Published:Updated:

2015 டாப் 25 பரபரா

விகடன் டீம், ஓவியங்கள்: கண்ணா

`மை நேம் இஸ்  கண்ணீர் செல்வம்!’

2015 டாப் 25 பரபரா

‘துளசி வாசம்கூட மாறும்... ஆனா, இந்த தவசி வாசம் மாறாதுடா!’ என எந்நாளும் தும்பைப் பூவாட்டம் பணிவு வணக்கத்துடன் வலம்வந்தார் பன்னீர்செல்வம். ‘முதல்வர் நான்தான். ஆனா, அதைப் பத்தி நான் பேச மாட்டேன்’ என அவர் போட்ட ஆலுமா டோலுமாவுக்கு ஆல்-இந்தியாவே அடக்க முடியாமல் சிரித்தது. லெட்டர் பேடு தொடங்கி ஐ.டி கார்டு வரை ‘முதலமைச்சர்னா அது அம்மாதான்... அதுவரைக்கும் நான் சும்மாதான்!’ எனக் கண்ணீர் வடித்துக் கதறினார். முதலமைச்சராகப் பதவியேற்கும் போது கதறி அழுது பண்ணின காமெடி பத்தாது என, `பிரேமம்’ நிவின் பாலி டைப்பில் அவர் வளர்த்த தாடி தனி எபிசோடு. அம்மா விடுதலை யானதும் மொட்டை போட்டு நேர்த்திக் கடன்கள் அடைத்து `நல்லவேளை ரிலீஸாகிட்டாங்க’ என எஸ்கேப் ஆனார்.  `வாட்ஸ்அப்’ அம்மாவின் செல்லப்பிள்ளை பன்னீர்செல்வம் தான், இந்த ஆண்டின் பெஸ்ட் சென்டிமென்ட் செல்லக்கிளி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தீச்சட்டி மினிஸ்டர்ஸ்!

2015 டாப் 25 பரபரா

`தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க’ என கண்ணு சிவக்கச் சொன்னது கறுப்பு எம்.ஜி.ஆர் என்றாலும், மாவட்டச் செயலாளர்கள் முதல் மந்திரிகள் வரை பலரையும் மாத்தி மாத்தித் தூக்கியடித்தது மேடம்தான். ஐ.டி கம்பெனிகளில்கூட நோட்டீஸ் பீரியடு உண்டு. ஆனால், அமைச்சர்கள், ஜெயா டி.வி ஸ்க்ரோல் நியூஸ் பார்த்துத்தான், தான் `மந்திரியா... எந்திரியா?’ என அறிய முடியும். நான்கு வருடங்களில் 22 முறை மியூஸிக்கல் சேர் நடத்தியது எல்லாம் கொக்கரக்கோ கும்மாங்கோ. `இன்னும் ரெண்டுவாட்டி எக்குத்தப்பா எந்திரிக்கவெச்சா ராசி நம்பர் 24 வந்துடும்’. இத்தனை கலவரத்திலும் ஜெயிலுக்குப் போன அம்மாவை மீட்க, அலகு குத்தி, குண்டம் எடுத்து, தாடி வளர்த்து தர்மத்தைத் தூக்கிநிறுத்த அண்டர் கவர் ஆபரேஷன்களில் உருண்டு புரண்ட அமைச்சர்களை மீம்ஸ் பொங்கலில் கொதிக்கவிட்டது, தாறுமாறு தமிழ்நாடு. கோர்ட் பக்கம் கணக்கில் ஒரு சைபரை காக்கா தூக்கிக்கொண்டு போக, ஒருவழியாக முடிவுக்கு வந்தது அமைச்சர்களின் வேண்டுதல் மேளா. இருந்தாலும் அந்தத் ‘தெய்வத்தை மனிதன் தண்டிக்கலாமா?’வை நினைச்சா, இப்பக்கூட இடுப்பு அளவு தண்ணீரில் தத்தளிக்கிற மாதிரியே ஒரு ஃபீலிங்!

அட்டாக் அழகிரி!

2015 டாப் 25 பரபரா

உண்மையிலேயே அழகிரி விமானம் ஏறி வெளிநாடுதான் போகிறாரா... இல்லை ஏர்போர்ட் வாசல்ல பேட்டி கொடுத்துட்டு, எகிறிக்குதித்து திரும்பவும் வீட்டுக்கே திரும்பிவிடுகிறாரா என ரொம்ப நாளா டவுட். ‘கலைஞர்தான் அடுத்த சி.எம்.’, ‘விஜயகாந்தோட கூட்டணி சேர்ந்தா... வெளங்காது’, ‘ஸ்டாலின் பயணமா, ஹாஹாஹா காமெடி டைம்’னு அசால்ட் பேட்டிகள் அள்ளிவிட்டு ஆட்டையைக் கலைத்தார் ‘அ’னா.  `அய்யோ அழகிரியில கண்டம்’னு ஆளாளுக்குச் சிதறி ஓட, ‘உடன்பிறப்பே நான் செங்கல்பட்டு தாண்டியாச்சு... தொண்டர் படை என்னாச்சு?’ என போன இடமெல்லாம் சல்லடைபோட்டுத் தேடினார் அழகிரி. ‘ஆமா, லண்டன்ல இருந்துதான் பேசுறேன். என்னாது ஸ்டாலின் நடைப்பயணம் போறாரா...  வாவ் வாட் எ ஃபன்?’ என செம கலாய் கலாய்த்தார். தொலைக்காட்சி கேமராக்கள் அளவுகூட தொண்டர்களைக் காணோம் என்பதில் அண்ணனுக்கு அவ்வப்போது வியர்த்துக்கொட்டியது. ‘முடியட்டும்... விடியட்டும்’ என ஸ்டாலின் வேர்க்க விறுவிறுக்க நடந்தால், ‘ஆமாமா முடிஞ்சிரும்... முடிஞ்சுட்டாலும்...’ என ‘அது... இது... எது’ நடத்தினார் பழகிரி!

ஒன்மேன் காமெடி சேனல்!

2015 டாப் 25 பரபரா

’முருகன்தான் நம் முப்பாட்டன், தமிழகம்தான் நம் மதம். ஸ்டார்ட் மியூஸிக்... இனி நாமெல்லாம் இதைத்தான் ஃபாலோ பண்ண வேண்டும்’ என சீமான் போட்ட ஸ்டாண்ட்அப் காமெடியில் மதுரை முத்து, ஈரோடு மகேஷுக்கு எல்லாம் எக்கச்சக்கமாகப் புரையேறியது. ‘இந்தத் தண்ணி இருக்கே... தண்ணி, அதைக் கண்டுபிடிச்சவன் தமிழன்தான். ஆயிரம் வருஷம் முன்னாடியே சொல்லிட்டான், இந்த வெந்நீ இருக்கே... வெந்நீ அதையும் அவன்தான் கண்டுபிடிச்சான். காலையில குளிக்கலைன்னாலும் தமிழன்டா!’ என முஷ்டியை மடக்கி முகத்துக்கு நேராக நீட்டி, ‘ஆமாவா இல்லையா... சொல்லு சொல்லு’ என அச்சுறுத்த `அய்யோ... அம்மா’ என அலறி ஓடியது தம்பிமார் படை.  பச்சை சட்டையும் கையில் வேலுமா மீசைவெச்ச முருகனாட்டம் வந்து நின்றவர், ‘எம் பாட்டன் ராவணனை ஜண்டுபாம் விளம்பரத்துல நடிக்கவெச்சுட்டாங்க ப்ரோ. இதைத் தட்டிக்கேக்கணும்’ என அல்லோலகல்லோலப்படுத்திய சீமான், இந்த ஆண்டின் ஒன்மேன் காமெடி சேனல்!

பேய், பிசாசு, ஹிட்டு, மணி... மணி!

2015 டாப் 25 பரபரா

சுவிஸ்ல இருந்து சுடுகாட்டுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டை மாத்திப் படமெடுக்க ஆரம்பிச்ச கோடம்பாக்கம் கோஷ்டி கானாவின் கோரப்பிடியில், இந்த ஆண்டும் சிக்கித் தவித்தது சினிமா உலகம். ‘காஞ்சனா’ கலெக்‌ஷனில் தொடங்கியது இந்தப் பூச்சாண்டி ஆட்டம்.  இது சிரிப்பு மூட்டுற பேய், இது செக்ஸியான பேய், இது காமெடிப் பேய், இது கலாய்க்கிற பேய் என விதவிதமாகப் பயமுறுத்தியது பேய்ப் படக் கொடுமைகள். ஜம்மெனப் பாட்டு எழுதிக்கொண்டிருந்த பா.விஜய் `ஸ்ட்ராபெரி’ பேயுடன் பூச்சாண்டி காட்ட, `டார்லிங்’ பேயோடு கட்டிப்பிடி கலகலப்பூட்டினார் பால்வாடி ஜி.வி.பிரகாஷ். `நானும் பேய்தான்’ என நயன்தாராவையும் விட்டுவைக்காத பேய்களுக்கு மத்தியில், `கொஞ்சம் பயப்படுங்க பாஸ்’ என்ற லோ பட்ஜெட் பேய்களும் அச்சுறுத்தியது.  ‘டார்லிங் 2’, ‘அரண்மனை 2’னு `அடுத்த வருஷமும் கன்ட்னியூ ஆகுதுஜி’னு பீதி கெளப்புதுக இளம் இயக்குநர்கள் பட்டாளம்!

காங்கிரஸ் குர்குரே...

2015 டாப் 25 பரபரா

ஸ்கூல் பையன்களைப்போல தலைவர் நாற்காலிக்குக் கீழே தாறுமாறு பட்டாசு கொளுத்தும் கதர் பழக்கம் இந்த ஆண்டும் தொடர்ந்தது. `காங்கிரஸுக்கு இளங்கோவன்தான் தலைவர். ஆனா, அதைப் பத்தி எங்களுக்கு எதுவும் தெரியாது’ என ஒட்டுமொத்த காங்கிரஸ் கோஷ்டிகளிலும் கலகலப்பு. ஜெயலலிதா - மோடி சந்திப்பைப் பற்றி எக்குத்தப்பாக இளங்கோவன் வார்த்தைகள் விட, கடுப்புக் காவடி தூக்கினார்கள் ர.ரத்தங்கள். கொடும்பாவி கொளுத்தி, ஊர்வலம் போய், சத்தியமூர்த்தி பவன் மீது கல் வீசி அம்மா ஆக்‌ஷன் படம் ஓட்டினார்கள். `வெளியில மட்டும்தான் வில்லங்கம’்னு லேசா அசந்து இளங்கோவன் தூங்க, அவர் மூக்குக்குள் குச்சியைவிட்டு ஆட்டினார் தங்கபாலு. ‘கோவனை ஆதரிக்கிறார் இளங்கோவன். இது சாமிக்குத்தம்’ என டெல்லி வரை போய் வத்திவைத்தார். அடுத்த ரெண்டு வாரத்திலேயே வர்த்தகர் அணித் தலைவர் வசந்தகுமாரை பார்சல் கட்டிப் பதவியைவிட்டு இறக்கினார் ஈ.வி.கே.எஸ். போதாக்குறைக்கு விஜயதரணியோடும் பஞ்சாயத்தைக் கூட்ட, ஏற்கெனவே ஓவர் மேக்கப்பில் சிவந்திருக்கும் விஜயதரணி இன்னும் சிவந்தார்!

இது ஆபரேஷன் புலி!

2015 டாப் 25 பரபரா

`சின்னதம்பி’ பிரபுவுக்கு அப்புறம் `தாலி’ன்னா என்னனு தெரியாத இன்னொருத்தர், சுப்பிரமணியன்சுவாமி. கல்யாணம் பண்ணிவைக்க தாலி எடுத்துக் குடுக்கச் சொன்னா, அதை அப்படியே வாங்கி, பொண்ணு கழுத்துல கட்டப்போயி இவர் பண்ணின சேட்டையைப் பார்த்தா சின்னதம்பியே சிரிச்சுடுவாப்ல! ‘எனக்கு அமெரிக்க உளவாளிகள்கிட்டருந்து தகவல் வந்துடுச்சேய்ய்’னு ட்விட் போட்டார்னா... அடுத்த ட்வென்டி ஃபோர் ஹவர்ஸ் நல்ல டைம்பாஸ் கியாரன்டி. `அவாளுக்கு உடம்புக்கு முடியலை. சீக்கிரமே எவிடென்ஸை ரிலீஸ் பண்றேன்’, `மீனவா... எதுக்கு மீன் பிடிக்கறா? அதனாலதான இலங்கை மிலிட்டரி சுடறா’னு சுப்பிரமணியன்சுவாமி ஆண்டு முழுக்க போட்ட டண்டணக்கா எல்லாமே கடுப்ஸ். `யுனிவர்சிட்டி ஸ்டூடன்ட்லாம் பூரா நக்ஸலைட்டு. தூக்கி உள்ள போடுங்க’னு போர் அடிக்கும்போது போருக்கு அழைப்பது, `மசூதிகள் மதம் சார்ந்த இடம் இல்லை’ என்று உளறிவைக்க, `கேஸ் போட்டு கேட்டை மூடுறா’ என்றது இஸ்லாமியர் தரப்பு. `அம்மாவுக்கு அல்சர்... தொண்டையில ஆபரேஷன்’ என சாமி அலும்பு பண்ண, `இந்தா புடிங்கோ கிஃப்ட்டு’ என அவதூறு வழக்கை பார்சல் பண்ணியது அம்மா குரூப்ஸ்!

