Published:Updated:

எங்கே எங்கள் தலைவன்?

தேடும் தமிழகம்ப.திருமாவேலன்

எங்கே எங்கள் தலைவன்?

தேடும் தமிழகம்ப.திருமாவேலன்

Published:Updated:

ல்லா சொற்களிலும் அரசியல் இருக்கிறது’ என்றார் லெனின். உண்மைதான், மழை என்ற சொல்லில் எவ்வளவோ அரசியல் இருக்கிறது!

`துப்பாக்கியின் குழலில் இருந்து அரசியல் அதிகாரம் பிறக்கிறது’ என்றார் மாவோ. தமிழ்நாட்டு மக்களிடம் இப்போது கேட்டால் `மழையில் இருந்து மகத்தான அரசியல் விளைந்துள்ளது’ எனச் சொல்வார்கள்!

`எனக்கு நூறு இளைஞர்களே தேவை’ என்றார் விவேகானந்தர். இதோ நூற்றுக்கணக்கான இளைஞர்களை மழை அடையாளம் காட்டி விட்டது!

எங்கே எங்கள் தலைவன்?

`ரத்தத்தைத் தாருங்கள்; நான் உங்களுக்கு விடுதலையை வாங்கித் தருகிறேன்’ என்றார் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ். ரத்தம் சிந்த பல நூறு பேர் தயார் என்பதை மழைக்காலம் உணர்த்திவிட்டது!
இயற்கைக்கு எல்லா சக்தியும் உண்டு. மீண்டும் மீண்டும் அது `நானே எல்லாமுமாக...’ என்பதை நிரூபித்துக்கொண்டே இருக்கிறது. மேட்டைப் பள்ளமாகவும் பள்ளத்தை மேடாகவும் ஆக்க வல்லமை படைத்த இயற்கைதான் அப்பாவிகளுக்குள் இருக்கும் தலைவர்களையும், அரசியல்வாதிகளுக்குள் ஒளிந்திருக்கும் ‘அடப்பாவிகளையும்’ அடையாளம் காட்டிவிட்டு அமைதியாகக் கடலுக்குள் போய்விட்டது.

`எந்தக் கூவத்தையும் நான் சுத்தம் செய்வேன்’ எனச் சொல்லும் இயற்கையால் முடியாதா... தமிழ்நாட்டு அரசியல் கூவத்தையும் சுத்தம் செய்ய? இயற்கை கேட்கிறது - `தமிழ்நாட்டுக்குத் தலை எது... தலைமை யார்... தலைவன் எங்கே?’

மழை போட்டுவிட்டுப் போன வினா விதை இவை!

வானத்தில் இருந்து வருவதாகச் சொல்லப் பட்டாலும் இறைத்தூதர்கள் எல்லோருமே மண்ணில் மலர்ந்தவர்கள்தான். ரோம் சாம்ராஜ்ஜியத்தின் அடிமை முறைக்கு எதிரான எழுச்சியின் குரலே இயேசு. இனக் குழுக்களுக்கு இடையே ஒற்றுமையைப் போதிக்க வந்தவரே நபிகள் நாயகம். மனிதனைப் பிரித்தாளும் நெறிகளுக்குத் தீயிட வந்தார் புத்தர். உயிர்கள் அனைத்தும் உயிரே என்பதை உணர்த்த வந்தார் மகாவீரர். `தெய்வம் மனுஷ்ய ரூபேண’ என்கிறது சம்ஸ்கிருதம். மனிதரூபத்தில்தான் தெய்வமே வரும் எனும்போது, இந்த மனிதர்களில் இருந்துதான் தலைவனும் வர வேண்டும்; வருவான்!

