Published:Updated:

“நான் முதல்வர் வேட்பாளர் இல்லை!”

“நான் முதல்வர் வேட்பாளர் இல்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“நான் முதல்வர் வேட்பாளர் இல்லை!”

ஆ.விஜயானந்த், படம்: கே.கார்த்திகேயன்

“நான் முதல்வர் வேட்பாளர் இல்லை!”

ஆ.விஜயானந்த், படம்: கே.கார்த்திகேயன்

Published:Updated:
“நான் முதல்வர் வேட்பாளர் இல்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“நான் முதல்வர் வேட்பாளர் இல்லை!”

ட்டசபைத் தேர்தல், கூட்டணிப் பேச்சுவார்த்தை... என தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக இருந்தாலும், எந்தவித அலட்டலும் இல்லாமல் அமைதியாகக் காட்சி அளிக்கிறது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனின் ஆழ்வார்பேட்டை இல்லம். `வரும் தேர்தலில், அ.தி.மு.க-வுடன்தான் வாசன் கூட்டுசேர்வார்’ என்கிற பேச்சுக்கள் இறுதி வடிவம் எடுக்க ஆரம்பித்திருக்கும் சூழலில், ஜி.கே.வாசனைச் சந்தித்தேன்.

``மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடங்கி, 14 மாதங்கள் ஆகிவிட்டன. மக்களிடம் உங்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது?''

“மாவட்ட, நகர, கிராமங்களில் உள்ள பெரும்பாலான காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் கட்சியாக நாங்கள் உருவெடுத்திருக்கிறோம். இந்த ஒரு வருட காலத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டம் என மக்கள் பிரச்னைகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளோம். த.மா.கா வளர்ச்சியடைந்து வருகிறது.”

``1996-ம் ஆண்டு மூப்பனார் கட்சி தொடங்கியபோது காங்கிரஸ் வாக்குவங்கி அவர் வசம் இருந்தது. இந்த வாக்குவங்கி அப்படியே உங்களுக்குக் கிடைக்கும் என எப்படி நம்புகிறீர்கள்... தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை இப்போது பலமாக இருக்கிறதே?''

“மறைந்த தலைவர் மூப்பனாரின் பலம் தனி. அவர் கட்சி தொடங்கியபோது மக்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அன்றைய அ.தி.மு.க அரசுக்கு எதிரான அலை தீவிரமாக இருந்தது. தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் கட்சியைத் தொடங்கி, தீவிரப் பிரசாரம் செய்தார். தேர்தலில் வெற்றி முகம் கிடைத்தது. இப்போது அரசியல் சூழல் மாறிவிட்டது. நான் த.மா.கா-வை ஆரம்பித்ததுகூட கடினமான ஒரு  சூழலில்தான். காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் பெரும் பாலானோர் எங்களோடு இருக்கிறார்கள். உண்மை நிலை, தேர்தலின்போது மக்களுக்குத் தெரியவரும்.’’

“நான் முதல்வர் வேட்பாளர் இல்லை!”

``தமிழ்நாட்டில் `மாற்றம் வேண்டும்’ என்ற கோஷம் முன்பைவிட வேகமாக வலுப்பெறுகிறது. வெள்ளப் பேரிடரைக் கையாள்வதில் உள்ள மெத்தனம், போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இன்னும் மேம்படாதது போன்றவைதான் காரணங்களா?''

“தி.மு.க., அ.தி.மு.க இரண்டு ஆட்சியிலும் சரியான உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப் படவில்லை. வெள்ளத்தைக் கையாள்வதில்கூட நம்மிடம் போதுமான வசதி இல்லை. அதை உருவாக்க வேண்டும் என தி.மு.க., அ.தி.மு.க இதுவரையில் நினைத்ததுகூட இல்லை. இந்தச் சூழ்நிலையில் `இவர்கள் செய்திருக்கலாமே...’ என மக்கள் நினைக்கத்தானே செய்வார்கள்? இவர்கள் மீது மக்களுக்கு சலிப்பு வந்திருக்கலாம். அதேபோல், மக்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கும் வகையில் இன்னோர் அணி அமையவில்லை. அப்படியே புதிதாக ஓர் அமைப்பு வந்தாலும், மக்களின் நம்பிக்கையை முழுமையாக அவர்கள் பெற்றால் மட்டுமே மாற்றம் நடக்கும்.”

``முதல்முறையாக, மக்கள் நலக் கூட்டணிதான் உங்களை கூட்டணிக்கு அழைத்திருக்கிறது. அவர்களைப் பற்றிய உங்கள் பார்வை என்ன?''

“ `மக்கள் நலக் கூட்டணி’யின் தலைவர்கள், மிகுந்த மரியாதைக்கு உரியவர்கள்; அனுபவம் மிகுந்தவர்கள். இன்றைக்கு ஒருமித்தக் கருத்தோடு ஒரு முடிவெடுத்து மக்கள் நலப் பணியைச் செய்துவருகிறார்கள். ‘த.மா.கா-வும் சட்டமன்றத் தேர்தலில் அவர்களோடு இணைந்து செயலாற்ற வேண்டும்’ என்ற எண்ணத்தைத் தெரிவித்தார்கள். அவர்களது கருத்துக்களை முழுமையாகக் கேட்டேன். எங்கள் கட்சியின் மூத்த தலைவர் களோடு விவாதித்து இறுதி முடிவு எடுப்போம்.”

``மக்கள் நலக் கூட்டணி, மக்களிடம் வரவேற்பைப் பெறும் என நினைக்கிறீர்களா?’’

“தேர்தல், அதையொட்டிய கூட்டணி ஆகியவை இறுதி வடிவத்துக்கு வரும்போதுதான் அதைப் பற்றி பேச முடியும். அதுவரையில் ஒவ்வொரு வருக்கும் அவரவர் கூட்டணி முதல் கூட்டணியாகவே தெரியும்.’’

``அ.தி.மு.க அரசு மீது, நீங்கள் மிகவும் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கிறீர்கள் என்கிற விமர்சனம் இருக்கிறதே?’’

“இது என் அரசியல் பாணி. பொதுவாகவே, நான் ஒரு பெரிய செய்தியைச் சொல்ல நினைத்தாலும் அதைத் தலைப்புச் செய்தியாக்கும் வகையில் சொல்ல மாட்டேன். அது என் இயல்பு. `தனிப்பட்ட தாக்குதலோடு செய்தியைச் சொன்னால், அதற்கு நிறைய விளம்பரங்கள் கிடைக்கும்’ என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அ.தி.மு.க-வை விட்டுவிட்டு அடுத்த கட்சிகளுக்கு வாருங்கள்... எந்தக் கட்சித் தலைமையை நான் கடுமையாக விமர்சித்திருக்கிறேன்? எல்லோரிடமும் ஒரே அணுகுமுறைதான். மக்கள் பிரச்னை என்றால் மத்திய அரசோ, மாநில அரசோ என் கருத்தை வலுவாக எடுத்துவைக்கிறேன். எதில் தாமதித்தேன்?”

``சரி... நான்கரை ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

“அதை எல்லாம் தாண்டி, இப்போது தேர்தல் கட்டத்துக்கு வந்துவிட்டோம். அரசியல் களம், மக்கள் முடிவுக்கு வந்துவிட்டது. தேர்தல் வியூகம் வகுக்கத் தொடங்கிவிட்டார்கள். கூட்டணிகள் முடிவான பிறகுதான், மக்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்பது தெரியவரும். ஓர் ஆட்சியில் நல்ல, கெட்ட குணங்கள் இருக்கத்தான் செய்யும். கூட்டணியை எந்தக் கட்சியும் இறுதி செய்யாதபோது, இந்தக் கேள்வியை என்னிடம் அல்ல, வாக்காளர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்.''

`` ‘கூட்டணிக்கு அழைப்புவிடுக்கும்போது காங்கிரஸ் கட்சியை விட்டுவிட மாட்டோம்’ என்கிறார் கருணாநிதி. உங்களை அவர்கள் அழைக்கவில்லையா?’’

“அப்படி எந்த அழைப்பும் வரவில்லை.  த.மா.கா-வைப் பொறுத்தவரையில், தேர்தல் வியூகம் அமைப்பதற்கு இன்னமும் நாட்கள் இருக்கின்றன. என் சுற்றுப்பயணத்தில் நிறையத் தகவல்களை உள்வாங்கிக்கொண்டிருக்கிறேன். அதை வைத்துத்தான் இறுதி முடிவு செய்வேன்.’’

``நீங்கள் இதுவரையில் தேர்தலில் போட்டியிட்டது இல்லை. இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருக்கிறதா?''

“அவசியம் ஏற்பட்டால் நிச்சயம் போட்டியிடுவேன். என் கட்சி, அதன் நிலை ஆகியவற்றைப் பொறுத்து முடிவுசெய்வேன். என் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் கூட்டணி அமையவில்லை என்றால், நிறையப் பேருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என நினைப்பேன். பிரசாரச் சுற்றுப்பயணத்தில்கூட கவனம் செலுத்தலாம். `நான் முதலமைச்சர் வேட்பாளர்’ எனச் சொல்லியிருந்தால் நிற்கவேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டிருக்கும். நான் அப்படிச் சொல்லவில்லையே... மிகத் தெளிவாகவே இருக்கிறேன்.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism