Published:Updated:

பெரியபாண்டியன் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி!

ர.பரத் ராஜ்
பெரியபாண்டியன் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி!
பெரியபாண்டியன் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி!

நகைகள் திருட்டு வழக்கு தொடர்பாக, ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பாலி மாவட்டத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க முற்பட்டபோது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த, மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் குடும்பத்துக்கு, 1 கோடி ரூபாய்க்கான காசோலையை அவரது மனைவி பானுரேகாவிடம் வழங்கினார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

சென்னை கொளத்தூரில் நடந்த நகைக்கடைக் கொள்ளையில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க, தனிப்படையைச் சேர்ந்த மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் போலீஸார், டிசம்பர் 8-ம் தேதி ராஜஸ்தானுக்குச் சென்றனர். டிசம்பர் 13-ம் தேதி, கொள்ளையன் நாதுராம் பதுங்கியிருந்த இடத்தைத் தனிப்படை போலீஸார் சுற்றிவளைத்தனர். அப்போது, முனிசேகரின் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் இறந்தார். இது, தமிழக போலீஸ் வட்டாரத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பெரியபாண்டியனின் உடல், ராஜஸ்தானிலிருந்து அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில், மூவிருந்தாளி, சாலைப்புதூர் கிராமத்துக்குக் கொண்டுவரப்பட்டு, இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. கொள்ளையனைப் பிடிக்கச் சென்ற இடத்தில் மரணமடைந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் குடும்பத்துக்கு, ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, இன்று அவரது குடும்பத்தினரிடம் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வர் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியின்போது, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, டி.ஜி.பி., டி.கே.கஜேந்திரன், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் பெரியபாண்டியனின் குடும்பத்தினர் உடனிருந்தனர்.