளியேற வேண்டும் என்பதுதான் தினகரனின் நோக்கம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றியை அதற்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் டி.டி.வி” என விவரித்த கார்டன் பணியாளர் ஒருவர், 

மருது போட்ட பிள்ளையார் சுழி! 

“குடும்பத்துக்குள் நடந்த மோதல்களுக்குப் பிள்ளையார் சுழி போட்டது நமது எம்.ஜி.ஆர் ஆசிரியர் மருது அழகுராஜ் விவகாரம்தான். ‘எடப்பாடி பழனிசாமி செய்திகள் எதுவும் நமது எம்.ஜி.ஆரில் வரக் கூடாது' என தினகரன் கூற, ‘சின்னம்மாவிடமிருந்து அப்படி எந்தத் தகவலும் வரவில்லை' என உறுதியாகக் கூறிவிட்டார் விவேக். இதன்பிறகு, பா.ஜ.கவுக்கு எதிராக மருது எழுதிய கவிதையை முன்வைத்து, ‘அவர் இனியும் பதவியில் நீடிக்கக் கூடாது' எனக் கொதித்தார் தினகரன். இதற்குப் பதில் கொடுத்த விவேக், ‘அவர் அம்மாவால் நியமிக்கப்பட்டவர். ஒரேநாளில் எப்படி நீக்க முடியும்?’ என விளக்கியும், ஆசிரியர் பணியிலிருந்து நீக்கப்பட்டார் மருது அழகுராஜ். இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி அணியில் சேர்ந்து அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பதவியையும் வாங்கிவிட்டார் மருது. ஆனாலும், ‘நமது எம்.ஜி.ஆர் ஆசிரியர்’ என்ற இடத்தில் அவர் பெயர்தான் இன்றளவும் இருக்கிறது. விவேக் மீதான தினகரனின் கோபம் தொடங்கியது இந்தப் புள்ளியில்தான்” என விவரித்தவர், 

டி.டி.விக்குப் பணம் கிடையாது! 

 “ஜாஸ் சினிமாஸையும் ஜெயா டி.வியையும் விவேக் நடத்தி வருகிறார் என்பதுதான் வெளி உலகுக்குத் தெரியும். ஒட்டுமொத்த நிதி விவகாரங்களையும் அவர்தான் கையாள்கிறார் என்பது பலருக்கும் தெரியாது. கட்சிரீதியாக யாருக்காவது பணம் கொடுக்க வேண்டும் என்றாலும், விவேக் நினைத்தால் மட்டும்தான் முடியும். மொத்த பணத்தையும் கையாள்வது என்பது மிகப் பெரிய அதிகாரம். எந்தவித சிக்கலும் இல்லாமல் மிகத் திறமையாக கணக்கு வழக்குகளைப் பார்த்து வருகிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முன்பே விவேக்குடன் இலைமறை காயாக மோதலைக் கடைபிடித்து வந்தார் தினகரன். இடைத்தேர்தல் செலவுக்குப் பணம் கொடுக்குமாறு டி.டி.வி தரப்பில் கேட்டபோது, ‘சின்னம்மாவிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை’ என விவேக் கூறியதாக தகவல் வெளியானது. அடுத்ததாக, ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான 20 விநாடி வீடியோ விவகாரத்தில், இளவரசி குடும்பத்துக்கும் தினகரனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ‘கிருஷ்ணபிரியா தேவையில்லாமல் பேட்டி கொடுக்கிறார். அவரைத் தடுப்பதற்கு விவேக் முயற்சி செய்யவில்லை' என ஆத்திரப்பட்டார் டி.டி.வி. 

'போஸ்ட்மேன்' விவேக்?! 

இதுகுறித்து விளக்கமளித்த விவேக், ‘அந்த நேரத்தில் நான் ஒடிஷாவில் இருந்தேன். கிருஷ்ணபிரியாவைத் தடுக்கத்தான் நான் போராடினேன். அவர்(தினகரன்) செய்தது தவறு என்றாலும், நாளைக்குக் காலையில் தேர்தலை வைத்துக் கொண்டு அவருக்கு எதிராகப் பேசினால், மக்களிடம் வேறு மாதிரியான தோற்றத்தை ஏற்படுத்திவிடும்' என கிருஷ்ணபிரியாவை அமைதியாக இருக்குமாறு வேண்டினேன். என்னை மீறி அவர் பேட்டி கொடுத்துவிட்டார். இந்த விளக்கத்தை தினகரன் ஏற்கவில்லை. வீடியோ குறித்து விளக்கமளித்த தினகரன், ‘கிருஷ்ணபிரியாவிடமிருந்து நான் வீடியோவை வாங்கவில்லை. ஒருவரிடம் வீடியோவைக் கொடுத்து அனுப்புகிறார் சசிகலா. ஒரு போஸ்ட் மேன் கொண்டு வந்து வீடியோவைக் கொடுக்கிறார். அந்த வீடியோ எப்படி போஸ்ட் மேனுக்குச் சொந்தமாகும்?' என விவேக்கை 'போஸ்ட்மேன்' எனக் குறிப்பிட்டுப் பேசினார். இந்த வார்த்தைகளால் மிகவும் நொந்து போனார் விவேக். ‘நான் யார் சொல்வதைக் கேட்பது? டி.டி.வி பணம் கேட்கிறார்; பணம் தராதே என சின்னம்மா சொல்கிறார். வீடியோவை வெளியிடக் கூடாது என சின்னம்மா சொல்கிறார்; டி.டி.வி அதை வெளியிடுகிறார். இவ்வளவும் செய்துவிட்டு என்னை போஸ்ட் மேன் எனச் சொல்வது எந்த வகையில் நியாயம்?' என ஆதங்கப்பட்டார். எல்லாம் ஒன்று சேர்ந்து பெரும் பிளவுக்கு வழிவகுத்துவிட்டது” என்றார் நிதானமாக. 

எடப்பாடி பழனிசாமியும் பேசவில்லை! 

இதையடுத்து நம்மிடம் பேசிய ஜெயா டி.வி நிர்வாகி ஒருவர், “ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாவதற்கு முதல்நாள், விவேக் ஜெயராமனிடமிருந்து அறிக்கை ஒன்று வெளியானது. அதில், ‘அம்மாவின் மகன், மகள் என்று கூறிக் கொண்டு, அவரது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயலில் சிலர் ஈடுபடுகிறார்கள். இனி யாராவது அவ்வாறு பேசினால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கைவிடுத்திருந்தார். இந்த அறிக்கையையும் டி.டி.வி.தினகரன் ரசிக்கவில்லை. இதனைப் புரிந்து கொண்ட விவேக், ' அம்மாவின் பெயரைக் கெடுக்கும் வகையில் சிலர் செயல்படுகிறார்கள். இதற்கு எதிராக யாருமே பேசவில்லை. ஒன்று நீங்கள் வெளியிட்டிருக்க வேண்டும், இல்லாவிட்டால் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்தாவது அறிக்கை வந்திருக்க வேண்டும். அனைவரும் அமைதியாக இருந்ததால் நான் அறிக்கை வெளியிட வேண்டியதாகிவிட்டது' என விளக்கமளித்தார். இதனை தினகரன் ஏற்கவில்லை. கூடவே, வருமான வரித்துறை ரெய்டும் பிளவுக்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது. ஜெயலலிதா அறைக்குள் நுழைவதற்கு அதிகாரிகள் முயற்சி செய்தபோது, கடுமையாக சண்டை போட்டார் விவேக். 

ஆர்.கே.நகர் வெற்றி சாமி புண்ணியம்! 

தொடர்ந்து, பத்திரிகையாளர்களுக்கு விரிவான பேட்டி ஒன்றையும் கொடுத்தார். இதனைக் கவனித்த தினகரன், ‘இவருக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டது போல' எனக் கமென்ட் அடித்தார். ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு வரையில் அமைதியாக இருந்த தினகரன், 'குடும்பத்துக்குள் நடக்கும் குளறுபடிகள் அனைத்துக்கும் விவேக்தான் காரணம்' என்பதை கடிதத்தில் விளக்கி, பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு ஆதரவாளர்கள் மூலம் கொடுத்து அனுப்பினார். அந்தக் கடிதத்தில், ‘விவேக் செய்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இவ்வளவு இக்கட்டான சூழலிலும் நான் வெற்றி பெற்றது என்பது சாமி புண்ணியம். என்னுடைய வெற்றியைக்கூட உங்களிடம் சொல்ல முடியாத அளவுக்கு இடையூறு செய்கிறார்' எனக் குறிப்பிட்டு, ‘ஜெயா டி.வியை அவருக்கு நடத்தத் தெரியவில்லை. வயதுக்கேற்ற பக்குவம் வரவில்லை; நான் பணம் கேட்கும்போது கொடுப்பதில்லை. கிருஷ்ணபிரியாவைப் பேட்டி கொடுக்கவிடாமல் தடுத்திருக்கலாம்' என்றெல்லாம் விவரித்திருக்கிறார். நேரடியான சந்திப்பிலும் இதைப் பற்றி விளக்கியிருக்கிறார். தினகரனுக்கு சசிகலா தரப்பிலிருந்து எந்தப் பதிலும் சொல்லப்படவில்லை” என விவரித்தவர், 

சசிகலாவிடம் சீறிய விவேக்! 

“நேற்று முன்தினம் (3ம் தேதி) பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்தார் விவேக். அப்போது பேசிய சசிகலா, 'கொஞ்சம் அனுசரித்து நடந்துகொள். என்னதான் இருந்தாலும் இவ்வளவு இக்கட்டான சூழலிலும் தினகரன் வெற்றி பெற்றிருக்கிறார். புரிந்து நடந்து கொள்' எனக் கூற, உச்சகட்ட கோபத்துக்கு ஆளான விவேக், 'அவர்தான் என்னைத் திட்டுகிறார் என்றால், நீங்களும் என்னைத் திட்டுகிறீர்கள். உங்களுக்காகத்தான் நான் இவ்வளவும் செய்கிறேன். நீங்களே என்னைப் புரிந்து கொள்ளாமல் இருந்தால் எப்படி?' எனக் கடுகடுத்தவர், 'இனி இந்தக் குடும்பத்தில் என்னால் எந்தக் கெட்ட விஷயங்களும் நடக்க வேண்டாம். இனி நல்லது நடந்தால் சரி. எல்லா நிர்வாகங்களிலிருந்தும் நான் ஒதுங்கிக் கொள்கிறேன். அம்மா இருந்த காலத்திலேயே நான் ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை பார்த்தவன். நாளையே ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தாலும் நல்ல சம்பளம் கொடுப்பார்கள். இனி நான் இந்த நிர்வாகத்தை நடத்த மாட்டேன். உங்களுக்காகத்தான் இவ்வளவும் செய்தேன். கெட்ட பெயர் சம்பாதிப்பதைவிட, ஒதுங்கியிருப்பதே நல்லது' என உறுதியாகக் கூறிவிட்டு வந்துவிட்டார்.

சிறையிலிருந்து வெளியே வந்த கையோடு, தினகரன் ஆதரவாளர்களிடம் பேசிய விவேக், 'கல்யாண வாழ்க்கையைக்கூட என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை. அந்தளவுக்கு நிர்வாகத்தைக் கவனிக்க நேரமில்லாமல் உழைத்து வந்தேன். எனக்கு எதுவும் தேவையில்லை. அத்தானுக்கு(தினகரன்) என்ன தேவையோ அனைத்தையும் எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள். அவர் நிம்மதியாக இருந்தால்போதும்' எனக் கூறிவிட்டார். இனி விவேக்கை யாராலும் சமாதானப்படுத்த முடியாது என்ற சூழல் உருவாகிவிட்டது” என்றார் மிகுந்த வேதனையுடன். 

'பேரழிவுகள் நிகழ்வுக்காகக் காத்து நிற்கின்றன' என்பது மேலைநாட்டுப் பழமொழி. 'சசிகலா குடும்பத்தில் நடக்கும் மோதல்களுக்கும் இந்தப் பழமொழிக்கும் ஏராளமான ஒற்றுமைகள் இருக்கின்றன' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

அடுத்த கட்டுரைக்கு