உணவுப் பஞ்சத்தால் மக்கள் சாவார்கள் என்பதற்கு வரலாற்றில் ஏராளமான உதாரணங்கள் உண்டு. தலைமைப் பஞ்சத்தாலும் உயிருக்குத் தத்தளிப்பார்கள் என்பதை உணர்த்தியது சென்னை மழை. ஜெயலலிதா தலைமையிலான அரசாங்கம் இருந்தது. ஆனால், இருக்கிறதா? 50 ஆயிரம் கனஅடி தண்ணீரை அர்த்த ராத்திரியில் திறந்துவிட்டால்... கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் நிலப்பரப்பில் ஏற்படும் உயிர்வதையைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் ஒரு நிர்வாகம் செயல்படுமானால், அது நீர்மூல அரசாகத்தான் இருக்க முடியும். பொறுப்பில் இருந்த காலத்தில் ஒரு கை விரல்கள் மடக்கிச்சொல்லும் அளவுக்குக்கூட ஒரு சாதனையும் செய்யாத தகுதியற்ற மனிதர்கள், எதற்கும் தலையாட்டுவார்கள் என்ற ஒரே காரணத்துக்காகப் பதவி நீட்டிப்பு பெற்று அந்திமக்காலத்து வாய்ப்பை விட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தயங்கித் தயங்கிச் செயல்பட்ட தால்தான், தலைநகர் தத்தளித்தது. ஓர் அரசு அதிகாரி கவனக்குறைவோடு செயல்பட்டால், அதன் மூலம் இழப்பு ஏற்பட்டால் அதற்குத் தண்டனையே உண்டு... சில நாடுகளில். இங்கு கவனிக்காதவர் கையில் நிர்வாகம் இருக்கும்போது, யாரைக் குறை சொல்வது? முன்னாள் டி.ஜி.பி நட்ராஜ் விவகாரத்தில் ஆடிய அபஸ்வர ஆட்டங்களில் அம்பலம் ஆகியதே சிதம்பர ரகசியங்கள்.

எங்கே எங்கள் தலைவன்?

எத்தனை வாட்ஸ்அப் ஆடியோக்கள் விட்டாலும் மக்கள் மனதில் பதிந்துபோய்விட்ட வெறுப்புப் பள்ளத்தை இட்டு நிரப்ப முடியாது. வாட்ஸ்அப்பில் பேசிவிட்டாலே மக்கள் நம்பி விடுவார்கள் என்பதும் மாயையே. வாட்ஸ்அப்பில் என்ன பேசுகிறீர்கள் என்பதே முக்கியம் ‘எனக்கு என்று யார் இருக்கிறார்கள்... குடும்பமா... நீங்கள்தான் குடும்பம்... அம்மா என்று சொன்னால் போதும்’ என்பதுபோன்ற ‘நாதா’ காலத்து வசனங்களின் காலம் முடிந்துவிட்டது.

இதைப் போல ஓராயிரம் வசனங்களைப் பேசிவிட்டு ஓய்ந்துபோய் உட்கார்ந்திருக்கிறார் கருணாநிதி.

‘தமிழர்களே... தமிழர்களே! நீங்கள் என்னைக் கடலில் தூக்கி எறிந்தாலும் கட்டுமரமாக மிதப்பேன். நீங்கள் அதில் ஏறிப் பயணம் செய்யலாம்! தமிழர்களே... தமிழர்களே! நீங்கள் என்னைத் தரையில் தூக்கி எறிந்தாலும் சிதறுதேங்காயாகச் சிதறுவேன். நீங்கள் அதை எடுத்து உண்டு பசியாறலாம்!’ என, 80-களில் கரகர தொண்டையால் முகம்கூடத் தெரியாத வானொலிப் பெட்டிகளில் கருணாநிதி பேசிய வசனம், பலரது கண்களில் செயற்கை மழையை உருவாக்கியது. ‘வீழ்வது நாமாக இருப்பினும்; வாழ்வது தமிழாக இருக்கட்டும்’, ‘இருப்பது ஓர் உயிர், அது போகப்போவது ஒருமுறை; அது இந்த நாட்டுக்காகப் போகட்டுமே!’ என்பதுபோன்ற வசன வரிகளே 90 வயது தாண்டிய கருணாநிதியின் இருப்புக்குக் காரணம்.

