சினிமா
Published:Updated:

சோ.அய்யரின் உள்ளாட்சி மந்திரம்!

ப.திருமாவேலன்படம் : எம்.உசேன்

##~##

ந்த உள்ளாட்சித் தேர்தலின் மையப் புள்ளி, சோ.அய்யர். அது அவரது சாதிப் பெயர் அல்ல. பெயரே அதுதான்!

''ஆறாம் வகுப்பு படிக்கும்போது ஆஸ்பத்திரிக்குப் போனேன். 'உன் பெயர் என்ன?’ என்று கேட்டார் டாக்டர். 'அய்யர்’ என்றேன். 'என்ன கிண்டல் பண்றியா?’ என்று திட்டினார். அப்போதுதான் அப்பாவிடம் வந்து கேட்டேன். 'அய்யர்னா... தலைவர், தூய்மையானவர்னு அர்த்தம். அதுக்காகத்தான் உனக்கு இந்தப் பெயரை வைத்தேன்’ என்றார். அய்யர் என்றால், அறவோர் என்கிறது தொல்காப்பியம். ஒரு தனித்தன்மையான பெயர் என்பதால் ஏற்றுக்கொண்டேன்'' என்று சொல்லிச் சிரிக்கிறார் அய்யர். சுமார் 6 லட்சம் பேர் களத்தில் இருக்கும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் மாநிலத் தேர்தல் ஆணையர் என்கிற எந்தப் பரபரப்பும் பாதிக்காத அமைதியுடன் வரவேற்றார்!

சோ.அய்யரின் உள்ளாட்சி மந்திரம்!

''எப்படி இப்படிப் பதற்றம் இல்லாமல் இருக்கிறீர்கள்?'' என்று கேட்டதும், ''அனைத்தும் சட்டபூர்வமாக நடக்கும்போது பதற்றம் தேவை இல்லை!'' என்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதிக்கு அருகில் உள்ள ஒடுக்கம் என்ற கிராமம் இவரது சொந்த ஊர். ஒடுக்கம் என்றால், அறிஞர்கள் கூடி விவாதம் செய்யும் இடம் என்று பொருளாம். அப்பா சோலையப்பன், அந்தக் கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தவர். சிவகங்கை மன்னர் கல்லூரியிலும் சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்த அய்யர், 1978-ல் குரூப் 1 தேர்வு எழுதி, அரசுப் பணிக்குள் நுழைந்தார். பல்வேறு அரசுப் பதவிகளில் இருந்தவருக்கு, 94-ம் ஆண்டு கன்ஃபெர்டு ஐ.ஏ.எஸ். தகுதி கிடைத்தது. மதுரை, கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த இவர், 'டாஸ்மாக்’ கடைகளைக் கையில் எடுத்தபோது, மாநிலம் அறிந்த மனிதராக மாறினார். சமீபத்தில் ஓய்வுபெற்ற அய்யர், மாநிலத் தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். 'அய்யர், முதல்வர் ஜெயலலிதா வுக்கு வேண்டியவர்’ என்று சொல்லி, தி.மு.க-வினர் மனு கொடுக்க... அதையும் சிரித்துக்கொண்டே வாங்கி, அமைதியாகப் பதில் அனுப்பி விட்டு உட்கார்ந்துவிட்டார். அந்த அளவுக்குப் பொறுமைசாலி!

''தி.மு.க. கொடுத்த மனுவுக்கு மூன்றாவது நாளே பதில் அனுப்பிவிட்டேன். இரண்டு நாட்களுக்குமுன் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தியபோது, அவர்களே எனக்கு நன்றி சொல்லிச் சென்றார்கள். காரணம், நானோ, இந்த ஆணையமோ தேர்தலைத் தான் நடத்துகிறோம். அரசியல்நடத்த வில்லை. பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களை நான் நடத்தி இருக் கிறேன். அப்போது, 'வாக்காளர்களுக்கு அரசியல் இருக்கலாம். வேட்பாளர் களுக்கு அரசியல் இருக்கலாம். ஆனால், பணியாளர்களுக்கு அரசியல் கூடாது’ என்று சொன்னேன். அப்படித் தான் நானும் நடந்துகொள்வேன்'' என்றவரிடம், ''ஆட்சியாளர்கள் தலையீடு இல்லாமல் ஒரு தேர்தல் நடத்துவது சாத்தியமா?'' என்று கேட்டபோது...

சோ.அய்யரின் உள்ளாட்சி மந்திரம்!

''சாத்தியம்தான்!'' என்று அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டு, மேலும் தொடர்ந்தார். ''இதுவரை ஆட்சியாளர் கள் தலையீடு இல்லாமல்தான் நடந்து வருகிறேன். ஒருவர் வியாபாரத்தை ஆரம்பிக்கும்போதே, ஐந்தொகை (பேலன்ஸ் ஷீட்) கேட்கக் கூடாது. வியாபாரம் தொடங்கி, ஒரு கட்டம் முடிந்த பிறகுதான் அவர் செய்தது சரியா... இல்லையா என்று பார்க்க வேண்டும். நான் ஒரு தேர்தலைச் சட்டத்துக்கு உட்பட்டு, விதி களை மீறாமல் எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக நடத்திக் கொண்டு இருக்கிறேன். அது முடிந்தவுடன் நான் செயல்பட்டது சரியா என்று விவாதிக்கலாம். ஆனால், தேர்தல் நடை முறைகள் தொடங்குவதற்கு முன்பே, ஒரு தனி மனித ரைக் குறைசொல்வதுதவறா னது. 'என்னைப்பற்றிய ஐந்தொகையை எனக்குப் பின்னால் எழுதுங்கள்’ என்பார் கண்ணதாசன். அதைத் தான் நானும் சொல்கிறேன்'' என்று சொல்லும்போது மட்டும் அய்யரின் குரல் உயர்கிறது!

''உள்ளாட்சித் தேர்தல்களில்  வெற்றி பெற வேண்டும் என்பதற் காக, ஆளும் கட்சியினர் பல்வேறு அராஜக நடவடிக்கைகளில் இறங்குவது வழக்கமானதுதான். இதை எப்படிச் சமாளிக்கப் போகிறீர்?''

''கடந்த உள்ளாட்சித் தேர்தலை அரசு அதிகாரியாக மட்டும் அல்ல... ஒரு சாதாரண வாக்காளனாகவும் நான் பார்த்தவன். அது மாதிரி நடந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். என்னைச் சந்திக்க ஓர் ஆசிரியை வந்தார். அவரது விரல்கள் வெட்டப்பட்டு இருந்தன. 'கடந்த முறை உள்ளாட்சித் தேர்தல் வேலை பார்க்கப்போன இடத்தில்தான், என்னுடைய விரல்கள் துண்டிக்கப் பட்டன. இப்போதும் அதே பணிக்கு அனுப்புகிறார்கள். என்னுடைய பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம்?’ என்று கேட்டார். இப்போது தேர்தல் பார்வையாளர்களாக அனைத்து மாவட்டங்களுக்கும் அதிகாரிகள் வந்தார்கள். ஆனால், சென்னைக்கு மட்டும் வரத் தயங்கினார்கள். சென்னையில் கடந்த முறை நடந்த தேர்தல் அத்தகைய அதிர்ச்சியை உருவாக் கியது. டி.ஜி.பி. அந்தஸ்தில் இருந்த ஒருவரே வாக்களிக்க முடிய வில்லை. டி.வி-யில் ஒரு காட்சி யைக் காட்டினார்கள். ஒரே ஆள்... இருபது, முப்பது பேலட் பேப்பரை ஒரே நேரத்தில் பெட்டிக்குள் போட்டு அமுக்குகிறார். அதாவது, வாக்காளர்கள், தேர்தல் பணியாளர்கள்... இரு தரப்பினருக்கும் அச்சத்தை ஏற்படுத்திய தேர்தல் அது. அந்த மாதிரி நடந்துவிடாமல் பார்த்துக்கொள்ளும் கடமை எனக்கு இருக்கிறது.

'நமது வாக்கை நாமே போடு வோம்... நமக்கு விருப்பமானவரை நாமே தேர்ந்தெடுப்போம்’ என்ற எண்ணத்தை உருவாக்கப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள் ளோம். உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றன. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை உருவாக்கி இருக்கிறோம். மிகக் குறைந்த கால அவகாசத்தில் இதைச் செய்து இருக்கிறோம். பல்வேறு மாநிலங்களில் இருக்கும் தேர்தல் ஆணையர்கள், இங்கு தேர்தல் பார்வையாளர்களாக வரப்போகிறார்கள். உயர் நீதிமன்ற அந்தஸ்தில் உள்ளவர்கள்கூட இந்தக் குழுவில் இருக்கிறார்கள். எனவே, அச்சமின்றி மக்கள் வாக்களிக்கலாம்!'' - அழுத்தமான வாக்குறுதியைக் கொடுக்கிறார் அய்யர்.

''டாஸ்மாக் உருவாக்கப்பட்டதை வைத்து உங்கள் மீது சொல்லப்படும் புகார்களுக்கு என்ன சொல்கிறீர்கள்?''

''மதுபான மொத்த விற்பனை உரிமை அரசிடமும் சில்லறை விற்பனை உரிமை தனியாரிடமும்

சோ.அய்யரின் உள்ளாட்சி மந்திரம்!

இருந்தன. சில்லறை விற்பனை உரிமையையும் அரசே எடுத்துக்கொள்ள அன்றைய அரசு முடிவு எடுத்தபோது, டாஸ்மாக் பொறுப்பில் நான் உட்காரவைக்கப்பட்டேன். நான் பணி செய்த அந்த இரண்டரை ஆண்டு காலம் குறித்து எத்தகைய விசாரணையையும் யாரும் செய்யலாம். நான் மாற்றப்பட்டவுடன் எத்தனையோ சோதனை கள் நடந்துவிட்டன. ஆனால், எனது நேர்மை, திறமை எந்த இடத்திலும் கேள்விக்கு உள்ளாக்கப்படவில்லை. என்னுடைய 36 ஆண்டு கால அரசுப் பணியில் சிறு புகார், நோட்டீஸ், விளக்கம் கொடுப்பது போன்ற எந்தவிதக் குறிப்பும் இல்லாமல் பணி செய்தவன் நான். சான்றோர் பழிக்கும் வினையை எப்போதும் செய்ய மாட்டேன்!'' என்கிற அய்யர், ''ஏற்கெனவே 96, 98, 99 ஆகிய மூன்று தேர்தல்களை நான் இருந்த மதுரை மற்றும் கரூரில் புகார்களுக்கு ஆளாகாமல் நடத்தியவன். இப்போதும் அதே பெயரை வாங்குவேன்!'' என்று உறுதி எடுத்துக்கொள்கிறார்.

அப்படியே நடக்கட்டும்!