டூ மினிட்ஸ்ல திரும்பி வந்துட்டேன்!

2015 டாப் 25 பரபரா

ஒன்ஸ் அப்பான் எ டைம் மேகிதான் குட்டிப் பாப்பாக்களுக்குப் புடிச்ச தீனி,  அன்ஃபார்ச்சுனேட்லி அதுல இருந்தது எக்கச்சக்க ஆணி.  மோனோசோடியம் குளுக்கோமேட், ஈயம், இத்தாலி, பிரேசில், ஹிட்லர்... என எக்கச்சக்க விஷயங்களை மேகி பாக்கெட்டுக்குள் இருந்து பரிசோதனைக் கூடங்களில் எடுக்க எடுக்க... எவரெடி பேட்டரி தவிர எல்லாமே வந்தது.  `போடுறா தடையை... மூடுறா கடையை’ என உயர் நீதிமன்றம் குதிக்க, `துரோகிடா இந்த மேகி’ என ஆல் இந்திய அம்மாக்கள் ஊரெல்லாம் மேகியைப் போட்டு எரிக்க...  ஒன் மினிட்னு நெஸ்லே கம்பெனி  320 கோடி ரூபா ஸ்டாக்கை ராவோட ராவா ஒரு பாக்கெட்கூட மிச்சம் இல்லாமல் அழிச்சு,  எரிச்சு, கரிச்சு சாம்பலாக்கி ஊதியது.  ஆனா பாருங்க... அங்கே வெச்சான் ட்விஸ்ட்டு. அப்படியே ஜஸ்ட் லைக் தட் சத்தமே இல்லாமல் கோர்ட்டில் போராடி வக்கீல்களை வெச்சு வாதாடி தரச்சான்று வாங்கிட்டாங்க மறுபடியும். இப்போ `மேகியைப்போல் உத்தமமான பண்டம் உலகத்திலேயே இல்லை’ என இந்திய அரசே சொல்லிடுச்சு. `நம்ம மேகி நல்ல மேகின்னா, அதை ஏன் பாஸ் அர்ஜென்டா எரிச்சீங்க?’னு யாருமே கேக்கலை கடைசிவரைக்கும்!

மீம்ஸ் டார்லிங்!

2015 டாப் 25 பரபரா

மீம்ஸ் மச்சான்களின் ஆல்டைம் டார்லிங்காக வலம்வந்தார் கேப்டன். டெல்லிக்குப் போய் ஜெயா டி.வி நிருபரிடம் `தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க’ என நாக்கைக் கடிக்க, ஆண்டு முழுக்க கேப்டனின் பிரஸ்மீட் எல்லாம் வைரல் வகையறாக்கள். சுந்தர் பிச்சை சி.ஈ.ஓ ஆகிவிட்டார் என மைக்கை நீட்ட, `கூகிள்... கூகிள்...’ எனக் கூவி கேப்டன் ரகளை கூட்டினார். `யோகா டே கொண்டோடுவோம், வாங்க ப்ரண்ச்’ எனத் தொண்டர்களைத் திரட்டி பண்ணினது எல்லாம், `கெத்தவிடாத மாமா, கெத்தவிடாத மாமா’ மொமன்ட்ஸ். யோகா செய்துகொண்டே காட்டிய நவரச பாவனைகளில் நூறு சிவாஜி, முந்நூறு ஏவி.எம்.ராஜன்கள் தெரிந்தார்கள். அதே விஜயகாந்த், அப்துல் கலாம் மரணத்துக்குப் போய் கதறி அழுததும் டியூட் மனதைக் கலங்கடித்தது. `பாருங்கடா பாசத்தலைவன்’னு அதுக்கும் போட்டான் தமிழன் ஒரு மீம்ஸ். மழை வெள்ளத்தில் முழங்கால் தண்ணியில் வேட்டியை மடிச்சுக்கட்டி இறங்கி, ‘ஏய் புள்ள... இந்தா பால்பாக்கெட்டை எடுத்துப் பாதிக்கப்பட்டவருக்குக் கொடு’னு நிவாரண வேலைகளிலும் லைக்ஸ் அள்ளத் தவறலை பாசக்கார கேப்டன்!

 அதிர்ஷ்டக்கார ஆர்.கே நகர்!

2015 டாப் 25 பரபரா

அதிர்ஷடக்கார மக்கள் என்றால், அது ஆர்.கே நகர் மக்கள்தான்! அம்மாவை அரியணையில் ஏற்ற, ஆர்.கே நகர் தேர்தலுக்காக அமைச்சர்கள் எல்லோரும் வரிசையில் போய், ‘தங்கமே... உன்னத்தான் தேடி வந்தேன்’ எனப் போய் நிற்க, ஏரியா மக்கள் எல்லாம், ‘ச்சூ ச்சூ பக்கத்து வீடு பாருப்பா’ எனத் துரத்தியடித்தார்கள். ஆனாலும் அடிமைவம்ச அமைச்சர்கள் ஆல் வேலைகளுக்கு எண்டு கார்டு போட்டு அதிரடி ஆக்‌ஷனில் இறங்கி, ஆர்.கே நகர் சாக்கடைகளுக்கு எல்லாம் சென்ட் அடித்து, ரோட்டுக்கு எல்லாம் பெயின்ட் அடித்து, மக்களுக்கு ஃபேன் பிடித்துக் குஷிப்படுத்தினார்கள். ‘நான்தான் உங்கள் அன்புச் சகோதரி அம்மா ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன்’ எனக் கைகூப்பி மாண்புமிகு மதர் ஒரு பக்கம் நிற்க, டிராஃபிக் ராமசாமி இன்னொரு பக்கம் டூப்ளிகேட் காந்தியுடன் தெருத் தெருவாக லைவ் ஷோ பண்ணி மக்களுக்கு என்டர்டெயின்மென்ட் வழங்க, தேர்தல் நாளில் மாண்புமிகு மக்கள் குத்துன குத்துல அம்மா ரெக்கார்டு பிரேக் பண்ணாங்க. ஆனா, அதுக்கு அப்புறம் அவங்களை ஆளையே காணோம்!

`நாங்களும் முதல்வர்தான்’!

2015 டாப் 25 பரபரா

ஒபாமா போஸ்டரை ரீமேக் பண்ணி `மாற்றம் முன்னேற்றம்’ என முதல்வர் வேட்பாளர் வண்டியில்  முதல் ஆளாக கர்ச்சீஃப் போட்டு இடம்பிடிச்சது அன்புமணி. தைலாபுரத்தில் இருந்து தாறுமாறாகக் கிளம்பின எக்ஸ்பிரஸ், அப்படியே நாள்பட நாள்பட பேசஞ்சர் ஆகி பஞ்சர் ஆனது. எப்போது எல்லாம் தமிழன் டயர்டாகிறானோ, அப்போது எல்லாம் விதவிதமா காமெடி போஸ்டர்கள் அடித்துக் கலக்கினர் மாம்பழக்காரர்கள். `முதல் நாள் முதல் கையெழுத்து’ என ஒன் சைடு நோட் முழுக்கக் கையெழுத்து  போட்டுப் பழகினார் சின்ன டாக்டர். இவரோட தகிடத் தகிடவைப் பார்த்து சும்மா இருக்குமா சுகர்ஃப்ரீ கூட்டம்?  நாங்களும் முதல்வர் வேட்பாளர்தான் என ஸ்டாலின் இறங்க... ‘அப்படியா மை சன்... சொல்லவேல்ல?’ என லந்து பண்ணி மீம்ஸ் போட்டார் கலைஞர். `முடியட்டும்... விடியட்டும்’ என ஸ்டாலின் வாக்கிங் கிளம்ப, ஊழலை ஒழித்து முடித்து டயர்டான மதுரைக்கார மச்சான், மாநாடு போட்டு மஸ்து காட்டினார். இந்தத் தமாசுகளுக்கு நடுவில் சீமான் மூங்கில் தெப்பத்தில் முதல்வர் கனவுடன் களத்தில் இறங்க... `நீ யாருப்பா, வண்டிக்கு புதுசா இருக்கு?’ என ஒரு சவுண்டு. திரும்பிப் பார்த்தால் வைகோ.  திருமா, `தா.பா-வைக் கூப்பிடுங்க. இதுதான் கூட்டணிச் சாப்பாடு’ என சாம்பார் வாளியோடு களம் இறங்க... ஆக மொத்தம் 2015-ல் தமிழ்நாட்டுக்கு 215 முதல்வர் வேட்பாளர்கள்!

அர்னால்டு  இல்லைன்னா அக்‌ஷய்குமார்!

2015 டாப் 25 பரபரா

‘அண்ணே, எப்பண்ணே வருவீங்க?’ என்று அர்த்தராத்திரியில் கும்பலாக யாரோ போனடிக்க... ‘கண்ணா நான் எப்போ வருவேன்னு எனக்கே தெரியாது. `கபாலி’ல பதில் சொல்றேன்’ என சூப்பர்ஸ்டார் கலங்கடிக்க... `நீங்க அதுக்கு சரிப்பட்டு வர மாட்டீங்கன்னு எங்களுக்குத் தெரியும். நாங்க வந்திருக்கறது வசூல் பண்ண’ எனப் பற்றவைத்தது `லிங்கா’வினால் வாழ்வு இழந்த விநியோகஸ்தர்கள் சங்கம். வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம், ரஜினி வீட்டு வாசலில் பிச்சை எடுக்கும் போராட்டம் என ரவுண்டுகட்ட, அவர் ஏதோ தொகை கொடுத்து செட்டில் பண்ண... அதன் பிறகும் வந்த கூட்டத்தைக் கண்டு அரண்டு, கபாலி ஷூட்டிங்குக்கு மலேசியா பறந்தார் ரஜினி. சென்னையே வெள்ளத்துல கிடக்க, ‘இந்த ஏழை மக்களுக்கு ஏதாவது செய்யணும்’ என 10 லட்ச ரூபாயை அள்ளித் தந்தார். ‘ஓ மை தலைவா, அடுத்த மாச மளிகைச் செலவுக்கு என்ன பண்ணுவீங்க? இந்தாங்க கை செலவுக்கு’ என ரசிகர் ஒருவர் 10 ரூபாயை மணியார்டர் அனுப்பினார்.  ‘2.0’ எடுப்போமா ஃபிரெண்ட்ஸ், அர்னால்டுதான் வில்லன்’ என ஷங்கர் ஸ்டேட்டஸ் போட, ‘செஞ்சிருவேன்’ என அர்னால்டு ஆஃப்லைனில் கிளம்ப... ‘அர்னால்டு இல்லைனா அக்‌ஷய்குமார்... கூல்ல்ல்’ என கிளம்பிவிட்டது ஷங்கர் டீம்!

இன்னும் கத்து... டி.ஆர்.பி ஏத்து!

2015 டாப் 25 பரபரா

டி.வி ஷோவில் நாலுவாட்டி தலையைச் சிலுப்பி காரசாரமாகக் கத்தினால் போதும், நீங்களும் ஆகலாம் சமூக ஆர்வலர். ஈஸி ரூட் போட்டுத் தந்து,  தலைமைக்கு தட்கல் போட்டது புது பாணி. போன வருடம் வரை  பேசித் திரிந்த பலர் கட்சியில் குட் பொசிஷனில் செட்டில் ஆகிவிட, இதுதான்டா செம ரூட் என ஆளாளுக்குக் கருத்து சொல்ல இறங்கியது, இந்த ஆண்டில் உருவான புதிய தொழில் வாய்ப்பு. கருத்துக் கதகளி ஆடி நாவால் நடனம் புரியும் சமூக ஆர்வலர்கள்தான் தமிழ் செய்தி சேனல்களின் அலாவுதீன் பூதங்கள். `உரச உரச தீப்பொறி பறக்கும்... வெறி ஏத்த ஏத்த  டி.ஆர்.பி தெறிக்கும்’ எனக் கொண்டாடித் தீர்த்தன செய்தி சேனல்ஸ். ‘மழை வர்றதுக்கு அம்மா என்ன பண்ணுவாங்க, வருண பகவான்ட்ட போன்லயா சார் பேச முடியும்?’ என அதிர்ச்சி கிளப்பிய சி.ஆர்.சரஸ்வதி, அ.தி.மு.க-வின் ரிவால்வர் ரீட்டா. அவரோடு ஜோடிபோட்ட ஆவடி குமார் அ.தி.மு.க-வின் அதிர்ச்சி வைத்தியத் தோட்டா. ‘இவரு நம்ம கட்சிதாண்ணே... ஏய்ய்ய்ய் இல்லடா இவரு அவிய்ங்க கட்சிடா... ஏய்ய் இவரு அந்தக் கட்சியும் இல்லடா... அதுக்கும்மேல’ என கட்சிக்காரர்களைக் கதறவிட்டார் சுமந்த் ராமன்!

 பஞ்சர் பம்பரம்!

2015 டாப் 25 பரபரா

`ஓப்பன் தி டாஸ்மாக்குமா’ பாட்டுக்கு எதிராக ‘குளோஸ் தி டாஸ்மாக்குமா’ என்று போராட்டப் பாட்டு பாடி ஆக்‌ஷன் அவதார் எடுத்தார் வைகோ. `நடையா நடந்து கிடையாய்க் கிடந்து உசிர உட்டு போராட்டம் பண்ணாலும் லைக் என்னமோ நாலைஞ்சுதான் கிடைக்குது’ என நொந்துபோயிருந்த நேரத்தில், `ப்ரோ, உங்க பையன் சிகரெட்டு விக்குறாப்லயாமே’ என நத்தம் விசுவநாதன் புண்ணுக்குள் புகைவிட்டு ஆட்டினார். `என்னதான் ஆச்சு இந்த ஊருக்கு?’ என வைகோவின் முக்கால் தூக்கத்தில் முகேஷ் கனவில் வந்து கிலியைக் கூட்டினார். ஒருவழியாக மக்கள்நலக் கூட்டு இயக்கத்தை அமைத்துவிட்டுத் திரும்பிப் பார்த்தால், தாயகத்தில் இருந்து பத்து, பதினைந்து கிளிகள் பறந்துபோயின. வழக்கம்போல இந்த ஆண்டும் வைகோவின் பம்பரத்தில் எக்கச்சக்க ஆக்கர் குத்தி என்டர்டெயின்ட்மென்்ட் பண்ணியது அறிவாலயம்!

மீட்பர் ஐ.ஏ.எஸ்!

2015 டாப் 25 பரபரா

`ரட்சகன் பார்ட்-2 எடுக்குறோம். அதுல இயேசுவையே ஹீரோவாக்குறோம்; பின்னுறோம்; தூக்குறோம்’ என முழிச்சிட்டிருக்கும்போதே ஆன்மிக ஆபரேஷன் செய்தார் உமாசங்கர் ஐ.ஏ.எஸ். ஜீவிக்கிறார், ரட்சிக்கிறார், காக்கிறார் என வீதி வீதியாகப் பிரசங்க பூஸ்ட் குடித்த மதயானையாக வலம்வந்தார். பேசிக்கொண்டிருக்கும்போதே `ஒன் மினிட்.. வாட்ஸ்அப்ல இயேசு வந்திருக்கார’் என திடுக்கிடவைத்தார். `பூகம்பம் வரும்னு எனக்கு பத்து வருஷத்துக்கு முன்னாலயே தெரியும்; சுனாமி வரும்னு ஒன் வீக் பிஃபோர் ஐ நோ’ என அவர் போட்ட போடு, சிவில் சர்வீஸ் சிரிகிரி. `ஏன் பாஸ், அதான் தெரியுமே... அப்ப முன்னாடியே சொல்றதுக்கு என்ன?’ எனக் கேட்டால், ‘உத்தரவு வரலை’ என பவ்யப் பந்து வீசினார். `ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி இப்படி எல்லாம் பண்ணலாமா?’ எனக் கேட்டால், `கேட்டவர் மேல் கெட்ட ஆவியை ஏவி, அட்டகாசம் பண்ணிவிடுவாரோ’ எனப் பயந்தே, யாரும் அவர் ஏரியா பக்கம் நுழையவில்லை!

அலுங்குற குலுங்குற!

2015 டாப் 25 பரபரா

‘அடிடா அவனை... புடிடா இவனை என கடைசிவரைக்கும் ஓடி ஓடிப் பிடிச்சதெல்லாம் அப்பாவி பொதுமக்களையா கோப்ப்பால்?’ என  ஊரே முறைக்க, வருஷம் பூரா `நாங்க ரொம்ப பிஸி’ என காவலுக்கு நின்றது என்னமோ டாஸ்மாக் வாசலில்தான்.  கையில் தடியும் கண்களில் நெருப்புமாக `டாஸ்மாக்கை மூடு...’ என நின்ன பசங்களைப் போட்டு மிதிமிதினு மிதிச்ச பாதங்களுக்கு கோல்டன் பூட் விருது மட்டும்தான் கொடுக்கவில்லை. ஏமாந்தவங்களைப் போட்டு நொங்கின நேரம் போக டைம்பாஸுக்கு டிராஃபிக் ராமசாமியாட்டம் யாராவது சிக்கினால், மொத்தமாகத்  தூக்கிட்டுப் போய் பண்ணினது எல்லாம் கும்பமேளா. சாதி சங்க டீலிங் என்றால் பம்முவது... அப்பாவிகள் என்றால் கும்முவது இதுதான் இந்த வருஷம் லோக்கல் போலீஸோட புரொஃபைல்! 

`வாக்கிங் போனா வாக்குகளை அள்ளிரலாம்!’

