Published:Updated:

“பின்னாடி ஏதோ தூண்டுதல் இருக்கு!”

“பின்னாடி ஏதோ தூண்டுதல் இருக்கு!”

பெருமழை வெள்ளத்தோடு அ.தி.மு.க-வின் மானமும் அடித்துச் செல்லப்பட்டுவிடும் போல! அத்தனை அட்ராசிட்டிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் அ.தி.மு.க தொண்டர்கள். இந்த நிலையில், கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளர், ஆவடி குமாரைச் சந்தித்துப் பேசினேன்.

“பின்னாடி ஏதோ தூண்டுதல் இருக்கு!”

‘‘செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்தது தப்புனு குற்றம் சொல்றாங்களே... அதைத் திறக்கலைனா, சென்னை மட்டுமல்லாது மற்ற ஊர்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும். ஏரியும் உடைந்து போயிருக்கும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததனாலதான் மக்களும், ஏரியும் காப்பாற்றப்பட்டிருக்கு. ‘மக்களுக்கு முன்னெச்சரிக்கை கொடுக்கலை’னு சொல்றதும் தப்பு. அப்படி, முன்னெச்சரிக்கை கொடுக்காம இருந்திருந்தா, ஏரளமான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும். ‘ஏரியைத் தாமதமாகத் திறந்து விட்டதுதான் வெள்ளத்துக்குக் காரணம்’னு இன்னொரு தரப்பு சொல்லுது. ஏரியைத் திறக்கும் முன், சென்னைக்குப் பக்கத்துல இருக்கும் மற்ற மாவட்டங்களுக்கும் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்யணும். இல்லைனா, அந்த மாவட்டங்களும் பாதிக்கப்படும். சென்னையின் இயற்கைப் பேரிடரைப் பொறுத்தவரை, நாள்தோறும் அம்மாவின் கவனத்துக்கு வந்த செய்திகளை உடனுக்குடன் செய்தித் துறை மூலமா, ஊடகங்களுக்கு சொன்னார். அவங்கதான் வெளியிடலை. முக்கியமா, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 24 மணி நேரத்தில் 22 மணி நேரம் கண்ணும் கருத்துமாக தகவல்களைப் பறிமாறிக்கிட்டுதான் இருந்தாங்க!’’ என்று ஆரம்பித்தார் ஆவடி குமார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘அப்போ, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுனு சொல்றீங்களா?”

‘‘ஆமா, வெள்ளம் தமிழகத்தை நோக்கி வரும்போதே மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை அனுப்பிட்டாங்க. அவங்களுக்கும் மேலே ஒரு சிறப்புக்குழு அமைச்சாங்க. இது சென்னைக்கு மட்டுமில்ல, எல்லா மாவட்டங்களுக்கும் அமைக்கப்பட்டது. தேவையான இடங்களில் அமைச்சர்களும் அனுப்பப்பட்டாங்க. செம்பரம்பாக்கம் திறக்கப்பட்ட அதே நேரத்தில், கனமழை கொட்டினதுதான் இத்தனை பாதிப்புக்கும் காரணம். கடலூர்ல எந்த ஏரியைத் திறந்துவிட்டாங்க, அத்தனை பாதிப்புகள் வர? இது இயற்கைப் பேரிடர் தம்பி. இதனால மக்களின் உடைமைகளுக்குப் பேரிழப்பு என்பதை நாங்க ஏத்துக்கிறோம். ஆனா, உயிரிழப்புகள் இல்லை. ஏன்னா, புரட்சித்தலைவி அம்மாவுக்கு மக்களோட உயிர்களைக் காப்பாத்துறதுதான் நோக்கம். அதுல நாங்க வெற்றி பெற்றிருக்கோம்.’’

‘‘மத்தவங்க நிவாரணப் பொருட்களின் மீது ‘அம்மா’ ஸ்டிக்கர்களை ஒட்டினது தப்பு இல்லையா?”

‘‘எந்த இடத்துலேயும் தனியார் நிறுவனங்களோட பொருட்கள்ல ‘அம்மா’ ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டிய அவசியம் அ.தி.மு.க-வுக்குக் கிடையாது. நாங்க, அப்படிப் பண்ணவும் இல்லை. அரசாங்கத்தை நேரடியா எதிர்க்க முடியாதவங்கதான், ‘போட்டோஷாப்’ மூலமா இது போன்ற செயல்களைச் செய்றாங்க. இது மட்டுமா? சென்னையில பல பில்டிங் இடிஞ்சு விழுற மாதிரி, குலுங்குற மாதிரியெல்லாம் பரப்பினாங்களே... எல்லாம் ‘ஃபேக் ஐ.டி’ உருவாக்கி பரப்பி விடுகிற விஷயங்கள். அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்பட்ட சில குழுக்களோட வேலைதான் எல்லாம்!’’

‘‘நடிகர் சித்தார்த், ‘வாகனங்களில் பேனருடன் வர வேண்டாம். தாக்கப்படுவீர்கள்!’னு கடலூர்ல இருந்து நேரடி அனுபவத்துல எழுதியிருந்தாரே?’’

