விஜயகாந்த் சபதம்ப.திருமாவேலன், படங்கள்: கே.கார்த்திகேயன்
தெளிவான முகம்; அழகான சிரிப்பு; மெலிந்த தேகம். கதவைத் திறந்து வருகிறார் விஜயகாந்த். ஆள் அப்படியே மாறிவிட்டார். ''ஜக்கி ஆசிரமத்தில் ஒரு வாரம் தங்கி யோகா பயிற்சிகள் எடுத்துக்கிட்டேன். மனசுக்கும் உடம்புக்கும் இப்போ புத்துணர்ச்சியா இருக்கு. ரெண்டு மூணு மாசம் தொடர்ந்து அலையணும்ல... அதான் தயாராகி வந்திருக்கேன்!' என்று சுறுசுறுப்பாக நாற்காலியை இழுத்துப்போட்டு உட்காருகிறார். ''இந்த சேர்ல வீல் இருக்கு சார். எந்தப் பக்கம்னாலும் தள்ளிக்கலாம்' என்று அவர் சிரிப்பதிலேயே அரசியல் தெறிக்கிறது!
''இன்னிக்கும் மழை மேகம் இருக்கு. மழை வரும்போல... தொடர்ச்சியா பல பகுதி மக்களைப் பார்த்துட்டு வர்றேன். இன்னிக்கும் போகணும்' என்கிறார் அக்கறையாக.

''மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தினமும் போய் வருகிறீர்கள். என்ன கேட்கிறார்கள் மக்கள்?'
''சென்னை சிட்டி மொத்தமும் மிதக்குதுன்னா, இங்க அரசாங்கம் இருக்கா... இருந்துச்சா? இதுதான்

மக்களோட கேள்வி. அந்த அளவுக்கு எல்லா மக்களும் மனசு ஒடிஞ்சுபோய்க் கெடக்காங்க. தண்ணி வடியுறது அப்புறம்... மக்கள் மனதில் இருக்கிற கோபம் எப்ப வடியும்?
ரமணன் சொல்றார்... மழை வரப்போகுது, புயல் அடிக்கப்போகுதுனு. பஞ்சாங்கத்துல இருக்குனு சொல்றாங்க. இதுக்கு மேல யார் சொல்லணும்? கடவுளே இறங்கி வந்து, 'மழை வரப்போகுது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுங்க... தாழ்வான பகுதியில் இருக்கிறவங்களை மேடான பகுதிக்குக் கொண்டுபோங்க. கல்யாண மண்டபத்துல, சமூக நலக்கூடத்துல குடியேத்துங்க’னு சொல்லணுமா? 'படகு வாங்கி வெச்சுக்கோங்க’னு தயார்செய்து அனுப்பணுமா? தலையில கொட்டி யாராவது சொன்னாத்தான் செய்வாங்களா? தலைமைச் செயலகத்துல மீட்டிங் போட்டோம்னு கலர் போட்டோ எடுத்துக்கிட்டா, தண்ணி ஊருக்குள்ள வராதா? தலைமைச் செயலகத்துக்குள்ள வராது. மக்கள் குடியிருக்கிறது ரோட்டுல. அதை நினைச்சுப் பார்த்தாங்களா?

இந்த அரசாங்கம், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கலைங்கிற வருத்தம் எல்லாம் அப்புறம். யாருமே வந்து 'என்னாச்சு?’னு எட்டிக்கூடப் பார்க்கலைங்கிற கோபம்தான் அதிகம். எம்.எல்.ஏ

எங்கே... எம்.பி எங்கே... மந்திரி எங்கே... அதிகாரிகள் எங்கே... ஆர்.கே.நகர்ல வெற்றி பெறுவதற்காக 30 மந்திரிகளையும் இறக்குனீங்களே... அவங்க எல்லாம் எங்க போயிட்டாங்க... அமெரிக்காவுக்கா? ஓட்டு கேட்க வீடுவீடாப் போனவங்களுக்கு, இன்னைக்கு மழை பெய்த இடத்துக்கு வர வழி தெரியலையா? வழி தெரியும். வந்தா, ஜனங்க உதைப்பாங்க. அதனாலதான் பதுங்கிட்டாங்க. நான் போனேன். கார்ல எல்லாம் போகலை. இறங்கி நடந்து போனேன். மேட்டுல நின்னுக்கிட்டு தண்ணியைப் பார்க்கல. மழை வெள்ளத்துல நின்னு மக்களைப் பார்த்தேன். வேட்டியைத் தூக்கிக் கட்டிட்டு நின்னேன். 'நீங்கதான் இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க’னு சொன்னாங்க. என்னால முடிஞ்ச உதவியைச் செய்தேன்; இன்னமும் செய்வேன். எங்க ஆளுங்க அவங்கவங்க கைக்காசைப் போட்டு செய்றாங்க. வசூல் பண்ணிச் செய்யலை. 'அது வேணும், இது வேணும்’னு கேட்கிறவங்களிடம் சொல்ல எனக்கு வார்த்தை வரலை. 'நான் அரசாங்கம் இல்லை; நீங்க கேட்கிறதை எல்லாம் அரசாங்கம்தான் செய்யணும்’னு சொல்லிட்டு வந்திருக்கேன். இந்த அரசாங்கத்திடம் நான் சொல்வது, 'சோறு போட்டா போதும்னு நினைக்காதீங்க. மக்களிடம் போய் அவங்களுக்கு என்னென்ன தேவைகள்னு கேளுங்க. அதைச் செய்து கொடுங்க’. என்ன செய்யணும்னு நான் சொன்னா, அதுக்காகவே அதைச் செய்ய மாட்டாங்க. அதனால நான் சொல்லலை!'
''தமிழகம் முழுக்க, 'மக்களுக்காக மக்கள்’ என்ற கூட்டங்களை நடத்திவருகிறீர்கள். பொதுமக்களிடம் என்ன எதிர்பார்ப்பு தெரியுது?'
''ஜெயலலிதாவை வீட்டுக்கு அனுப்பணும்கிற கோபம்தான் ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு தெரியுது. அதுதான் எல்லார் முகத்துலயும் தெரியுது. முன்பைவிட நான் போகும் இடங்கள்ல கூட்டம் அதிகமாகக் கூடுது. ஜெயலலிதா மீது கோபம் இருக்கு. அதைத்தான் இந்த மக்கள் முகத்தைப் பார்க்கும்போது தெரிஞ்சுக்கிறேன்.
எங்களுக்கு வர்ற கூட்டத்தைக் காட்டும் போட்டோவை, பத்திரிகைகள் போடுறது இல்லை; டி.வி-க்கள் காட்டுறது இல்லை. இங்க பலரும் ஜால்ரா போடுறாங்க. முன்பெல்லாம் தமிழ்நாட்டு சிங்கியை அடிச்சாங்க. இப்ப கேரளா செண்டை மேளம் அடிக்கிறாங்க! (அடித்துக் காட்டுகிறார்!) மக்களுக்கு இருக்கும் கோபத்தை பத்திரிகைகள்தான் எடுத்துச் சொல்லணும். இல்லைன்னா, ஜனங்களுக்கு எப்படித் தெரியும்? ஆனா ஒண்ணு... இது நிச்சயமா தேர்தலில் தெரியும்!'

''நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். ஆனால், 'அடுத்த முறையும் நாங்கள்தான் வெற்றிபெறுவோம்’ என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அ.தி.மு.க-வுக்கு இருக்கிறதே?'
''அவங்ககிட்ட கேட்டா அப்படித்தான் சொல்வாங்க! மக்கள் சொல்றாங்களா? பணம் கொடுக்காம, வண்டி வைக்காம ஆளும் கட்சி கூட்டத்துக்கு இப்போ ஆள் வர்றாங்களா ஆர்வத்தோட. அதை நிரூபிக்கட்டும் பார்க்கலாம். அவங்க நம்புறது மக்களை அல்ல; பணத்தை. இந்த மக்களுக்கு ரெண்டாயிரம் ரூபா கொடுத்தா ஓட்டு போடுவாங்க... பணத்தைக் குடுத்து ஓட்டு வாங்கிக்கலாம்னு நம்புறாங்க. மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் எல்லாமே இதை நம்பித்தான் கொடுத்தாங்க. அதுவே ஓட்டை உடைசல். அதுவும் இந்த மழையில போச்சு. நல்லதும் போச்சு... கொடுத்ததும் போச்சு. இதை இந்தத் தடவை மக்கள் உணர்ந்துட்டாங்க. பணத்துக்கு ஏமாற மாட்டாங்க. ஜெயலலிதாவை ஏமாத்திடுவாங்க!'
''என்ன முடிவு செய்திருக்கிறீர்கள்... யாரோடு கூட்டணி?'
''கூட்டணியைப் பற்றி முடிவுசெய்ய இப்ப என்ன அவசரம்? அதுக்கு நாலு மாசம் இருக்கே?'
''நீங்கள் தி.மு.க-வுடன்தான் கூட்டணி வைப்பீர்கள் எனப் பரவலாகப் பேச்சு இருக்கிறதே?'
''அப்படி எதுவும் இல்லை!'
''உங்களோடு பேச்சுவார்த்தையை தி.மு.க தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார்களே?'
''என்னோடு யாரும் பேசவில்லை. யாரோ சும்மா கிளப்புறாங்க!'
''90 தொகுதிகள் நீங்கள் கேட்பதாகச் சொல்கிறார்களே?'
''90-ம் கேட்கலை... 100-ம் கேட்கலை!'

''கேட்கவே இல்லையா?'
''ஒரே ஒரு தொகுதிகூட கேட்கலை!'
''தி.மு.க-வினரே அப்படிச் சொல்லி வருகிறார்களே?'
''அப்படிக் கேளுங்க! தி.மு.க-காரங்க அப்படிச் சொல்லிக்கலாம்... நாங்க சொல்லலையே! அ.தி.மு.க., தி.மு.க ரெண்டு கட்சிகளுக்கும் இங்க எந்த வித்தியாசமும் இல்லை. இன்னைக்கு சென்னையும் மற்ற நகரங்களும் மழை வெள்ளத்துல மிதக்குதுன்னா, அதுக்கு இந்த ரெண்டு கட்சிகளும்தான் காரணம். மணல் வியாபாரம் பார்க்க ஆறுகளை அழிச்சு, ரியல் எஸ்டேட் செழிக்க ஏரிகளைக் காலி பண்ணி, கிரானைட்ல சம்பாதிக்க மதுரையின் சுற்றுவட்டாரத்தையே சிதைச்சு... இந்த அழிவுகள் எல்லாத்துக்குமே தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் பாதி பாதிக் காரணம். இந்த ரெண்டு கட்சிகளுக்கும் வித்தியாசம் இல்லை. ரெண்டு பேருமே வரக் கூடாதுங்கிறதுதான் என்னோட கொள்கை!'
''இப்படித்தான் முதலில் சொன்னீர்கள்! ஆனால், அ.தி.மு.க-வுடன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்துக்கொண்டீர்களே?'
''அன்றைய தி.மு.க ஆட்சியை வீழ்த்துவதற்கு ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தால் சரியா இருக்கும்னு ஆலோசனை சொன்னாங்க. எனக்கும் அதுதான் 'சரி’னு பட்டது. கூட்டணி வைக்கும்போதே, 'ஆறு மாசம் பார்ப்பேன். ஆட்சி ஒழுங்கா இல்லைன்னா, எதிர்த்துக் குரல்கொடுப்பேன்’னு சொன்னேன். ஆட்சி அமைச்ச கொஞ்ச நாள்லயே பஸ் கட்டணத்தை ஜெயலலிதா கூட்டினார். பால் விலையைக் கூட்டினார். அது எனக்குப் பிடிக்கலை. அதனால, ஆட்சியின் 100-வது நாள் விழாவுக்கு நான் போகலை. பொக்கே மட்டும் கட்சி சார்பில கொடுத்துவிட்டேன். அது ஜெயலலிதாவுக்குக் கோபம். சட்டமன்றம் கூடினதும், எங்க கட்சி உறுப்பினர் சந்திரகுமார் பால் விலை உயர்வைக் கண்டிச்சுப் பேசினார். அதுக்கு மந்திரி சப்பைக்கட்டு கட்டினார். எங்க கட்சி உறுப்பினர்கள் பதில் கொடுத்தாங்க. உடனே எங்களை மிரட்டினாங்க. அதுக்குப் பிறகு நடந்தது எல்லாம், எல்லாருக்கும் தெரியும்.