2015 டாப் 25 பரபரா

அர்த்தராத்திரியில் உங்க ஏரியாவில் கறுப்பு கூலிங்கிளாஸோட கும்பலா ஒருத்தர் நடந்துபோனா, அவர்தான் மு.க.ஸ்டாலின். அவர் போறது ஆட்சியைப் பிடிக்க! இந்த வாக்கிங் ஜர்னியில் ஆன் தி வே ஆளைப்பிடிச்சு `போய்யா’னு தள்ளுறது, மெட்ரோ ரயில்ல பக்கத்துல வந்த உடன்பிறப்பைப் பாசத்தோட அறைஞ்சிட்டு அடுத்த நாளே ` `ஏன் ஷேவிங் பண்ணலை?’னு கன்னத்தைத் தடவிக் கேட்டேன்’ என சால்ஜாப்பு சமோசா விற்றார். செல்ஃபி எடுக்க வந்த ஆட்டோ டிரைவரை அறைய, மீடியா மீட்டரில் எக்கச்சக்கச் சூடு. ‘அடிக்கிற கைதான் அணைக்கும்... அடுப்புல சோறா கொதிக்கும்?’னு அடிச்சவரை அடுத்த நாள் கூப்பிட்டுச் சிரிச்சபடியே செல்ஃபி எடுத்தது `வேதாளம்’ அஜித்தின் டிரான்ஸ்ஃபர்மேஷனுக்கு இன்ஸ்பிரேஷன்். ‘பத்து எண்றதுக்குள்ள’ ரெய்டு. அன்புமணி போட்ட மாற்றம் முன்னேற்றத்தை அப்படியே லைட்டா மாத்தி ‘நமக்கே நாமே’வாக்கி  ஹைவேஸ்ல போகும்போதே `முடியட்டும்... விடியட்டும்’னு மாத்தி மக்களைச் சந்திச்சு, கத்தைக் கத்தையா கம்ப்ளைன்ட் காகிதங்கள் வாங்கி வந்து கோபாலபுரத்தில் குவித்திருக்கிறார். `ம்... இவ்ளோ கஷ்டப்பட்டு என்ன பிரயோஜனம்? இவர்தான் அடுத்த முதல்வர் வேட்பாளர் என கலைஞர் சொல்ல மாட்டேங்கிறாரே பாஸூ... தமாசு தமாசு’ எனச் சிரிக்கிறது எதிரி முகாம்!

நாட்டாமையையே மாத்திட்டாங்க!

2015 டாப் 25 பரபரா

`சண்டக்கோழி’ விஷாலுக்கும் `சண்டமாருதம்’ சரத்துக்கும் சண்டை. அதை ஊரே வேடிக்கை பார்த்தது. மேடைக்கு மேடை கிழிகிழி எனக் கிழித்து ஏகப்பட்ட என்டர்டெயின்மென்ட் வழங்கி னார்கள் நடிகர்கள். ‘சண்டையை, சினிமாவுல பார்த்திருக்கேன்; டி.வி-யில பார்த்திருக்கேன்; திருட்டு வி.சி.டி-யில பார்த்திருக்கேன். நேர்ல பார்த்திருக்கேனா... பார்த்திருக்கேனா?’ எனப் பரவசப்பட்டுப் பார்த்து மகிழ்ந்தது பப்ளிக். கேமராவை விஷால் சட்டைக்குள் மட்டும்தான் வைக்கலை... மத்தபடி ஆயிரம் கேமராக்கள் சூழ ஆர்ப்பாட்டமாக நடந்த தேர்தல், ஜாலி சரவெடி.  ‘ஜி எனக்கும் ஒரு ஓட்டு குடுங்க, வந்து குத்திடறேன்’ என ஆவேச சர்பத் குடித்து ஆல்டைம் பிஸியாக இருந்தான் டாஸ்மாக் தமிழன். பேட் பாய் ராதாரவி மேடை எல்லாம் பேட் வேர்ட்ஸ்களை அள்ளித் தெளிக்க, விஷால் - கார்த்தி குட் பாய்ஸ் குழு சத்தம் இல்லாமல் சரத்துக்கு வைத்தது ஆப்பு. டபிள்யூடபிள்யூஎஃப் சண்டை போட்ட மகாபாரத எனிமீஸ் இருவரும், முடிவுக்குப் பிறகு பாசக்கரம் நீட்டி `லாலாலா’ பாடியது விக்ரமன் பட உய்யலாலா!

ஐயோ... எவ்ளோ பெர்ய்ய்ய பலூன்!

2015 டாப் 25 பரபரா

`இரண்டு லட்சத்து நாப்பதாயிரத்து சொச்சம் கோடிஜி... எறங்குச்சுன்னா பதிமூணு லட்சம் பேருக்கு வேலைஜி.. அப்படியே தட்டுல வெச்சு தகிட தகிடன்னாங்கஜி. நம்பி விசாரிச்சா... ‘அம்புட்டும் வரும்ம்ம்... ஆனா, வராது’னுன்றானுங்கஜி’ என எல்லாருக்கும் செப்டம்பரிலேயே ஏப்ரல் ஃபூல் கொண்டாடியது அம்மா அரசு. ‘அம்மாவின் பர்த் டேட் 24, வரப்போற துட்டு ரெண்டு லட்சத்து நாப்பது... டூ ஃபோர்... டூ ஃபோர்... எப்பூடி?’ என நியூமராலஜி வெறி பிடித்துத் திரிந்தது அ.தி.மு.க வட்டாரம். `அடேங்கப்பா யாரு ப்ரோ அவங்க? எனக்கே பார்க்கணும்போல இருக்கே’ என மோடிக்கே மெர்சல் குடுத்தது அம்மாவின் அப்ரைசல் மாநாடு. `உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி தமிழ்நாட்டை வல்லரச்சாக்கின எங்கள் தெய்வத்தின் தெய்வமே’ என்கிற போஸ்டர் செலவு மட்டும் ஒரு கோடி இருக்கும். கலர்கலராக விட்ட ஜிகினா ஜிம்கானா, ஒரே வாரத்தில் புஸ்ஸ்ஸ்ஸ்.  `அஞ்சு வருஷமா நமக்கு வந்த மொத்த முதலீடே ஆறாயிரம் கோடிதான். எப்படி ஒரே வருஷத்துல இரண்டு லட்சம் பாசிபிள்? இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ என உலக வங்கியே கிறுகிறுத்ததுதான், இந்த ஆண்டின் பெஸ்ட் ஃபன்னி பீப்பிள் மொமன்ட்!

 வான்ட்டடா ஏறின வாட்ஸ்அப் வண்டி!

