Published:Updated:

2015-ல் தமிழகத்தை தடதடக்கவைத்த டாப் 50 சம்பவங்கள்

2015-ல் தமிழகத்தை தடதடக்கவைத்த டாப் 50 சம்பவங்கள்

`உங்கள் பணம் உங்கள் கணக்கில்...’  என சமையல் கியாஸ் சிலிண்டருக்கான மானியத் தொகையை வழங்க, ‘ஆதார் அட்டை இருப்பவர்களுக்கே முன்னுரிமை’ என  முதலில் அறிவிக்கப்பட பல இடங்களில் வாக்குவாதம், போராட்டம். ஆதார் அட்டை இருப்பவர்கள், இல்லாதவர்கள் எனப் பிரித்த பின்னர் ஆதாரங்களைக் காட்டினாலும், சில கியாஸ் ஏஜென்ஸிகள் விண்ணப்பம் தர மறுத்தன; வங்கிகளில் கணக்கைப் பதிவுசெய்வதிலும் கோளாறு... இப்படி களேபரங்களுக்குப் பஞ்சம் இல்லை. இறுதியில் தமிழ்நாட்டில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இந்தத் திட்டத்தில் இணைந்தனர்!

2015-ல் தமிழகத்தை தடதடக்கவைத்த டாப் 50 சம்பவங்கள்

`சென்னை விமான நிலையக் கழிவறையில் 2 கிலோ தங்கம்’, `குப்பைத்தொட்டியில் 3 கிலோ தங்கம்’, `விமான இருக்கையின் கீழ் 2.5 கிலோ தங்கம்’, `திருச்சி விமானத்தில் 5 கிலோ தங்கம்’... என தங்கக் கடத்தல் செய்திகள் தகதகத்தன. கைப்பற்றப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த திருச்சி சுங்கத் துறை அலுவலகத் திலேயே 34 கிலோ தங்கம் கடத்தப்பட்டது கூடுதல் ட்விஸ்ட். தங்கக் கடத்தலைத் தடுக்கவேண்டிய சுங்கத் துறை அதிகாரிகளே குற்றவாளிக்கூண்டில் நிற்க, இப்போது சி.பி.ஐ விசாரணை ஆன் தி வே!

முதலில் தமிழக கனிமவள முறைகேடுகளை விசாரிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், பின்னர் மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடுகளை மட்டும் சகாயத்தை விசாரிக்கச் சொன்னது. இதில் தட்டச்சர் டைப் செய்ய மறுத்தது, ஒட்டுக்கேட்புக் கருவி பொருத்தியது, கொலைமிரட்டல் கடிதம், விசாரணை மையத்தின் அருகில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு... என விசாரணை பரபரக்க, கிரானைட் குவாரிகளில் நரபலி புகார் பரபரப்பின் உச்சமானது. நள்ளிரவில் சுடுகாட்டில் உறங்கி, தடயங்களைச் சேகரித்தார் சகாயம். 600 பக்க அறிக்கை, 7,000 பக்க ஆதாரங்கள், 140 புகைப்படங்கள், கிரானைட்டால் அரசுக்கு 1 லட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என அதிரடி அறிக்கை கொடுத்திருக்கிறார் சகாயம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
2015-ல் தமிழகத்தை தடதடக்கவைத்த டாப் 50 சம்பவங்கள்

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜாமீனில் வந்த பிறகு, யாரையும் சந்திக்காமல் வீட்டுக்குள் முடங்கியிருந்த ஜெ-வைச் சந்தித்தார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. ஜெ-சசிகலா ஆகியோரின் `சசி என்டர்பிரைசஸ்’ நிறுவனம் மீது முறையாக வருமான வரி செலுத்தவில்லை என வருமானவரித் துறை தொடர்ந்த வழக்கில், `அபராதம் செலுத்தத் தயார்’ என ஜெ. தரப்பு சொல்ல, வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் நடந்த இந்தச் சந்திப்பை, `பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது’ என விமர்சித்தார் கருணாநிதி!

பண்டிகை நாட்களில் மது விற்பனைக்கு தமிழக அரசு இலக்கு நிர்ணயித்தது அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.  புத்தாண்டுக்கு 164 கோடி ரூபாய், பொங்கலுக்கு 250 கோடி ரூபாய், தீபாவளிக்கு 303 கோடி ரூபாய் என சாராய விற்பனை பெருக்கெடுத்தது. திருப்பூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மது விற்பனையில் சாதனை படைக்க, ‘டாஸ்மாக்கை மூடு’ என தமிழகம் முழுக்க மக்கள் போராட்டங்கள் நடந்தபோதும், இலக்குவைத்து மது விற்கும் அவலம் தொடர்கதையாகத் தொடர்கிறது!

2015-ல் தமிழகத்தை தடதடக்கவைத்த டாப் 50 சம்பவங்கள்


தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் விதித்த தடை கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அரசின் மேல்முறையீட்டிலும் எந்தப் பலனும் இல்லை. ‘2011-ம் ஆண்டு அரசிதழில் காட்சிப் படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளை மாட்டை நீக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை மத்திய அரசிடம் முன்வைத்தது தமிழ்நாடு அரசு. பொதுமக்கள் அதிருப்தி அடைந்து வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி போராட்டம் செய்தனர். ‘பட்டியலில் காளை நீக்கப்படும்’ என மத்திய வனத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதிகொடுத் திருந்தார். ஜல்லிக்கட்டு சர்ச்சை இன்னும் முடிவுக்கு வரவில்லை!

‘மாதொருபாகன்’ நாவல், கவுண்டர் சமூகத்தை இழிவாகச் சித்திரிக்கிறது’ என எழுத்தாளர் பெருமாள்முருகனுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர் கொங்கு மண்டல சாதிக் கட்சிகள். பிரச்னை தீவிரமாக, நாமக்கல் கலெக்டர், டி.ஆர்.ஓ ஆகியோர் பெருமாள்முருகனை, ‘நிபந்தனையற்ற மன்னிப்பு’ கேட்கவைத்தனர். ‘எனக்குள் இருந்த எழுத்தாளன் செத்துவிட்டான்... ’ என உருக்கமாக அறிக்கை வெளியிட்டார் பெ.மு. இதற்கிடையில் `மாதொருபாகன்’ நாவல், ‘சமன்வாய் பாஷா சம்மன்’ விருதுக்குத் தேர்வானது!

2015-ல் தமிழகத்தை தடதடக்கவைத்த டாப் 50 சம்பவங்கள்

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கியிருந்த ஹேமலதா, ஜெய உள்பட சகோதரிகள் ஐவர், 2004-ல் போலீஸில், ‘ஆசிரமத்தில் தங்களுக்கு ஆண் உறுப்பினர்களால் பாலியல் தொல்லை இருப்பதாகப் புகார் தெரிவித்தனர். இந்த வழக்கில், ‘ஆசிரமத்தில் இருந்து அவர்கள் வெளியேற வேண்டும்’ என உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இதனால், அதிருப்தி அடைந்து தாய் மற்றும் இரு சகோதரிகள் கடலில் குதித்து உயிர் இழந்தனர். மீதமுள்ள மூன்று சகோதரிகள் வாடகை வீட்டில் தங்கி, ஆசிரமத்துக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்திவருகின்றனர்!

காட்டு மிருகங்கள் நகருக்குள் வருவது அதிகரித்தது. நெல்லையில் சிறுத்தைப் புலி சிறைபிடிப்பு, தென்காசியில் 15 ஆடுகளைக் கடித்த சிறுத்தை, தர்மபுரியில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை... என செய்திகள் அடிபட்டன. நீலகிரி, கூடலூர் பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு புலி தேடுதல் வேட்டை நடந்தது. ஓடோடும்வயலைச் சேர்ந்த மகாலட்சுமியை புலி அடித்துக் கொன்றது. பின்னர் புலியைச் சுட்டுக் கொன்றதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆட்சேபம் தெரிவிக்க, அது சரியா... தவறா விவாதங்கள் இப்போதும் தொடர்கின்றன!

2015-ல் தமிழகத்தை தடதடக்கவைத்த டாப் 50 சம்பவங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் கொடகரையில் 16 வயது பெண், முத்தப்பா, மாதப்பா, ருத்ரப்பா, சித்தலிங்கா ஆகியோரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். முதல்கட்ட மருத்துவப் பரிசோதனையில் பலாத்காரம் நடைபெறவில்லை என்றனர். இந்தப் பிரச்னையில் பிருந்தா காரத், டி.ஜி.பி-யிடம் புகார் அளிக்க, பாலியல் பலாத்காரம் உறுதிசெய்யப்பட்டு, நால்வரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாமீனில் வெளிவந்த அவர்களுக்கு, ஊர் மக்கள் சிலர் ஆதரவாக இருக்க, கிருஷ்ணகிரி புறநகர் பகுதியில் கூலி வேலைசெய்து ஊருக்குப் பயந்து வாழ்கிறது அந்தப் பெண்ணின் குடும்பம்!

‘விபத்தில் மூளைச்சாவு அடைந்த திருச்சி சரவணன், சென்னை எட்டியப்பன், செங்கல்பட்டு சரண்... என உடல் உறுப்புகள் தானம் சம்பந்தமான செய்திகள் மக்களை நெகிழச்செய்தன. இதன் மூலம் உடல் உறுப்பு தான விழிப்புஉணர்வில் இந்திய அளவில் தமிழகம் முதல் இடம் பெற்றது. 2008 அக்டோபர் முதல் 2015-ம் ஆண்டு இறுதி வரை மூளைச்சாவு அடைந்த 649 பேரின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 3,572 உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளன!

2015-ல் தமிழகத்தை தடதடக்கவைத்த டாப் 50 சம்பவங்கள்

கிருஷ்ணகிரியில், பேங்க் ஆஃப் பரோடா வங்கிக் கொள்ளை குபீர் தலைப்புச் செய்தி. குந்தாரப்பள்ளி, நாமா கிராமத்தில் உள்ள பரோடா வங்கிக் கிளையில் 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அடமானம் வைக்கப்பட்டிருந்த 52 கிராமங்களைச் சேர்ந்த மக்களின் 48 கிலோ தங்கம் கொள்ளைபோனது. ‘வங்கி, போதிய பாதுகாப்போடு இல்லை’ என மக்கள் போராட்டம் நடத்த, 10 தனிப்படைகளின் நீண்ட தேடுதல் வேட்டையில், 7 கொள்ளையர்கள் சிக்கி, ஒரு கோடி மதிப்பிலான நகைகள்  மட்டும் மீட்கப்பட்டன!

செல்வமகள் சேமிப்புத் திட்டம், விபத்துக் காப்பீடு, ஆயுள் காப்பீடு, ஓய்வூதியம் என பல திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்துக்கொண்டே இருந்தார். இதில் தபால் அலுவலகங்களுக்குப் புத்துயிர் ஊட்டியது செல்வமகள் சேமிப்புத் திட்டம். இதன் கீழ், தமிழகத்தில் இதுவரை 10 லட்சத்து 60 ஆயிரம் கணக்குகள் தொடங்கப் பட்டுள்ளன. திட்டத்தின் ஹிட்டைத் தொடர்ந்து, ஆண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டம் ஒன்றும் தொடங்கப் பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் பெயர், ‘பொன்மகன் பொது வைப்பு நிதி’!

2015-ல் தமிழகத்தை தடதடக்கவைத்த டாப் 50 சம்பவங்கள்

தமிழக முகாம்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்ப மத்திய அரசு முடிவுசெய்தது. இந்திய - இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர்கள் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக, மத்திய அரசு டெல்லியில் ஏற்பாடு செய்த கூட்டத்தை முதல்வர் பன்னீர்செல்வம் புறக்கணித்தார். ‘நாடு திரும்பினால் நன்மை விளையும் என்ற நம்பிக்கை செயல் வடிவம் பெற்றால்தான், தாயகம் திரும்புவது பற்றி சிந்திக்க இயலும்’ என்றார் ஓ.பி.எஸ். இதில் தற்போது வரை எந்த முடிவும்  எட்டப்படவில்லை. தமிழ்நாட்டு அகதி முகாம்களில் மொத்தம் 1,02,055 ஈழத்தமிழர் வசிக்கின்றனர்!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ பதவியை ஜெயலலிதா இழக்க, இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் வளர்மதி 1,51,561 வாக்குகள் குவித்து வெற்றிபெற்றார்.  சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டில் விடுதலைபெற்ற ஜெயலலிதா, இடைத் தேர்தலில் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட, அவரை எதிர்த்து சி.மகேந்திரன், டிராஃபிக் ராமசாமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர். பல இடங்களில் அமைச்சர்கள் வாக்காளர்களுக்கு பணம் தந்தனர் எனப் புகார்கள் எழுந்தன. ஜெயலலிதா 1,60,432 வாக்குகள் பெற்று வெற்றிபெற, மற்றவர்கள் டெபாசிட் இழந்தனர்!

2015-ல் தமிழகத்தை தடதடக்கவைத்த டாப் 50 சம்பவங்கள்

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலையில் கழிவுநீர்த் தொட்டி உடைந்து 10 தொழிலாளர்கள் பலியானது பெரும் அதிர்ச்சி. சிப்காட்டில் இயங்கிவந்த 86 தோல் தொழிற்சாலைகளின் சேகரிக்கப்பட்ட நச்சு மிச்சங்கள் நிறைந்த தொட்டி திடீரென உடைய, நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் கழிவு நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஆலையின் இயக்குநர் உள்பட 10 பேர் கைது, பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு, மாசுக் கட்டுப் பாட்டு வாரிய அனுமதி மீறி தொட்டி கட்டப்பட்டது எனப் பரபரப் பானது. சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டது தமிழக அரசு!

தேனி நியூட்ரினோ ஆராய்ச்சி மையத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்தது. ‘நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கம்’ ஆரம்பிக்கப்பட்டு, போராட்டக் குழு தலைவரானார் வைகோ. தமிழக அரசின் அனுமதி இல்லாமல் நியூட்ரினோ திட்ட வேலைகள் நடந்ததை ரத்துசெய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வைகோ. ‘தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி இல்லாமல் நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி கொடுக்கக் கூடாது’ என இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது!

2015-ல் தமிழகத்தை தடதடக்கவைத்த டாப் 50 சம்பவங்கள்

ஈரோடு, சிப்காட் தொழிற்பேட்டையில் கோகோ-கோலா நிறுவனத்துக்கு 72 ஏக்கர் நிலத்தை ஏக்கருக்கு 1 ரூபாய் என நிர்ணயித்து 99 ஆண்டுகாலக் குத்தகைக்கு அரசு நிலம் தாரை வார்க்கப்பட்டதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பரபரப்பு அறிக்கை வெளியிட, மக்களும் ஆலைக்கு எதிராகப் போராட, சட்டமன்றத்தில் பிரச்னை எழுப்பப்பட்டது. ‘கோக் நிறுவனத்துக்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை’ என அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கூற, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஒப்பந்த நகல்களைப் பகிரங்கமாக வெளியிட்டார். மக்களின் எதிர்ப்பால் அந்த ஒப்பந்தம் ரத்தானது!

