Published:Updated:

"ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் - டி.டி.வி. தினகரன் கூட்டுக் களவாணிகள்" - வறுத்தெடுத்த கோவை பி.ஜே.பி!

குருபிரசாத்
"ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் - டி.டி.வி. தினகரன் கூட்டுக் களவாணிகள்" - வறுத்தெடுத்த கோவை பி.ஜே.பி!
"ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் - டி.டி.வி. தினகரன் கூட்டுக் களவாணிகள்" - வறுத்தெடுத்த கோவை பி.ஜே.பி!

போக்குவரத்துக் கட்டண உயர்வை எதிர்த்து, கோவையில் பா.ஜ.க நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

போக்குவரத்து கட்டண உயர்வுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக பி.ஜே.பி-யும் போக்குவரத்துக் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. போக்குவரத்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பி.ஜே.பி சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருகட்டமாக.,கோவையிலும் போக்குவரத்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாவட்ட தலைவர் நந்தகுமார், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில விவசாய அணி துணைத்தலைவர் ஜி.கே.நாகராஜ் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் வழக்கத்துக்கு மாறாக, தமிழக அரசின் மீது கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது.

குறிப்பாக, எஸ்.ஆர்.சேகர் பேசுகையில், "அமைச்சர் ஒருவராலேயே பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ், டி.டி.வி. தினகரன் ஆகிய மூன்று பேரும் கூட்டுக் களவாணிகள். இவர்கள் எந்தக் காலத்திலும் சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து ஆட்சியை கலைக்க மாட்டார்கள்" என்றார்.

ஜி.கே.நாகராஜ் பேசுகையில், "கலைஞர் இலவசத்துக்கு கோடு போட்டார். ஆனால், ஜெயலலிதாவோ ரோடே போட்டு தனது வாக்கு வங்கியை பலப்படுத்திக் கொண்டார். இலவசத்தாலும், மதுவாலும் தமிழகம் மனிதவளத்தை இழந்துவிட்டது. தமிழகத்தை, தாமரையால் மட்டுமே காப்பாற்ற முடியும்" என்றார்.