Published:Updated:

அந்த ரெண்டு பேரையும் மறந்திடுங்க!

மனமாற்ற டாக்டர் விஜயகாந்த்ப.திருமாவேலன்

##~##

'' 'என்னைக் கோபக்காரன்றாங்க. தப்பு நடக்கிறதைக் கண்டா, நிச்சயமாநான் கோபப்படுவேன். நான் கோபக்காரன்றது உண்மைதான். இது தப்பா? கோபம் இருக் கிற இடத்துலதான் குணம் இருக்கும்'' - ராமநாதபுரத்தில் சொல்லிவிட்டுத்தான் பேச ஆரம்பிக்கிறார்!

 ''ஊர் ஊராப் போயி மக்களிடம் கெஞ்சு றேன்னு என்னைக் கிண்டல் பண்றாங்க! மக்களிடம் கெஞ்சாம... மரம் மட்டையிடமா கெஞ்ச முடியும்?'' - கும்பகோணத்தில் பீடிகை போட்டுத்தான் பேச ஆரம்பிக்கிறார்!

''நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்! நான் லஞ்சம் வாங்க மாட்டேன். என் கட்சிக்காரர்கள் லஞ்சம் வாங்கினால், நானே தலையிட்டு நடவடிக்கை எடுப்பேன்'' - மதுரையில் வாக்குறுதி கொடுக்கிறார்!

அந்த ரெண்டு பேரையும் மறந்திடுங்க!

_ 'எதிர்க் கட்சித் தலைவராக’ வெளியே வந்து விஜயகாந்த் ஒலிக்க ஆரம்பித்திருக்கும் குரல்கள் இவை! முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி... இருவரும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களை மட்டும் அறிவித்துவிட்டு அமைதியாக இருக்க... கறுப்புக் கண்ணாடியுடன் முடியைச் சிலுப்பிக்கொண்டு முதல் ஆளாகக் கிளம்பியவர் விஜயகாந்த் மட்டும்தான். அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கிறாரா இல்லையா... வைத்திருப்பார் களா மாட்டார்களா... என்ற குழப்பத்திலேயே நாட்கள் உருண்டுகொண்டு இருந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் இந்திய கம்யூனிஸ்ட்டும் வெளியே வந்த பிறகுதான் வீறுகொண்டு எழ ஆரம்பித்தார் விஜயகாந்த். ஒருவிதக் குழப்பத்தில் சோர்ந்துபோயிருந்த அவருக்கு, டானிக் சேர்ப்பதாக இருந்தது கம்யூனிஸ்ட்டுகளின் சேர்க்கை. இது, ஜெயலலிதாவே எதிர்பார்க்காத திருப்பம். உளவுத் துறையில் இருந்து தூக்கி அடிக்கப் பட்ட ஏ.டி.ஜி.பி. ராஜேந்திரனிடம் ''இப்படி ஒரு கூட்டணி உருவாக வாய்ப்பு இருக்குனு முதல்லயே உங்களுக்குத் தெரியலையா?'' என்று முதல்வரே கடிந்துகொண்டதாகவும் தகவல். தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாக நிற்க... விஜயகாந்த்துக்கு மட்டும் ஆபத்பாந்தவர்களாக இரண்டு கம்யூனிஸ்ட்டுகள் கிடைத்தது, தேர்தல் பலம் என்பதைவிட, 'கூட்டணிக் கட்சியின் தலைவர்’ என்ற அந்தஸ்தையும் கொடுத்தது. இந்த உற்சாகத்துடன் தமிழகத்தின் தெருக்களில் வளைய வர ஆரம்பித்துள்ளார் விஜயகாந்த்.

