Published:Updated:

ஆயில் அரசியல்!

ஆயில் அரசியல்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆயில் அரசியல்!

ஆ.விஜயானந்த், ஓவியம்:கார்த்திகேயன் மேடி

‘அஞ்சு கோடிப் பேர்கிட்ட அஞ்சு அஞ்சு பைசாவா திருடறது தப்பா?’ என்ற ‘அந்நியன்’ படத்தின் டயலாக் எதற்குப் பொருந்து கிறதோ இல்லையோ, இந்தியாவில் நடக்கும் ஆயில் அரசியலுக்கு ரொம்பவே பொருந்தும். கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்குச் சரிந்து விட்டாலும், அந்தச் சரிவின் பலன் சாமானிய மக்களுக்கு இதுவரை வந்துசேரவில்லை.

ஆயில் அரசியல்!

2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 105 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, தற்போது வெறும் 30 டாலர்தான். அந்தக் கணக்குப்படி அப்போது 70 ரூபாய்க்கு விற்பனையான பெட்ரோல், இன்று 20 ரூபாயாகக் குறைந்திருக்க வேண்டும். ஆனால், இப்போதும் பெட்ரோலின் விலை 60 ரூபாய் அளவிலேயே இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி உயர்த்தப் படும் பெட்ரோல், டீசலின் விலை... ஏன் அது குறைந்ததும் குறைக்கப்படுவது இல்லை? இதனால் லாபம் அடைவது யார்? லாபத்தில் பங்குதாரர்கள் அரசியல்வாதிகளா... தொழிலதிபர்களா?

சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் மதிப்பு, கடந்த சில மாதங்களாகச் சரிந்துவருகிறது. ‘இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்த விலை குறைப்பு நீடிக்கும் என்பதில் மாற்றம் இல்லை’ என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். இதற்கு வலுசேர்க்கும் விதமாக சில விஷயங்களையும் அவர்கள் மேற்கோள் காட்டுகிறார்கள்.

``அறுபது சதவிகிதம் கச்சா எண்ணெய் உற்பத்திசெய்யும் நாடுகள், கூட்டாக இணைந்து `ஓபெக்' என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த அமைப்பில் சவுதி அரேபியா, ஈரான், ஈராக், வெனிசூலா... போன்ற எண்ணெய் வள நாடுகள் உள்ளன. உலக அளவில் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயிப் பதில் இந்த அமைப்புதான் முக்கியப் பங்காற்றுகிறது. கடந்த சில ஆண்டுகளாக உலகப் பொருளாதார வளர்ச்சி எதிர் பார்த்த அளவுக்கு உயர்வடையவில்லை. அதன் விளைவாகத்தான் கச்சா எண்ணெயின் விலையும் குறையத் தொடங்கியது. எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பி பட்ஜெட் போடும் நாடுகள் இந்த விலை சரிவால் பெரும் அளவில் பற்றாக்குறைக்கு ஆளாகியிருந்தாலும், சமீபத்தில் நடந்த `ஓபெக்' மாநாட்டில் உற்பத்தியைக் குறைப்பது இல்லை என்ற முடிவை எடுத்துள்ளனர். உலகின் வளர்ந்த நாடுகள் மாற்று எரிபொருள் சக்திக்கு முன்பைவிட வேகமாக இயங்குவதும் இந்த முடிவுக்கும், விலை சரிவுக்கும் காரணம்.

உலகம் முழுவதும் மாற்று எரிபொருளைக் கண்டடைவதற்கான தேவை அதிகரித்துவிட்டது. பெட்ரோலுக்கு மாற்று என்பதைக் கண்டுபிடிப்ப தற்கான ஆராய்ச்சி 1980-ம் ஆண்டில் இருந்தே நடந்துவருகிறது. 1985-ம் ஆண்டு விண்டு எனர்ஜி வந்தது. இப்போது சோலார் எனர்ஜி, ஹைட்ரஜன் எனர்ஜி என மாற்றைக் கண்டுபிடித்துவிட்டார்கள். அரபு நாடுகளைத் தவிர்த்து, அமெரிக்காவில் `ஷேல் (Shale) காஸ்' எனப்படும் மண்ணுக்குள் புதைந்துள்ள கச்சா மூலப்பொருளைப் பிரித்து எடுக்கும் வேலைகள் 2008-ம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டன.அமெரிக்காவில் பெட்ரோலை `காஸ்' என்பார்கள்.