‘மிஸ்டர் கட்டுமரம், வேளச்சேரிக்கு வரவும். தண்ணீரில் தத்தளிக்கிறோம்’ என மீம்ஸ் தயாராகும் யுகத்தில், கருணாநிதியால் இன்னொரு முறை அதைச் சொல்ல முடியுமா?

15 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் மனதில் சிந்தனை மாற்றம் வருகிறது என்பார்கள். இப்போது 15 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றம் வந்துவிடுகிறது. தமிழ்நாட்டுத் தலைவர்கள், மாறவில்லை; இந்த மாற்றத்தை உணரவும் இல்லை. இந்த மாற்றத்தை உணர்த்தவே அடுத்த தேர்தல் வருகிறது.

ஆனால், இந்தத் தேர்தலும் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்குமான தேர்தல்தான். அந்தக் காலத்தில் இரண்டு, மூன்று தீபாவளிகளைக் கடந்து சில திரைப்படங்கள் ஓடியதாகச் சொல்வார்கள். 30 ஆண்டுகளாக கருணா - ஜெயா சினிமாதான் தமிழ்நாட்டில் ஓடிக் கொண்டிருக்கிறது. புகார் சொன்னாலும் ‘போர்’ அடித்தாலும் இவர்கள் நடிப்பே பிடித்திருக்கிறது. சமீபகாலமாகத்தான் சலிப்பு ஏற்பட்டுவருகிறது. புதிய கதாநாயகர்கள் வரவில்லை. வந்தவர்களும் திருதராஷ்டிர ஆலிங்கனத்தால் இவர்கள் இருவராலும் இழுத்து அரவணைக்கப்பட்டு, முதுகெலும்பு ஒடிக்கப்பட்டார்கள். விஜயகாந்த், வைகோ, ராமதாஸ்... என!

இவர்கள் இருவருக்குமான மாற்று யோசனைகள் மரணித்ததுதான் சமகால தமிழ்நாட்டு அரசியலே!

தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு மாற்றாக காங்கிரஸை 1989-ம் ஆண்டு தேர்தலில் கொண்டுவந்து நிறுத்தியவர் கருப்பையா மூப்பனார். ராஜீவ் காந்தியை 20-க்கும் மேற்பட்ட முறை தமிழ்நாட்டுக்கு அழைத்துவந்தார். நான்கு முனைப் போட்டி இருந்த தேர்தல் அது. தேர்தலில் வெற்றிபெற முடியாவிட்டாலும் மூப்பனாரின் மூவ் தொடர்ந்திருக்க வேண்டும். காங்கிரஸுக்கே உரித்தான கழுத்தறுப்பு அரசியல், மூப்பனாரைப் புறந்தள்ளுவதன் மூலமாக அ.தி.மு.க-வின் நிரந்தர அடிமையாக நரசிம்மராவ் காலத்தில் கரைந்துபோனது. மாற்று என்ற காங்கிரஸின் கனவும் மரணித்தது.
1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ம.தி.மு.க-வும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அமைத்தது மாற்று அணி. மக்கள் மத்தியில் வெறுத்து ஒதுக்கப்பட்ட அன்றைய அ.தி.மு.க ஆட்சி மீதான கோபம், மூன்றில் ஒரு பங்கு மாவட்டச் செயலாளர்கள் வெளியேறியதால் தி.மு.க-வில் ஏற்பட்ட சரிவு... ஆகிய இரண்டும் இந்தக் கூட்டணிக்குக் கைகொடுத்திருக்க வேண்டும். ஆனால், இறுதி நேரத்தில் காங்கிரஸில் இருந்து வெளியேறிய மூப்பனாரை தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கவைத்த பத்திரிகையாளர் சோ, அவருக்கு ரஜினியின் ஆதரவையும் வாங்கிக் கொடுத்து, மூன்று பேரும் அறிவாலயத்தை முற்றுகையிட்டு இறங்கிக்கொண்டிருந்த தி.மு.க பலூனுக்குக் காற்றடித்தார்கள். மரணித்தது ம.தி.மு.க-வின் மாற்று அணி.

