Published:Updated:

ரஜினி கட்சியில் சேர்வாரா லதா? - லக...லக...லக...லதா! பகுதி- 5

ரஜினி கட்சியில் சேர்வாரா லதா? - லக...லக...லக...லதா! பகுதி- 5
ரஜினி கட்சியில் சேர்வாரா லதா? - லக...லக...லக...லதா! பகுதி- 5

ரஜினி கட்சியில் சேர்வாரா லதா? - லக...லக...லக...லதா! பகுதி- 5

ரஜினி கட்சியில் சேர்வாரா லதா? - லக...லக...லக...லதா! பகுதி- 5


எம்.ஜி.ஆர் 1977-ல் முதலமைச்சர் ஆன பிறகு லதா தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் எனத் தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். தமிழ்த் திரையுலகில் டாப் ஸ்டார்களோடு ஜோடி சேர்ந்து தன் நடிப்பை தொடர்ந்தார். ரஜினிகாந்துடன் சங்கர் சலீம் சைமன் (1977), ஆயிரம் ஜென்மங்கள் (1978) ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே நடித்தார். ஆனால், இன்று வரை லதா என்றால் ரஜினிகாந்த் பெயரும் சேர்ந்தே சிந்தனைக்கு வருகிறது. லதா கமலுடன் தமிழில் ‘நீயா’ படத்திலும் மலையாளத்தில் ‘வயநாட்டு தம்பிரான்’ படத்தில் அவருடன் மேக்கப் இல்லாமலும் நடித்தார். சிவாஜி கணேசனுடன் ‘சிவகாமியின் செல்வன்’ என்ற படத்தில் மட்டும் நடித்தார். டாக்டர் சிவா மற்றும் ‘எமனுக்கு எமன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு எம்.ஜி ஆருடனான இவரது ஒப்பந்தம் தொடர்ந்ததால் மஞ்சுளாவுக்குப் போயிற்று. 

ரஜினியுடன் முதல் நாள் நடித்த அனுபவத்தைச் சொல்கிறார் லதா. ‘‘ ‘சங்கர் சலீம் சைமன்’ படத்தில் நடிக்க ஸ்டுடியோவுக்கு வந்தேன். மேக்கப் போட்டுக்கொண்டிருந்தபோது டைரக்டர் மாதவன் உள்ளே வந்தார். ‘லதாம்மா ரஜினி உங்களுடன் நடிப்பதில் டென்ஷனாக இருக்கிறார்’ என்றார். ‘அப்படியா சரி நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டு நேரே ரஜினியின் மேக்கப் ரூமுக்குப் போனேன். ‘ஹலோ ரஜினி நல்லா இருக்கீங்களா’ என்று அவருடன் கலகலப்பாகப் பேசத் தொடங்கினேன். ‘இவங்க ரொம்ப சாஃப்ட்... நாம நெனச்ச மாதிரி இல்ல’ என்று ரஜினி நிம்மதி பெருமூச்சு விட்டார். இப்படி ஆரம்பித்த எங்களின் நட்பு இன்று வீடு வரைக்கும் போய் விசேஷங்களில் கலந்துகொள்வது வரை வந்துவிட்டது’’ என்றார் லதா.

ரஜினி கட்சியில் சேர்வாரா லதா? - லக...லக...லக...லதா! பகுதி- 5

லதா வீட்டில் ரஜினி

சிங்கப்பூரில் லதா வீட்டுக்கு வருகை தந்த ரஜினி அவர் மகனிடம் தான் ஒரு காலத்தில் லதாவை நினைத்து பயந்த விஷயங்களைச் சொல்லி சிரித்திருக்கிறார். ‘நிவாஸ் அப்போ உங்கம்மா எம்.ஜி.ஆர் கதாநாயகி. அவர் முன்னாடி சிகரெட் பிடிக்கக் கூடாது, சிரிக்கக் கூடாது, கால்  மேலே கால் போட்டு உட்காரக் கூடாது’ என்று சொல்லி என்னை டென்ஷன் படுத்திட்டாங்கப்பா. நானும் ரொம்ப பயந்துட்டேன். ஆனால் நெஜத்துல அவுங்க அப்படி இல்ல’ என்றாராம். நிவாஸுக்கு அவர் அம்மா லதா வாழ்க்கையின் ரோல் மாடல் . அவர் அந்தளவுக்கு தன் அம்மாவை நேசிக்கிறார்.

ஆயிரம் ஜென்மங்கள் லதா

1978-ல் வெளிவந்த ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் லதாவுக்கு அண்ணனாக ரஜினிகாந்த் நடித்தார். லதாவின் உடலில் பத்மப்ரியாவின் ஆவி புகுந்து தங்கிவிட துடிக்கும் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த ஆவியைத் துரத்திவிட்டு தன் தங்கையை வாழவைக்கும் பாசம் மிக்க  அண்ணனாக ரஜினிகாந்த் நடித்தார். விஜயகுமார் லதாவுக்குக் கணவனாக நடித்தார். இப்படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் இடையே நல்ல பாசமும் அன்பும் வளர்ந்து வந்தது. அதை இட்டுக்கட்டி எழுதிய ஒரு பத்திரிகையாளரை ரஜினி உதைத்தார். பின்பு பத்திரிகையாளர்களை அழைத்து தன் திருமணத் தகவலைச் சொல்லிவிட்டு மறுநாள் காலையில் அவசரம் அவசரமாக திருப்பதிக்குப் போய் தன் காதலியான கல்லூரி மாணவி லதாவை மணந்துகொண்டார். இவர் ஒய்.ஜி.மகேந்திரன் மனைவியின் தங்கை ஆவார்.

