Published:Updated:

2015 டாப் 10 பிரச்னைகள் - தனியார் பள்ளிகளுக்கு எதிரான போராட்டங்கள்

2015 டாப் 10 பிரச்னைகள் - தனியார் பள்ளிகளுக்கு எதிரான போராட்டங்கள்

2015-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 தலையாயப் பிரச்னைகளைப் பற்றி பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

யாராலும் கேள்வி கேட்க முடியாத உச்ச அதிகாரம் படைத்த வர்களாக இருந்த தனியார் பள்ளிகளின் யதேச்சதிகாரம், இந்த ஆண்டு சற்றே ஆட்டம் கண்டது. மாநிலம் முழுவதும் ஏராளமான தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளைக்கு எதிராக, பெற்றோர்கள் கடும் போராட்டங்களை நடத்தினார்கள்.

2015 டாப் 10 பிரச்னைகள் - தனியார் பள்ளிகளுக்கு எதிரான போராட்டங்கள்

கல்வி உரிமைச் சட்டம் கொண்டுவரப் பட்டு ஐந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்தச் சட்டத்தின் நோக்கம் உண்மையிலேயே ஏழை மாணவர்களுக்குச் சென்றுசேர்ந்திருக் கிறதா என்றால், நிச்சயமாக இல்லை. விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும்போது எல்லாம், கல்விக் கட்டணத்தை நினைத்து பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். வட்டிக்குப் பணம் வாங்கி கல்விக் கட்டணம் செலுத்தும் அவலநிலைக்குப் பெற்றோர் தள்ளப்படு கின்றனர். இவற்றைக் களைவதற்காகக் கொண்டுவரப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்தை, தனியார் பள்ளிகள் ஒரு பொருட்டாகவே மதிப்பது இல்லை. `எந்தச் சட்டமும் எங்களைக் கட்டுப்படுத்தாது’ எனப் பகிரங்கமாகவே பேசுகின்றனர்.

1966-ம் ஆண்டு கோத்தாரி கல்விக் குழு தொடங்கி பல்வேறு கல்விக் குழுக்கள் அளித்த பரிந்துரைகளை, கிடப்பில் போட்டு விட்டனர். அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சொல்லப்பட்ட நோக்கங் களுக்கு எதிராக அரசே செயல்படுகிறது. தாய்மொழி வழியில் பொதுப்பள்ளி முறையை உருவாக்கி, பிறப்பு முதல் 18 வயது வரை அனைவருக்கும் இலவசக் கல்வியை வழங்க வேண்டிய அரசு, அவ்வப்போதைய சிக்கலைத் தீர்க்க ஆணையைப் பிறப்பிப்பது சிக்கல்களைப் பெரிதாக்கத்தான் உதவும். இதனால்தான் மக்கள், அரசின் மீது நம்பிக்கை இழந்து தன்னிச்சையான போராட்டங்களில் இறங்கிவிட்டனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
2015 டாப் 10 பிரச்னைகள் - தனியார் பள்ளிகளுக்கு எதிரான போராட்டங்கள்

2015-ம் ஆண்டு ஜூன் மாதம், கோவையில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத ஒரு மாணவனை, பள்ளியைவிட்டு அனுப்பியது நிர்வாகம். தமிழ்நாடு மாணவர்-பெற்றோர் நலச் சங்கத்தினர் பள்ளி முன்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். நான்கு மாதப் போராட் டத்தின் முடிவில் மாணவர்களுக்குத் தீர்வு கிடைத்தது. பொள்ளாச்சியில், ‘அரசு தீர்மானித்த கட்டணத்தைத்தான் கட்டுவோம்’ எனக் கூறிய பெற்றோர்களின் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டனர். படிக்காத பாடத்தில் தேர்வு எழுதச் சொல்வது, பள்ளி நேரத்தில் தனி அறையில் அமரவைப்பது, சக மாணவர் களிடம் கேலிசெய்வது என மனரீதியாக டார்ச்சர் செய்தார்கள். ‘சட்டம் எதை எல்லாம் செய்யக் கூடாது’ எனச் சொல்கிறதோ, அதை எல்லாம் அந்தப் பள்ளி செய்துகாட்டியது. இத்தனை காலம் இவற்றை எல்லாம் பொறுத்துக்கொண்டிருந்த பெற்றோர்கள், இப்போது எதிர்த்துப் போராடுவதற்குத் தயாராகிவிட்டனர்.

கல்வி உரிமைக்கான கூட்டமைப்பில் உள்ள பெற்றோர்கள், பள்ளிவாரியாக அரசு தீர்மானித்த  கட்டண விவரங்களை, அரசின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம்செய்து அச்சிட்டு விநியோகிக்கிறார்கள். இதனால், பொதுமக்களிடம் விழிப்புஉணர்வு அதிகரித் திருக்கிறது. சென்னையில் கல்விக் கட்டணத் துக்கு எதிராக இரண்டு பள்ளிகளில் தீவிரமான போராட்டம் நடந்தது. முடிவில், ஒரு பள்ளி நிர்வாகம், 1 கோடியே 86 லட்ச ரூபாயை பெற்றோர்களுக்குத் திருப்பிக் கொடுத்தது.

ஆனால், இவை எல்லாம் எங்கோ நடக்கும் அரிதான சம்பவங்கள். தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையும், மாணவர்களைத் துன்புறுத்தும் தன்மையும் பன்மடங்கு அதிகம். அவர்களைத் தனித்தனியாகத் தட்டிக் கேட்டால் அதற்குப் பலன் இல்லை. ஒன்று திரண்டு போராடும்போதுதான் பலன் கிடைக்கும்!