காவிரி டெல்டா விவசாயிகளை மிரட்டிய மீத்தேன் திட்டம் இந்த ஆண்டு ரத்தானது. காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு விவசாயிகளிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மக்கள் மீத்தேன் திட்டக் குழாய்களைப் பிடுங்கி எறிந்தனர். திடீரென ஒருநாள், ‘மீத்தேன் திட்ட ஒப்பந்த காலம் காலாவதியாகிவிட்டது’ என்றார் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். `ஓ.என்.ஜி.சி நிறுவனம் மூலம் 35 இடங்களில் மீத்தேன் எடுக்க மத்திய அரசு திட்டம்’ என வைகோ போராட்டம் அறிவித்தார். மீத்தேன் பூதம் எப்போது வேண்டுமானாலும் உயிர்பெறலாம்!

2015-ல் தமிழகத்தை தடதடக்கவைத்த டாப் 50 சம்பவங்கள்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான முயற்சியில் இறங்கியது கர்நாடகா. இந்த அணைக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு. `இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயம் செய்யமுடியாமல் போகும். தென்மாவட்ட மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்’ எனக் கூறி போராட்டம் நடத்தப்பட்டது. பிறகு, மேகேதாட்டு அணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. வழக்கு விசாரணையில் உள்ளது!

சாதி ஆணவக் கொலைகள் இந்த ஆண்டும் தொடர்ந்தன. சிவகங்கை, உடைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வியும் அதே ஊரைச் சேர்ந்த பூமிநாதன் என்பவரும் காதலித்தனர். இருவரும் வீட்டைவிட்டு வெளியேறினர். சட்டத்தின் துணையோடு மகளை மீட்டார் தங்கராஜ். அடுத்த சில நாட்களில் மகளைக் கொன்று மண்ணெண்ணெய் ஊற்றி எரித்ததாக போலீஸில் சரணடைந்தார்!

2015-ல் தமிழகத்தை தடதடக்கவைத்த டாப் 50 சம்பவங்கள்

`ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங், கீழ்க்கோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். அவரை நீக்கவேண்டும்’ என மேல்முறையீட்டு விசாரணை மனுவில் சொன்னார் தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன். பல விவாதங்களுக்குப் பின்னர் ‘பவானி சிங் நியமனம் செல்லாது’ என அறிவிக்கப்பட்டு, அரசு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யா நியமிக்கப்பட்டார். பின்னர் ஜெ-வை விடுதலைசெய்த நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பின் கூட்டல் கணக்கில் பிழை என விமர்சிக்கப்பட்டது. அந்தத் தீப்பை எதிர்த்து கர்நாடகா அரசு செய்த மேல் முறையீட்டின் மீது, வரும் பிப்ரவரியில் விசாரணை தொடங்க இருக்கிறது!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பன்றிக் காய்ச்சல் வேகமாகப் பரவியது. நாடு முழுவதும் ஒரே நாளில் 38 பேர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தடுப்பு மருந்துகள் டாமி ப்ளூ இருப்பு உள்ளது என்றது தமிழக சுகாதாரத் துறை. இருப்பினும், படுவேகமாகப் பரவியது பன்றிக் காய்ச்சல். அடுத்தடுத்த மாதங்களில் டெங்கு காய்ச்சல் விஸ்வரூபம் எடுத்தது. நவம்பருக்குப் பிறகான அடைமழைக்குப் பிறகு மர்மக் காய்ச்சல்(?) என... ஆண்டு முழுவதும் ஆட்டிப்படைத்தது காய்ச்சல் படையெடுப்பு!

2015-ல் தமிழகத்தை தடதடக்கவைத்த டாப் 50 சம்பவங்கள்

ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப் படையினர் குருவிகளைச் சுட்டுத் தள்ளுவது போல் 20 தமிழர்களைச் சுட்டுக்கொன்றனர். ஆந்திராவில் செம்மரம் கடத்தலின் நெட்வொர்க் மிகப் பெரியது. அவர்கள் வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட ஏழைத் தொழிலாளர்களை செம்மரம் வெட்ட அழைத்துச் செல்கின்றனர். எய்தவர்களை விட்டுவிட்டு, கூலிகளாகச் சென்ற தொழிலாளர்களைச் சுட்டுக் கொன்றதற்காக ஆந்திர அரசு எந்த விதத்திலும் வருந்தவில்லை. இறந்தவர்களுக்கு நீதியும் கிடைக்கவில்லை!

நாடாளுமன்றத்தில் `திருநங்கைகள் பாதுகாப்பு மசோதா’ நிறைவேற்றப்பட்டது. இதற்குக் காரணமான தி.மு.க. மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா பெரிதும் பாராட்டப் பட்டார். அரசால் கவனிக்கப்படாத முக்கியப் பிரச்னைகள் குறித்து எம்.பி-க்கள் தனிநபர் மசோதா தாக்கல் செய்யலாம். அப்படி சிவா கொண்டுவந்த திருநங்கைகள் பாதுகாப்பு தொடர்பான தனிநபர் மசோதா, நீண்ட விவாதத்துக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டது. கடந்த 45 ஆண்டுகளில் தனிநபர் விருப்பத்தின் அடிப்படையில்  நிறைவேற்றப்பட்ட முதல் மசோதா இதுதான்!

2015-ல் தமிழகத்தை தடதடக்கவைத்த டாப் 50 சம்பவங்கள்

கோவை, கருமத்தம்பட்டியில் தங்கியிருந்த மாவோ யிஸ்ட்கள் ரூபேஷ், அவரது மனைவி சைனா, அனூப், கார்த்தி, ஈஸ்வரன் ஆகிய ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் மீது கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் பல்வேறு வழக்குகள் பதிவாகியிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக கியூ பிரிவு போலீஸார் சொன்னார்கள். ‘தமிழக போலீஸார் எங்களைக் கடத்திவந்துவிட்டு கைது செய்துவிட்டதாக கபட நாடகம் ஆடுகின்றனர்’ என்றார்கள் மாவோயிஸ்டுகள்!

முன்னர் எப்போதும் இல்லாத வகையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் சாதனை படைத்தனர். தமிழை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்தவர்களில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று 41 பேர் மாநிலத்தில் முதல் இடம்பெற்றனர். 192 பேர் 498 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தனர். கணிதத்தில் 27,134 பேரும், அறிவியலில் 1,15,853 பேரும், சமூக அறிவியலில் 51,629 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். இதற்குக் காரணம் சமச்சீர் கல்வியா, வேறு எதுவுமா என்பதில் இப்போதும் குழப்பம்தான்!

2015-ல் தமிழகத்தை தடதடக்கவைத்த டாப் 50 சம்பவங்கள்

சேர்ந்து வாழ மறுத்த கணவன் உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரை, மனைவியே தீயிட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் குமாரபுரம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் அவரின் மனைவி பாண்டீஸ்வரியுடன் குடும்பம் நடத்த மறுத்திருக்கிறார். ஊர்ப்பஞ்சாயத்து, போலீஸ் என புகார் அளித்தும் பயன் இல்லை. கோபம் அடைந்த பாண்டீஸ்வரி, கணவர் கண்ணன் வீட்டில் குடும்பத்தாருடன் தூங்கிக்கொண்டிருந்த போது கதவை வெளியே தாழிட்டு பெட்ரோல் ஊற்றித் தீவைத்தார். கண்ணன் உட்பட ஏழு பேரும் இறந்தனர். பாண்டீஸ்வரி கைதானார்!

2014-ம் ஆண்டின் கடைசியில் தர்மபுரி அரசு மருத்துவ மனையில் நான்கு நாட்களில் 12 குழந்தைகளும் சேலம் அரசு மருத்துவமனையில் 8 குழந்தைகளும் மரணித்து அதிரவைத்தன. அந்த அதிர்ச்சி 2015-ம் தொடர்ந்தது. விழுப்புரம் அரசு மருத்துவ மனையில் போதிய வசதி இன்மை, மருத்துவர்களின் அலட்சியத்தால் அடுத்தடுத்த நாட்களில் ஒன்பது குழந்தைகள் இறந்தன. ‘சுவாசக் கோளாறுதான் காரணம்’ எனச் சொன்ன அமைச்சர் விஜயபாஸ்கர், அடுத்த சில நாட்களில், ‘தமிழ்நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் குறைவு’ என பெருமைப்பட்டுக்கொண்டார்!

2015-ல் தமிழகத்தை தடதடக்கவைத்த டாப் 50 சம்பவங்கள்

கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது. இதில், பயணித்தபோது மு.க.ஸ்டாலின் ஒரு பயணியை அடித்ததாக அறிக்கை வெளியிட்டார் ஜெயலலிதா. ‘நான் அடித்ததாக வெளியான வீடியோ எடிட் செய்யப்பட்டது’ என்றார் ஸ்டாலின். மெட்ரோ ரயிலின் ஷெனாய் நகர் கட்டடம் 2 அடி பூமிக்குள் இறங்கியது, பாரிமுனையில் விரிசல், பரங்கிமலை அருகே 100 கிலோ மெட்ரோ ரயில் கம்பி விழுந்து இன்ஜினீயர் கிரிதரன் பலி... என அதிர்ச்சிக்கும் பஞ்சம் இல்லை. அதிகமான பயணக் கட்டணம் அதிர்ச்சியின் உச்சம்!

சென்னை ஐ.ஐ.டி-யில் செயல்படும் `அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம்’ என்ற மாணவர் அமைப்பு, பிரதமர் மோடியையும் மத்திய அரசின் கொள்கைகளையும் விமர்சித்து துண்டு பிரசுரங்கள் விநியோகித்தது. இதை ஒரு காரணமாகச் சொல்லி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, மாணவர் அமைப்பைத் தடைசெய்ய... வெடித்தது பெரும் போராட்டம்.  அறிவுஜீவிகளும் அரசியல்வாதிகளும் கடுமையாக  எதிர்க்க, ஐ.ஐ.டி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கீகாரத்தைத் திரும்பப் பெற்றது. மாணவர் போராட்டம் வென்றது!

2015-ல் தமிழகத்தை தடதடக்கவைத்த டாப் 50 சம்பவங்கள்

வேலூர் மாவட்டம் குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பழனியின் மனைவி பவித்ரா, திடீரென காணாமல்போனார். இது தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஷமில் அஹமது மரணம் அடைந்தார். இதைக் கண்டித்து ஆம்பூரில் இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய போராட்டம், பெரும் வன்முறையாக மாறியது. சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இதற் கிடையில் பவித்ராவை மீட்டுத்தரக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுசெய்தார் பழனி. சென்னையில் கண்டுபிடிக்கப்பட்ட பவித்ரா, வீட்டுக்குச் செல்ல மறுத்து, காப்பகத்தில் தங்கினார்!

சென்னையில் இருந்து ரோந்து சென்ற கடலோரக் காவல் படையின் டோர்னியர் விமானம் திடீரென மாயமானது. கடலோரக் காவல் படை துணை கமாண்டன்ட்கள் வித்யாசாகர், சுபாஷ் சுரேஷ், துணை விமானி எம்.கே.சோனி ஆகியோர் அதில் இருந்தனர். பல நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, விமானம் பிச்சாவரம் கடல் பகுதியில் விழுந்து நொறுங்கி மூன்று பேரும் பலியானது உறுதிசெய்யப்பட்டது!

2015-ல் தமிழகத்தை தடதடக்கவைத்த டாப் 50 சம்பவங்கள்

‘மின்வாரியத்தில் ஒரு லட்சம் கோடி ஊழல் என அதன் முன்னாள் ஊழியர் செல்வராஜ் தொடர்ந்த பொதுநல வழக்கு அரசுக்கு பெரிய ஷாக். கமுதி சூரிய ஒளி மின்சக்தி திட்டத்துக்காக அதானி குழுமத்தோடு ஒரு யூனிட் மின்சாரம் 7 ரூபாய் 1 காசு என 25 வருடங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது மின்வாரியம். இதனால் மின்வாரியத்துக்கு ஆண்டுக்கு 2,800 கோடி ரூபாய் இழப்பு’ என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்ட, ‘ தேர்தலுக்காகக் குற்றச்சாட்டுக் கூறப்படுகிறது’ என மழுப்பினார் மந்திரி நந்தம் விசுவநாதன்!

ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டப் புகார்கள் பரபரத்தன. உச்ச நீதிமன்றம் அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி லோதா தலைமையிலான கமிட்டி விசாரணையில், 13 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, பிசிசிஐ தலைவராக சீனிவாசன் நீடிப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட இரு ஆண்டு தடை, குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோருக்கு வாழ்நாள் தடை எனப் பரபரப்பானது. இந்த இரு அணி வீரர்களை புனே, ராஜ்கோட் அணிகள் பங்கிட்டுக்கொண்டன!

2015-ல் தமிழகத்தை தடதடக்கவைத்த டாப் 50 சம்பவங்கள்

சென்னை, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஜூலை 1 முதல் கட்டாய ஹெல்மெட் சட்டம் கொண்டுவரப்பட்டது. `இதனால் ஹெல்மெட் கடைகளில் திருவிழாக் கூட்டம். `ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டால் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி புத்தகம் பறிமுதல் செய்யப்படும். புதிய ஹெல்மெட் வாங்கியதற்கான ரசீதும், 100 ரூபாய் அபராதமும் செலுத்திய பிறகே, ஆவணங்கள் திருப்பித் தரப்படும்’  எனக் கடும் விதிமுறைகள். இதனால் சென்னை எங்கும் ஹெல்மெட் தலைகள். தலைநகரில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 700 ஹெல்மெட் வழக்குகள் பதிவுசெய்யப்படுகின்றன!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் தமிழர்களை விடுவிக்கும் மாநில அரசின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்றது மத்திய அரசு. பலகட்ட விசாரணைகளுக்குப் பிறகு, `சாதாரண  வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்றவர்களை மாநில அரசுகள் விடுதலை செய்யலாம். இந்த உத்தரவு ராஜீவ் கொலை வழக்குக்குப் பொருந்தாது’ என  உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்தது. இது, விடுதலையை எதிர்பார்த்திருந்தவர்களுக்குப் பேரதிர்ச்சியை உண்டாக்கியது!

2015-ல் தமிழகத்தை தடதடக்கவைத்த டாப் 50 சம்பவங்கள்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் காலமானார். மேகாலயா ஐ.ஐ.எம் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அப்துல் கலாமுக்கு, மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்த கலாம், சிகிச்சை பலனின்றி காலமானார். இவரின் மறைவை தங்கள் வீட்டில் நடந்த ஓர் இழப்புபோல நாடே துக்கம் அனுசரித்தது. ராமேஸ்வரத்தில் இவரை அடக்கம்செய்த இடத்தில் மண்டபம் கட்டக்கூட தாமதப்படுத்திவருவதுதான் வேதனை!

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி, போராட்டம் நடத்திய சசிபெருமாள் மரணமடைந்தார். மது போதைக்கு எதிரான மக்கள் இயக்கத் தலைவரும் காந்தியவாதியுமான சசிபெருமாள், மார்த்தாண்டம், உண்ணாமலைக்கடை அருகில் உள்ள 150 அடி உயரம் உள்ள தனியார் செல்போன் டவரின் உச்சியில் ஏறிச் சென்று  மயங்கிச் சரிந்தார். தீயணைப்புப் படையினர் அவரைக் கீழே இறக்கும்போதே அவர் இறந்ததாக பின்னர் அறிவிக்கப்பட்டது!

2015-ல் தமிழகத்தை தடதடக்கவைத்த டாப் 50 சம்பவங்கள்

மதுரை அருகே கீழடியில் 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால நகரத்தின் மிச்சங்கள் கண்டறியப்பட்டன. தொல்லியல் எச்சங்கள் கொண்ட ஊர்கள், வைகை நதி பள்ளத்தாக்கில் அடையாளம் காணப்பட்டன. அவற்றுள் ஒன்று கீழடி. அதில் மட்கலன்கள், தொல்பொருட்கள், சுட்டச் செங்கற்கள் கிடைத்துள்ளன. தனி நபர்களின் பெயருடன் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்பு கொண்ட மண்பாண்ட ஓடுகளும் கிடைத்துள்ளன. `தமிழர்களின் பழங்கால வாழ்வையும் கலாசாரத்தையும் மேலும் துல்லியமாக அறிய, கீழடி ஆய்வு பெரிதும் உதவும்’ என்கிறார்கள் நிபுணர்கள்!

சில இளைஞர்கள், நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் வாட்ஸ்அப் வீடியோ தீயாகப் பரவியது. திருவண்ணாமலை, போளூர் வட்டம், மேல்சோழங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அந்த இளைஞர்களை போலீஸ் தேடிச் சென்றால் அதில் ஒருவன், அந்தச் சிறுவனின் தாய்மாமன் என்பது இன்னும் அதிர்ச்சி. குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு செந்தில், பிரேம்குமார் என்ற இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர்!

2015-ல் தமிழகத்தை தடதடக்கவைத்த டாப் 50 சம்பவங்கள்

டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி இந்த ஆண்டு முழுவதும் ஏராளமான போராட்டங்கள். திருச்சியில் ஒரு டாஸ்மாக் கடையில் புகுந்து நாம் தமிழர் கட்சியினர் அடித்து உடைக்க, தஞ்சாவூர் அருகே சில கிராமங்களில் மக்கள் திரண்டு கடைகளை மூடினார்கள். ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் கோவையில் ஒரு டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்க, கலிங்கப்பட்டியில் வைகோ தலைமையில் டாஸ்மாக் உடைக்கப்பட்டது. கல்லூரி மாணவர்களும் அதிகளவில் பங்கேற்க ஒரு மாதக் காலத்துக்கு மது எதிர்ப்புக் குரல் ஓங்கி ஒலித்தது!

திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுப்ரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் புயலை ஏற்படுத்தியது. ‘அவரது மரணத்துக்கு, உயர் அதிகாரிகளின் மிரட்டலே காரணம்’ என, அவரது தோழியும் கீழக்கரை டி.எஸ்.பி-யுமான மகேஸ்வரி புகார் கூற, காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு. `ஓமலூர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் மூன்று பேரை குண்டர் சட்டத்தில் போடுமாறு, உயரதிகாரி கொடுத்த அழுத்தம்தான் விஷ்ணுப்ரியாவின் தற்கொலைக்குக் காரணம்’ எனச் சொல்லப்பட்டது!

2015-ல் தமிழகத்தை தடதடக்கவைத்த டாப் 50 சம்பவங்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு, பணி நியமனம் வழங்க வலியுறுத்தி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் இருவர் தீக்குளிக்க முயற்சி செய்ய அவர்களை அடக்குவதற்கு காவல் துறை நடந்துகொண்ட முறை விமர்சிக்கப்பட்டது. அந்த வழக்கில், மனுதாக்கல் செய்த பள்ளிக் கல்வித் துறைச் செயலர் சபீதா, மாற்றுத்திறனாளிகளுக்குக் கற்றல் குறைபாடு உள்ளது எனத் தெரிவித்ததை நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது. சபீதா நேரில் ஆஜராகி மன்னிப்பும் கேட்டார்!

