Published:Updated:

உள்ளாட்சி... உங்க ஆட்சிங்கோ!

இயக்குனர் M.சரவணன் (எங்கேயும் எப்போதும்)ஓவியங்கள் : ஹரன்

##~##

'இதை எப்படி எழுதுவது?’ என்று பல முறை எழுதி, அடித்து, கிழித்து, கோவப்பட்டு, சலித்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். அசிங்கங்களை அசிங்கமாகவே எழுதுவது என்று!

நான் சென்னையில் வசிக்கும் கிராமத்தான். 10 வருடங்களாக தீபாவளி, பொங்கல், ஆடி பதினெட்டு, அப்பா, அம்மாவுக்கு உடல்நிலை சரி இல்லாதபோது என வருடத்துக்கு இரண்டு மூன்று முறை என் கிராமத்துக்குச் செல்பவன். நாமக்கல்லுக்குப் பக்கத்தில் இருக்கும் வரகூர்தான் என் புண்ணிய பூமி!

அப்படி இந்த முறை ஊருக்குச் சென்றபோது, எங்கள் ஊரில் எந்தப் பண்டிகை யும் இல்லாமலேயே, பண்டிகை நாட் களைப்போல், டீக்கடைகள், பேருந்து நிறுத்தங்களில் கூட்டம் கூட்டமாக ஆண்களும், தெருக்களில் பெண்களும்... ரகசியமாகவும், ஆர்வமாகவும், கோபமாகவும், சந்தோஷமாகவும் பேசிக்கொண்டு இருந்த விஷயம்... உள்ளாட்சித் தேர்தல்!

உள்ளாட்சி... உங்க ஆட்சிங்கோ!

எங்கள் ஊரில் நான்கு வீட்டுக்கு ஒருத்தர் தன் மனைவியை ஊராட்சித் தலைவர் பதவிக்கு நிறுத்தி, ஜெயிக்கவைக்க வேண்டும் என்ற வெறியில் வேட்டி-சட்டைகளைத் துவைத்து, கஞ்சி போட்டு அயர்ன் செய்து கட்டிக்கொண்டு திரிகிறார்கள். காரணம், எங்கள் ஊர் 33 சதவிகிதம் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் வருகிறது. கல்யாணம் ஆகாதவர்கள் அடுத்த உள்ளாட்சித் தேர்தலுக்குள் கல்யாணம் செய்துகொண்டு, தன் வருங்கால மனைவியை நிறுத்தி ஜெயிக்கவைக்க வேண்டும் என்ற சபலத்தில், இந்தத் தேர்தலில் வேட்பாளராக நிற்கும் பெண் களின் சார்பாக வாங்கித் தரப்படும் அரசு மதுபான நாற்றத்துடன் கண்கள் சிவக்க, நரம்புகள் புடைக்கத் தள்ளாடியபடி அரசி யல் பேசித் திரிகிறார்கள்!

உள்ளாட்சி... உங்க ஆட்சிங்கோ!

4,000 வாக்காளர்களைக்கொண்ட எங்கள் ஊரில், எட்டு பெண்களை ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட அவர்களின் வீட்டார்கள் மனு தாக்கல் செய்து உள்ளனர்.

வேட்பாளரின் பெயரைக் கேட்டால், அவர்களின் கணவர் பெயரையோ, அப்பாவின் பெயரையோதான் சொல்கிறார்கள் வாக்காளர்கள். இதில் ஒருவர் சரியாக விண்ணப்பம் பூர்த்தி செய்யாததால், நிராகரிக்கப்பட்டு உள்ளார். ஒன்பது வார்டு மெம்பர்களுக்கு 33 பேர் போட்டியிடுகிறார்கள். 'ஏன் இத்தனை பேருக்கும் திடீரென்று மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற வெறி? எதற்காக இத்தனை கணவர்களுக்குத் தன் மனைவியை ஊராட்சித் தலைவராக்கி, உலகத்தின் தலை சிறந்த கிராமமாகத் தங்கள் கிராமத்தை மாற்ற வேண்டும் என்ற துடிப்பு?’ என ஒவ்வொரு நிமிடமும் என் ஆச்சர்யத்தின் அடர்த்தி அதிகரித்துக்கொண்டே இருந்தது. 'இதில் இரண்டு பேர் நிச்சயம் வாபஸ் வாங்கிவிடுவார்கள்’ என்ற என் நண்பரிடம், 'ஏன்?’ என்று கேட்டேன். 'எதிர்த்து நிற்பவரிடம் பணம் வாங்கிக்கொண்டு வாபஸ் வாங்கும் எண்ணத்துடன்தான் அவர்கள் மனு தாக்கல் செய்தார்கள். இப்போது பேரம் நடந்துகொண்டு இருக்கிறது’ என்றார்.

உள்ளாட்சி... உங்க ஆட்சிங்கோ!

மற்றொருவர் 300 ஓட்டு வாங்கும் இடத்தில் உள்ள பெண்ணின் கணவர், 500 ஓட்டு வாங்கும் வேட்பாளினியைத் தோற்கடிக்க, அவரைச் சார்ந்த - ஆனால், 150 ஓட்டுகள் வாங்கக்கூடிய - இருவரை நிறுத்தி, 500 ஓட்டு களை 200 ஓட்டுகளாக்கும் அதிமேதாவித் தனத்துடன் செயல்படுகிறார்!