அடுத்து விறுவிறுவென வந்தார் விஜயகாந்த். ‘தி.மு.க., அ.தி.மு.க என்ற இரண்டு கட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை’ என்றார். இரண்டையும் சம தூரத்தில் வைத்து விமர்சித்தார். `மக்களோடும் தெய்வத்தோடும் மட்டும்தான் கூட்டணி’ என்றார். அவர் மட்டுமே வெற்றி பெற்றாலும் 8 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றார். அந்தக் கற்பும் 2011-ம் ஆண்டில் முடிந்துபோனது. கருணாநிதியை வீழ்த்துவதற்காக ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தார். வரும் தேர்தலில் ஜெயலலிதாவை வீழ்த்துவதற்காக கருணாநிதியுடன் அணி சேரலாம்; சேராமலும் போகலாம்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க., தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க... சேர்ந்த ஓர் அணி அமைந்தது. மோடி கவர்ச்சியும் அப்போது இருந்தது. தி.மு.க., அ.தி.மு.க இல்லாத ஓர் அணி என்ற வரிசையில், அதிகப்படியாக சுமார் 70 லட்சம் வாக்குகளை வாங்கியது. நான்கு கட்சி களுமே நவக்கிரகங்கள்போல ஒன்றுக்கொன்று ஒட்டாமல் இருந்ததால், தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே முறுக்கிக்கொண்டது. ‘பா.ம.க எங்களோடு இருக்கிறது, தே.மு.தி.க எங்களோடு இருக்கிறது' என்று தமிழிசையும் பொன்னாரும் சொல்கிறார்களே தவிர, ராமதாஸும் விஜயகாந்தும் அதை ஒப்புக்கொள்வது இல்லை. எனவே, அதுவும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடை பழகவே இல்லை.

எங்கே எங்கள் தலைவன்?

இப்போது வைகோ மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடங்கியிருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கொண்ட மக்கள் நலக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த பல தேர்தல் களிலும் தி.மு.க., அ.தி.மு.க தோளில் உட்கார்ந்து பயணப்பட்ட கட்சிகள் இவை. பல்லக்கிலேயே ரொம்ப நேரம் உட்கார்ந்திருந்தாலும் முதுகு வலிக்கும் அல்லவா? அதனால்தான் சோம்பல் முறித்து நடக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க-வைப் புறக்கணிக்கும் சிந்தனையில் இந்தக் கூட்டணியின் தலைவர்களுக்கு இருக்கும் ஆர்வமும் அக்கறையும் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் குறைவாகத்தான் இருக்கிறது. யார் யார் நம்மோடு இறுதி வரை இருப்பார்கள் என்ற சந்தேகம் அந்த நான்கு தலைவர்களுக்குமே இருக்கிறது.

இதில் பா.ம.க தலைவர் ராமதாஸ், அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து நாடு முழுக்கப் பிரசாரம் செய்து வருகிறார்.  `கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்பவர் களோடுதான் கூட்டணி’ எனக் கொம்பு சுற்றுகிறார் இளங்கோவன். பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர்கள், விஜயகாந்தையும் அன்புமணியையும் சந்தித்துவருகிறார்கள்.

இவைதான் தி.மு.க.வு-க்கும் அ.தி.மு.க-வுக்கும் மாற்றாக நடக்கும் காட்சிகள். மாற்று என்பது எது, மாற்றுக் கூட்டணியா, மாற்று அரசியலா... இதுதான் முக்கியக் கேள்வி. மாற்றுக் கூட்டணியைச் சொல்பவர்கள் ஏற்கெனவே கருணாநிதி, ஜெயலலிதாவுடன் கைகோத்தவர்கள். எதிர்காலத்தில் கைகோக்க மாட்டார்கள் என நம்பவும் முடியாதவர்கள். மக்கள் மத்தியில் இந்த மாற்றுத் தலைவர்களுக்கு மரியாதை இல்லாமல் போவதற்குக் காரணம் இதுதான். இங்கு கருணாநிதியை வீழ்த்த, ஜெயலலிதாவை வீழ்த்த நினைப்பவர்கள் எல்லாம் இன்னொரு கருணாநிதியாக, இன்னொரு ஜெயலலிதாவாக ஆக முயற்சிக்கிறார்கள். உள்ளத்தில் அப்பழுக்கற்ற, நேர்மையான, எளிமையான, வஞ்சகம் அற்ற மாற்று அரசியல் மட்டுமே கருணாநிதி - ஜெயலலிதாவுக்கு மாற்றாக அமைய முடியும்.

கருணாநிதியும் ஜெயலலிதாவும் யாரிடம் இருந்தெல்லாம் தேர்தல் நிதி வசூல் செய்தார்களோ,  அவர்களிடம் இருந்து தேர்தல் நிதி வசூல்செய்து... வேட்பாளர்களாகப் போட்டியிடுபவர்கள் இந்தத் தொகுதியாக இருந்தால் இந்தச் சாதியைச் சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டு.... இத்தனை கோடியைச் செலவழிக்கத் தகுதி வாய்ந்தவராக இருந்தால்தான் தொகுதி தரப்படும் என நிபந்தனை போட்டு... இரண்டு மணி நேர மாநாட்டுக்காக பல கோடி  ரூபாயைப் பாழாக்கி....பணக்காரன் மட்டுமே பொறுப்புக்கு வர முடியும் என்ற நிலைமையை, எல்லாக் கட்சிகளும் உருவாக்கிவைத்திருக்கிறதே... தி.மு.க., அ.தி.மு.க-வில் இருந்து நீங்கள் எதில் மாறுபட்டு உள்ளீர்கள்?

இன்னும் சிலர், ‘திராவிடக் கட்சிகளை வீழ்த்துவோம்’ என்பதையே மாற்று அரசியலாக முன்வைக்கிறார்கள். கருணாநிதி தனது கட்சியின் பெயரை `தமிழர் முன்னேற்றக் கழகம்' என்றும், ஜெயலலிதா தனது கட்சியின் பெயரை `அண்ணா தமிழர் முன்னேற்றக் கழகம்' என்றும் மாற்றிவிட்டால் ஒப்புக்கொள்வார்களா? மார்வாடிகளிடம் வசூல் செய்யாமல் தமிழ் முதலாளிகளிடம் வசூல் செய்தால், அது தூய்மை அரசியல் ஆகிவிடுமா? வசூலில் மார்வாடி வசூலுக்கும் மகாலிங்கம் வசூலுக்கும் வித்தியாசம் இருக்கிறதா?

எல்லா இசங்களும் சாயம் போய்க் கிடக்கின்றன. அதனால்தான் கொடிகளைக் காட்டி அழைக்கும்போது வராதவர்கள் எல்லாம், வெறும் கையைக் காட்டும்போது, கண்ணீரைப் பார்க்கும்போது கூட்டமாக வருகிறார்கள். இந்தக் கூட்டம் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை கட்சிகள் உண்மையாக உட்கார்ந்து மறுபரிசீலனை செய்தாக வேண்டும். ஆடம்பர, ஆர்ப்பாட்ட, போர்ப்பாட்டு அரசியல் காலம் முடிந்துவிட்டது. அமைதியான, ஆக்கபூர்வமான, தங்களால் இயன்ற விஷயங்களைச் சொல்லும் அரசியல் காலம் தொடங்கிவிட்டது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாவிட்டாலும், அதற்கு நியாயமான காரணம் சொன்னால் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் காலம் இது. `மேடையில் நான் உட்கார்ந்திருப்பேன், நான் சொல்வதை நீ கேட்க வேண்டும்’ என்ற காலம் முடிந்துவிட்டது. கருணாநிதிக்கு, தொண்டன் ஃபேஸ்புக்கில் செய்தி அனுப்புகிறான். கருணாநிதி பதில் சொல்கிறார். பதில் சொன்னால்தான்,  அவன் அடுத்து அவரை மதிப்பான். ஒரு கட்சியின் கூட்டம் கேட்பதைவிட, இரண்டு மூன்று கட்சியினர் சேர்ந்து விவாதிக்கும் மேடைகள் ஊடகங்களில் வரவேற்பைப் பெறுவதற்கும் அதுதான் காரணம். மாற்றுச் சிந்தனைகள் கொண்டவர்கள் பேசுவதையும் கேட்கும் பக்குவத்தை காலம் உருவாக்கிக் கொடுத்துள்ளது.

இதனுடைய வளர்ச்சியாக செல்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும், யாரையும் எந்தத் தலைவரையும் கேள்வி கேட்கலாம்; விமர்சனம் செய்யலாம்; கேட்பாரே இல்லாமல் கேலி செய்யலாம் என்ற கட்டற்ற சுதந்திரமும் வந்துவிட்டது. 

ஜெயலலிதாவின் ஆடியோ ஆயிரம் வடிவங்களில் வாட்ஸ்அப்பில் உலா வருகிறது. ‘இவ்விடம் அரசியல் பேசாதீர்கள்’ என்று எந்த இடத்திலும் எழுதிப் போட முடியாது. எவ்விடங்களிலும் அரசியலே பேசப்படுகிறது. மக்கள் அரசியல் விழிப்புஉணர்வு பெறவேண்டும் என்று எதிர்பார்த்த காலத்தில், அளவுக்கு மீறிய விழிப்புஉணர்வு தலைதூக்கிவருவதாகவே தெரிகிறது.

இந்தச் சூழ்நிலை உண்மையான தலைமைக்கான அடையாளங்களைச் சொல்கிறது. வர்த்தகச் சூதாடிகளிடம் வசூல்செய்து கட்சி நடத்தாத தலைவன் யாரோ, அவரே ஆட்சியை நேர்மையாக நடத்த முடியும். ஓட்டு அரசியலுக்காக சாதி மேலாண்மைகளைத் திருப்தி செய்யாதவர் யாரோ, அவரே ஆட்சியை அறம் குறையாமல் நடத்த முடியும். மதம் அவரவர் தனிப்பட்ட விருப்பம் சம்பந்தப்பட்டது என்ற புரிதல் உள்ள தலைமையாக அது இருக்க வேண்டும். கல்வியும் சுகாதாரமும் கூட்டுக் கொள்ளையின் தூண்டில் முள்ளாக ஆகிப்போனதைத் தடுக்கத் தயாராக உள்ள துணிச்சலான தலைமை வேண்டும். அரசாங்கத்துக்கு அரையணா பைசா குத்தகை கட்டிவிட்டு, பல்லாயிரம் கோடி மதிப்பிலான இயற்கை வளத்தை, பட்டப்பகலில் கொள்ளையடிக்கும் கும்பல்களிடம் இருந்து ஒரே நாளில் கைப்பற்றும் தலைமையாக அது அமைய வேண்டும். போலிக் கலாசாரக் காவலர்களாக இல்லாமல் பண்பாட்டு விழுமியங்களைப் பேணும் தலைமையாக அது அமைய வேண்டும். அப்படி ஒரு தலைமையை காலம் அடையாளம் காட்டத்தான் போகிறது.

எப்போதுமே இரண்டாம் இடத்தில் இருந்தவர்கள் முதல் இடத்துக்கு முன்னேறியது இல்லை. எங்கோ இருந்தவர்கள்தான் முதல் இடத்தைப் பெற்றுள்ளார்கள். பெரியாருக்குப் பக்கத்தில் இருந்த எத்தனையோ மலைகளைத் தாண்டித்தான், அண்ணா அந்த இடத்தைப் பிடித்தார். சத்தியமூர்த்திக்கும் ராஜாஜிக்கும் இடையில் எத்தனையோ பேர் இருந்தார்கள். ஆனால், தலைமை காமராஜருக்கே கிடைத்தது. திமு.க-வின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக இல்லாத கருணாநிதிதான் அந்தக் கட்சிக்கு 50 ஆண்டுகளாகத் தலைவர். மெடிக்கல் மந்திரி இல்லை என்று மறுக்கப்பட்ட எம்.ஜி.ஆர்-தான் மூன்று முறை முதலமைச்சர் ஆனார். ஜெயலலிதாவை வார்த்தையால் அவமானப் படுத்திய அத்தனை பேரும் அவரது அமைச் சரவையில் அமைச்சர்களாக ஆகிவிட்டார்கள். இவர்கள் எல்லோருமே தூரத்தில் இருந்து வேகமாக ஓடிவந்ததால் தலைவர் ஆனவர்கள்.

ஒருவர் ஓடி வருகிறார்... தூரத்தில் ஓடி வருவதால் நம் கண்ணுக்கும் தெரியவில்லை!

சுரேஷ் - வங்கி மேலாளர்:

எங்கே எங்கள் தலைவன்?

 `` `மாற்றம் வர வேண்டும்' என சோஷியல் மீடியாவில்தான் சொல்கிறார்கள். ஆனால், கள நிலவரம் எதிர்மாறாகவே இருக்கிறது. டெல்லி சின்ன ஊர். அங்கே தனிநபரை முன்னிறுத்தி ஆட்சியைப் பிடிக்கலாம். பல கோடிப் பேர் வாழும் தமிழ்நாட்டில் இது சாத்தியம் இல்லை!”

வெண்பா கீதாயன் - மாணவி:

எங்கே எங்கள் தலைவன்?

 ``இப்போது இருக்கும் அரசியல் கட்சிகள் மீது இளைஞர்களுக்குப் பெரிதாக நம்பிக்கை இல்லை. 49ஓ-வை அதிகமாக அழுத்துபவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள்தான். அவர்கள் சரியான தலைமையின் கீழ் தேர்தல் களத்தில் நின்றால், வெற்றி பெறலாம். இல்லை என்றால், அதே பழைய தலைமைதான்.’’

ராஜேஷ் - ஐ.டி ஊழியர்:

எங்கே எங்கள் தலைவன்?

``தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் என்று ஒன்றும் இல்லை; அப்படி ஒரு பிம்பம்தான் இருக்கிறது. இங்கு இருக்கும் கட்சிகளைத் தாண்டி ஒரு தலைவர் வருவது கடினம். வந்தாலும் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிப்பது அதைவிடக் கடினம். தனிநபர் ஆட்சியைப் பிடிப்பது சினிமாவில் நடக்கலாம். தமிழ்நாட்டில் நடக்காது.’’

செல்வ பிரபு - மருத்துவர்:

எங்கே எங்கள் தலைவன்?

``சகாயம் அரசியலுக்கு வந்து இளைஞர்களை வழிநடத்த வேண்டும். அவரோடு சேவை மனப்பான்மைகொண்ட இளைஞர்களும் தலைவர்களும் ஒன்று சேர வேண்டும். ஓர் அரசியல் மாற்றத்துக் கான புரட்சி வெடிக்க வேண்டும். அதை விட்டுட்டு திரும்பவும் தி.மு.க - அ.தி.மு.க-தான் ஆட்சிக்கு வரும் என்றால், தமிழ்நாட்டுக்குத் தலைவிதி அவ்வளவு தான்!’’

ஹேமாவதி - வீதி நாடகக் கலைஞர்

எங்கே எங்கள் தலைவன்?

 ``சகாயம் ஐ.ஏ.எஸ்-ஸை அரசியலுக்கு வரவேற்பது நல்லதுதான். ஆனால், அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு அவருக்கு செல்வாக்கு இல்லை. இப்போது உருவாகியிருக்கும் மக்கள் நலக் கூட்டணிக்கு சகாயம் போன்ற நேர்மையானவர்கள் ஆதரவு தர வேண்டும். அதுதான் நல்ல மாற்றத்தின் தொடக்கம்.’’

வெற்றிவேல் சந்திரசேகர்- இயக்குநர்

எங்கே எங்கள் தலைவன்?

``ஒருவரை வலுக்கட்டாயமாகத் தலைமைத் தாங்கச் சொல்லி அழைப்பது நமது அரசியல் கையாலாகாத்தனம். ஒரு டாக்டர், வழக்குரைஞர் அரசியலுக்கு வருவதுபோல சகாயம்கூட அரசியலுக்கு வரலாம். ஆனால், அவர்களை வற்புறுத்தி அழைக்கக் கூடாது.’’

உமர் - மாணவர்:

எங்கே எங்கள் தலைவன்?

``இரண்டு திராவிடக் கட்சிகளை விட்டால் தமிழ்நாட்டில் வேறு கட்சி ஆட்சியில் அமர முடியாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். மக்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் ஆட்சியில் அமர்த்த முடியும் என்பதை உணர்த்த, இந்தத் தேர்தலை நிச்சயம் பயன்படுத்த வேண்டும்.''

புனித பாண்டியன் - ஆசிரியர் `தலித் முரசு'

எங்கே எங்கள் தலைவன்?

 ``சமூகத்தை மாற்ற வேண்டும் என 1920-களில் பெரியார் கிளர்ந்து எழுந்தபோது ‘ஓர் அரசியல் கட்சியின் மூலம் அதை ஏற்படுத்த முடியாது. சாதி எதிர்ப்பு, சாதி ஒழிப்பு மூலம் மட்டுமே சமூக மாற்றம் சாத்தியம்’ என்றார்.

பெரியார் இன்றுதான் பெரிய ஐகான். ஆனால் அன்று எம்.ஜி.ஆர், மிகப் பெரிய ஃபோர்ஸ். `அவர் கை அசைத்தால் மக்கள் மயங்கிடுவாங்க’ எனச் சொல்லப்பட்டது. பெரியார் இறந்து 40 ஆண்டுகள் ஆகின்றன. எம்.ஜி.ஆர் இறந்து 28 ஆண்டுகளே ஆகின்றன. ஆனால் இன்று, பெரியார் நிற்கிறாரா... எம்.ஜி.ஆர் நிற்கிறாரா? அரசியல் கட்சிகளின் பலவீனம் இதுதான். பெரியார் அரசியல் கட்சி நடத்தினாரா... அடுக்குமொழி பேசினாரா? மக்கள் எவற்றை எல்லாம் நேசித்தார்களோ அவற்றை எல்லாம் கண்டித்தார். ஆனால், அவர்தான் இன்று நிற்கிறார். ஆம், பெரியாரிய அம்பேத்கரிய இயக்கங்கள்தான் இன்றைய அரசியலுக்கு மாற்று.’’

கொளத்தூர் மணி - தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

எங்கே எங்கள் தலைவன்?

``ஊழலை மட்டும் ஒழித்துவிட்டால் போதுமா? ஒடுக்கப்பட்ட, எளிய மக்களைப் பற்றி ஒருவரின் கருத்து எப்படி இருக்கிறது என்பதை வைத்துத்தான் தலைவரை முடிவுசெய்ய முடியும். ஒரு நல்ல மாற்றத்தை மக்கள் தேடுகிறார்கள் என்பது உண்மைதான். தி.மு.க-வின் மீது நிறைய விமர்சனங்கள் உண்டு. எந்தக் கொள்கையும் இல்லாத அ.தி.மு.க மற்றும் அதன் ஆட்சியின் மீதும் மக்களுக்கு வெறுப்பு உண்டு. ஆனால், நாம் இன்னும் அதிகாரமற்ற மாநில அரசுதான். இந்த அமைப்புக்குள் உட்கார்ந்துதான் மாற்றம் பற்றி பேசுகிறோம்.

மக்கள் நலக் கூட்டணி மாற்றத்தை முன்வைத்து வந்திருக்கிறார்கள். இப்போதுவரை அவர்களின் செயல்பாடுகள் சரி. தேர்தல் வெற்றிக்காக அவர்களோடு சேரக்கூடியவர்கள் யார் என்பதை வைத்தே அவர்களை முடிவுசெய்ய முடியும். உண்மையான திராவிட இயக்கம் இங்கு அழுத்தமான கொள்கையைப் பதிவு செய்திருக்கிறது. அந்தச் சிந்தனை உள்ளவர்கள்தான் மாற்றத்துக்குக் காரணமாக இருக்க வேண்டும்.’’