Published:Updated:

சட்டமன்றத்தில் தினகரனை நேருக்கு நேர் சந்தித்தால்...? அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களின் ‘அடடே’ ரியாக்‌ஷன்

சட்டமன்றத்தில் தினகரனை நேருக்கு நேர் சந்தித்தால்...? அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களின் ‘அடடே’ ரியாக்‌ஷன்
சட்டமன்றத்தில் தினகரனை நேருக்கு நேர் சந்தித்தால்...? அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களின் ‘அடடே’ ரியாக்‌ஷன்

ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றதற்குப் பிறகு வரும் ஜனவரி 8ம் தேதி சட்டமன்றத்துக்கு வரவிருக்கிறார் டி.டி.வி. தினகரன். அவர் சட்டமன்றத்தில் எங்கே அமர வைக்கப்படுவார் என்கிற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. இந்த நிலையில் அவர் சட்டமன்றத்துக்கு வந்த பிறகு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின்  ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்? அவர்களிடமே கேட்டோம்...

அமைச்சர் மணிகண்டன் (ராமநாதபுரம்) : தினகரன் ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ. சட்டசபைக்கு வந்து அவரது தொகுதியைப் பற்றி பேசுவார். வேறு எதுவும் அவரால் செய்ய முடியாது. எனவே அவர் வருவதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள போவதில்லை.

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் : எதிர்கட்சி வரிசையில் உள்ள 98 எம்.எல்.ஏ-க்களையே எதிர்கொள்ளும் நாங்கள், ஒத்தை ஆளாக வரும் தினகரனை எதிர்கொள்ள முடியாதா?. சட்டமன்ற கூட்டத்தில் கலந்துக்கொள்ள வரும் தினகரன் வரும் வழி வேறு, அமைச்சர்கள் வந்து போகும் வழிவேறு, அதனால் அவரை எதிரெதிரே சந்திக்க வாய்ப்பே இல்லை.

அமைச்சர் வளர்மதி (ஶ்ரீரங்கம்) : அய்யோ... நான் பத்திரிகைகளுக்குப் பேட்டிக்கொடுப்பதில்லை. இதைப்பற்றி கருத்து ஏதும் சொல்ல முடியாது.

எஸ்.பி. சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்) : தினகரன் ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ. தான். ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ.வுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ, அந்த மரியாதைதான் சட்டமன்றத்தில் அவருக்குக் கொடுக்கபடும். சட்டமன்றத்தில் தினகரன் நுழைவதால் எங்களுக்கு எந்தவித பயமோ பதற்றமோ கிடையாது. அவரைப் பார்த்தால் வணக்கம் சொல்வதும் புன்னகைப்பதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம்.  தினகரனை சட்டமன்றத்தில் நாங்கள் எப்படி எதிர்கொள்வோம் என்பதை விட, எங்களை அவர் எப்படி எதிர்கொள்வார் என்றுதான் யோசிக்க வேண்டும். 

ஆறுமுகம் (கந்தர்வகோட்டை) :  (தினகரன் என்று சொன்னதுமே) "அண்ணே, அதுபத்தியெல்லாம் கட்சி தலைமைதான் பேசும். அவரை பத்தி எதுவும் எனக்குத் தெரியாது. நான் கருத்துச் சொல்லவும் முடியாது. என்னை மன்னிச்சுடுங்கணே.

கீதா (கிருஷ்ணராயபுரம்) : டி.டி.வி.தினகரன் அவரது தொகுதி வளர்ச்சி பற்றி பேசப் போறார். இதுல நான் என்ன கருத்து சொல்றது.  சட்டமன்றத்திற்குள் அவர் வரும்போது, நான் எப்படி அவர்கிட்ட பேச முடியும்?. எங்க தலைமையை மீறி நான் நடக்கமாட்டேன். 

தாமரை ராஜேந்திரன் (அரியலூர்) : தினகரன் மேடைகளிலும், பத்திரிகைகளில் பேசுவது போல் சட்டமன்றத்தில் ஒன்றும் பேச முடியாது. அவர் பேச நினைத்தாலும் விடமாட்டோம். மக்கள் பிரச்னைகளை தவிர வேறு எதுவும் பேச நினைத்தால் சபாநாயகரால் வெளியேற்றபடுவார். அம்மாவின் ஆட்சியைக் கலைக்க நினைப்பவர். இவர் யார், எப்படிப்பட்டவர் என்று எல்லோருக்கும் தெரியும் இப்படிப்பட்டவரிடம் எப்படி சகஜமாகப் பேசமுடியும், சிரிக்கமுடியும்?.

ஆர்.டி ராமசந்திரன் (பெரம்பலூர்) : நாங்கள் ஸ்டாலினை எப்படி பார்க்கிறோமோ அப்படித்தான் தினகரனையும் பார்க்கிறோம். அவரது கன்னிப்பேச்சு எங்களிடம் எடுபடாது. அம்மாவுக்கு துரோகம் செய்த குடும்பம். அவர்களோடு நாங்கள் எப்படி கை கொடுத்து சிரிக்க முடியும். நாங்கள் அப்படிச் செய்தால் அம்மாவுக்குச் செய்யும் துரோகம்.

