Published:Updated:

தீபக் மிஸ்ரா மீதான குற்றச்சாட்டும்.. பல கோடி ரூபாய் பேரமும்!

தீபக் மிஸ்ரா மீதான குற்றச்சாட்டும்.. பல கோடி ரூபாய் பேரமும்!
தீபக் மிஸ்ரா மீதான குற்றச்சாட்டும்.. பல கோடி ரூபாய் பேரமும்!

இந்திய நீதித்துறை வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில், நீதிபதிகள் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி உள்ளனர். அதுவும் அந்தச் சந்திப்பில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மேல் புகார் தெரிவித்துள்ளது கூடுதல் அதிர்ச்சியும் பரபரப்பும் நிறைந்த செய்தி! இந்த விவகாரத்தின் பின்னணியில் பல வில்லங்கங்கள் இருந்தாலும், முக்கியமானவையாக இரண்டு காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

ஒன்று, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கலாகும் வழக்குகளை சக நீதிபதிகளுக்கு ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறார்; இரண்டு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான சில வழக்குகளை சந்தேகம் மற்றும் சர்ச்சைக்குரிய வகையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கையாண்டார் என்பதே!

சந்தேகமே இல்லாமல், நீதித்துறை மீதும் மத்திய பி.ஜே.பி அரசாங்கத்தின் மீதும் மிகப்பெரிய கலங்கத்தை இந்த விவகாரம் ஏற்படுத்தி உள்ளது. அதிருப்தி நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ள இந்த இரண்டு காரணங்களுக்குப் பின்னால், விவகாரமான இரண்டு முக்கியக் காரியங்கள் உள்ளன. நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில், 4 நீதிபதிகளும் அதைத்தான் சுட்டிக்காட்டினர்.

முதல் விவகாரம்,  லக்னோவில் செயல்பட்ட , 'பிரசாத் கல்வி அறக்கட்டளை'க்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரி உள்பட 46 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு தடை விதித்தது தொடர்பான வழக்கு! உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அந்த வழக்கில், சாதகமான தீர்ப்பை பெற்றுத் தருவதற்கு  இடைத்தரகர்களாக ஒடிஷா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி  ஐ.எம். குத்ரோஸி உள்ளிட்டவர்கள் செயல்பட்டனர் என வில்லங்கம் கிளம்பியது. அதில் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர். ஆனால், அப்படிப்பட்ட சூழலிலும் பிரசாத் அறக்கட்டளை தொடர்பான வழக்கில், 'மத்திய அரசு தன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. ஆனால்,  மத்திய அரசும், இந்திய மருத்துவக் கவுன்சிலும் அந்த உத்தரவின்பேரில், தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் உறுதியாக நின்றன.

நிலைமை இவ்வளவு மோசமாக வெளிப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், அதை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தனி விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டுமென்றும் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் 8-11-2017 அன்று ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி செல்லமேஸ்வரிடம் விசாரணக்கு வந்தது. அவர், அந்த மனுவை தலைமை நீதிபதி உள்ளிட்ட 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார். ஆனால், செல்லமேஸ்வர் உத்தரவை ரத்து செய்த அரசியல் சாசன அமர்வு, 'இவ்விஷயத்தில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் முடிவே இறுதியானது' என்றது. இதுகுறித்து உடனடியாக கருத்துத் தெரிவித்த, மூத்த வழக்கறிஞரும் மனுதாரருமான பிரசாந்த் பூஷண் 'இந்த நாள் நீதித்துறையின் கறுப்பு நாள்' எனக் காட்டமாக விமர்சித்தார். அவரைப்போலவே, அந்த நேரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பலரும் உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்தனர். இதே நேரத்தில் இரண்டாவது விவகாரமும் கிளம்பியது.

அந்த இரண்டாவது விவகாரம், பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் அமித்ஷா தொடர்புடையது. 2004-ம் ஆண்டு குஜராத் முதல்வராக பதவி வகித்துவந்த நரேந்திர மோடி அமைச்சரவையில், அமித் ஷா உள்துறை அமைச்சராக இருந்தார். அந்த நேரத்தில், நரேந்திர மோடியை கொல்லத் திட்டம் தீட்டியதாக சொராபூதின் மற்றும் அவரது மனைவி கவுசர்பாய் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டு, 2005-ம் ஆண்டு என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். காந்தி நகர் அருகே அவர்கள் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில போலீஸார் இணைந்து அவர்களை என்கவுன்டர் செய்தனர். லஸ்கர் இ தொய்பா என்ற அமைப்பின் தூண்டுதலின் பேரில், சொராபூதினும் அவரது மனைவியும் மோடியைக் கொல்லத் திட்டமிட்டதாக அப்போது  சொல்லப்பட்டது. இந்த என்கவுன்டரை நேரில் பார்த்த ஒரே சாட்சி பிரஜாபதி என்பவர். இவரும் சொராபுதினும் மார்பிள் வியாபார விஷயமாகத் தொடர்பு வைத்திருந்தவர்கள். இதையடுத்து, 2006-ம் ஆண்டு போலீஸ் கஸ்டடியில் இருந்த  பிரஜாபதியும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அது நாடு முழுவதும் விவாதங்களையும் விமர்சனங்களையும் கிளப்பியது; பெரும் சர்ச்சையானது.

அடுத்தடுத்து அரங்கேற்றப்பட்ட இந்த என்கவுன்டர் சம்பவங்கள் போலியானவை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அதையடுத்து,  தனிநீதிமன்றம் அமைத்து சி.பி.ஐ அந்த வழக்குவிசாரணையை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பிலேயே அந்த வழக்கு நடைபெறும் என்றும் குறிப்பிட்டது. குஜராத் டி.ஐ.ஜி வென்கசரா, ராஜஸ்தான் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் ஆகியோர் சொராபுதின் என்கவுன்டரில் கைதுசெய்யப்பட்டனர். எஸ்.பி-க்கள் ராஜ்குமார் பாண்டியன், விபூல் குமார் ஆகியோருக்கும் இந்த என்கவுன்டரில் தொடர்பு இருந்தது.

அமித்ஷாவின் போன் அழைப்புகளை ஆய்வு செய்ததில், டி.ஐ.ஜி வென்கசாரா, எஸ்.பி-க்கள் ராஜ்குமார் பாண்டியன், விபூல் குமார் ஆகியோரிடம் அவர் தொடர்ச்சியாகப் பேசியிருப்பது தெரியவந்தது. 'உள்துறை அமைச்சர் ஒருவர் நேரடியாக எஸ்.பி ரேங்க் அதிகாரிகளிடம் பேச வேண்டிய அவசியமில்லை. அமைச்சர் பதவியில் உள்ளவர் உள்துறைச் செயலர் தலைமைச் செயலாளர், சிறப்பு அதிரடிப் படைத் தலைவர்களிடம்தான் ஆலோசனை நடத்த வேண்டும். மாறாக எஸ்.பி ரேங்கில் உள்ளவர்களிடம் பேச வேண்டிய அவசியம் என்ன வந்தது?' என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகித்தனர். இதையடுத்து 2010-ம் ஆண்டு போலி என்கவுன்டர் வழக்கில் அமித் ஷா கைதுசெய்யப்பட்டு சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், மூன்று மாதங்கள் கழித்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார். 

குஜராத்தில் போலி என்கவுன்டர் வழக்கு விசாரணை நடந்தால், நேர்மையாக நடைபெறாது என்பதால், 2012-ம் ஆண்டு இவ்வழக்கு மும்பைக்கு மாற்றப்பட்டது. நீதிபதி பிரிஜ்பால் லோயா வழக்கை விசாரித்து வந்தார். அப்போது, வழக்கில் அமித்ஷா ஆஜராகாமல் தவிர்த்துவந்தபோது நீதிபதி லோயா கடுமை காட்டினார். இப்படி வேகமாக அந்த வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், 2014-ம் ஆண்டு பி.ஜே.பி மத்தியில் ஆட்சி அமைத்தது.  அதே ஆண்டில் போலி என்கவுன்டர் வழக்கின் விசாரணை முடிந்து, 2014-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் தீர்ப்பளிக்கப்படும் நிலைக்கும் வந்தது.
தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டுக்கொண்டிருந்த நிலையில், டிசம்பர் 1-ம் தேதி நீதிபதி லோயா திடீரென்று மரணம் அடைந்தார்.

நாக்பூரில் நடந்த சக நீதிபதியின் மகள் திருமணத்தில் பங்கேற்கச் சென்ற நீதிபதி லோயாவுக்கு, ரவிபவன் என்ற விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தபோது,  கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். லோயாவுக்குப் பிறகு, பொறுப்பேற்ற நீதிபதி  எம்.பி. கோசவி டிசம்பர் 30-ம் தேதி அமித்ஷாவை வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தார். ''குஜராத்தில் தீவிரவாதிகள் தலையீடு அதிகமானதால், கீழ்நிலையில் உள்ள போலீஸ் அதிகாரிகளிடம் அவசியம் கருதி அமித்ஷா பேசியிருக்கலாம். அதனால், போன் அழைப்புகளை முக்கிய சாட்சியங்களாக எடுத்துக்கொள்ள முடியாது'' என்றும் சிறப்பு நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

அதேவேளையில், நீதிபதி லோயா மரணத்தில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். அமித்ஷாவை வழக்கில் இருந்து விடுவிக்க லோயாவுக்கு 100 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாகவும்  உறவினர்கள் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த செய்தியாளர் பி.ஆர்.லோனே, 'நீதிபதி லோயா சாவில் மர்மம் இருப்பதாகவும் சுதந்திரமான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்றும்' ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். சர்ச்சைக்குரிய அந்த வழக்கை, நேற்று முன் தினம் (11-1-2018), உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு, நீதிபதிகள் அருண்  மிஸ்ரா, எம்.எம். சந்தனாகௌடர் அடங்கிய   அமர்வுக்கு மாற்றியது. அதில்தான் உச்சகட்ட சர்ச்சை வெடித்தது. அந்த வழக்கை மூத்த நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற தற்போது அதிருப்தி தெரிவித்துள்ள 4 நீதிபதிகளின் வேண்டுகோள் ஆகும்.  

அதை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா புறக்கணித்தார். அதற்கு அடுத்த நாளே, அதிருப்தி நீதிபதிகள் நான்கு பேரும் மக்கள் மன்றத்திடம் முறையிட வந்துவிட்டனர். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிக் காலம்  வரும் அக்டோபர் மாதத்துடன் முடிகிறது. சீனியாரிட்டி அடிப்படையில் ரஞ்சன் கோகய் அடுத்து தலைமை நீதிபதியாக நியமிக்கப்படலாம். தீபக் மிஸ்ராமீது அதிருப்தி தெரிவித்த நான்கு நீதிபதிகளில் ரஞ்சன் கோகயும் ஒருவர்!