Published:Updated:

ஜன.26-ல் மௌன ஊர்வலம்: எடுபடுமா சரத்பவாரின் சாணக்கியத்தனம்?

ஜன.26-ல் மௌன ஊர்வலம்: எடுபடுமா சரத்பவாரின் சாணக்கியத்தனம்?
ஜன.26-ல் மௌன ஊர்வலம்: எடுபடுமா சரத்பவாரின் சாணக்கியத்தனம்?

ஜன.26-ல் மௌன ஊர்வலம்: எடுபடுமா சரத்பவாரின் சாணக்கியத்தனம்?

ரத்பவார்...இந்தியாவில் ஜனநாயகபூர்வ உயரதிகாரப் பதவியான பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்ட எத்தனையோ நபர்களில் சரத்பவாரும் ஒருவர்.

இந்திரா காந்தி காலத்திலேயே அவருக்கு நிகரான தலைவராகவும், மகாராஷ்டிர மாநிலத்தில் அசைக்க முடியாத செல்வாக்குடனும் திகழ்பவர். சோனியா காந்தியின் தலைமையை எதிர்த்து 'தேசியவாத காங்கிரஸ்' என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி, இன்று வரை அக்கட்சியைச் செயல்பாட்டுடன் வைத்திருப்பவர் சரத்பவார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்துசென்று தனிக்கட்சி தொடங்கிய எத்தனையோ தலைவர்கள், பல்வேறு காரணங்களால் தாய்க்கட்சியுடன் இணைந்தோ அல்லது கட்சியைக் கலைத்து விட்டு, அரசியலை விட்டு ஒதுங்கியதோதான் இதுவரை வரலாறு. ஆனால், சரத்பவாருக்கு என்று மகாராஷ்டிர மாநிலத்திலும், நாட்டின் வேறு சில மாநிலங்களிலும் செல்வாக்கு இப்போதுவரை இருந்துவருகிறது.

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன், மகாராஷ்டிர மாநில சட்டசபைக்கும் நடைபெற்ற தேர்தலில், மீண்டும் மகாராஷ்டிராவில் உயர்வகுப்பினர் ஆட்சியை உருவாக்கப் போகிறீர்களா என வாக்காளர்களைப் பார்த்து தைரியமாக கேட்டவர் சரத்பவார். ஆனால், நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது தன் நிலைப்பாட்டைச் செயல்படுத்தும் வகையில் பி.ஜே.பி. அல்லாத எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் அவர். 

மகாராஷ்டிராவின் பிமா - கோரேகான் பகுதியில் அண்மையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, 2014-ல் சரத்பவார் எழுப்பிய கேள்வி உண்மை என்பது தெரியவந்துள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள குறிப்பிட்ட ஒரு பிரிவினரை, இதர மராட்டியர்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டு, வன்முறையைக் கட்டவிழ்த்துவிட சங் பரிவார் அமைப்புகள் முயற்சி செய்வதாக சரத்பவார் தெரிவித்த குற்றச்சாட்டு தற்போது நிரூபணமாகத் தொடங்கியுள்ளது.

என்றாலும், அண்மையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களால், ஒருவர் உயிரிழந்த நிலையிலும் மக்கள் அமைதிகாத்து வன்முறை மேலும் பரவாமல் சகிப்புத்தன்மையுடன் இருந்து, தங்கள் மாநிலம் வன்முறைக்கு ஒருபோதும் இடம்கொடுக்காது என்பதை அம்மக்கள் நிரூபித்துள்ளனர்.

இந்த நிலையில், சரத்பவார் பி.ஜே.பி. அல்லாத எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளது. 'அரசியல் சாசனப் பாதுகாப்பு' என்ற பெயரில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக சரத்பவார் இதில் இறங்கியுள்ளார். இதையொட்டி, மும்பையில் ஜனவரி 26 அன்று மௌன ஊர்வலம் நடைபெற உள்ளது.

இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த ஜனவரி 26-ம் தேதியை ஒவ்வோர் ஆண்டும் 'குடியரசு தினமாகக்' கொண்டாடி வருகிறோம். மும்பையில் இந்த ஆண்டு குடியரசுத் தினத்தன்று, 'ஸ்வாபிமானி சேத்காரி சங்தானா (எஸ்எஸ்எஸ்)' என்ற விவசாயிகள் நல அமைப்பு, அரசியல் சாசனப் பாதுகாப்பை வலியுறுத்தி மௌன ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. மக்களவையில் ‘ஸ்வாபிமானி பக்சா’ என்ற கட்சியின் ஒரே உறுப்பினரான ராஜூ சேத்தி, இந்த அமைப்பின் தலைவராக உள்ளார். மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசுக்கு எதிராக, அவர் நடத்தவுள்ள மௌன ஊர்வலத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூகம் மற்றும் பொதுநலம் சார்ந்த முக்கியத் தலைவர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். 

இதுவரை, இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தன் கட்சித் தலைவர்களை அனுப்பிவந்த சரத்பவார், இம்முறை தாமே கலந்துகொள்வதாக அறிவித்துள்ளார். தவிர, இந்த மௌன ஊர்வலத்தில் கலந்துகொள்ளுமாறு சரத்பவார்,  பல எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் சிங் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி பிரசாத், திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் தினேஷ் திரிவேதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலாளர் டி.ராஜா, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து நீக்கப்பட்ட சரத் யாதவ் உள்ளிட்டோர் ஊர்வலத்தில் கலந்து கொள்ளவிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் சார்பில் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் சமூக அமைப்புகளின் இளம் தலைவர்களான ஹர்திக் பட்டேல், ஜிக்னேஷ் மேவானி, அல்பேஷ் தாக்கூர் ஆகியோரும் விவசாயிகள் நல அமைப்பின் சார்பில் நடைபெறும் மௌன ஊர்வலத்தில் பங்கேற்க சம்மதித்துள்ளனர். எனினும் மாயாவதியின் பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகளிடம் பேசியபோது, "இந்திய அரசியல் சாசனத்தை, பி.ஜே.பி. தனது 'இந்துத்துவா' கொள்கைக்கு ஆதரவாக மாற்றியமைப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கு எதிரான இந்த ஊர்வலத்திற்கு ஐ.ஐ.டி. மாணவர்கள் சிலர் யோசனை தெரிவித்தனர். நாடாளுமன்ற மக்களவை மற்றும் மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தேர்தல்களுக்கான கூட்டணி அமைக்கும் அச்சாரமாகவும் இந்த ஊர்வலம் இருக்கும்" என்று தெரிவித்தனர்.

ஏற்கெனவே தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவை மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்தது. அந்தக் கூட்டணியிடம் இருந்துதான், பி.ஜே.பி. ஆட்சியைப் பறித்தது. தற்போது சிவசேனாவும், பி.ஜே.பி-யுடன் பல்வேறு விஷயங்களில் கருத்துமோதல்களைக் கடைபிடித்து வரும் நிலையில், மகாராஷ்டிர மாநிலத்திலும், மத்தியிலும் பி.ஜே.பி-க்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் சரத்பவார் இப்போதே வியூகம் வகுக்கத் தொடங்கியுள்ளார் என்றே அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு