Published:Updated:

2015 டாப் 10 பிரச்னைகள் - சூறையாடப்படும் இயற்கை வளங்கள்

2015 டாப் 10 பிரச்னைகள் - சூறையாடப்படும் இயற்கை வளங்கள்

2015-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 தலையாயப் பிரச்னைகளைப் பற்றி பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

நிலக்கரி தொடங்கி டைட்டானியம் வரை, தமிழ்நாட்டில் இல்லாத கனிம வளங்களே இல்லை. ஆனால், அவை மக்களுக்குப் பயன்படவில்லை. தமிழ்நாடு திறந்துவிடப்பட்ட வேட்டைக்காடாகக் காட்சி அளிக்கிறது.

2015 டாப் 10 பிரச்னைகள் - சூறையாடப்படும் இயற்கை வளங்கள்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் ஆலை அமைக்க, கோகோ-கோலா நிறுவனம் 2014-ம் ஆண்டு ஜனவரியில் ஒப்பந்தம் போட்டது. சிப்காட் விளைவித்த சுற்றுச்சூழல் பாதிப்புகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு இது மேலும் அதிர்ச்சியைத் தந்தது. ஏனெனில், கோகோ-கோலா ஆலை, நாள் ஒன்றுக்கு 35 லட்சம் லிட்டர் தண்ணீரை குளிர்பான ஆலைக்குப் பயன்படுத்தும். இதற்கு எதிரான மக்கள் போராட்டம் கடுமை அடைந்த நிலையில், குறிப்பிட்ட காலத்தில் பணிகள் தொடங் காததைக் காரணம் காட்டி, கோகோ-கோலா நிறுவனத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அரசு என்ன காரணம் சொன்னாலும், கோகோ-கோலாவை விரட்டி அடித்தது, வலிமையான மக்கள் போராட்டம்தான்.

தாமிரபரணியில் இருந்து நாள் ஒன்றுக்கு மூன்று லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க 2005-ம் ஆண்டு அனுமதிபெற்றது கோகோ- கோலா நிறுவனம். 3 லட்சம் 10 லட்சமாகி, இப்போது 15 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கவும் 36 ஏக்கர் பரப்பில் ஆலையை விரிவாக்கவும் அனுமதி கோரியுள்ளது. நெல்லை, தூத்துக்குடியில் விவசாயத்தை விரிவாக்க தாமிரபரணி ஆற்றில் அணை கட்ட வேண்டும், விருதுநகர் மாவட்டத்தின் குடிநீர் தேவைக்கு தாமிரபரணி நீரைத் திருப்பிவிட வேண்டும்... என மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் அப்படியே இருக்க, கோகோ கோலா நிறுவனத்துக்கு தாமிரபரணியைத் தாரை வார்த்து, 86 ஆயிரம் ஏக்கர் விவசாயத்துக்கு வேட்டு வைக்கப்பார்க்கிறது அரசு.

கனிமவளக் கொள்ளையின் கதையோ, இன்னும் பதைபதைப்பைத் தருகிறது. மலைகளை வெட்டி, விழுங்கி, கிராமங்கள் காணாமல் அடிக்கப்பட்டு, மனநலம் குன்றியவர்களும் குழந்தைகளும் நரபலி கொடுக்கப்பட்ட கிரானைட் கொள்ளையின் கொடூரப் பக்கங்களை, ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தின் அறிக்கை வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்த கிரானைட் சூறையாடலில் மட்டும் அரசுக்கு 1.06 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
2015 டாப் 10 பிரச்னைகள் - சூறையாடப்படும் இயற்கை வளங்கள்

மற்றொரு புறம், தாதுமணல் கொள்ளை. `அணு ஆயுதத் தயாரிப்புக்குப் பயன்படும் தோரியத்தின் மூலப்பொருள் மோனோசைட் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டுள்ளது’ என்பது குற்றச்சாட்டு. கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு மில்லியன் டன் மோனோசைட் எடுக்கப்பட்டதில் 1,95,300 டன் தோரியம் எடுக்கப்பட்டுள்ளது. இதிலும் அரசுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு. தமிழ்நாட்டின் அனைத்து ஆறுகளிலும் சுமார் 55 ஆயிரம் லாரிகளில் அன்றாடம் நடக்கும் ஆற்றுமணல் கொள்ளையால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு 19,800 கோடி ரூபாய்.

ஒரு தொழிற்சாலை தொடங்கி, பொருளை உற்பத்திசெய்து, ஆதாயம் பார்ப்பதைவிட இது வசதியானது. ஆம், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகால உழைப்பில் இந்த மண்ணின் மக்களால் சேமிக்கப்பட்ட வளங்களை சில பத்தாண்டுகளில் விற்று ஏப்பம்விடுவது எளிது ஆயிற்றே! இவர்கள் அனைத்து அரசியல் கட்சிகளையும் கட்டுப்படுத்துகின்றனர்; அரசு இயந்திரத்தை ஆட்டுவிக்கின்றனர்.  இவர்களைத் தடுத்து நிறுத்த, தட்டிக்கேட்க அரசு தயாராக இல்லை. அதற்கு மக்கள்தான் ஒன்றிணைய வேண்டும். ஏனெனில், இது மக்களின் வளம்; இயற்கையின் வளம். இதைக் காப்பாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நம் ஒவ்வொருவரையும் சார்ந்தது!