Published:Updated:

`ஓ.பி.எஸ் யார் என்றே தெரிந்திருக்காது'- 1999ஐ நினைவுபடுத்திய தங்கத் தமிழ்ச்செல்வன்!

`ஓ.பி.எஸ் யார் என்றே தெரிந்திருக்காது'- 1999ஐ நினைவுபடுத்திய தங்கத் தமிழ்ச்செல்வன்!
`ஓ.பி.எஸ் யார் என்றே தெரிந்திருக்காது'- 1999ஐ நினைவுபடுத்திய தங்கத் தமிழ்ச்செல்வன்!

"இன்னும் பத்து நாளில் எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம்குறித்த தீர்ப்பு வரும். தீர்ப்பு என்னவாக இருந்தாலும், உங்க ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்" என டி.டி.வி அணியின் கொள்கைப்பரப்பு செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் ஆரூடம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் டி.டி.வி அணி சார்பில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிராகவும் அதை முழுமையாகக் குறைக்க வலியுறுத்தியும், கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தங்கத் தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு பேசுகையில், "தமிழகத்தில் தினமும் 2 கோடி பேர் பயணம் செய்வதற்கு அரசுப் பேருந்தைப்  பயன்படுத்துகிறார்கள். ஆறு வருடங்களுக்குப் பிறகு, அறுபது சதவிகிதம் பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளார், எடப்பாடி பழனிசாமி. அரசுப் போக்குவரத்துக் கழகம் பெரிய அளவில் நஷ்டத்தில் இயங்குகிறது என விளக்கம் சொல்கிறார்கள். வெறும் 1 சதவிகிதம்தான் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டார்கள். அவர்களை அழைத்துப் பேசி, கேட்பதைச் செய்திருந்தால், வேலை நிறுத்தப் போராட்டம் நடந்திருக்காது. அதனால், அரசுக்கு 198 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இதைத் தடுத்திருக்கலாம். இன்றைக்கு, அடித்தட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கும் வகையில் பஸ் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார்கள்.  எல்லோரும் ஆர்ப்பாட்டம் பண்ணும்போது, நாம் ஏன் பொதுக்கூட்டம் நடத்துகிறோம் எனச் சிலர் நினைக்கலாம். 18 எம்.எல்.ஏ-க்கள் ஆளுநர்கிட்ட மனு கொடுத்தற்கே எங்களை தகுதிநீக்கம் செய்துவிட்டார்கள். பஸ் கட்டணத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினால், நம்மளை ஜெயில்ல புடிச்சிக்கூட போடுவார் எடப்பாடி. ஆனாலும் பரவாயில்லை, பஸ் கட்டண உயர்வை முழுமையாக  ரத்துசெய்யும் வரை நம் போராட்டம் ஓயாது.

99-ம் ஆண்டு, டி.டி.வி. தினகரன், எம்.பி தேர்தலில் நின்றிருக்காவிட்டால், ஓ.பி.எஸ் யார் என்றே தமிழகத்துக்குத் தெரிந்திருக்காது. இன்றைக்கும் டீ கடையில்தான் நின்றிருக்க வேண்டும். நாங்கள் எல்லாம் உட்கார்ந்து டீ சாப்பிட்டால், எங்க முன்னாடிகூட உட்கார மாட்டார். உடகாருங்கன்னு சொன்னாகூட டி.டி.வி அண்ணன் முன்னாடி உட்காரக் கூடாது எனச் சொல்லி பவ்யம் காட்டுவார். அதன்பிறகு, அவரை முதலமைச்சர் பதவி வரை வாங்கிக் கொடுத்தவர் டி.டி.வி. அவருக்கே துரோகம் செய்துவிட்டார். அம்மா மறைவுக்குப் பிறகு, பெரிய சிக்கல் ஏற்பட்டது. அப்போது, சசிகலா சிறைக்குச் செல்வதற்கு முன், எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார். அன்றைக்கு கண்ணீர் விட்டு சின்னம்மாவை 'என் வாழ் நாள் முழுவதும் மறக்க மாட்டேன்' என பேசியதோடு சின்னம்மா சிறையிலிருந்து வரும்போது நான் முதல்வர் பதவியை அவரிடம் கொடுத்துவிட்டு , உண்மைத் தொண்டனாகவே இருப்பேன் என முழங்கினார். முதல்வர் பதவி கொடுத்தாங்களே மறு சீராய்வு மனு போட்டு அவரை வெளியே கொண்டுவருவோம் என்ற முயற்சிசெய்து நன்றியைக் காட்டியிருக்கலாம். அதைக்கூட செய்யாமல், சின்னம்மா குடும்பத்தையே கட்சியை விட்டு நீக்குகிறீர்களே எவ்வளவு பெரிய துரோகம். இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் என்னா  நடிப்பு  நடித்தார்கள். அவர்கள் நடிப்புக்கு ஒரு ஆஸ்கர் விருது இல்லை நாற்பது ஆஸ்கர் விருதுகூட தரலாம்.

எல்லோரும் அம்மா இறந்த துக்கத்தில் இருக்கின்ற நேரத்தில், சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்தியது மத்திய அரசு. அப்போது அவர்களிடம் ஒரு டைரி சிக்குகிறது. அதில் முன்னாள் அமைச்சர்கள் இன்னாள் அமைச்சர்கள் எனப் பல பேர் முறைகேடுகள் செய்த விவரம் இருந்தன. உடனே எல்லோரும் டெல்லி சென்று மோடியின் காலில் விழுந்து, எங்கள்மீது எந்த வழக்கும் போட வேண்டாம்; நீங்கள் சொல்வதுபோல நாங்கள் நடந்துகொள்கிறோம் என்று அன்றைக்கு காலில் விழுந்தவர்கள்தான் இன்று வரை எழுந்திருக்கவில்லை. 33 வருஷம் அம்மாகூட இருந்த நீங்க,சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவைப் பற்றி சொல்லிடுங்க உங்களை விட்டுவிடுகிறோம் என அன்றைய அரசு பல வழிகளில் சின்னம்மாவை மிரட்டியது. ஆனால், அதற்கெல்லாம் பயப்படாமல் அம்மாவுடனே சிறையில் இருந்தவர். அம்மா இறந்த பிறகும் அவர்மீது பற்றோடு இருக்கிறாரே அதுதான் விசுவாசம்.

டி.டி.வி என்கிற தனிமனிதனுக்கு ஒரு வருடத்தில் எத்தனையோ சோதனை. எல்லாவற்றையும் கடந்து ஆர்.கே நகர் மக்கள் அவரை வெற்றிபெறவைத்திருக்கிறார்கள். இன்னும் பத்து நாளில் எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம்குறித்த தீர்ப்பு வரும். தீர்ப்பு என்னவாக இருந்தாலும் உங்க ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். மக்கள் பல இன்னல்கள் அனுபவித்துவரும் இந்த வேளையில், அமைச்சர் செல்லூர் ராஜு, முதல்வர், துணை முதல்வரை அழைத்து, பேரப்பிள்ளைகளுக்கு காது குத்தி கிடா விருந்து வைக்கிறார். அந்த அளவுக்கு எல்லா அமைச்சர்களும் கோமாளிகளாக இருப்பதோடு, அவர்களுக்கு மக்களைப் பற்றிய எண்ணம் கொஞ்சம்கூட இல்லை" என்று கூறினார்.