பெரியபுள்ளான் (மேலூர்) : தினகரன் எங்களைச் சந்தித்துப் புன்னகையோடு பேசினால் நாங்களும் பேசுவோம். அதுதான் தமிழர் பண்பாடு . அவர் கேட்கும் கேள்விக்கு எங்கள் அமைச்சர்கள் உடனே பதில் சொல்வார்கள், எதிர்கட்சியைச் சமாளிக்க தெரிந்த எங்களுக்கு சுயேச்சை எம்.எல்.ஏ வை சமாளிக்க தெரியாதா என்ன?.

செல்வமோகன்தாஸ் பாண்டியன் (தென்காசி) : நான் அம்மாவின் விசுவாசி. அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆரை ரசித்து அதன் மூலமாக கட்சிக்கு வந்து இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். நான் அம்மாவால் எம்.எல்.ஏ ஆக்கப்பட்டவன். டி.டி.வி.தினகரன் சுயேச்சையாக ஜெயித்தவர். இரட்டை இலைச் சின்னத்தில் ஜெயித்த எனக்கும் சுயேச்சையான அவருக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? அவரை நேருக்கு நேராகச் சந்திக்கவே விரும்பவில்லை. ஒருவேளை பார்க்க நேர்ந்தாலும் பேசவோ, வணக்கம் சொல்லவோ மாட்டேன்.

முருகையாபாண்டியன் (அம்பாசமுத்திரம்) : நான் கடந்த 40 வருடமாக கட்சியில் உறுதியாக இருந்தவன். பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எனக்கு கட்சி முக்கியம். இப்போதைய சூழலில் காட்சியும் ஆட்சியும் நீடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். நான் எனது மனதுக்குச் சரி எனப் பட்டதைச் செய்யக் கூடியவன். அதனால் இந்த ஆட்சிக்கும் கட்சிக்கும் வி்சுவாசமாக இருப்பேன். டி.டி.வி தினகரனுக்கும் எனக்கும் சொத்துப் பிரச்னையா என்ன? அதனால் அவரைச் சட்டமன்றத்தில் பார்த்தால் சிரிப்பதிலோ பேசுவதிலோ என்ன தவறு? அதனால் அவரைச் சந்தித்தால் பேசுவேன்.

முருகுமாறன் (காட்டுமன்னார்கோவில்) : தினகரனை நேரில் பார்க்க வாய்ப்பிருக்காது. ஒருவேளை, அப்படி நிகழ்ந்துவிட்டால் 'நோ ரியாக்‌ஷன்'. அமைதியாகச் சென்றுவிடுவேன்.

சத்தியா பன்னீர்செல்வம் (பன்ருட்டி) : என்னைப் பொறுத்தவரை தி.மு.க. ஸ்டாலினும், தினகரனும் ஒன்னுதான். ஸ்டாலினை பார்த்தால் எப்படிப் போவேனோ, அப்படித்தான் தினகரனை பார்த்தால் போவேன்.

பிரபு (கள்ளக்குறிச்சி) : மக்கள் பிரச்னைகளைப் பற்றி ஆக்கபூர்வமாகப் பேசினால் வரவேற்போம். அதை விடுத்து தனிப்பட்ட முறையில் அதிமுகவையும் அரசையும் விமர்சித்தால் வருத்தமாகத்தான் இருக்கும். நேருக்கு நேர் சந்திக்கும் நிலை ஏற்பட்டால் மற்ற எம்.எல்.ஏ-க்களை எப்படி எதிர்கொள்வேனோ, அப்படித்தான் டிடிவி தினகரனையும் எதிர்கொள்வேன்.

குமரகுரு (உளுந்தூர்பேட்டை) : அவர் என்ன பெரிய பிரதம மந்திரியா எதிர்கொள்வதற்கு? புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆராலும், புரட்சித் தலைவி அம்மாவாலும் கட்டமைக்கப்பட்ட இயக்கத்தில்தான் அதிமுக தொண்டன் கடைசி வரை இருப்பான். இந்த தினகரன் மட்டுமல்ல இவரைப் போல ஆயிரம் தினகரன் வந்தாலும் எதிர்ப்போம்.

பன்னீர்செல்வம் (கலசப்பாக்கம்) : அவரைப்பற்றி நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. இல்லை இல்லை எதையும் சொல்ல விரும்பவில்லை.

ஆறுக்குட்டி (கவுண்டம்பாளையம்) : 89 எம்.எல்.ஏக்களை கொண்ட எதிர்கட்சியையே சமாளித்துவிட்டோம் ஒத்த ஆளான தினகரன் எங்களுக்கு எம்மாத்திரம்?. மு.க.ஸ்டாலினை பார்த்தாலே நான் வணக்கம் வைப்பேன். அதேபோல, தினகரனைப் பார்க்கும்போதும் வணக்கம் வைப்பேன் அதுதான் அரசியல் நாகரிகம். மற்றபடி தினகரனால் எதுவும் செய்ய முடியாது.