2015 டாப் 25 பரபரா

எஸ்கேப் ஆன யுவராஜுக்கும் இதுதான், முதலமைச்சருக்கும் இதேதான். அவ்ளோ ராசி இந்த வாட்ஸ்அப் வண்டி. எந்தப் பக்கம் பத்தவெச்சாலும் பத்திக்கிற ஏடாகூட இன்ஜின் மாதிரி அவ்வளவும் ஆயிரம் சிசி அதிரடி. ‘வாரா வாரம் வர்ற தமிழ் சினிமாகூட ஒரு வெள்ளிக்கிழமை மிஸ்ஸாகலாம். ஆனா, ஒருமுறைகூட மிஸ்ஸாகாம ரிலீஸாச்சு யுவராஜ் ஆடியோ. கோகுல்ராஜ் கொலை எல்லாம் மறந்து ‘பன மரத்துல வவ்வாலா... யுவராஜூக்கு சவாலா?’ என ரசிகர் மன்றம் ஆரம்பிச்சு, கொடூரத்தைக் கிளப்பியது கொங்கு வட்டாரம். சரண்டர் ஆவதைக்கூட லைவ் அப்டேட்டா வாட்ஸ்அப்ல போட்டு, போலீஸுக்குத் தண்ணி காட்டிய யுவராஜ்தான், இந்த வருடத்தின் வாட்ஸ்அப் வாட்டர் ஹீட்டர். `மழை பேஞ்சு ஊரெல்லாம் தண்ணி’ என ஊரே தகிட தகிட போட, பத்து நாட்கள் கழித்து சாவகாசமாக ‘அன்புச் சகோதரி ஜெயலலிதா பேசுகிறேன்’ என லேட்டாக வந்தார் மேடம். வாட்ஸ்அப்பில் கிடந்த கூட்டம் நிவாரண உதவிகளில் மும்முரமாக இருக்க, நிவாரண உதவி பண்ணவேண்டிய முதலமைச்சர், வாட்ஸ்அப்பில் செம மொக்க போட்டார். சர்வதேச லெவலில் செம கலாய் கலாய்த்தார்கள். `வதந்தி பரப்புவதாக இருந்தாலும் இவனுங்கதான் ஃபர்ஸ்ட், உதவினு ஓடி வந்தா ஓடோடி செய்றதுலயும் இவனுங்களேதான் பெஸ்ட்...’ என சென்னை வெள்ளத்தில் சுறுசுறுப்பு காட்டின வாட்ஸ்அப் பாய்ஸ்தான் இந்த ஆண்டின் புரியாத புதிர்!

தமிழ்நாட்டின் செல்லக்குரல்!

2015 டாப் 25 பரபரா

இந்த ஆண்டின் பெஸ்ட் கிழிகிழிகிழி டி.ஆர்தான். மேடையால இவருக்கு அழகா... இல்ல, இவரால அந்த மேடைக்கு அழகானு புரியாம, மேடையே கன்ஃப்யூஸ் ஆகுற அளவுக்குப் போட்டுத்தாக்கி பொங்கல் வைத்தவர்களில் அண்ணன்தான் சாம்பியன். `அவர் கையில எதை வேணா குடுங்க, ஆனா மைக்கை மட்டும் குடுத்துராதீங்க’ என மைக்கே கதறி அழுதது. ஏறிய மேடை எல்லாம் ஏடாகூடமாகியது. வாயைத் திறந்தால் செம்பரம்பாக்கம் ஏரியை மிட்நைட்டில்  திறந்துவிட்டதுபோல, காதுல குருவி குய்ய்ய்னுச்சு! இந்தப் பேச்சுவார்த்தை ஒருகட்டத்தில் ஓவராப்போய், மீட்டிங் வந்தவன் பூரா பக்கத்துல இருப்பவரிடம், `வொய் ப்ளட்... சேம் ப்ளட்’ சொல்லும் அளவுக்கு முற்றியது. த்ரிஷா மீட்டிங்கில் தொடங்கிய அட்ராசிட்டி, `புலி’ படப் பாடல் வெளியீட்டில் விஸ்வரூபம் எடுத்தது. `இது ஆக்ரோஷப் புலி’, `இது அடங்காப் புலி’, `இது அன்்டார்டிகா புலி’... என அவர்போட்ட போடில் ஆப்பிரிக்கப் புலிகளே அலறி ஓடின. அவர் பாணியில் அவ்வளவு மழை வெள்ளத்திலும், `இது கொடூர மழை’, `இது கோபக்கார மழை’, `இது டார்ச்சர் மழை’, `இது டக்கர் மழை’னு வாட்ஸ்அப்பில் வறுத்தெடுத்தது கொலைகாரக் கும்பல்!

கேங்ஸ் ஆஃப் ரத்த பூமி!

2015 டாப் 25 பரபரா

``டேய், தல படம் நாலு நாள் வசூல் ரெண்டாயிரம் கோடிடா... தளபதி படம் மொத நாள் வசூலே நாலாயிரம் கோடிடா’ என ஆன்லைனில் வசூல் பணியாரம் விற்றது இரண்டு கோஷ்டிகளும். ஒண்ணு, தல அஜித்தின் தற்கொலைப் படைத் தம்பிகள், இன்னொன்று விஜய்ணாவின்  வெறி `தெறி’ ரசிகர்படை. மீம்ஸ்தான் இவங்களோட பிம்பிலிக்கா பிளாப்பி பிரம்மாஸ்திரம். ஃபர்ஸ்ட் லுக் வந்தாலும் டிரெய்லர் வந்தாலும் ஒரே ட்ரீட்மென்ட்தான். ` `புலி’ படத் தோல்விக்கு தல ரசிகர்களின் பொய்ப் பிரசாரம் தாண்ணே காரணம்’ என தளபதி தரப்பு கண்ணீர் வடித்து கமிஷனர் ஆபீஸ் போக, அதையும் கலாய்த்து மீம்ஸ் போட்டுக் கொக்கரித்தது தல ரசிகர் வட்டாரம். `இருங்கடி வெச்சிக்கிறோம்’ என வேதாளத்துக்குக் காத்திருந்து வெச்சி செஞ்சது தளபதி கூடாரம். ‘டேய், என் தலயப்பத்தி தப்பாப் பேசின, கிழிச்சிருவேன்... வெச்சு உறிச்சிருவேன்’ என ஒரு தல ரசிகை வாட்ஸ்அப்பில் வாயடிக்க, சம்பந்தப்பட்ட புள்ளையைக் கண்டுபிடித்து `ஐயாம் சாரி’ கேட்க வைத்தது தளபதி சங்கம். இவங்க இப்படி கத்தி எடுத்து சண்டைபோட, கமுக்கமா காசு பார்த்தது என்னமோ கோடம்பாக்கம் கோப்பால்கள்தான்!