அமெரிக்காவின் வடக்கு மாகாணங்களில் ஷேல் காஸ் மண்ணுக்குள் இருந்து எடுக்கப் படுகிறது. இதற்கான செலவு பீப்பாய்க்கு 40 டாலர். கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 60, 70 டாலர் என அதிகரிக்கும்போது, ஷேல் காஸ் வெறும் 40 டாலர்தான் என்பதால் உற்சாகமானது அமெரிக்க அரசு. உடனடியாக இந்த ஷேல் காஸை மற்ற நாடு களுக்கு ஏற்றுமதி செய்யவும் தொடங்கியது. இது அரபு நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனால் கச்சா எண்ணெய் விலையைக் குறைத்தால் ஷேல் காஸ் விற்பனை ஆட்டம் கண்டுவிடும் என்பதால், கச்சா எண்ணெய் விலை குறைக்க ஆரம்பித்தது ஓபெக். இதில் அரசியல் இல்லாமல் இல்லை. அமெரிக்காவின் இந்தச் செயலுக்கு முக்கியக் காரணம், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு களுக்கு அரபு நாடுகளின் பெட்ரோல் பணம் போகிறது என்பதுதான். பெட்ரோல் நாடுகளின் முதுகெலும்பை உடைத்துவிட்டால், அவர்கள் வழிக்கு வந்துவிடுவார்கள் என அமெரிக்கா நினைக்கிறது. எனவேதான், ஷேல் காஸ் உற்பத்தி மூலம் அரபு நாடுகளையும் ரஷ்யாவையும் வழிக்குக் கொண்டுவர அமெரிக்கா இந்த ஆயுதத்தை எடுத்துள்ளது என்ற ஒரு பேச்சும் வலுவாகவே உள்ளது” என்கின்றனர்.

ஆயில் அரசியல்!

``உலக அரங்கில் விலை குறையும்போது, இந்தியாவில் விலை குறைப்பைச் சாத்தியப் படுத்தாமல், கூடுதல் வரிகளை மக்கள் மீது திணிப்பது ஏன்?’’ என்ற கேள்வியை, முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் முன்வைத்தோம்.

“அரசியல் கலப்பு இல்லாமல் இந்த விவகாரத்தைப் பேசுவதுதான் சரியானதாக இருக்கும். முன்னர் இருந்த காங்கிரஸ் அரசும் தற்போதைய பா.ஜ.க அரசும் நடுத்தரவர்க்க மக்களுக்கு எதுவும் செய்ய நினைத்தது இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 77 ரூபாய் என இருந்ததை 59 ரூபாய்க்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், கச்சா எண்ணெய் விலை குறைந்த அளவுக்கு பெட்ரோல் விலையைக் குறைக்கவில்லை. எண்ணெய் விலை இரண்டு ரூபாய் அதிகம் இருந்தால், ஒரு ரூபாய் கட்டணம் ஏற்றிவிட்டு, மீதி ஒரு ரூபாயை வரியாக மாற்றிவிடுகிறார்கள். அரசின் இந்தச் சாமர்த்தியத்தை மக்கள் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை. கலால் வரி என்ற பெயரில் கூடுதல் சுமை நமக்கு ஏற்றப்பட்டிருக்கிறது. சமூக வலைதளங்களில் இருக்கும் நடுத்தர வர்க்கம்தான் கூச்சலிடுகிறது. பேருந்தில் பயணிக்கும் சாமானிய மக்களுக்கு இதன் பாதிப்பு இன்னும் புரியவில்லை.

300 ரூபாய்க்கு விற்ற சமையல் காஸ் சிலிண்டர் 900 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதைப் பற்றி யாருமே பேசுவது இல்லை. மத்திய அரசு அதிகப்படியான கலால் வரியை வசூலிக்கிறது. கச்சா எண்ணெய் விலை சரிவு என்பது நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம். இப்படி ஒரு சூழல் இந்தியாவுக்கு இனி கிடைக்கவே கிடைக்காது. இந்த நிலையில் எப்படிப்பட்ட வளர்ச்சியை இந்த அரசு காட்ட வேண்டுமோ, அதைக் காட்டவில்லை” என்றார் ஆதங்கத்தோடு.

