Published:Updated:

'அரசுக்கு தொடர்ந்து நெருக்கடிகொடுக்கிறார்!'- கிரண்பேடியை நேரடியாக எச்சரிக்கும் முதல்வர் நாராயணசாமி!

ஜெ.முருகன்
'அரசுக்கு தொடர்ந்து நெருக்கடிகொடுக்கிறார்!'- கிரண்பேடியை நேரடியாக எச்சரிக்கும் முதல்வர் நாராயணசாமி!
'அரசுக்கு தொடர்ந்து நெருக்கடிகொடுக்கிறார்!'- கிரண்பேடியை நேரடியாக எச்சரிக்கும் முதல்வர் நாராயணசாமி!

”கிரண்பேடி தனது நிலையை மாற்றிக்கொள்ளவில்லை என்றால், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று, குடியரசுத்தலைவரிடம் புகார் அளிக்கப்படும்” என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்திலுள்ள கமிட்டி ஹாலில், இன்று (24ம்தேதி) பத்திரிகையாளர்களைச் சந்தித்தார், முதலமைச்சர் நாராயணசாமி. அப்போது, “கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 69 டாலர்தான் என்ற போதிலும், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. புதுச்சேரியில், வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோலின் விலை 72 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால், பொதுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வின்மூலம் மத்திய அரசு அடிக்கும் கொள்ளை லாபத்தை மக்களுக்குப் பிரித்து அளிக்க வேண்டும். மத்திய அரசு, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மட்டுமே ஆதரவாக செயல்பட்டுவருகிறது.

துணை நிலை ஆளுநரைப் பொறுத்தவரை, அரசுத் துறைகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொள்வதற்கோ, அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதற்கோ அதிகாரம் கிடையாது. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் அரசுத் துறைகளுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார் ஆளுநர் கிரண்பேடி. துணை நிலை ஆளுநரின் அதிகாரம்குறித்து பல முறை ஆளுநர் கிரண்பேடிக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். அதேபோல, துணை நிலை ஆளுநரின் இப்படியான செயல்பாடுகள்குறித்து குடியரசுத்தலைவர், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். அப்படி இருந்தும், நேற்று பொதுப்பணித்துறைக்குச் சென்று ஆய்வுசெய்து, அதிகார துஷ்பிரயோகம் செய்திருக்கிறார் கிரண்பேடி. மத்தியில் பா.ஜ.க ஆட்சியில் இருப்பதால், இப்படியான அதிகார துஷ்பிரயோகங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. குடியரசுத்தலைவருக்கே மாநில அரசின் அதிகாரங்களில் தலையிட அதிகாரம் இல்லாதபோது, அவரால் நியமிக்கப்பட்ட துணை நிலை ஆளுநர், அரசுத் துறைகளில் ஆய்வுகளை மேற்கொள்கிறார். இது, ஜனநாயக விதிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, தொடர்ந்து நெருக்கடிகொடுக்கும் கிரண்பேடி, தனது நிலையை மாற்றவில்லை என்றால், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் டெல்லிக்கு அழைத்துச்சென்று, குடியரசுத்தலைவரிடம் புகார் அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.