Published:Updated:

"ஒரு மகள், 10 மகன்களுக்குச் சமமானவர்" - மகளிரைப் பாராட்டிய மோடி!

"ஒரு மகள், 10 மகன்களுக்குச் சமமானவர்" - மகளிரைப் பாராட்டிய மோடி!
"ஒரு மகள், 10 மகன்களுக்குச் சமமானவர்" - மகளிரைப் பாராட்டிய மோடி!

"ஒரு மகள், 10 மகன்களுக்குச் சமமானவர்" - மகளிரைப் பாராட்டிய மோடி!

பிரதமர் நரேந்திர மோடி, இந்த மாதத்திற்கான தன்னுடைய மனதின் குரல் வானொலி உரையில் மகளிரின் அளப்பரிய முன்னேற்றம், பல்வேறு துறைகளில் சாதனைகளைப் பாராட்டிப் பேசினார். மேலும், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மகளிரை அண்மையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்ந், நேரில் அழைத்து, கௌரவித்ததையும் மோடி சுட்டிக்காட்டினார். மத்திய அரசின் நலத் திட்டங்களையும் தன் உரையில் தெரிவிக்க பிரதமர் தவறவில்லை. 

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஆற்றிய உரை...

"வரலாற்றிலேயே முதல்முறையாக, பத்து நாடுகளின் தலைவர்கள் இந்த ஆண்டு இந்திய குடியரசுத் தினக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டார்கள்.

விண்வெளி சென்ற இந்திய வம்சாவளிப் பெண் கல்பனா சாவ்லாவின் மறைந்த தினம் பிப்ரவரி 1-ம் தேதி. கொலம்பியா விண்வெளிக்கலம் விபத்துக்குள்ளானதன் காரணமாக, அவர் இன்று நம்முடன் இல்லை என்றாலும், உலகெங்கிலும் உள்ள இளைஞர்களுக்கு கல்பனா சாவ்லா உத்வேகத்தை அளித்துச் சென்றிருக்கிறார்.  

இந்தியா முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு, பெண்களின் சக்திக்கு எல்லையே இல்லை என்ற செய்தியை அவர் விட்டுச் சென்றிருக்கிறார். பேராவலும், திடமான தீர்மானமும், சாதிக்க வேண்டும் என்ற தாகமும் இருந்தால், இயலாதது என்று எதுவுமே இல்லை என்பதை கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை நமக்குக் காட்டுகிறது. அனைத்துத் துறைகளிலும் பெண்கள், மிகவேகமாக முன்னேறி வருகிறார்கள். தேசத்தின் பெருமையை அவர்கள் நிலைநாட்டி வருகிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

நாம் இன்று, "பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வியளிப்போம்" என்று பேசுகிறோம். ஒரு மகள், பத்து மகன்களுக்குச் சமமானவள் என்பதை பல நூற்றாண்டுகள் முன்பே கந்தபுராணம் தெரிவித்துள்ளது. பத்து மகன்கள் வாயிலாக எத்தனை புண்ணியம் கிடைக்குமோ, அவையனைத்தும் ஒரு மகள் அளிக்கும் புண்ணியத்துக்குச் சமமாகும். இது நமது சமுதாயத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் மகத்துவம் குறித்து விரிவாக எடுத்துக் கூறுகிறது. அதனால்தான் பெண்களை சக்தி என்று கூறுகிறோம்.

சுகோய் போர் விமானத்தில் நம் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பயணம் செய்ததை, என்னுடைய செயலியில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்தப் பயணம் ஊக்கமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெண்கள் பல்வேறு படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கியும் சாதனை படைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அண்மையில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து முதல்பெண்ணாக உருவெடுத்தவர்களை நேரில் அழைத்துப் பாராட்டினார்.

வாணிபக் கப்பல்களின் முதல் பெண் கேப்டன், பயணிகள் ரயிலின் முதல் பெண் ஓட்டுநர், முதல் பெண் தீயணைப்பாளர், முதல் பெண் பேருந்து ஓட்டுநர், அன்டார்ட்டிகா சென்றடைந்த முதல் பெண், எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் பெண் என அவரவர் துறைகளில் முதலில் சாதித்த பெண்களுக்கான அங்கீகாரமாக அது அமைந்தது. கடுமையான உழைப்பு, முனைப்பு, மனவுறுதி அளிக்கும் பலம் ஆகியவற்றின் துணைகொண்டு அனைத்துத் தடைகளையும், இடர்களையும் கடந்து, ஒரு புதிய பாதையை ஏற்படுத்த முடியும் என்பதை அப்பெண்கள் நிரூபித்திருக்கின்றார்கள்.

அவர்கள் தங்கள் காலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், இனிவரும் தலைமுறையினருக்கும் உத்வேகம் அளிப்பவர்களாக இருக்கின்றார்கள். முதலாவதாக வந்திருக்கும் அந்தப் பெண் சாதனைப் பெண்கள் பற்றி ஒரு புத்தகமேகூட எழுதப்பட்டுவிட்டது.

மும்பையின் மாடுங்கா ரயில்நிலையத்தில் அனைத்துப் பணியாளர்களும் பெண்கள். குடியரசுத் தின அணிவகுப்பில் பங்கேற்ற எல்லையோரக் காவல்படையின் பைக் ஓட்டும் பிரிவில் இடம்பெற்றவர்கள் அனைவருமே பெண்கள்தாம். அவர்களின் சாகசம் நிறைந்த செயல்கள் ஒட்டுமொத்த மக்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 

சமூகச் சீர்கேடுகள், சிதைவுகளுக்கு எதிராகப் பல நூற்றாண்டுகளாக தேசத்தில் தனிப்பட்ட ரீதியாகவும், சமூக அளவிலும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன.

குழந்தைத் திருமணம், வரதட்சணைக் கொடுமை போன்ற சமுதாயச் சீர்கேடுகளிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டும். அதற்காக நாமனைவரும் இணைந்து போராடுவோம் என்ற சபதமேற்போம்; புதிய இந்தியா, சக்திபடைத்த, வல்லமைமிக்க இந்தியாவை உருவாக்குவோம் வாருங்கள். 

தேசத்தில் இருக்கும் மிக ஏழை மக்களுக்கும் தரமான, கட்டுப்படியாகக்கூடிய ஆரோக்கிய சேவையை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் மலிவு விலை மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் உடல்நலம் நிறைந்த, வளமான இந்தியாவை நிர்மாணிக்க இயலும்.

மற்றொரு அம்சமாக பத்ம விருதுகளைக் குறிப்பிட விரும்புகிறேன். கடந்த 3 ஆண்டுகளில், இந்த விருதுகளுக்காக யாரை வேண்டுமானாலும் ஒருவர் பரிந்துரைக்கலாம் என்ற மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
மிகவும் எளிய மனிதர்களுக்குக் கூட பத்ம விருது கிடைத்திருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். பொதுவாக, பெரு நகரங்களிலும், செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும், விழாக்களிலும் அதிகம் தென்படாதவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஒரு நபர் பிரபலமாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை, மாறாக அவரது செயல்களே அவரது அடையாளமாகக் கொள்ளப்படுகின்றன. 

வெளிநாடுவாழ் இந்தியர்கள் பலரும், இங்கிருந்து பல்வேறு நாடுகளில் குடிபெயர்ந்து பல்வேறு துறைகளில் தங்களின் திறமைகளை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறார்கள். இணையப்பாதுகாப்பு, ஆயுர்வேதம், இசை, கவிதைகள், பருவநிலை மாற்றம் பற்றிய ஆராய்ச்சி, இந்திய இலக்கியம் என, பல துறைகளிலும் அவர்கள் முத்திரை பதித்திருக்கிறார்கள். தங்களுக்கென ஓர் அடையாளத்தை அவர்கள் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். 

தேசத் தந்தை அண்ணல் காந்தியடிகள், வறட்டுச் சித்தாந்தங்களை நமக்கு அளிக்கவில்லை. இன்றைய காலகட்டத்திலும்கூட, அண்ணலின் போதனைகள் எத்தனை சத்தியமானவையாக இருக்கின்றன என்பதை நாம் ஒவ்வொரு கட்டத்திலும் கண்கூடாகக் கண்டு வருகிறோம். நம்மால் முடிந்தமட்டில், அண்ணலின் அடியொற்றி நாம் செல்லத் தீர்மானம் மேற்கொண்டால், அவரின் நினைவுநாளில் அவருக்கு இதைவிடப் பெரிய அஞ்சலி நம்மால் வேறு என்ன செலுத்த முடியும்?" என்றார் பிரதமர் மோடி

அடுத்த கட்டுரைக்கு