லதா போனார்; மீண்டும் வந்தார்

1982 வரை திரையுலகில் நடித்து வந்த லதா பின்பு திருமணம் செய்துகொண்டு சிங்கப்பூர் சென்றார். அங்கு அவர் தன் மகன்கள் கார்த்திக்  நிவாஸ் மற்றும் கணவர் சபாபதியுடன் வாழ்ந்து வந்தார். இடையில் லண்டனிலும் சில வருடங்கள் வசித்தார். அவர் மகன்கள் இலண்டனில் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பட்டப்படிப்பு பயின்றனர். 1986-ல் லதாவின் அம்மா நோய்வாய்ப்பட்டார். அவரை அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர். லதாவின் தங்கை திருமணம் ஆகாமல் இருந்தார். இந்நிலையில் லதாவின் தாயார் இயற்கை எய்தினார். லதாவுக்குத் தன் தாய்வீட்டு சுமையும் தோளில் ஏறியது. மீண்டும் 1992 முதல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். சித்தி, செல்வி, கஸ்தூரி, வள்ளி போன்ற சீரியல்களிலும் நடித்தார். 

ரஜினி கட்சியில் சேர்வாரா லதா? - லக...லக...லக...லதா! பகுதி- 5

புதுக்கட்சி தொடங்கும் ரஜினி

1991 முதல் அரசியலில் வாய்ஸ் கொடுத்து வந்த ரஜினிகாந்த் ஒருவழியாக இப்போது அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்துவிட்டார். உடனே ஊடகங்கள் லதாவும் ரஜினிகாந்த் கட்சிக்கு வருவாரோ என்ற ஆவலை கிளப்பிவிட்டன. லதா அரசியலுக்குப் புதியவர் அல்ல. அவர் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்பு அதிமுக இரண்டாகப் பிரிந்து பின்பு ஜெ அணியில் அவருக்குப் பக்கபலமாக இருந்த  திருநாவுக்கரசு போன்றவர்கள் வெளியேற்றப்பட்டு தனிக்கட்சி தொடங்கினர். அப்போது லதா திருநாவுக்கரசின் கட்சியில் கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்பு அக்கட்சி தன் தாய்க் கட்சியான அதிமுகவில் இணைந்ததும் லதா சிறிது காலம் ஒதுங்கி இருந்தார். பின்பு அவர் அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளர்களுள் ஒருவரானார். எனவே லதா ரஜினி கட்சியில் சேர்வார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

ரஜினி கட்சியில் லதா சேர்வாரா?

லதாவிடம் போய் ரஜினி கட்சி ஆரம்பித்திருக்கிறாரே அது பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டனர். அவர் அதற்கு கூலாக ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் அவருக்கு என் வாழ்த்துகள் என்றார். நீங்கள் அதிமுகவில் இருந்துகொண்டு அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கலாமா என்று அடுத்த கொக்கியைப் போட்டனர். லதா, சிரித்துக்கொண்டே, ஒரு குடும்பத்தில் இருப்பவர் வெவ்வேறு கட்சியில் இருப்பதில்லையா? என்று பதில் கொக்கி போட்டார். அடுத்து நிருபர் ‘‘ரஜினி கட்சியில் நீங்கள் சேர்வீர்களா?’’ என்று கேட்டார். லதா ரஜினி இன்னும் கட்சி தொடங்கவேயில்லை. தொடங்குவதாக அறிவித்திருக்கிறார். பெறாத பிள்ளைக்குப் பேர் வைக்க சொல்கிறீர்களே என்று மடக்கினார். வேறு ஒருவர் இதே கேள்வியைக் கேட்டார். பத்திரிகைக்கு பேட்டியளிப்பதில் வித்தகியான லதா அப்போதும்  ‘போகாத ஊருக்கு வழி கேட்கிறீர்களே’’ என்று முற்றுப்புள்ளி வைத்தார். ஆக அன்று முதல் இன்று வரை எம்.ஜி.ஆரின் விசுவாசியாகவே லதா இருந்து வருகிறார். தன்னைத் திரையுலகில் ஆளாக்கிய எம்.ஜி.ஆரின் அதிமுக கட்சிக்குத் தன்னாலான உதவியை, கொள்கைப் பரப்பும் பணியைச் செய்ய லதா ஆர்வமாக இருக்கிறார். அவரது ஆர்வத்தை அதிமுக புரிந்து செயல்படுத்துமா அல்லது அவரை ரஜினி கமல் கட்சிகளுக்குத் தள்ளிவிடுமா என்பதை காலம்தான் கணிக்கும்.

(நிறைவு)

அடுத்த கட்டுரைக்கு