கொலை, கொள்ளை, வழிப்பறி... என இந்த ஆண்டு சட்டம்-ஒழுங்கு சந்திசிரித்தது. சென்னையில் வழக்குரைஞர் ராஜா படுகொலை, அதிமுக கவுன்சிலர் அம்பத்தூர் குரு வெட்டிக்கொலை, வேலூர் ரௌடி ‘அதிரடி’ மகா பொதுமக்கள் மத்தியில் கொலை, திருபுவனம் அருகே தாய், மகன் உள்பட 4 பேர் எரிக்கப்பட்டது... என எக்கச்சக்கமான கொலைகள் ஒருபுறம் என்றால், முகமூடி, ஹெல்மெட் கொள்ளையர்கள் எந்தப் பயமும் இன்றி இயங்கினர். ராமஜெயம் கொலை வழக்குபோல முடிவு காணப்படாத வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்தன!

2015-ல் தமிழகத்தை தடதடக்கவைத்த டாப் 50 சம்பவங்கள்

இந்த ஆண்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்தது. துவரம் பருப்பு விலை கிலோ 200 ரூபாயைத் தாண்ட, சாம்பார் சாதமே காஸ்ட்லி ஆனது. உளுந்து ஒரு கிலோ 170 ரூபாய், பாசிப் பருப்பு 120 ரூபாய், கடலைப் பருப்பு 75 ரூபாய் என அனைத்துப் பருப்புகளும் ஆகாயம் ஏறின. காய்கறிகளின் விலையும் தாறுமாறாக எகிறியது. ஒரு கிலோ வெங்காயம் விலை 100 ரூபாயைத் தொட்டது. தொடர்மழையின் காரணமாக அனைத்து சமையல் பொருட்களுமே விலை உயர்ந்து  மக்களுக்கு கூடுதல் துயரைத் தந்தன!

டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லி, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் கோவன் ‘மூடு டாஸ்மாக்கை மூடு...’ என்ற பாடலைப் பாடினார். இதன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியிடப்பட்டு வைரலானது. திடீரென திருச்சியில் நள்ளிரவில் வீடு புகுந்து கைதுசெய்யப்பட்ட கோவன் மீது, தேசத்துரோகப் பிரிவு வழக்கு பதிவுசெய்து புழல் சிறையில் அடைத்தார்கள். ஜாமீனில் வெளியே வந்த கோவன், சிறை வாசலிலேயே ‘ஊரெங்கும் மழைவெள்ளம் தத்தளிக்கிது தமிழகம் / இது யாரோட குத்தம்னு கேட்காத சிறைவாசம்’ எனப் பாடி அரசை அதிரவைத்தார்!

2015-ல் தமிழகத்தை தடதடக்கவைத்த டாப் 50 சம்பவங்கள்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட தமிழகக் கடலோர மாவட்டங்களில் வரலாறு காணாத மழை. கடந்த 100 ஆண்டுகளில் பெய்யாத மழை. இதற்கு இடையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முன்னறிவிப்பு இன்றி அளவுக்கு அதிகமான நீரைத் திறந்துவிட்டதால் சென்னையின் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளத்தின் இந்த வீரியத்தை இதற்குமுன் பார்த்திராத சென்னைவாசிகள் கையறுநிலையில் செய்வதறியாது தவித்தனர். தலைநகரம் தனித் தீவானது. இந்த மழை ஏற்படுத்திய இழப்பு அளவிட முடியாதது. `செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிடாமல் அரசு காலம் தாழ்த்தியதே இந்த வெள்ளத்துக்கு காரணம்’ என்றனர் நடுநிலையாளர்கள்!

சென்னை வெள்ளம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த நடிகர் கமல்ஹாசன், `மக்கள் வரிப்பணம் எங்கே?’ எனக் கொந்தளித்தார். உடனே ஓ.பி.எஸ் அறிக்கைவிட்டு  ‘கமல் பெரிய நடிகர் என்பதற்காக அவரது பிதற்றலைச் சகித்துக் கொண்டிருக்க முடியாது’ என வசை பாட, ‘என் கருத்து, மக்களின் அவதியைப் பற்றிய புலம்பலே. கடிதத்தில் எங்கும் தமிழக அரசு எனக் குறிப்பிடவில்லை. இதனால் யார் மனமும் புண்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்கவும் கடமைப்பட்டுள்ளேன்’ என ஆம்லேட்டை அலேக்காகத் திருப்பிப் போட்டார் கமல்!

2015-ல் தமிழகத்தை தடதடக்கவைத்த டாப் 50 சம்பவங்கள்

சிம்பு-அனிருத் கூட்டணியின் ‘பீப்’ பாடல் இந்த ஆண்டின் கேவல சர்ச்சை. பெண்ணியவாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், திரைத் துறையினர், அரசியல் கட்சியினர் என பலரும் கண்டனம் தெரிவிக்க, மாநிலம் முழுவதும் பல இடங்களில் வழக்குகளும் பதிவாகின. ‘கூடா நட்பு’ என டி.ஆர் சென்டிமென்ட் சிந்த, ‘அவன் அப்படி என்ன தப்பு பண்ணிட்டான்?’ என ஆவேசப்பட்டார் உஷா ராஜேந்தர். சிம்புவோ, ‘இது என் தனிப்பட்ட உரிமை. நான் பெர்சனலா போட்ட பாட்டு. யாரோ திருடி ரிலீஸ்  பண்ணிட்டாங்க’ என்றார்!