Published:Updated:

2015 டாப் 10 மனிதர்கள்

விகடன் டீம்

2015  டாப் 10 மனிதர்கள்

சென்னையும் கடலூரும் திடீர் மழை வெள்ளத்தில் மூழ்கியது. அத்தனை வெள்ளத்திலும் உயிர்த்துடிப்போடு இருந்தது நம் இளைஞர்களின் மனிதம். தம் உயிரையும் பணயம்வைத்து மக்களை மீட்ட எத்தனை நாயகர்களை இங்கே பட்டியலிட... ஆபத்து என்றதும் தங்கள் படகுகளோடு களம் இறங்கிய மீனவ இளைஞர்கள், எந்தப் பாதுகாப்பு சாதனங்களும் இல்லாமல் ஊரைச் சுத்தமாக்கிய துப்புரவுப் பணியாளர்கள், உணவு அளித்து உதவிய ஆயிரமாயிரம் தன்னார்வலர்கள், இன்னமும் நிவாரணம் செய்துகொண்டிருக்கிற ஈரமான இதயங்கள்... என ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு நாயகன் அவதரித்தான். கர்ப்பிணிப் பெண்ணைக் கரைமீட்ட யூனுஸ், சாக்கடையாகக் கிடந்த ஊரை சளைக்காமல் சுத்தம்செய்த இஸ்லாமிய அமைப்புகள், இரவு பகல் பாராமல் இளைஞர்களைத் திரட்டி உதவிகள் குவித்த இளைஞர்கள், உலகம் எங்கிலும் இருந்து வாரி வழங்கிய நிதி என, நாம் ஒவ்வொருவருமே ஹீரோதான். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கப் போய் விஷப்பூச்சி கடித்து இறந்துபோன இம்ரானின் தியாகம், நம் தமிழ் இளைஞர்களின் அர்ப்பணிப்பைச் சொல்லும் உதாரணம். ஊரைச் சுத்தம் செய்வதில் இறந்துபோன பழனிச்சாமியின் மரணம், துப்புரவுத் தொழிலாளர்களின் உழைப்பின் ஒரு துளி. இவர்கள்தான் இந்த ஆண்டின் மகத்தான மனிதர்கள்!

2015  டாப் 10 மனிதர்கள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மதுவிலக்கு வேண்டும் என எல்லாரும் குரல்கொடுக்க... தன் உயிரையே கொடுத்தவர் சசிபெருமாள். இவருடைய தியாகம், மதுவுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் தொடக்கப்புள்ளி. `என் பயணத்தின் முடிவு, என் கையில் இல்லை. எதையும் இழக்கத் தயாராக இருக்கும் 10 சத்தியாகிரகத் தியாகிகள் இருந்தால் பூரண மதுவிலக்கு சாத்தியம்’ எனச் சொல்லிவிட்டு குமரிப் போராட்டத்துக்குப் போன சசிபெருமாள், உயிரின்றிதான் வீடு திரும்பினார். இயற்பெயர் பெருமாள். சேலம் மாவட்டம், இடங்குனசாலை அருகே உள்ள மேட்டுக்காடுதான் சொந்த ஊர்.  8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். மகாத்மா காந்தியையும் காமராஜரையும் தலைவர்களாக ஏற்றுக்கொண்டவர். ஒரு சமயம் காங்கிரஸில் இருந்த பழைய நடிகர் சசிகுமாரை, தன் கிராமத்துக்கு அழைத்துவந்து கூட்டம் போட்டார். அவர் அந்தக் கிராமத்துக்கு வந்து போன ஒரு வாரத்திலேயே விபத்தில் இறந்துவிட, அந்தப் பாதிப்பில் தன் பெயரோடு சசியையும் சேர்த்து ‘சசிபெருமாள்’ ஆனவர். ‘உண்ணாமலைக்கடை’ டாஸ்மாக்கை மூடச் சொல்லி, சசிபெருமாள் போராட்டத்தைத் தொடங்கியபோதெல்லாம் ‘மூடிவிடுவோம்’ எனச் சொல்லி போராட்டத்தை அவ்வப்போது கைவிடவைத்த அரசு அதிகாரிகள், இறுதி வரை கடையை மூடவே இல்லை. இறுதிப் போராட்டமாக செல்போன் டவர் மீது ஏறிய சசிபெருமாளை, பிணமாகத்தான் இறக்கியது போலீஸ். தமிழ்நாட்டில் மதுவிலக்கு ஒழிப்பின் தந்தையாக, வருங்கால வரலாறு சசிபெருமாளை நினைவுகூரும்!

2015  டாப் 10 மனிதர்கள்

கடைக்கோடிக் கிராமத்துச் சிறுவன் ஒருவன், தமிழ் இசைக்கு இறைவன் ஆன கதை இவருடையது. இப்போதும் இளையராஜாவின் பாடல்கள் இல்லாமல் இந்தப் பூமியில் சூரியன் எழாது; விழாது. அத்தனை கோடித் தமிழர்களையும், அவர்தம் இதயங்களையும் இசைத்து அசைத்து இணைத்த மானுடன். தன் ஆயிரமாவது படத்துக்கு இசையமைத்து விட்டு, இதுவும் கடந்துபோகும் என்கிற புன்னகையுடன் போகிற புதிர் இவர். இளையராஜா விரல் தொட்டால், ரயில் கூவல் சோகம் சொல்லும்; மழைச் சாரல் மனதை மீட்டும். இளையராஜாவின் பாடல்கள், தமிழர்களுக்கு வெறும் பாடல்கள் அல்ல; வெவ்வேறு தருணங்களின் நினைவுகள். பகலில் பலநூறு பாடல்களை நம் செவிக்குள் திணிப்பதில் சேனல்கள் போட்டிபோட்டாலும், இரவில் இதயத்தில் இறங்குவது ராஜாவின் இசை மட்டும்தான். மிகச் சில நிமிடங்களுக்குள் வெவ்வேறு உலகங்களுக்குள் உலவவிடும் மாயாஜாலம் இளையராஜாவின் இசை. ராஜாவின் மெட்டுக்களைத்தான் துடைத்துத் துடைத்துப் போட்டு இப்போதும் ஹிட்டு களாக்கிக் கொண்டிருக்கிறார்கள் இங்கே பல இசையமைப்பாளர்கள். அந்த அளவுக்கு அவரது ஹார்மோனியத்துக்குள் தான் ஒளிந்திருக்கின்றன, நமது 40 ஆண்டு கால கண்ணீரும் புன்னகையும்!

2015  டாப் 10 மனிதர்கள்

கனிமவள மோசடிகளைக் கறாராக விசாரித்து, பண முதலைகளைப் பந்தாடிய அதிரடி அதிகாரி. கிரானைட் முறைகேட்டால் அரசாங்கத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு நேர்ந்த பயங்கரத்தை உயர் நீதிமன்றத்தில் அறிக்கையாகச் சமர்ப்பிப்பதற்குள் சகாயம் பட்டபாடு அத்தனையும் ஆக்‌ஷன் சேஸிங் கதை! கனிமவள மோசடிகளை சகாயம் குழு விசாரிக்காமல் செய்ய, உச்ச நீதிமன்றம் வரை மல்லுக்கட்டியது தமிழ்நாடு அரசு. `மதுரையில் மட்டும் விசாரிங்க’ என சகாயத்துக்கு நீதிமன்றம் கிரீன் சிக்னல் கொடுத்தாலும், விசாரணைக்கான அனுமதி கிடைக்காமல் பல மாதங்கள் இழுத்தடிக்கப்பட்டார். விசாரணை தொடங்கியதும் வெடிகுண்டு மிரட்டல்கள், ஒட்டுக்கேட்புக் கருவிகளால் குடைச்சல், மாநகராட்சி நிர்வாகமே விசாரணை வளாகத்துக்கு சீல் வைத்தது, கொலைமிரட்டல்... என அனைத்தையும் தாண்டி அசராமல் கடமையாற்றியது சகாயம் தலைமையிலான குழு.  கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, அந்த இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப் போன சகாயத்துக்கு காவல் துறை அதிகாரிகள்கூட ஒத்துழைக்க மறுத்தனர். ‘தோண்டியே தீருவேன்’ என சுடுகாட்டிலேயே படுத்து உறங்கிய சகாயத்தின் அஞ்சாநெஞ்சம் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் திரும்பிப் பார்க்கவைத்தது. அடுத்தடுத்த நாட்களில் தோண்டப்பட்ட குழிகளில் இருந்து மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட, உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. `அப்துல் கலாம் விட்டுச்சென்ற இடத்தை இட்டுநிரப்ப, இவரால் முடியும்’ என எதிர்பார்க்கிற இளைஞர்களின் புதிய நம்பிக்கை சகாயம் ஐ.ஏ.எஸ்.!

2015  டாப் 10 மனிதர்கள்

ஏழை வீட்டு லட்சுமிதான். அன்பர்கள் பலரின் ஆதரவில் கல்வி பயின்றவர். இன்று அரசுப் பள்ளி ஆசிரியை மகாலட்சுமி, ஜவ்வாது மலைவாழ் மக்களுடைய குழந்தைகளுக்குக் கல்விக் கண் திறக்கும் சரஸ்வதி. ஜவ்வாது மலையின் அரசுவெளி என்கிற பகுதியில் இருக்கிறது அரசின் உண்டு உறைவிடப் பள்ளி. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காகவே நடத்தப்படுவது. 2006-ம் ஆண்டில் மகாலட்சுமி இந்தப் பள்ளியில் ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தபோது வருகைப்பதிவேட்டில் இருந்த எண்ணிக்கை, வெறும் 10 மாணவர்கள் மட்டும்தான். அத்துவானக் காட்டில் ஒற்றை ஆளாகத் திரிந்து, சுற்றியுள்ள கிராமங்களுக்கு நடையாக நடந்து, பள்ளி செல்லாத பிள்ளைகளைத் தேடிப்பிடித்து பள்ளியில் சேர்த்தார். மனப்பாடப் பயிற்சி தருகிற மடமாக இருந்த பள்ளியை, குழந்தைகள் வளர்கிற வாழ்க்கைத் தளமாக மாற்றியவர். தன் சொந்தச் செலவில் உபகரணங்கள் வாங்கி மாதிரிப் பள்ளியை உருவாக்கினார். பள்ளியே கண்டிராத அந்த மலைக்கிராம மனிதர்களில் மூன்று பேர் இன்று கல்லூரி வரை முன்னேறியிருக்கிறார்கள். ‘என் கல்விக்காக பலர் உதவியதைப்போல, மலைவாழ் மக்களின் கல்விக்காக உதவ எப்போதும் நான் இருப்பேன்’ என்று உறுதியாகச் சொல்லும் மகாலட்சுமி, அந்த மலைவாழ் மக்களின் வனதேவதை!

2015  டாப் 10 மனிதர்கள்

போபாலில் பிறந்து, டெல்லியில் வளர்ந்த வடநாட்டுத் தமிழன். இந்திய கரன்ஸியில் கையெழுத்திடும் ரிசர்வ் வங்கி கவர்னர். இந்தியப் பொருளாதாரத்தின் முன்னேற்றம் மட்டும்தான் இவருடைய இலக்கு. அரசாங்கத்துக்கு அடிபணியாமல், பல மாற்றங்களை அறிமுகப்படுத்திவருபவர். `வங்கிகளின் கடன் விகிதம் அதிகமாக இருப்பதற்கு காரணம் ரகுராம் ராஜன்தான்’ என அருண் ஜெட்லியால் கைகாட்டப்பட்டார். ஆனால், இந்த ஆண்டு ரகுராம் ராஜன் வட்டிவிகிதத்தைக் குறைத்த பிறகும் அரசு வங்கிகள் குறைக்கவில்லை. 2013-ம் ஆண்டில் ரகுராம் ராஜன் பொறுப்பேற்கும்போது சில்லறை வர்த்தகத்தில் பணவீக்கம் 9.8 சதவிகிதமாக இருந்தது. இரண்டு ஆண்டுகளில் அதை 3.78 சதவிகிதம் வரை குறைத்திருப்பது மிகப் பெரிய சாதனை. இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பும் ரகுராம் ராஜனின் வரவுக்குப் பிறகு 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க கன்ஸ்யூமர் ப்ரைஸ் இண்டெக்ஸ் முறையைப் பின்பற்றிவருகிறார். ‘வலிமையான அரசு என்பதால் மட்டுமே அது எடுக்கும் அனைத்து முடிவுகளும் சரியாகிவிடாது’ என்கிற ரகுராம் ராஜனின் கொள்கைதான் நம் அரசு அதிகாரிகளுக்கு அவசியமான அரிச்சுவடி!

2015  டாப் 10 மனிதர்கள்

மூன்று ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியராக இருக்கும் நந்தகுமார், ராமநாதபுரத்தை ‘தண்ணியுள்ள காடாக’ மாற்ற மெனக்கெடுபவர். விவசாயம் தழைக்க 5,000-த்துக்கும் அதிகமான பண்ணைக் குட்டைகள், குடிநீர் வளம் பெருக 600-க்கும் அதிகமான உறைகிணறுகள்  அமைத்துத் தந்துள்ளார். ஏராளமான விவசாயிகளை இயற்கை விவசாயத்தின் பக்கம் திருப்பி, அதற்கான சந்தை வாய்ப்புகளையும் உருவாக்கித் தந்துள்ளார். அரசுப் பள்ளிகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் ஏழை மாணவர்களைத் தேர்வுசெய்து, அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி தருகிறார். தன் சொந்த பொறுப்பில் அவர்களைத் தங்கவைத்து, உணவும் தனிப் பயிற்சிகளும் வழங்குகிறார். இவர்களில் இருந்து இரண்டு மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள்; பலர் பொறியியல் படிக்கிறார்கள். வறட்சி மாவட்டத்தை வளர்ச்சி மாவட்டமாக மாற்றப் போராடும் நந்தகுமார், வளர்ச்சியின் நாயகன்!

2015  டாப் 10 மனிதர்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழலாயுதம்; ஆண்டு முழுக்க ஒற்றை ஆளாக எண்ணற்ற வெற்றிகளைப் பெற்றுத்தந்த சென்னையின் செல்லப்பிள்ளை; ட்வென்ட்டி ட்வென்ட்டியோ, டெஸ்ட் போட்டியோ பாணிகள் மாறலாம்; ஆனால், பாய்ச்சலில் குறைவின்றி பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்கு அனுப்பிய ஆஃப் ஸ்பின் கில்லி ரவிச்சந்திரன் அஷ்்வின். இதுவரை ஆடிய 32 டெஸ்ட் போட்டிகளில் ஐந்து முறை தொடர் நாயகன் விருதை வென்று, சச்சின் டெண்டுல்கரின் (200 டெஸ்ட்களில் ஐந்து முறை) சாதனையை சமன் செய்திருக்கிறார். அந்நிய மண்ணில் தோல்வியே கண்டிராமல், ஒன்பது ஆண்டுகள் கம்பீரமாக உலகம் சுற்றியது தென்ஆப்பிரிக்க அணி. ஒன்மேன் ஆர்மியாக நான்கே டெஸ்ட் ஆட்டங்களில், 31 விக்கெட்டுகளை வீழ்த்தி யாருக்கும் அடங்காத தென்ஆப்பிரிக்காவை மண்டியிட வைத்தது அஷ்வினின் சுழல். `டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 50, 100, 150 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியர்’ என்கிற சாதனையும் அஷ்வின் வசமே. `இப்போது அஷ்வினுக்கு வயது 29. இதே உத்வேகத்தோடு தொடர்ந்து விளையாடினால், 700 விக்கெட்டுகளைச் சாய்ப்பார்’ என ஆருடம் சொல்கிறார் முத்தையா முரளிதரன். நல்ல கனவு நனவாகட்டும்!