இங்க கூட்டணின்னா என்ன நினைக்கிறாங்கன்னா, அந்தக் கட்சிக்கு கொத்தடிமைனு நினைக்கிறாங்க. நான் அடங்கிப் பழக்கப் பட்டவன் அல்ல; அடக்கிப் பழக்கப்பட்டவன். கூட்டு சேர்ந்து கொள்ளை அடிக்கிறதுக்காக, கூட்டணி சேர்றவன் இல்ல நான். கூட்டு சேர்ந்தா, மக்களுக்கு நல்லது பண்ண முடியுமாங்கிறதுக்காகச் சேர்பவன். அது சாத்தியம் இல்லைன்னதும் உடனே வெளியேறினேன். அ.தி.மு.க-வோடு கூட்டு சேர்ந்த காலத்துல இருந்து இன்னைக்கு வரைக்கும் அதுக்காக வருத்தப்பட்டுட்டு இருக்கேன்!'

''இதே மாதிரியே, அ.தி.மு.க-வை வீழ்த்த தி.மு.க-வுடன் சேர்வீர்கள் என்கிறார்களே?'
''ரெண்டு பேரையும் வீழ்த்துவதற்காக, எந்தத் தியாகத்தையும் செய்வேன். அதை மட்டும்தான் இப்ப சொல்ல முடியும்!'
''தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் வேறுபாடு இல்லையா?'
'' அது money... money... money. இது நிதி... நிதி... நிதி. அவ்வளவுதான். தங்கமணி, வேலுமணி, வீரமணி, புதுக்கோட்டை சுப்பிரமணியன், முக்கூர் சுப்பிரமணியன் இதுதான் அ.தி.மு.க. கருணாநிதி, தயாநிதி, உதயநிதி, துரை.தயாநிதி... இதுதான் தி.மு.க. என்ன வித்தியாசம் இருக்கு? இதுதான் இந்த இரண்டு கட்சிகளின் சாதனையும்!'
''ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளை நீங்கள் உடைத்தால், மீண்டும் அ.தி.மு.க வருவதற்கு வாய்ப்பு உண்டு என்பதுதானே கூட்டணிக் கணக்கு?'
''சார்! இந்த மாதிரி கணக்குப் பார்த்துப் பார்த்துத்தான், ரெண்டு பேரையும் மாறிமாறி உட்கார வெச்சுக்கிட்டு இருக்கோம். இவர் வரக் கூடாதுனு அவங்க; அவங்க வரக் கூடாதுனு இவர். ரெண்டு பேரும் வரக் கூடாதுனு நினைக்கிற மக்கள் இப்போ அதிகம் ஆகிட்டாங்க. அதுனால இந்தக் கணக்கு இந்தத் தேர்தல்ல செல்லுபடி ஆகாது!'
''நீங்கள் நிச்சயம் தி.மு.க கூட்டணிக்குத்தான் வருவீர்கள் என அந்தக் கட்சி நம்புகிறதே?'
''இது எப்படி இருக்குன்னா, 'புலிக்குப் பயந்தவங்க என் மேல வந்து படுத்துக்கோங்க’னு சொல்ற மாதிரி இருக்கு!'
''ஒருவேளை, நீங்கள் இறங்கிவருவீர்கள் என எதிர்பார்க்கிறார்களோ?'
''ஏன்... நான்தான் இறங்கி வரவேண்டுமா... அவங்க இறங்க மாட்டாங்களோ? லாலு இறங்கியதால்தான் பீகார்ல வெற்றி கிடைச்சது!'
''தி.மு.க-வில் அடுத்த முதல்வர் கருணாநிதியா... ஸ்டாலினா என்ற விவகாரம்...'
''அது அவங்க உட்கட்சிப் பிரச்னை. நமக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்? அதைப் பற்றி கருத்து சொல்ல விரும்பலை; சொல்றதும் சரியில்லை. என்னைப் பொறுத்தவரை, கலைஞர் என் திருமணத்தை நடத்திவெச்சவர். நான் இப்ப நல்லா இருக்கேன்' (கண்கள் மூடி வணக்கம் வைத்துக்கொள்கிறார்!)

''ஸ்டாலினின் 'நமக்கு நாமே’ பயணத்தைப் பார்க்கிறீர்களா?'
''அது ஷூட்டிங்! ஒரு நாளைக்கு ரெண்டு கடையில டீ குடிக்கிறார். ரெண்டு கடையில வடை சாப்பிடுறார். ரெண்டு இடத்துல பேசுறார். அவ்வளவுதான். ஓவர்... ஓவர்... ஓவர்!
இப்படிப் பண்றவர், இப்ப வெள்ளத்துல மிதக்கிற பகுதிகளுக்குப் போய் அந்த மாதிரி அலையணும்ல... அப்பத்தான் மக்கள் நம்புவாங்க!'
''வைகோ தலைமையில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் விடுதலைச் சிறுத்தைகளும் இணைந்து 'மக்கள் நலக் கூட்டணி’ அமைத்துள்ளதே... அது பற்றி உங்கள் கருத்து என்ன?'
''அந்தக் கூட்டணிக்கு வரணும்னு என்னையும் அழைச்சிருக்காங்க. அவங்களோட பெருந்தன்மைக்கு நன்றி சொல்லிக்கிறேன். (கை கூப்பி வணங்குகிறார்!) ஆனா, தேர்தல் கூட்டணி பற்றி நான் இன்னமும் எந்த முடிவும் எடுக்கலை. இன்னும் நேரங்காலம் இருக்கு. உரிய நேரத்துல நான் அறிவிப்பேன். அது எனது தொண்டர்களும் மக்களும் விரும்பும் மகத்தான மாற்றத்துக்கு அடித்தளம் அமைக்கிற முடிவாக இருக்கும்!'
''பாரதிய ஜனதா கூட்டணியில் நீங்கள் இருக்கிறீர்களா... இல்லையா?'
''எந்தக் கூட்டணிங்கிறது இன்னும் முடிவெடுக்கலைனுதான் சொன்னேனே!'
'' 'தே.மு.தி.க எங்களோடுதான் இருக்கிறது’ என அவர்கள் சொல்கிறார்களே?'
''அவங்கதான சொல்றாங்க! சொல்லட்டும்!'
''தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் நீங்கள். ஆனால், நீங்கள் சட்டமன்றத்துக்கே போவது இல்லையே?'
''நான் வரக் கூடாதுன்னு அவங்களே நினைக்கிறாங்க. வந்தா, கோபமூட்டி வெளியே தள்ள நினைக்கிறாங்க. அதனாலதான் போகலை!'
''நீங்கள் 21 உறுப்பினர்கள் இருக்கிறீர்கள். கூட்டமாகப் போய் உட்கார்ந்தால், யார் என்ன செய்ய முடியும்?'
''அவங்க 150 பேர் இருக்காங்களே!'
''மனது வைத்தால் உங்கள் கருத்துகளைப் பதிவுசெய்ய முடியாதா என்ன?'
