Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்
தலையங்கம்

ந்திராவில் போராட்டம், ஒடிஷாவில் வெள்ளம், காற்றாலைகள் சுழலவில்லை... இப்படி எல்லாம் கடந்த ஆட்சிபோலவே காரணங்கள் மறு ஒலிபரப்பு ஆகின்றன. போதாக்குறைக்கு 'இயந்திரம் கொண்டுவரும் வழியில் விபத்து ஏற்பட்டதால் மின் உற்பத்தி தாமதமாகும்’ என்ற பகீர் செய்தியும் சேர்ந்துகொண்டது. மொத்தத்தில் மின்வெட்டைப் பொறுத்தவரை ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை. இருட்டும் புழுக்கமும் அப்போதும் இப்போதும் ஒன்றேதான்!  

 'தொழிற்சாலைகளைத் தமிழகத்துக்கு அதிகம் வரவழைப்பது யார்?’ என்று அடிக்கடி முன்னாளுக்கும் இன்னாளுக்கும் அறிக்கைப் போர் நடப்பது தமிழக வழக்கம். மின்வெட்டின் தாக்கத்தைத் தாக்குப்பிடிக்க முடியாது என்பதாலேயே, புகழ்பெற்ற மோட்டார் தொழிற்சாலை ஒன்று குஜராத்துக்குப் போய் பூமி பூஜை போட்ட தகவலைச் சமீபத்தில் படித்தோம். இப்போதைய ஆட்சியாளர்களின் பெருமைக்கு வெளிச்சம் சேர்க்கும் அறிகுறி அல்ல இது.

எதிர்பார்த்தபடியே, இன்னாள் முதல்வரை நோக்கி முன்னாள் முதல்வர் கேள்விகள் எழுப்பி சீண்டத் தொடங்கிவிட்டார். பதிலுக்கு இன்றைய முதல்வர், 'போன ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகள்தான் மின்வெட்டு தொடர்வதற்குக் காரணம்' என்று எதிர்த் தாக்குதல் நடத்தும் காட்சிகளை எதிர்பார்க்கலாம். அதுவே சங்கிலித் தொடர் அறிக்கைப் போராக மாறும்போது, தீர்வுக்கான பாதை திசை மாறி பிரச்னை அப்படியே அந்தரத்தில் அல்லாடும்... அரசியல் அக்கப்போர் மட்டுமே மிஞ்சும்.

கடந்த ஆட்சியில் மின் துறை அமைச்சர் ஆற்காட்டாரை எப்படி எல்லாம் கேலிப்பொருளாக்கி மக்கள் தங்கள் புழுக்கத்துக்குத் தற்காலிக வடிகால் தேடிக் கொண்டார்கள் என்பதை இன்றைய ஆட்சியாளர்கள் நினைவில் நிறுத்திக் கொள்வது நல்லது. அந்த ஆட்சிக்கு விடைகொடுத்து, இந்த ஆட்சியை வரவேற்றதற்கு மின் பற்றாக்குறை ஒரு முக்கியக் காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது. காரணங்களைச் சொல்வதற்கு அல்ல... தீர்வுகளைத் தருவதற்காகவே மக்கள் அளித்த மாற்றம் இது என்பதையும்!