இந்த உள்ளாட்சித் தேர்தலை ஒட்டிய பேச்சுகள் குதர்க்கமாகவும், நயவஞ்சகமாகவும், போலியானதாகவும், பேராசையாகவும் உள்ளது. இதை அவர்கள் ராஜதந்திரம் என்கின்றனர்.

சரி, எதற்காக இந்த ராஜதந்திரம் என்று பார்த்தால், முன்னாள் ஊராட்சித் தலைவராக இருந்தவர் இந்தப் பதவிக்கு வந்த பிறகு... வீடு, தோட்டம், துரவு, தினமும் குடி, போக்குவரத்துக்கு வாகனம் என்று வசதியாக இருப்பதைப் பார்த்து, தாங்களும் அவரைப்போல் 'மக்கள் பணிஆற்ற வேண்டும்’ என்ற நல்ல எண்ணத் தில் அயராது உழைக்கின்றனர்.

எப்படித் தெரியுமா?

வழியில் செல்லும் அனைவரையும் வயது வித்தியாசம் இல்லாமல் கையெடுத் துக் கும்பிட்டு இளிக்கின்றனர்.

டீக்கடைகளில் டீ, காபி, போண்டா, வடை யார் சாப்பிட்டாலும், இவர்களே பில் கொடுக்கின்றனர். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் அரசு மதுக் கடையில் வயிறு முட்டக் குடிக்க ஏற்பாடு செய்கின்றனர்.

உள்ளாட்சி... உங்க ஆட்சிங்கோ!

காலை, மாலை இரண்டு வேளைகளும் வீடுவீடாக அலைகின்றனர். 10, 15 வருடப் பகையைக்கூட மறந்து ஓட்டுப் பிச்சை எடுக்கின்றனர். பாவம்! ஓட்டுக்காக எல்லாவற்றையும் இழந்து நிற்கின்றனர். வெற்றி பெற்ற பிறகு, குறுக்கு வழியில் திருட்டுத்தனமாகச் சம்பாதிக்கப் போகும் பணத்துக்காக!

இவை எல்லாம் தெரிந்தும், வேட்பா ளரின் சித்தப்பா, பெரியப்பா, தாத்தா, பாட்டி, சித்தி, அத்தை, மாமன், மச்சான், அண்ணன், தம்பி, கொழுந்தியா, நண்பன், பக்கத்து வீட்டுக்காரன், எதிர் வீட்டுக்காரி எல்லோரும், 'எவனோ சம்பாதிக்கிறதுக்கு, நம்ம சொந்தக்காரன்... நம்ம சாதிக்காரன் சம்பாதிக்கட்டுமே!’ என்ற  பரந்த, திறந்த, விரிந்த மனசுடன் ஓட்டு போடத் தயாராக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட மனப்போக்கு நல்லதற் கான அறிகுறியாகத் தெரியவில்லை!

உங்களுக்குத் தலைவராக வரப்போகிறவர் ஏதாவது ஒரு விதத்தில் உங்களைவிடத் தகுதியானவராக இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

1.முதலில் வேட்பாளர் ஒழுக்கமானவராக...

2. மனசாட்சி உள்ளவராக...

3. மரியாதை தெரிந்தவராக...

4. நல்ல குடும்பப் பின்னணி உள்ளவராக...

5. படித்தவராக...

6. தவறான ஆட்களுடன் தொடர்பு இல்லாதவராக...

7. அரசியலை மட்டுமே தொழிலாகக்கொண்டு பணம் சம்பாதிப்பவராக இல்லாமல் பார்த்துக் கொள்வது மிக நன்று.

இந்த விஷயங்களுக்குள் உங்கள் வேட்பாளர் பொருந்தி னால், அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த சாதியைச் சார்ந்தவராக இருந்தா லும் உங்கள் ஓட்டை அவருக்குப் போடலாம்.

உள்ளாட்சி... உங்க ஆட்சிங்கோ!

நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஊர்த் தலைவரின் அடையாளங்கள்தான் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு உங்கள் ஊரின் அடையாளமாக இருக்கப்போகிறது என்பதை மனதில்வைத்து ஓட்டுப் போடுங்கள்!

தேர்தல் அதிகாரிகளுக்கு...

மனைவியை வெற்றிபெறச் செய்து, அந்த நாற்காலியில் உட்கார்ந்து நாட்டாமை செய்யும் கணவரை, பெண்கள் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் உடனடியாகக் கைதுசெய்து சிறையில் தள்ள வேண்டும்!

வேட்பாளர்களுக்கு...

தயவுசெய்து சாதியைச் சொல்லி, சொந்தத்தைச் சொல்லி, பணம் கொடுத்து ஓட்டு கேட்காதீர்கள். குறைந்தபட்சம் என்ன செய்ய இருக்கிறீர் கள் என்பதையாவது தெரிந்து, அதைச் சொல்லி ஓட்டுக் கேளுங்கள்!