Published:Updated:

கசாப் தூக்கிலிடப்பட்டதைக் கொண்டாடிய 'பாகிஸ்தான்'!

மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்ட மறுநாள், 'பாகிஸ்தான்' மக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகளைப் பகிர்ந்தும் கொண்டாடினர்!

இந்த 'லீட்' உங்களுக்கு வியப்பில் ஆழ்த்தலாம்; அல்லது, இது 'ஃபேக்கிங் நியூஸ்' என்று கூறலாம். ஆனால், இதுவும் ஓர் உண்மை நிகழ்வே!

கசாப் தூக்கிலிடப்பட்டதைக் கொண்டாடியது, இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் அல்ல; இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள 'பாகிஸ்தான்' என்ற குக்கிராமம் அது!

பீகாரின் ஸ்ரீநகர் வட்டத்தில் சிங்கியா என்ற பஞ்சாயத்தில் அமைந்துள்ளது பாகிஸ்தான் கிராமம். இங்கு சுமார் 35 வீடுகள் உள்ளன. வெறும் 250 பேர்தான் அந்த ஊரின் மக்கள்தொகை. அவர்கள்தான் கசாப் தூக்கிலிடப்பட்டதைக் கொண்டாடினர்.

கடந்த 2008-ல் மும்பைத் தாக்குதல் நிகழ்ந்தபோது, பெரிதும் துயருற்ற இந்த கிராம மக்கள் தங்கள் ஊரின் பெயரான பாகிஸ்தானை மாற்றிக்கொள்ளலாம் என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால், சட்ட நடைமுறைச் சிக்கல்களை மனதில் கொண்டு அப்படி செய்ய முடியவில்லை.

இந்தச் சூழலில்தான் பயங்கரவாதி கசாப் தூக்கிலிடப்பட்டதைக் கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்கள் அந்த மக்கள்.

பாகிஸ்தான் கிராமத்தில் ஓர் இஸ்லாமியரும் இல்லை; ஒரு மசூதியும் இல்லை என்பது மற்றொரு தகவல். இங்கு வாழும் அனைவரும் சந்தால் பழங்குடி இனத்தவர்கள். இந்த ஊருக்கு பாகிஸ்தான் என்ற பெயர் வந்ததன் பின்னணி நெகிழ்வுக்குரியது.

கடந்த 1947-க்கு முன்பு வரை இந்த ஊரில் இஸ்லாமியர்கள் பலர் குடியிருந்திருக்கிறார்கள். பிரிவினை காலத்தில் இங்கிருந்த இஸ்லாமியர்கள் அப்போது கிழக்குப் பாகிஸ்தான் என்று அறியப்பட்ட வங்கதேசத்துக்கு இடம்பெயர்ந்தனர். தங்கள் நண்பர்கள் 'கிழக்கு பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டார்களே' என்ற ஏக்கத்துடன், அவர்களின் நினைவாகத் தங்கள் ஊருக்கு 'பாகிஸ்தான்' என்ற பெயரைச் சூட்டி இருக்கிறார்கள் அந்த ஊர் மக்கள். 

கடந்த ஆகஸ்டில் பீகார் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதிநிதிகள் 21 பேர், அம்மாநில முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்தபோது, தங்கள் மாநிலத்தில் பாகிஸ்தான் பெயரில் ஒரு கிராமம் உள்ள விவரத்தைச் சொல்லி இருக்கிறாராம். அதைக்கேட்டு பாகிஸ்தான் பிரதிநிதிகள் வியந்தனர் என்கிறது மற்றொரு தகவல்.