Published:Updated:

அன்னிய முதலீடு: உத்தரவாதம் அளிக்க கருணாநிதி மறுப்பு!

 அன்னிய முதலீடு: உத்தரவாதம் அளிக்க கருணாநிதி மறுப்பு!
அன்னிய முதலீடு: உத்தரவாதம் அளிக்க கருணாநிதி மறுப்பு!
 அன்னிய முதலீடு: உத்தரவாதம் அளிக்க கருணாநிதி மறுப்பு!

சென்னை:  சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடை அனுமதிக்கும் விவகாரத்தில, காங்கிரஸ் கட்சியின் டெல்லி மேலிட தூதராக  கருணாநிதியை சந்தித்துப் பேசிய குலாம் நபி ஆசாத்திடம் ஆதரவு தருவது பற்றி கருணாநிதி எந்த உறுதியும் அளிக்கவில்லை என்று தெரிகிறது.

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு அனுமதிக்கு எதிர்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நடைபெறும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் அன்னிய முதலீடு விவகாரம் குறித்து வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தவேண்டும் என்று பா.ஜனதாவும் கூறிவருகிறது.
 
இந்நிலையில் அன்னிய முதலீடு விவகாரம் தொடர்பாக திங்கட்கிழமையன்று டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கிடையே ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சிகளிடையே அன்னிய முதலீட்டு ஆதரவை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஞாயிறன்று காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதி குலாம் நபி ஆசாத் திமுக தலைவர் கருணாநிதியை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
 
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  குலாம் நபி ஆசாத்," சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு குறித்து திமுக கட்சி பல கருத்துக்களை கொண்டுள்ளது..மத்திய அரசு அன்னிய முதலீடு குறித்து விளக்கியதை தொடர்ந்து மாநில அரசுகளும் மற்ற அரசியல் கட்சிகளும் இதை புரிந்துகொண்டுள்ளன என்று நான் கருணாநிதியிடம் கூறியுள்ளேன்.
 

##~~##
சில்லரை வணிகத்தை நடைமுறை படுத்துவதில் நிறைய தடைகள் இருக்கின்றன. ஏனெனில் அதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று திமுக தலைவர் கூறினார். எனவே இதை நடைமுறைப் படுத்த வேண்டுமென திமுகவையோ மற்ற மாநில அரசுகளையோ மத்திய அரசு கட்டாயப்படுத்தாது. சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு குறித்து கூட்டணிக் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை பெற மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென கருணாநிதி அப்போது கேட்டுக்கொண்டார்.
 
இன்னும் ஒரிரு நாட்களில் கூட்டணி கட்சிகளிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அப்போதுதான் அன்னிய முதலீடு குறித்த அவர்களின் கருத்துக்களை கேட்டறிய முடியும் என்று அவரிடம் நான் உறுதியளித்தேன்" என்றார், 
இவ்வாறு அவர் கூறினார்.

இப்போதைக்கு கைவிரிப்பு

இதனிடையே கருணாநிதியுடன் குலாம் நபி ஆசாத் நடத்திய ஆலோசனையின்போது, அவரிடம் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடுக்கு அனுமதி அளிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு தருவது பற்றி கருணாநிதி எந்த உறுதியும் அளிக்கவில்லை என்று தெரிகிறது. அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை மத்திய அரசு எடுத்தபோது கூட்டணி கட்சிகளை ஆலோசித்து முடிவு எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதன் காரணமாகவே கருணாநிதி இப்போது கூட்டணிக் கட்சியினர் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்குமாறு கூறியதாக தெரிகிறது.

கடைசியில் கசப்புடன்  ஆதரவு?

கருணாநிதி அன்னிய நேரடி முதலீடுக்கு ஆதரவளிக்க உத்தரவாதம் தர ம்றுத்துவிட்டபோதிலும் , இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தப்படும் பட்சத்தில் கடந்த காலங்களைப் போன்றே கடைசி நேரத்தில் கசப்புடன் ஆதரவளிப்பதாக கூறவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.


 
.