Published:Updated:

2015 டாப் 10 பிரச்னைகள் - நெரிக்கப்படும் கருத்துச் சுதந்திரம்

2015 டாப் 10 பிரச்னைகள் - நெரிக்கப்படும் கருத்துச் சுதந்திரம்

2015-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 தலையாயப் பிரச்னைகளைப் பற்றி பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

எதேச்சதிகார மனம் படைத்த ஆட்சி யாளர்கள் எப்போது பயப்படு கிறார்கள் என்றால், தங்களுக்கு எதிரான குரல்களைச் சகித்துக்கொள்ளும் சக்தியற்றவர்களாக மாறுகிறபோதுதான். தமிழ்நாட்டில் கடந்த ஓர் ஆண்டில் அரசின் சகிப்புத்தன்மையற்ற போக்குகள், இங்கு ஒரு நிழல் நெருக்கடி காலத்தை உருவாக்கி யிருக்கின்றன.

2015 டாப் 10 பிரச்னைகள் - நெரிக்கப்படும் கருத்துச் சுதந்திரம்

போராடுவதற்கான உரிமை, ஒன்று திரள்வற்கான, கூட்டம் கூடுவதற்கான, முரண்படுவதற்கான, கருத்துக்களை சுதந்திரமாகக் கூறுவதற்கான உரிமை... என அனைத்து ஜனநாயக அடித்தளங்களையும் ஜெயலலிதா அரசு கடுமையாகத் தாக்கி வந்திருக்கிறது. சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகளின் குரல்கள் நெரிக்கப்படுகின்றன. அவர்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டோ அல்லது வெளியேறும் சூழல் உருவாக்கப் பட்டோ, மக்கள் மன்றத்தை ஜெயலலிதா தனது அடிமைகளின் தர்பாராக மாற்றினார்.

கடந்த ஓர் ஆண்டில் எதிர்க்கட்சியினர் மீதும் ஊடகங்கள் மீதும் உச்ச நீதிமன்றமே அதிர்ச்சி அடையும் அளவுக்கு, வரலாறு காணாத அவதூறு வழக்குகளை ஜெயலலிதா கட்டவிழ்த்துவிட்டார். தன் கண்களுக்கு எட்டிய வரை எதிரிகளையே பார்க்க விரும்பாத ஜெயலலிதா, கண்கள் தெரியாத போராட்டக்காரர்களையும் விட்டுவைக்க வில்லை. அவர்களைப் பிடித்துக்கொண்டு போய் ஊருக்கு வெளியே சுடுகாட்டில் இறக்கிவிட்டது தமிழ்நாடு காவல் துறை. மதுவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட சசிபெருமாள், செல்போன் டவரில் ஏறி சாவதை காவல் துறையினர் வேடிக்கை பார்த்தனர். டாஸ்மாக்கை மூடச்சொல்லிப் போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், கடுமையாகத் தாக்கப்பட்டனர். டாஸ்மாக்குக்கு எதிராகப் பாடல் பாடிய கோவனை, தேசத்துரோக வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தது தமிழ்நாடு அரசு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
2015 டாப் 10 பிரச்னைகள் - நெரிக்கப்படும் கருத்துச் சுதந்திரம்

போராடியவர்கள் மட்டும் அல்ல... புத்தகம் எழுதியோரும், ஏன்... புத்தகங்களுமே இந்த ஆட்சியில் தப்பவில்லை. ‘மீண்டெழும் பாண்டியர் வரலாறு’ என்ற புத்தகத்தைத் தடைசெய்த இந்த அரசு, சமீபத்தில் `வேந்தர் குலத்தின் இருப்பிடம் எது?’, `மதுரைவீரன் உண்மை வரலாறு’ ஆகிய புத்தகங்களையும் தடைசெய்தது. பெருமாள்முருகனின் நாவலை எதிர்த்து சாதி அடிப்படைவாத சக்திகள் வன்முறையில் இறங்கியபோது, பெருமாள்முருகனைப் பாதுகாக்கவேண்டிய அரசு, சாதிய சக்திகளுக்கு ஆதரவாக நின்று, பெருமாள்முருகனை மன்னிப்பு கேட்க வைத்தது. புலியூர் முருகேசன் உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் சாதியவாதிகளின் தாக்குதலுக்கு ஆளானார்கள்.

இன்னொரு புறம் மதவாத சக்திகள் திப்புசுல்தானுக்கு எதிராக தேசிய அளவில் பிரச்னைகளை உருவாக்கிவரும் சூழலில், தமிழ்நாடு அரசு திப்புவின் விழாவுக்கு அனுமதி மறுத்தது. சென்னையின் வெள்ளப் பேரழிவுக்காக அரசை விமர்சித்த கமல் ஹாசனின் வீட்டு மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதாகச் செய்தி பரவியது.

மத அடிப்படைவாதிகளுக்கு இந்தி யாவின் பன்முகத்தன்மையை அழிப்பது அதிகாரத்துக்கான வழிமுறை. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கோ மாற்றுக்குரல்களை அழித்தொழிப்பது தங்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான ஆயுதம். ஆனால் இவர்களுக்கு, நமது சமூகம் மூர்க்கமாக எதிர்வினையாற்றத் தொடங்கி யிருக்கிறது என்பதுதான் இந்த இருண்ட காலத்தின் ஒரே நம்பிக்கை!