Published:Updated:

“எல்லாத்துக்கும் தி.மு.க தாங்க காரணம்!” – அமைச்சர் கடம்பூர் ராஜு `அடடே' விளக்கம்

“எல்லாத்துக்கும் தி.மு.க தாங்க காரணம்!” – அமைச்சர் கடம்பூர் ராஜு `அடடே' விளக்கம்
“எல்லாத்துக்கும் தி.மு.க தாங்க காரணம்!” – அமைச்சர் கடம்பூர் ராஜு `அடடே' விளக்கம்

“போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைப் பாக்கிக்கு காரணமே, முந்தைய தி.மு.க ஆட்சிதான். அதன் பிறகு நிலுவைத் தொகை தொடர்ந்துகொண்டே வந்துள்ளது” என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில், சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக இடங்களை ஆய்வுசெய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இதுவரை 30 மாவட்டங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.  “தினத்தந்தி பத்திரிகை அதிபர் சிவந்தி ஆதித்தனாருக்கு மணி மண்டபம் கட்டப்படும்” என முதல்வர் விழா மேடையில் அறிவித்தார்.  அதனால், திருச்செந்தூரில் அவருக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக இரண்டு  இடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதில், எந்த இடத்தில் மணி மண்டபம் கட்டப்படும் என்பது உறுதிசெய்யப்பட்ட பின், அதுகுறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து, ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் மணி மண்டபம் கட்டப்படும். இதற்கான டெண்டர் விரைவில் வெளியிடப்படும்.  

கடந்த 2006-ம் ஆண்டு, நாள் ஒன்றுக்கு 12 மணிநேரம் கடும் மின்வெட்டு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்ற பின், தமிழகத்தில் தூத்துக்குடி புதிய அனல்மின் நிலையம், எண்ணூர் புதிய அனல்மின் நிலையம் ஆகிய மின் உற்பத்திக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. கூடங்குளம் அணுஉலை மூலம் தமிழகத்துக்கு 1000 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டது. இதன்மூலம் தமிழகம் மின் மிகை மாநிலமாக உயர்ந்தது. அப்போது, உடன்குடி அனல்மின், புதியநிலையத் திட்டம் செயல்படுத்தப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன் அடிப்படையில், உடன்குடி புதிய அனல்மின் நிலையத் திட்டத்துக்கு, வரும் 26-ம் தேதி முதல்வர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

முந்தைய தி.மு.க ஆட்சியில்தான், போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு1000 கோடி ரூபாய் வரை நிலுவைத் தொகை பாக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து, இந்தப் பாக்கித்தொகை அதிகரித்துவிட்டது. போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு பாக்கித் தொகையை வழங்கிடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதனாலும், கடும் நிதிச்சுமை, டீசல் விலை,  உதிரிப் பாகங்கள் விலை உயர்வு ஆகியவை காரணமாகத்தான் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு விஷயத்தில் மாணவர்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கேட்டது  தி.மு.க-தான். இதுதொடர்பாக, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சட்டசபையில் தெளிவாக எடுத்துக்கூறினார்” என்றார்.