Published:Updated:

’’சசிகலா கோரிக்கையை ஏற்றார் ஆறுமுகசாமி!’’ - தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட விசாரணை

தினேஷ் ராமையா
’’சசிகலா கோரிக்கையை ஏற்றார் ஆறுமுகசாமி!’’ - தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட விசாரணை
’’சசிகலா கோரிக்கையை ஏற்றார் ஆறுமுகசாமி!’’ - தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட விசாரணை

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆஜராகி விளக்கமளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்த சசிகலா தரப்புக்கு நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சை இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. சென்னை எழிலக வளாகத்தில் செயல்படும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன், அரசு அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள், மருத்துவர்கள், ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஆஜராகி தங்களின் வாக்குமூலங்களை அளித்துவருகின்றனர். அனைவரின் வாக்குமூலங்களும் பிரமாணப் பத்திரங்களும் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன. 

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாகச் சென்னை அப்போலோ மருத்துவமனையும் 2 சூட்கேஸ்கள் கொண்ட ஆவணங்களைத் தாக்கல் செய்தது. சசிகலா சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் நீதிபதி ஆறுமுகசாமி முன்பு ஆஜராகி, ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அதில், விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தவர்கள் அனைவரையும் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை. சசிகலா தரப்பு கோரிக்கையை நிராகரித்த விசாரணை ஆணையம், `இதுவரை 20-க்கும் மேற்பட்டவர்கள் ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். அவர்களிடமெல்லாம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்றால், விசாரணையை முடிக்க 15 ஆண்டுகள் ஆகும். விசாரணை ஆணையத்தில் இனி ஆஜராகி விளக்கமளிப்பவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்திக்கொள்ளலாம்’ என்று கூறி கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 

இந்தநிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆஜராகி விளக்கமளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்த சசிகலா தரப்புக்கு விசாரணை ஆணையம் தற்போது அனுமதியளித்துள்ளது. மேலும், விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தவர்கள் தந்த தகவல்களைக் கொடுக்கவும்  விசாரணை ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளது. விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்த 22 பேருடைய தகவல்கள் சசிகலா தரப்பு வழக்கறிஞரிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை நடத்த 15 நாள்கள் கால அவகாசம் அளித்தும், அதுவரை விசாரணை ஆணையத்தின் விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 12-ம் தேதி விசாரணை ஆணையம், தனது விசாரணையைத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.