Published:Updated:

விடை பெற்றார் அக்கா!

பாரதி தம்பி

விடை பெற்றார் அக்கா!

பாரதி தம்பி

Published:Updated:

நிலக்கோட்டை பொன்னம்மாள் மறைந்துவிட்டார். தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில்  பொன்னம்மாள் ஒரு சகாப்தம்; நாகரிகம் மிக்க அரசியலுக்கு அவர் ஓர் அற்புதமான உதாரணம்.
நிலக்கோட்டை அருகே  உள்ள அழகன்பட்டி என்ற கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு ஏழு முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏ.எஸ்.பொன்னம்மாள், அரசியல் தலைவர்களால் `அக்கா' என அன்புடன் அழைக்கப்பட்டவர். நேர்மையானவர், எளிமையானவர், தொண்டறம் மிக்கவர் என்பதுதான் பொன்னம்மாளின் அடையாளம்.

மஞ்சளாற்றின் குறுக்கே கட்டப்பட்ட வத்தலக்குண்டு பாலம், ஆழிசாப்பட்டி பாலம், ராமநாயக்கன்பட்டியில் உள்ள வைகை ஆற்றுப்பாலம், நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம், அரசு மகளிர் கலைக்கல்லூரி ஆகியவை பொன்னம்மாளின் பெரும் முயற்சியால் கொண்டுவரப்பட்டவை.

தொகுதி மக்களின் குடும்ப விழாக்களில்  தவறாமல் பங்கேற்கும் பழக்கம்கொண்ட பொன்னம்மாள், தன்னிடம் அளிக்கப்படும் கோரிக்கை மற்றும் புகார் மனுக்கள் ஒவ்வொன்றுக்கும் ஓர் அஞ்சல் அட்டை மூலம் தவறாமல் பதிலளிப்பார். தனக்கு வந்த பெரிய பதவிகளையும் பொறுப்புகளையும் பணிவோடு மறுத்தவர். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது இவருக்கு அமைச்சர் பதவி தருவதாகக் கூறி அ.தி.மு.க-வில் இணைய அழைப்புவிடுத்தபோதும், கருணாநிதி ஆட்சியில் புதுச்சேரி கவர்னராகும் வாய்ப்பு வந்தபோதும் அவற்றை அன்போடு மறுத்துவிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விடை பெற்றார் அக்கா!

இன்று வாரிசு அரசியலும் ஊழலும் பின்னிப் பிணைந்துள்ள சூழலில் இவை இரண்டுக்கும் இடம் கொடுக்காத வகையிலேயே இறுதிவரை வாழ்ந்து காட்டியவர் பொன்னம்மாள். இவர் மதுரை அரசு மருத்துவமனையில் நோயுற்றிருந்தபோது, ராகுல் காந்தி தனியார் மருத்துவமனையில் சேர்ந்துவிடுமாறு பரிந்துரைத்தபோதும், மாநில காங்கிரஸ் தலைவர்கள் பலர் நிதியுதவி அளிக்க முன்வந்த போதும் அவற்றையும் அன்போடு மறுத்துவிட்டார்.

பொன்னம்மாளின் கணவர் வீரனும் அவரது ஒரே மகள் வசந்தி மீனாவும் பல ஆண்டுகளுக்கு முன்னரே இறந்துவிட்டனர். மகள் இறந்த ஆண்டே மருமகன் மயில்வாகனனும் இறந்துவிட்ட நிலையில், மகளின் பிள்ளைகளான நான்கு பேத்திகளுக்கும் சட்டப் பூர்வமான  காப்பாளராகி அவர்களை வளர்த்தார். துணிச்சலான பெண்ணாக, பெண்களின் உரிமைக்காகப் பல வகைகளிலும் குரல்கொடுத்து, முன் மாதிரியான அரசியல் தலைவராக வாழ்ந்து மறைந்த பொன்னம்மாளுக்கு அவரது பேத்திகளே இறுதிச் சடங்கு செய்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism