Published:Updated:

எஜமான விசுவாசத்தை இப்படியா காட்டுவது? சாடும் ராமதாஸ்

சகாயராஜ் மு
எஜமான விசுவாசத்தை இப்படியா காட்டுவது? சாடும் ராமதாஸ்
எஜமான விசுவாசத்தை இப்படியா காட்டுவது? சாடும் ராமதாஸ்
எஜமான விசுவாசத்தை இப்படியா காட்டுவது? சாடும் ராமதாஸ்

"எட்டாம் வகுப்புக்கு கட்டாயத் தேர்ச்சி ரத்து, பொதுத்தேர்வு முறை அறிமுகமாகிய திட்டங்களைக்  கைவிட்டு, இப்போதுள்ள முறையே தொடரும் என்று  தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்" என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில், எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை ரத்துசெய்யவும், அந்த வகுப்புக்குப் பொதுத்தேர்வு நடத்தவும் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.  மாணவர்களின் கல்வி வாய்ப்பைப் பறிக்கும் வகையிலான தமிழக அரசின் இம்முடிவு கண்டிக்கத்தக்கது.

எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிப்பதால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும், அதைத் தடுக்க கட்டாயத்தேர்ச்சி முறையை ரத்துசெய்துவிட்டு, பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் காலங்காலமாகக் கூறப்பட்டுவரும் காரணத்தைத்தான் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையினரும் அதிகாரபூர்வமற்ற முறையில் கூறியுள்ளனர். இது அபத்தமானது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

மத்திய அரசு கைகாட்டும் திசையில் கண்ணை மூடிக்கொண்டு பயணிப்பதை வழக்கமாகவைத்துள்ள தமிழக அரசு, இந்த விஷயத்திலும் மத்திய அரசுக்குத் தனது விசுவாசத்தைக் காட்டுவதற்காகத்தான் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளது. எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறை, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நீண்ட காலமாக அதிகாரபூர்வமற்ற வகையில் நடைமுறையில் இருந்துவருகிறது. எனினும், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம்தான் 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி சட்டபூர்வமாக்கப்பட்டது. ஆனால், இந்த நடைமுறையை விரும்பாத மத்திய அரசு, அதை மாற்றுவதுகுறித்து பரிந்துரைக்க 2012-ம் ஆண்டில் வல்லுநர் குழுவை அமைத்தது. அக்குழுவினர் அளித்த பரிந்துரைப்படி, 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை கடந்த ஆண்டு மத்திய அரசு ரத்துசெய்தது. இதுதொடர்பான கல்வி உரிமைச் சட்டத்தையும் திருத்தியது.

மத்திய அரசின் இந்த முடிவைக் கடந்த ஆண்டே பா.ம.க கடுமையாக எதிர்த்தது. இந்தியாவில், அனைத்து மாநிலங்களிலும் எட்டாம் வகுப்பில் கட்டாயத் தேர்ச்சி முறை அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வந்து, ஆறு ஆண்டுகள் மட்டுமே ஆகும் நிலையில், கல்வித்தரம் குறைந்துவிட்டதாக அதற்குள்ளாகவே மத்திய அரசு எவ்வாறு கண்டறிந்தது என்பது தெரியவில்லை. கட்டாயத் தேர்ச்சி முறை ரத்து செய்யப்படுவதைக் கைவிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியும் பயனில்லை.

எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சியை ரத்துசெய்ய மத்திய அரசு முடிவுசெய்தாலும், இவ்விஷயத்தில் மாநில அரசுகள் விருப்பம்போல முடிவெடுத்துக்கொள்ள சுதந்திரம் அளித்திருந்தது. ஆனாலும், பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்கள் உள்ளிட்ட 23 மாநிலங்கள், கட்டாயத் தேர்ச்சியை ரத்துசெய்ய முடிவுசெய்துள்ளன. மன்னன் எவ்வழியோ, மக்களும் அவ்வழி என்பதற்கிணங்க, பாரதிய ஜனதா வழியில் தமிழக அரசும் எட்டாம் வகுப்புக்கு கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்துசெய்துவிட்டு,  பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்துள்ளது. இதன்மூலம், எஜமான விசுவாசத்தைக் காட்டுவதற்காக தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் கல்வி வாய்ப்புகளைக் காவு கொடுக்க அரசு தீர்மானித்துள்ளது.

பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.  இதற்காகச் செய்யப்படவேண்டியவை ஏராளம். 8-ம் வகுப்பில் கட்டாயத் தேர்ச்சியை ரத்துசெய்துவிட்டால், கல்வித்தரம் அதிகரித்துவிடும் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத அபத்தமான வாதம். இதனால் ஏற்படும் நன்மைகளைவிட தீமைகள்தான் அதிகமாகும். ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் 5 அல்லது 8-ம் வகுப்பில் தோல்வியடைந்தால், அதன்பின் அவர்களைத் தொடர்ந்து படிக்க குடும்பத்தினர் அனுமதிக்க மாட்டார்கள். மாறாக, மாணவர்கள் அவர்களின் பெற்றோர் செய்யும் தொழிலுக்கு உதவியாக அனுப்பிவைக்கப்படுவர். மாணவிகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்படும். சமூகத்தைச் சீரழிக்கும் குலக்கல்வி முறையும், குழந்தைத் திருமண முறையும் மீண்டும் தழைத்தோங்குவதைத்தான் அரசு எதிர்பார்க்கிறதா என்பதை தமிழக ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும்.

பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த மேற்கொள்ளவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளலாம். அத்தகைய நடவடிக்கைகளை பா.ம.க வரவேற்கும். மாறாக, கட்டாயத் தேர்ச்சியை ரத்துசெய்து, மலரவேண்டிய கல்வி மொட்டுகளைக் கருக்கிவிடக் கூடாது. எனவே, 8-ம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சி ரத்து, பொதுத்தேர்வு முறை அறிமுகம் ஆகிய திட்டங்களைக்  கைவிட்டு, இப்போதுள்ள முறையே தொடரும் என்று  தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.