
`மின் மிகை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது!' - எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை கலைவாணர் அரங்கத்தில் எரிசக்தித் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், உடன்குடி அனல் மின் திட்டம் நிலை 1-க்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `உடன்குடி அனல் மின் நிலையத் திட்டத்தின் மதிப்பீடு ரூ.80,000 கோடி எனக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. உடன்குடி மின் கழகம் என்ற கூட்டு நிறுவனம் கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தமிழகத்தில் மின் பற்றாக்குறை இருந்தது. அதைப் போக்கியவர் ஜெயலலிதா. அதைத் தொடர்ந்து இந்த அரசு பின்பற்றி வருகிறது. மாநிலத்தின் எதிர்கால தேவைகளைக் கருத்தில் கொண்டுதான் இதைப் போன்ற புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும் வகையில், தமிழகத்தில் மின் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் தொடர் நடவடிக்கைகளால் தமிழகம் மின் மிகை மாநிலமாகத் திகழ்கிறது. தடையற்ற மின்சாரம் இருந்தால்தான் மாநிலத்தில் தொழில் துறை வளர்ச்சியடையும். அதை இந்த அரசு உறுதி செய்யும்' என்று பேசினார்.