Published:Updated:

மக்கள் நலக் கூட்டணி... யாருக்கு ஆதாயம்?

உண்மை சொல்லும் திருமாஆ.விஜயானந்த்படம்: தி.குமரகுருபரன் ஓவியம்: கார்த்திகேயன் மேடி

'தமிழ்நாட்டில் மாற்று அணியைக் கட்டமைக்கவேண்டியது வரலாற்றுத் தேவை. அதற்கு இதுவே சரியான தருணம். தலித்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர் போன்றோர் ஆட்சி அதிகாரத்தில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக இந்த அணி இணைய வேண்டும் என விரும்பினேன். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றான இந்தக் கருத்து விதையை நாங்கள்தான் விதைத்தோம்'' - நம்பிக்கையாகப் பேசுகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். வைகோ மற்றும் இடதுசாரிகளை உள்ளடக்கிய 'மக்கள் நலக் கூட்டணி’யை, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணியாக உறுதிப்படுத்தும் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்.

''மக்கள் நலக் கூட்டணியின் திட்ட அறிக்கையில், 'அணு உலை எதிர்ப்பு’, 'தனி ஈழம்’ போன்ற வார்த்தைகள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. நீங்களும் வைகோவும் பிரதானமாகப் போராடுவதே இந்த விவகாரங்களில்தான். ஏன் இந்த சமரசம்?''

'எதிரிகளோடுதான் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. ராஜபக்ஷேவோடு சமரசம் செய்தால்தான் துரோகம். பொதுப் பிரச்னைகளுக்காக தோழமை சக்திகளோடு இணைந்து பணியாற்றுவது என்ற அடிப்படையில், முரண்பாடு உள்ள சில விஷயங்களைத் தவிர்த்திருக்கிறோம். இது விட்டுக்கொடுத்தல்தான்; சமரசம் அல்ல.'

மக்கள் நலக் கூட்டணி... யாருக்கு ஆதாயம்?

''சரி, நாளையே 'ஈழம் ஆதரவு’, 'அணு உலை எதிர்ப்பு’ ஆகிய போராட்டங்களை நடத்தும்போது கூட்டணிக்குள் பிணக்கு வராதா?''

'மக்கள் பிரச்னைகளில் கட்சியின் கொள்கைக்கு ஏற்ப தனித்தனியே போராட இந்தக் கூட்டணிக்குள் இடம் உண்டு. தனி ஈழம் உள்பட எங்கள் கட்சிக்கான கொள்கை நிலைப்பாடுகளைக் கூட்டு இயக்கத்தின் களங்களில் பேசுவது இல்லை என முடிவெடுத்திருக்கிறோம். அதேபோல உடன்பாடான விஷயங்களைப் பேசுவது எனவும் முடிவெடுத்திருக்கிறோம்.''

''மக்கள் நலக் கூட்டணியின் திட்ட அறிக்கை, கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கைபோலவேதான் உள்ளது. இந்தக் கூட்டணி இடதுசாரிகளின் ஆதிக்கத்தில் இருப்பதாக எடுத்துக்கொள்ளலாமா?''

'இது தவறான புரிதல். குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை வெளியிட வேண்டும் எனச் சொன்னதே நான்தான். இதைத் தயாரிப்பதற்கான ஆலோசனையையும் வழங்கினேன். சி.பி.ஐ., சி.பி.எம் கட்சிகள் கொடுத்த அறிக்கை விவரங்களில் முரண்பாடான விஷயங்களை மட்டும் நீக்கிவிட்டு, உடன்பாடான விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டோம்.

குறைந்தபட்ச செயல்திட்டத்தில் சாதிய முரண்பாடு, ஈழத் தமிழர் பிரச்னை, அணுசக்தி விவகாரம் ஆகிய மூன்றும் மிக முக்கியமானவை. இந்த மூன்றிலும் எங்களுக்கும் அவர்களுக்கும் மாற்றுக் கருத்தும், அணுகுமுறையில் வேறுபாடும் இருக்கின்றன. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை இன்னும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும், ஆணவக் கொலைகள் முற்றிலுமாகத் தடுக்கப்பட வேண்டும் என்பனவற்றில் எங்களுடன் இடதுசாரிகள் முழுமையாக ஒன்றுபடுகிறார்கள். ஆனால், சாதி வன்கொடுமைகளுக்கு எதிராக பா.ம.க-வுடன் நாங்கள் நேரடியாக மோதுவதைப் போல அவர்களால் இயலாது; அப்படி நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை. அதேநேரம், பா.ஜ.க மதவாத சக்தி, பா.ம.க சாதியவாத சக்தி என்ற அடிப்படையில் பா.ம.க புறக்கணிக்கப்பட வேண்டிய கட்சி என்ற முடிவை கூட்டணிக்குள் முன்வைத்தபோது, அதை இடதுசாரிகள் ஏற்றுக்கொண்டார்கள். ஈழப் பிரச்னையில் 'பன்னாட்டு நீதிபதிகள் விசாரணை நடைபெற வேண்டும்’ என்றோம். கம்யூனிஸ்ட்களோ, 'இலங்கையின் இறையாண்மையில் தலையிட வேண்டாம்’ என்றார்கள். பேச்சுவார்த்தையின் இறுதியில் 'பன்னாட்டு நீதிபதிகள் விசாரணை வேண்டும்’ என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். எனவே, இடதுசாரிகள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதில் உண்மை இல்லை.'