கனகராஜ் (சூலூர்) : சட்டசபைக்குப் போனால்தான் என்ன நடக்கும் என்பது தெரியும். அதற்கு முன்பே எதுவும் சொல்ல முடியாது. இதைப்பற்றி எதுவும் பேசக் கூடாது என்று நேற்றே என்னிடம் சொல்லிவிட்டார்கள்.

ராஜன் செல்லப்பா (மதுரை வடக்கு) : நான் பொதுவா எல்லோரிடமும் நன்றாகப் பழகுவேன். சிரித்துப் பேசுவேன். பாகுபாடு பார்க்காதவன். அதேநேரத்தில் கட்சி சில கட்டுப்பாடுகளை விதிக்கும்போது அதை கடைபிடிக்க வேண்டியது என் கடமை. கட்சித்தலைமை பேசக் கூடாது என்று சொல்கிறவர்களிடம் பேச மாட்டோம், 'விஷ்' பண்ண மாட்டோம்.

குணசேகரன் (திருப்பூர் தெற்கு) : அன்றைக்கு கட்சியிலிருந்து ஓ.பி.எஸ் பிரிந்து சென்றபோதுகூட சட்டசபையில் எனக்கு முன்பாகத்தான் அவர் அமர்ந்திருந்தார். எங்களுக்கு கட்சி என்ன கட்டளையிடுகிறதோ அதைத்தான் நான் செய்து வருகிறேன். சட்டசபைக்கு வரும் மற்ற உறுப்பினர்களைப் போன்றுதான் நான் தினகரனையும் பார்ப்பேன். நான் நேரடியாக அம்மாவால் நியமிக்கப்பட்டவன். அவரைப் பார்த்ததுகூட கிடையாது. தினகரனை எதிர்கொள்வது பற்றியெல்லாம் சிந்திப்பது இல்லை.

பாரதி (சீர்காழி) : புரட்சித்தலைவரால் ஆரம்பிக்கப்பட்டு,அம்மாவால் வளர்க்கப்பட்ட கட்சியைத் தினகரன் அழிக்க நினைக்கிறார் என்பதே வேதனையாக இருக்கிறது. இதில் ஸ்லீப்பர் செல்கள் இருக்காங்கன்னு சொல்றார் ரொம்ப கேவலமாக இருக்கு. நமக்கு எதுக்கு வம்பு? எதிரில் வந்தா கூட தலையை வேறுபக்கம் சாய்ச்சிக்கிட்டு போயிட வேண்டியதுதான்.

பழனி (ஸ்ரீபெரும்புதூர்) : அவர் பல்; அவர் வாய். சிரிச்சுக்கட்டும். நான் ஏன் அவரை பார்த்து சிரிக்கணும்? அவர் எதைச் செய்தாலும் நான் கண்டுகொள்ள மாட்டேன்.

இராதாகிருஷ்ணன் (மயிலாடுதுறை) : எம்.எல்.ஏ. ஆனா எல்லாருக்கும் கன்னிப் பேச்சு இருக்கும். சுயேச்சை உறுப்பினரான தினகரன் என்ன பேசுறார்னு தெரிஞ்ச பிறகுதானே கருத்து சொல்லமுடியும். அவரைப் பார்த்து சிரிச்சி பேசறதுக்கல்லாம் ஒண்ணுமே இல்லே.

அருண் (கோவை வடக்கு):  அந்த ஆளு ( டி.டி.வி.தினகரன்) என்ன அவ்ளோ பெரிய மகா சக்தியா? அவங்கள எல்லா நாங்க எப்பவோ கட்சியவிட்டு விலக்கி வெச்சுட்டோம். எங்களைப் பொறுத்தவரை தி.மு.க, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மாதிரி அவரும் ஒரு எம்.எல்.ஏ அவ்ளோதான்.

அம்மன் அர்ச்சுணன் (கோவை தெற்கு):  மனிதாபிமானத்தின் அடிப்படையில், அவர் வணக்கம் வெச்சு சிரிச்சா, நானும் வணக்கம் வைப்பேன், சிரிப்பேன். ஏன், அவரு எதிர்ல வர்றப்போ நானே கூட வணக்கம் வெச்சு சிரிச்சாலும் சிரிக்கலாம். அதுக்காக, அணி மாறுவேன்னு இல்ல. எந்த நிலைமைலயும் கட்சிய விட்டுக்கொடுக்க மாட்டேன்

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் : தினகரன் மட்டுமல்ல, எதிர்கட்சியினர் யார் கேள்வி கேட்டாலும் அமைச்சர்கள் நாங்கள் பதில் சொல்ல தயாராகவே இருக்கிறோம். சிறப்பான ஆட்சி நடைபெறுவதற்கான திட்டங்கள், ஆட்சியின் சாதனைகள் குறித்துப் பேசுவோம்.

‘என்ன ரியாக்‌ஷன் இருக்கும்..?’ என்று கேட்டதற்கே அல்லோல கல்லோலப்படுகிறது. 8ம் தேதி என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!