''இன்னைக்கு நாட்டுல எல்லாருமே ஏமாத்துறாங்க மக்களே! ஆட்சி அதிகாரத்தை என் கையில ஒரு தடவை கொடுத்துப் பாருங்க மக்களே! உங்களைத் தங்கத் தட்டில் வெச்சுப் பாதுகாப்பேன். இனிமேதான் எனக்குச் சம்பாதிக்கணுங்கிற அவசியம் இல்லை. வீடு கட்டணுங்கிற அவசியமும் இல்லை. எதை எல்லாம் அனுபவிக்கணுமோ, அதை எல்லாம்  ஏற்கெனவே அனுபவிச்சாச்சு. பணத்தைப் பார்த்தாச்சு. புகழோட உச்சிக்கும் போயாச்சு. இதுக்கு மேல எனக்கு எதுவும் வேணாம். ஆனால், இந்த மக்களுக்காக இனி வருங்காலத்துல நல்லது செய்யணும். அந்த ஆசை மட்டும்தான் எனக்கு இருக்கு மக்களே!'' என்ற பீடிகையுடன் மயிலாப்பூரில் ஆரம்பித்த விஜயகாந்த் பேச்சு, கட்சிக்காரர்களை மட்டும் அல்ல... பொதுமக்களையும் உன்னிப்பாகக் கவனிக்கவைக்கிறது!

முதலில் இப்படி மென்மையாக ஆரம் பிக்கும் விஜயகாந்த்... அடுத்து குரலை உயர்த்திக் கண்கள் சிவக்கக் கர்ஜிக்க ஆரம்பிக்கிறார். ''யார் தப்பு செஞ்சாலும் விட மாட்டேன். யார் லஞ்சம் வாங்கினாலும் விட மாட்டேன். எங்க கூட்டணியில இருக்கிறவர் தப்பு செஞ்சாலும் தட்டிக்கேட்பேன். என் கட்சிக்காரர் தப்பு செஞ்சாலும் தட்டிக் கேட்பேன். யாராக இருந்தாலும்  லஞ்சம் வாங்க விட மாட்டேன்'' என்று சொல்லிவிட்டு...

அந்த ரெண்டு பேரையும் மறந்திடுங்க!

''ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்'' என்ற எம்.ஜி.ஆர். பாட்டைப் பாட ஆரம்பிக்கும்போது, கூட்டமும் சேர்ந்து பாடுகிறது. எம்.ஜி.ஆர். ரசிகர்களையும் சினிமா ரசிகர்களையும் இந்தப் பாட்டு ஈர்ப்பதாக இருக்கிறது. எனவே, எல்லா ஊர்களிலும் இந்தப் பாட்டைப் பாடுகிறார் விஜயகாந்த்.

கருணாநிதி, ஜெயலலிதா என்று பெயர் குறிப்பிடாவிட்டாலும் அவர்களுக்கு எதிராக மறைமுக அஸ்திரங்களை வீசி வருகிறார் விஜயகாந்த். ரெண்டு கட்சி... ரெண்டு கட்சி... என்று அவர் சொல்வது அவர்கள் இருவரையும்தான். ''மாறி மாறி ரெண்டு கட்சிக்கும் வாக்களிச்சது போதும். அந்த நெனைப்புக்கு முதல்ல முடிவு கட்டுங்க. அந்த ரெண்டு கட்சிகளையும் தவிர்த்து ஓட்டுப் போட்டீங்கன்னாதான் இந்த நாட்டுக்கு விடிவுக்காலம் வரும். உள்ளாட்சித் தேர்தல்ல ஆளும் கட்சிக்கு ஓட்டுப் போட்டாதான் நல்லது நடக்கும்னு நெனைக்காதீங்க. அதிகாரத்தைப் பிரிச்சுக் கொடுங்க!'' என்று விஜயகாந்த் மையமாகக் குற்றச்சாட்டுகளை வீசுகிறார். கடந்த முறை கருணாநிதியைக் கொத்துப் புரோட்டா போட்டது மாதிரியான தாக்குதல்களை இம்முறை ஜெயலலிதாவை நோக்கி வீசவில்லை. ''ஆறு மாதம் ஆளும் கட்சி மீது குற்றச்சாட்டுகள் வைக்க மாட்டேன்'' என்று எடுத்த சபதத்தை மீறாமல்தான் அவரது பிரசாரம் போய்க்கொண்டு இருக்கிறது.