''ஆனால், கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக தமிழ்நாட்டை தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் மாறி மாறி ஆட்சி செய்துவருகிற நிலையில், உங்கள் புதிய கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பார்களா... உங்களால் வெற்றிபெற முடியுமா?''

'வெற்றி அடைவோம் என யூகித்துச் சொல்ல முடியாது. அதற்கான சூழல் இங்கு உள்ளது என்பது உண்மை. தி.மு.க., அ.தி.மு.க மட்டும்தான் தமிழ்நாட்டை ஆட்சி செய்யவேண்டும் என மக்கள் விரும்பவில்லை. சொல்லப்போனால் இந்தக் கட்சிகள் மீது மக்களுக்கு மிதமிஞ்சிய வெறுப்பு இருக்கிறது. மற்ற கட்சியினர்கூட தி.மு.க., அ.தி.மு.க-வை எதிர்த்துப் பேசத் தயங்குகிறார்கள். அவர்களுடன் இணக்கமாகச் செயல்பட்டு, கிடைக்கும் ஸீட்களை வாங்கிக்கொள்ளலாம் என எண்ணும் நிலைதான் இருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகளும்கூட தி.மு.க-வுடன் அப்படி ஓர் இணக்கச் சூழ்நிலையை இத்தனை ஆண்டுகளாகப் பேணிவந்தது என்பது உண்மைதான். ஆனால், நாங்கள் புதிய கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சியை எல்லா காலங்களிலும் தொடர்ந்து செய்துவந்திருக்கிறோம்.

மக்கள் நலக் கூட்டணி... யாருக்கு ஆதாயம்?

'எல்லோரும் சேர்ந்து எதிர்க்கலாம்’ என துணிவுடன் எதிர்க்கும் நிலைமை இங்கு இல்லை. சொல்லப்போனால், 90-ம் ஆண்டுகளில் வைகோ-வுக்கும், அதன் பிறகு பா.ம.க-வுக்கும் மாற்று சக்தியாக வளர்வதற்கான வாய்ப்பு இருந்தது. அவர்கள் எடுத்த நிலைப்பாடுகளால் எல்லாம் மாறிவிட்டன. குறிப்பாக, பா.ம.க., மாறி மாறி இரண்டு கட்சிகளின் முதுகிலும் அமர்ந்து அதிகாரத்தைச் சுவைக்கும் பிளாக்மெயில் பாலிடிக்ஸில் ஈடுபட்டார்கள். மிரட்டல், உருட்டல் அரசியல் மூலம் பதவி அரசியலை நுகர்வதுதான் பா.ம.க-வின் நோக்கம். வைகோவுக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அன்றைக்கு தி.மு.க-வை எதிர்கொள்வதில் இருந்த தேக்கம், அவரை அடுத்த கட்டத்தை நோக்கிக் கொண்டு செல்லவில்லை. இவர்கள் இருவரும் கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டதாகக் கருதுகிறேன். இப்போது காலம் கனிந்திருக்கிறது. எங்கள் அணிக்குள் விஜயகாந்த், வாசன் இருவரும் வந்தால் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.''

'' 'அ.தி.மு.க-வை வீழ்த்த எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார்’ என்கிறார் விஜயகாந்த். உங்கள் அணிக்கு அவர் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?''

'அவர் பேசும் பேச்சுக்கள், அறிக்கைகளை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது. பா.ம.க-வும் ம.தி.மு.க-வும் தங்களுக்கு காலம் வழங்கிய வாய்ப்பை எப்படி நழுவவிட்டார்களோ, அதைப்போலவே 'திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக விஜயகாந்த் வருவார்’ என்ற மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற விஜயகாந்தும் தவறிவிட்டார். அவர் செய்த மிகப் பெரிய வரலாற்றுப் பிழை, அ.தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்தது. இது பத்தோடு பதினொன்று என்பதுபோல் ஆகிவிட்டது. விஜயகாந்த் குறித்த மக்கள் எதிர்பார்ப்பின் வீரியம் குறைந்துபோனதாகத்தான் நினைக்கிறேன். தனது பத்து ஆண்டுகால அரசியலில், தன் மீதான நம்பிக்கையை அவர் நிலைநாட்டவில்லை. இந்தத் தேர்தலிலும் தி.மு.க., அ.தி.மு.க-வோடு அவர் கூட்டணி வைத்தால், தே.மு.தி.க-வின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்பது மட்டும் உறுதி.''

''விஜயகாந்த் செல்வாக்கு சரிந்துவிட்டது என்கிறீர்களா?''

'அப்படிச் சொல்லவில்லை. இமேஜ் என்பது வேறு; செல்வாக்கு என்பது வேறு. வாக்கு வங்கியை வைத்து மட்டும் இதை மதிப்பிட முடியாது. தேர்தல் அரசியலில் தொண்டர்களும், வாக்களிக்கும் பொதுமக்களும் வேறு, வேறானவர்கள். விடுதலைச் சிறுத்தைகள் 10 தொகுதிகளில்தான் போட்டியிடுகிறது என்றால், மற்ற தொகுதிகளில் எங்களுக்கு வாக்கு வங்கி இல்லை என அர்த்தமா? 234 தொகுதிகளில் சராசரியாக 5,000 ஓட்டு என்றாலும் அது எங்கள் கணக்கில் வராது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு இமேஜ் இருக்கிறது. விஜயகாந்த் ஒரு மாற்று சக்தி என மக்கள் நினைத்தார்கள். இப்போது மக்கள் அப்படி நினைக்கவில்லை. அவர் மக்கள் நலக் கூட்டணிக்கு வந்தால், அத்தகைய ஒரு மாற்று சக்தியாக இந்தக் கூட்டணி இருக்கும்; தமிழ்நாடு அரசியலில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும்.''

''அப்படியே விஜயகாந்த் வந்தாலும் அவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பீர்களா?''

'அது, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சேர்ந்து எடுக்கவேண்டிய முடிவு.'

'' 'மக்கள் நலக் கூட்டணி பெறும் ஓட்டுகள், அ.தி.மு.க-வின் வெற்றியை உறுதிப்படுத்தத்தான் உதவும்’ என்ற பேச்சு இருக்கிறதே?''

மக்கள் நலக் கூட்டணி... யாருக்கு ஆதாயம்?

'இதை எங்களால் யூகிக்க முடிகிறது. நாங்கள் வெற்றிபெற முடியாமல், வாக்குகளைப் பிரிக்கும் சக்தியாக மட்டும் இருந்தால் அது அ.தி.மு.க-வின் வெற்றி வாய்ப்புக்கு வழிவகுக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதற்காக மாற்று சக்திக்கான முயற்சியைச் செய்யாமலே இருக்க முடியுமா? இளைய தலைமுறையினர் மத்தியில், 'தமிழ்நாட்டில் வேறு தலைவர்களே கிடையாதா... புதிய அரசியல் தலைமைகள் உருவாகாதா?’ என்ற எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கின்றன. அவர்கள் தங்கள் துயரங்களைப் போக்கவும், நம்பிக்கையான எதிர்காலம் நோக்கி அழைத்துச் செல்லவும் நல்ல தலைமைகளை எதிர்பார்க்கிறார்கள். அவர்கள், மக்கள் நலக் கூட்டணியை வெற்றிபெற வைக்கலாம் என ஏன் நினைக்கக் கூடாது? அப்படி ஒரு வாய்ப்பை உருவாக்கித் தராமல், மக்களின் எதிர்பார்ப்பை எப்படித் தெரிந்துகொள்ள முடியும்?''

''சரி... தி.மு.க கூட்டணியில் இருந்து நீங்கள் விலகினீர்களா... விலக்கப்பட்டீர்களா?''

'அவர்கள் எங்களை விலக்கவும் இல்லை; நாங்கள் விலகி வரவும் இல்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் எது சரி எனப்படுகிறதோ, அதைச் செய்கிறோம். அவர்களோடு எந்த முரண்பாடும் இல்லை. கலைஞரோடும் ஸ்டாலினோடும் இதயபூர்வமான உறவு இப்போதும் தொடர்கிறது. காலச்சூழலுக்குத் தகுந்த மாதிரி முடிவு எடுக்கிறோம். அவர்களோடு சண்டை போட்டுக்கொண்டு வெளியே வரவில்லை.'

''எப்படிப் பார்த்தாலும் உங்களை சாதியக் கட்சி என்ற முத்திரைக்குள்தானே கொண்டுவருகிறார்கள்?''

'அது உண்மைதான். இரண்டு பிரதான கட்சிகளும், 'விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணிக்குள் இருந்தால், தலித் அல்லாதவர்களின் வாக்குகள் கிடைக்காமல் போய்விடுமோ?’ எனத் தயங்குகின்றன. இது திட்டமிட்டுக் கிளப்பிவிடப்பட்ட வதந்தி. தொகுதியை ஒதுக்கும்போதும் விடுதலைச் சிறுத்தைகளை ஊக்கப்படுத்தக் கூடாது என நினைக்கிறார்கள். இது ஒரு சமூகச் சிக்கல். இதை எல்லாம் தாண்டிதான் அரசியல் செய்ய வேண்டியிருக்கிறது.'

''மு.க.ஸ்டாலின் நடத்தும் 'நமக்கு நாமே’ திட்டத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

'ஒரு கட்சித் தலைவர் தனது வீட்டில் இருந்து கட்சி அலுவலகம் செல்வதையே விழாபோல் கொண்டாடும் நிலையில், மக்களை நேரடியாகச் சந்திக்கும் ஸ்டாலின் பயணத் திட்டத்தை நான் வரவேற்கிறேன். அவரும் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக அரசியலில் இருக்கிறார். அவரது பயணத்தால் வெற்றி கிடைத்தால் மகிழ்ச்சி.'