‘‘அ.தி.மு.க-வினரால் தாக்கப்படுவீர்கள்னு அவர் சொல்லலையே? அ.தி.மு.க-வினர் அப்படி நடந்துகொள்ள அம்மா ஒருபோதும் அனுமதிக்க மாட்டாங்க. தவிர, என்கூட விவாத நிகழ்ச்சியில கலந்துக்கிட்ட ஒருத்தர் ‘பொருட்களை மக்களுக்குக் கொடுக்கும்போது சில பேர் வந்தாங்க, வேலை பார்த்தாங்க, போட்டோ எடுத்துக்கிட்டாங்க. ஆனா, மறுநாள் அது அவர்களுடைய கட்சி சார்பாக செய்த உதவின்னு பத்திரிகைகள்ல செய்தி வந்தது’னு வருத்தத்தோட சொன்னார். பல இடங்களில் பா.ம.க-வினரும், சில இடங்களில் தி.மு.க-வினரும்தான் இப்படிச் செஞ்சுருக்காங்க!’’

‘‘இந்தப் பேரிடரில் நெட்வொர்க் வேலை செய்யாததுக்கும் எதிர்கட்சிகள்தான் காரணமாமே?”

‘‘முன்னாள் தொழில்நுட்பத் துறை அமைச்சர்களால் பலன் பெற்ற சில தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், தங்களோட சேவையை எந்த வித முன்னறிவிப்பும் இல்லாம கட் பண்ணிட்டாங்க. ‘இந்தக் காரணத்துக்காகத்தான் துண்டிச்சோம்’னு இதுவரைக்கும் அவங்ககிட்ட இருந்து ஒரு பதிலும் இல்லை. இதுக்குப் பின்னாடி, யாருடைய தூண்டுதலோ இருக்கு. அவங்க யாருன்னு கண்டுபிடிக்கணும்!’’

‘‘அமைச்சர்கள் நிவாரணம் கொடுக்கும்போது ‘அம்மா’ படத்தைக் காட்டியது?”

“பின்னாடி ஏதோ தூண்டுதல் இருக்கு!”

‘‘பொதுவா, அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு நடக்கிற எல்லா நிகழ்ச்சிக்கும் ‘அம்மா’ படத்தைப் பிடிச்சுக்கிட்டுதான் உதவிகள் பண்ணியிருக்கோம். இதையும், அந்தக் கண்ணோட்டத்துலதான் பார்க்கணும். யாருடைய பொருளுக்கோ நாங்க ‘அம்மா’ படத்தைத் தூக்கிக்கிட்டு நிற்கலை. ஓ.பி.எஸ்-ல இருந்து, கடைநிலை அமைச்சர் வரை எல்லோரும் பம்பரமா சுற்றி உதவிகள் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. ஆனா, கனமழை துவங்கியிருந்த நவம்பர் 27-ம் தேதியில இருந்து, டிசம்பர் 3-ம் தேதிவரை ஸ்டாலின் சென்னையிலேயே இல்லையே... முன்கூட்டியே தெரிஞ்சும் அரசு துரிதமாக செயல்படவில்லைனு அ.தி.மு.க-வைக் குற்றம் சொல்றவர் ஏன் முன்கூட்டியே சென்னையை விட்டுப் போனார்? அவருக்கெல்லாம் முதலமைச்சரைப் பார்த்து அ.தி.மு.க அமைச்சர்களைப் பார்த்துப் பேசத் தகுதி இல்லை!’’

‘‘வருகிற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க ஆட்சியைப் பிடிக்கிறது கஷ்டமா, ஈஸியா?”

‘‘அ.தி.மு.க-வை எதிர்க்கிறதுக்கு அல்லது தேர்தலில் நேர்மையாக சந்திக்கிறதுக்கான ஆற்றலைப் பெற்ற கட்சிகள் தமிழகத்துல கிடையாது. எல்லாமே உதிரிக் கட்சிகள் ஆகிவிட்டன. எதிர்க்கட்சிகளுக்கு உரிய இடம் தமிழ்நாட்டில் காலியாதான் இருக்கு. இந்த இடத்தைப் பிடிக்கத்தான் எல்லாக் கட்சிகளும் போராடிக்கிட்டு இருக்காங்க. எல்லாமே ‘ஆளும்கட்சி ஆகிவிடலாம்’ என்ற நம்பிக்கையில் இல்லை. ‘எதிர்க்கட்சி ஆகிவிட வேண்டும்’ என்ற எதிர்பார்ப்பில் மட்டும்தான். மக்கள் அ.தி.மு.க மேல அதிருப்தியோட இருக்கிற மாதிரி ஒரு பிம்பத்தை தங்களோட தொலைக்காட்சிகள்ல காட்டி, மிகைப்படுத்தப்பட்ட செய்திகளைச் சொல்றாங்க. இதனால ஒரு பயனும் கிடையாதுனு வர்ற தேர்தல்ல தெரியும்!’’

பார்க்கத்தானே போறோம்!

- கே.ஜி.மணிகண்டன், படங்கள் : தி.குமரகுருபரன்