''ரெண்டு கட்சிகளும் மாறி மாறித் தப்பு பண்றாங்க. இதை நான் சொல்லத் தேவை இல்லை. அவங்க ஒருத்தரை ஒருத்தர் மாறி மாறிக் குத்தம் சொல்லிக்கிறதில் இருந்தே அது தெரியுதே'' என்ற அவரது குத்தலான வார்த்தைகளை ரசித்துச் சிரிக்கிறார்கள் மக்கள். ''நீங்க இதை எல்லாம் யோசிக்காததுனாலதான் ஊழல் செஞ்சுட்டு ஒருத்தர் போயி ஆஸ்பத்திரியில படுத்துக்கிட்டார். மத்தவங்க ஊழல் செஞ்சுட்டு மகிழ்ச்சியாப் பதவியில் நீடிக்கிறாங்க'' என்ற விஜயகாந்த்தின் ரகசியத் தாக்குதலையும் உணர்ந்துகொள்ளும் பொதுமக்கள் மத்தியில் விசில் பறக்கிறது. ''இப்படி எதுக்கெடுத்தாலும் கை தட்டாதீங்க. அதனால்தான், உங்களை அரசியல்வாதிங்க ஏமாத்துறாங்க'' என்று அவர்களில் ஒருவராக நின்று அட்வைஸும் செய்கிறார். கருணாநிதி, ஜெயலலிதாவை அடுத்து டாக்டர் ராமதாஸ்தான் அதிகமாகத் திட்டு வாங்குகிறார். ''சாதியைச் சொல்லி தன் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கினாரு. ஆனா, அந்தச் சாதிக்காரங்களுக்கு எதுவும் பண்ணலை'' என்று தைரியமாகச் சொல்கிறார் விஜயகாந்த். ப.சிதம்பரத்தையும் அவர் விட்டுவைக்க வில்லை. ''தமிழ்நாட்டுல தைரியமா ஊழல் பண்றாங்க. மத்தியில ஊழல் பண்றவங்க ஞாபக மறதிங்கிறாங்க'' என்கிற சுருக் விமர்சனங்களைக் கூட்டம் ரசிக்கிறது. ஒரு கோவையாக இல்லாவிட்டாலும் நினைத்ததை ஷார்ப்பாக விஜயகாந்த் சொல்லிப் போவதைக் கூட்டம் ரசிக்கிறது.

''தெய்வத்தோடும் மக்களோடும்தான் கூட்டணி'' என்று கட்சி ஆரம்பித்ததில் இருந்து சொல்லி வந்தவர் விஜயகாந்த். கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நடந்த சேலம் மாநாட்டில் 'கூட்டணி வைக்கலாமா? வேண்டாமா?’ என்று கேள்விகள் கேட்க... 'தொண்டர்கள் வைக்கலாம்’ என்று சொல்ல... அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்தார். அபரிமிதமான வெற்றியை இந்தக் கூட்டணி பெற்று ஜெயலலிதா முதல்வரானார். காரணமே சொல்லப்படாமல் இப்போது அந்தக் கூட்டணியைவிட்டு வெளியேற்றப்பட்டு இருக்கும் விஜயகாந்த்தின் அடுத்த இலக்கு முதலமைச்சர் பதவிதானே!

அந்த ரெண்டு பேரையும் மறந்திடுங்க!

''அன்றைக்கு நான் ஒரு ஆளு... இன்னைக்கு 29 பேரு... நாளைக்கு...?'' என்று விஜயகாந்த் பொதுமக்களை நோக்கி கேள்விகளைக் கேட்கும்போது... 'முதலமைச்சர்...’ 'சி.எம்.’ என்று கர்ஜிக்கிறார்கள் தே.மு.தி.க. தொண்டர்கள். ''மக்களுக்கு நல்லது செய்ய ஒரு சந்தர்ப்பம் கொடுங்க'' என்று இவரும் எல்லா ஊரிலும் சொல்லிச் செல்வதைப் பார்த்தால், தன்னுடைய முழுமையான பலத்தை நாட்டுக்கும் ஜெயலலிதாவுக்கும் சொல்லியாக வேண்டிய நெருக்கடியில் விஜயகாந்த் இருப்பது தெளிவாகத் தெரிகிறது!

''துளசி வாசம் மாறுனாலும் மாறும் இந்த தவசி வார்த்தை மாறாது'' என்று பிரேமலதா விஜயகாந்த் ஊர் ஊராக கட்டியம் கூறிப் போய்க்கொண்டு இருப்பது அந்த நெருக்கடியைக் கூடுதலாகவே உணர்த்துகிறது!