இவருக்கு வாய்ல கண்டம்!

2015 டாப் 25 பரபரா

ஜனவரி மாசம் அம்மா டி.வி-யில் பட்டிமன்ற  பலூன் ஊதியவர், வருஷக் கடைசியில் மழை அடிச்சு ஊத்தியதும், ‘‘எனது ஜன்னலை திறந்து பார்க்கும்போது, மக்கள் படும் கஷ்டத்தைப் பார்த்து வெட்கப்படுகிறேன். மக்கள் செலுத்திய வரிப் பணம் எங்கே? எனக்கு அரசு நிர்வாகம் செய்தது என்ன? எனது சக மக்களுக்கு செய்தது என்ன?’’ என ஆக்‌ஷன் ஹீரோவாக, `என்ன ராஜா அங்க சத்தம்?’ என ஓ.பி.எஸ்-ஸைவிட்டு அம்மா ஒரண்டை இழுக்க, ‘‘அது பேட்டியும் இல்ல அறிக்கையுமில்ல, மை ஃபிரெண்டுக்கு எழுதின இமெயில், கடிதம் ஃபுல்லா எங்கயுமே தமிழக அரசுனு சொல்லவேயில்லையே பாஸ்’’ என ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவர் அடிச்ச பல்டி, சிரிச்சாபோச்சு அதிர்வேட்டு. சகிப்பின்மை மேட்டர்ல ஊடால புகுந்து, `என் விருது என் உரிமை’னு கமல் கொடுத்த வாய்ஸுக்கு வட இந்தியா வரைக்கும் கேட்டது சிரிப்பொலி!

ஸ்டிக்கர் டக்கர்!

2015 டாப் 25 பரபரா

`நம்ம முதுகுலயும் ஒட்டிட்டாய்ங்களோ!’ என தமிழ்நாட்டு மக்கள் முதுகை அப்பப்போ தடவிக்கிட்டே திரியும்  அளவுக்கு அடிச்சுத் தெறிச்சது அம்மா ஸ்டிக்கர். ஜெ. ஆட்சிக்கு வந்த முதல் வருடம், `சமச்சீர் கல்விக்குப் பூட்டைப் போடு’னு ஆர்டர் போட்டு, புத்தகத்தில் எங்கெல்லாம் சூரியன் படம் வருதோ, அங்கெல்லாம் ஸ்டிக்கர் ஒட்டினாங்க. அந்தச் சூரிய ஸ்டிக்கரின் ரீமேக்தான் இப்போதைய மழை ஸ்டிக்கர். ஊரான் வீட்டு நெய்யை தன் வீட்டு பொங்கப்பானையில் அள்ளிப்போட்டு, ‘எப்பூடி?’ எனக் குதூகலித்தது அம்மாவின் அடிமைப் படை. சாதி, மதம், ஐ.டி-க்காரர், அயர்ன் வண்டிக்காரர் என எல்லோரும் ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’ எனக் களம் இறங்கினால், ‘அம்மா ஸ்டிக்கர் ஒட்டிக்கணும்’ என எதிர்ப் பாட்டு, எகத்தாளப் பாட்டுப் பாட, ஒட்டுமொத்த தமிழ்நாடும் `கடுப்புநாடு’ ஆனது. அப்புறமா, ‘ஸ்டிக்கர் ஒட்டினவங்கமேல கடும் நடவடிக்கை’னு சொன்னாங்க. ‘யாருய்யா சொன்னது?’னு கேட்டா ‘ஸ்டிக்கர் ஒட்டினவங்களே சொன்னாங்களாம்’. தட் ‘தேவாவே சொன்னார்’ மொமன்ட்!

பீப் பாய்ஸ்!

2015 டாப் 25 பரபரா

‘தங்கமகன்’ டிரெய்லரும் பீப் சாங்கும் ஒரே நேரம் ரிலீஸ். பீப் சாங் பீபீ ஊத... சிம்புவைத் தேடியது போலீஸ். வாட் எ சேஞ்சோவர் மாமா! ‘அதுல அனிருத்தும் கூட்டாளி’ எனச் செய்திகள் கிளம்ப, ‘ஐயாம் அப்பாவி’ என  இங்கிலீஷ்ல பாடிக்கிட்டே கனடா பாத்ரூம்ல ஒளிஞ்சிருக்கார்  ஒல்லிபெல்லி. ‘புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்’ என ஆளாளுக்குக் கொதிக்க, `என் புள்ள பொறந்ததுலேர்ந்து நடிகன் சார்’னு டி.ஆர் மறிக்க... `அனிருத்தைச் சிறையில அடைச்சா, கம்பிக்குள்ள புகுந்து வெளியே வந்துருவாப்ல’னு மக்கள் கிண்டல்ஸ் ஆஃப் ராக் ஸ்டார் பண்ணினர்.  ‘இது என் பிரைவேட் சாங்குங்க. இதை யாரோ திருடி ரிலீஸ் பண்ணிட்டாங்கங்க. நான் இது மாதிரி எக்கச்சக்கமா  வச்சிருக்கேங்க’ என ஒஸ்தி காட்ட முயன்ற சிம்புவைத் தெறிக்கவிட்டனர் போராட்டக் குழுவினர். `அட்ரா... அவள ஒதடா... அவள’னு பாட்டு போட்டவன்லாம் நிம்மதியாயிருக்கான். என் கெரகம், நான் மாட்டிக்கிட்டேன்’ என, `தனுஷைப் புடிங்க, செல்வராகவனைப் புடிங்க’ என சிம்பு முட்டிதேய போட்ட சென்டிமென்ட் குத்துக்கு ஆல் ஏரியா நோ ரெஸ்பான்ஸ். ஆனா, பீப் சாங் மேட்டர்ல பிரியாணி சாப்பிட்டது கவர்மென்ட்தான். பேரிடர் மேட்டர்ல நெட்டிசன்ஸ் அம்மா அண்ட்  கோவைக் கொத்துக்கறி போட, அப்படியே பீப் மேட்டரைப் பெரிசாக்கி, தன் சைடுக்குப் பாத்தி கட்டிக்கிட்டது எல்லாம் சாணக்கிய சகுனித்தனம்!