''மைக்கை ஆஃப் செய்யும் ஸ்விட்ச் அவங்ககிட்டல இருக்கு! எங்களால எப்படி நினைச்சதைப் பேச முடியும்? ஆனாலும் மக்கள் பிரச்னைகளை சட்டமன்றத்துல அதிகமாப் பேசிப் பதியவெச்சது தே.மு.தி.க உறுப்பினர்கள்தான். நிர்வாகக் குளறுபடிகளை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கோம். அப்படிப் பேசினாலே உடனே, 'நேரம் முடிஞ்சிருச்சு’னு சொல்லிடுவாங்க. சட்டசபை சபாநாயகர் நடுநிலையுடன் நடந்துகொள்ளவில்லை. எங்க எம்.எல்.ஏ-க்களை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். சபைக்குள் என்ன நடந்தது, நடக்கிறதுனு வெளியிலயும் தெரியலை. அதனாலதான், 'சபை நடவடிக்கைகளை நேரடியா ஒளிபரப்பு செய்யணும்’னு நான் சொல்றேன். அப்படிச் செய்தால்தான் மக்களுக்கு உண்மை தெரியும். நேரடி ஒளிபரப்பு செய்தால், நான் தொடர்ந்து சட்டமன்றத்துக்குப் போகத் தயாரா இருக்கேன்!'

''திடீர் திடீரென எம்.எல்.ஏ-க்களை அடிக்கிறீர்கள், மாவட்டச் செயலாளர்களை அடிக்கிறீர்கள். உங்களால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லையா?'
''அதைக் கேக்கிறீங்களா? நாம மக்களைப் பார்க்கப்போறோம். அங்க கட்சிக்காரங்க வந்து குவிஞ்சா, கோபம் வரத்தானே செய்யும்? அதை என்னோட தொண்டர்கிட்ட நான் சொல்றேன். இதெல்லாம் செல்லமா உணர்த்துறது. அவ்வளவுதான். நாட்டுல நான் மட்டும்தான் கோபப்படுறனா? மற்ற எந்தத் தலைவருக்கும் கோபமே வர்றது இல்லையா? குடையை லேசா தள்ளிப்பிடிச்ச செக்யூரிட்டி ஆபீஸரைப் பார்த்து ஜெயலலிதா முறைக்குதே... அது யாருக்கும் நியூஸாத் தெரியலையா?'
''உங்களைப் பற்றி வாட்ஸ்அப், ஃபேஸ்புக்ல வரும் கிண்டல்களைப் பார்க்கிறீர்களா?'
''சொல்வாங்க! கேட்டுப்பேன்! அதைப் பற்றி கவலைப்படுறது இல்லைங்க!'
''குடியைப் பற்றியே சொல்வது மனவருத்தம் தரவில்லையா?'
''எத்தனை தடவை சொல்வது? நான் மெடிக்கல் செக்கப்புக்கு வரத் தயாரா இருக்கேன். என்னைக் குற்றம் சொல்றவங்களும் செக்கப்புக்கு வரத் தயாரா?'
''இன்னும் உங்கள் கண்ணில் தண்ணீர் வருவது நிற்கவில்லையே?'
''நானும் என்னென்னவோ செக்கப் எல்லாம் செய்து பார்த்துட்டேன். இன்னும் சரியாகல. இது எங்க பரம்பரை விஷயமா இருக்கு. எங்க தாத்தாவுக்கு அப்படி இருந்திருக்கு. அக்காவுக்கும் இப்படி இருக்கு. ஆனா, இதனால பார்வையில எந்தப் பாதிப்பும் இல்லை. அதனால கவலைப்படலை!'
''பிரேமலதா இந்தத் தேர்தல்ல போட்டியிடுவாங்களா?'
''அவங்க எல்லாக் கூட்டத்திலயும் சொல்லி வர்றாங்க, 'தே.மு.தி.க-வின் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு அண்ணியாக இருப்பதே என்னோட பாக்கியம். மரியாதைக்குரிய அண்ணி என்பதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும்?’னு!'
''இந்தத் தேர்தலில் உங்கள் இலக்கு என்ன?'
''ஊழலை ஒழிப்போம்! ஊழலை ஒழிப்போம்! ஊழலை ஒழிப்போம்!'
''நீங்கள் ஏன் உங்களை முதலமைச்சர் வேட்பாளர் எனச் சொல்லிக்கொள்ளவில்லை?'
''அது மக்கள் வாயில் இருந்து வரணும். நாமே சொல்லிக்கக் கூடாது!' - அழுத்தமாக முடிக்கிறார் விஜயகாந்த்!