2015  டாப் 10 மனிதர்கள்

மாஸ் ஹீரோக்களுக்கு மத்தியில், தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டும்தான் நடிப்பேன் என உறுதி குறையாமல் உயர்ந்து நிற்கிறார் நயன்தாரா. ஒரே ஆண்டில் ‘மாயா’, ‘தனி ஒருவன்’, ‘நானும் ரௌடிதான்’ என ஹாட்ரிக் ஹிட்ஸ். நாயகியாக 10 வருடங்கள் கடந்துவிட்டார். ஆனால், இன்னமும் சரமாரி சக்சஸ் கிராஃப். சர்ச்சைகள், தொடரும் வம்புகள் என ஆயிரம் வந்தபோதும் அர்ப்பணிப்புள்ள உழைப்பால் நம்பர் ஒன்னாக நிலைத்திருக்கிறார். மாஸ் ஹீரோக்களை மையம்கொண்ட தமிழ் சினிமாவை ஹீரோயின் நோக்கி ஈர்த்ததில் நயனுக்கு முக்கியப் பங்கு உண்டு. மாஸ் ஓப்பனிங் என்ற தகுதியைப் பெற்ற ஒரே நாயகி. நயன்தாராவின் கால்ஷீட்டுக்காகக் காத்திருக்கும் மாஸ் ஹீரோக்கள், மெகா இயக்குநர்களின் பட்டியலே இதற்குச் சான்று. எப்போதும் உழைக்கக் காத்திருக்கிற உற்சாக மனநிலைகொண்ட நயன்தாரா... நம்ம ஆளு!

2015  டாப் 10 மனிதர்கள்

உலகமயமாக்கலின் இருண்டப் பக்கங்களை தமிழ் சினிமா சமரசங்கள் இன்றி, அச்சுஅசலாக ஆவணப்படுத்திய விளாம்பட்டியின் வித்தியாச இளைஞர். உலக சினிமா அரங்கில் தமிழ் சினிமாவுக்குத் தனித்த அடையாளத்தைப் பெற்றுத்தந்த இளம் இயக்குநர். சென்னை சேரிகளின் அசலான மனிதர்களை அடையாளம்காட்டிய மணிகண்டன், `காக்கா முட்டை’யைக் கண்டடைந்த பாதை அத்தனை கரடுமுரடானது. குடிப்பழக்கத்துக்குப் பலியான தந்தைக்குப் பிறகு குடும்ப பாரத்தைத் தூக்கிச் சுமக்க வேண்டியதாக இருந்தது. வயிற்றுப் பிழைப்புக்குப் பார்த்த வேலைகள் சிந்தனைகளைச் சிதைக்க, மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பினார். பெயின்டர், போட்டோகிராஃபர் எனப் பல வேலைகள் பார்த்தவரை, மீண்டும் சென்னைக்குக் கொண்டுவந்தது சினிமா ஆர்வம். உதவி ஒளிப்பதிவாளராகத் தொடங்கி இயக்குநரானார். ‘காக்கா முட்டை’யில் சர்வதேச விருதுகள் பெற்றது பெருமிதம்; சாமானியனின் இதயம் தொட்டது புது விதம்!