``பிழைப்புக்காக டூ வீலர் ஓட்டுபவர்கள் நம் நாட்டில் அதிகம். கலால் வரியை ஏற்றுவதன் மூலம் நேரடியாகவே அவர்கள் மேல் சுமையை ஏற்றிவைக்கிறது மத்திய அரசு'' என்கிறார் பொருளாதார ஆலோசகர் ஜெயரஞ்சன்.

“ `வரியை ஏற்றி மக்கள் நலத்திட்டங்களுக்கு செலவுசெய்கிறோம்' என்கிறது மத்திய அரசு. ஆனால், பல திட்டங்களின் மானியங்களை மத்திய அரசு குறைத்துவருகிறது என்பதுதான் உண்மை. மக்களின் நலன்களை மாநில அரசுதான் கவனித்துக்கொண்டிருக்கிறது. கலால் வரியின் பலன் சாதாரண மனிதனுக்குச் செல்லாமல் பார்த்துக்கொள்கிறார்கள். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரியைக் குறைக்கிறார்கள். டீசல் விலை குறைந்துவிட்டாலும், காய்கறி விலை குறைந்துவிட்டதா... இல்லை. விலையேற்றம் மட்டுமே நடக்கிறது. விலை குறைப்பு எப்போதும் நடந்தது இல்லை. இப்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் லாபம் எங்கேயோ போய்விட்டது” என வேதனைப்படுகிறார் ஜெயரஞ்சன்.

ஆயில் அரசியல்!

பெட்ரோல், டீசல் மீதான வரிகள் மூலம் பொதுத் துறை நிறுவனங்கள் அடைந்த லாபத்தை அவர்களது இணையதளங்களே சுட்டிக் காட்டுகின்றன. இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள் கடந்த காலங்களைவிட, பெட்ரோல் மீதான கூடுதல் வரியின் மூலம் அதிக லாபம் அடைந்துள்ளன.

11.1.2016 அன்று பெட்ரோலியம் ப்ளானிங் அண்ட் அனாலிசிஸ் செல் கொடுத்திருக்கும் அறிக்கை மிக முக்கியமானது. பெட்ரோலிய பொருட்கள் மீதான கஸ்டம்ஸ், செஸ் வரி ஆகியவற்றின் மூலம் கடந்த ஆறு மாதங்களில் அரசு கஜானாவுக்குச் சென்ற தொகை 85,914 கோடி. இதே 2014-15ம் ஆண்டில் கிடைத்த ஒட்டுமொத்த வருமானம் 1,26,219 கோடி ரூபாய். ஓர் ஆண்டு முழுவதும் கிடைக்கவேண்டிய வரி வருவாயை ஆறு மாத காலத்துக்குள் மத்திய அரசின் கஜானாவுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் கொண்டுசென்றிருக்கிறது. இது தவிர, விற்பனை வரி, நுழைவு வரி உள்ளிட்ட மற்ற வரிகளையும் கணக்கிட்டால், ஆறு மாதகால வருமானம் மட்டும் 1,84,949 கோடி ரூபாய். இதில், கலால் வரியின் மூலம் மட்டும் கடந்த ஆறு மாதங்களில் 70,494 கோடி ரூபாய் வருமானம் வந்திருக்கிறது. ஓர் ஆண்டுக்கு என கணக்கு வைத்துக்கொண்டால், ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கலால் வரி மூலம் கிடைக்கப்போகிறது. இதில் மாநில அரசுக்கு வாட் உள்ளிட்ட வரிகள் மூலம் கடந்த ஆறு மாதங்களில் 5,793 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு பெட்ரோலிய நிறுவனங்கள் அரசுக்கு வருவாயை ஈட்டித்தந்துள்ளன.

“இத்தனை கோடி வருமானம் வந்திருப்பது நாட்டுக்கு நல்லதுதானே?” என்ற கேள்வியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரான கனகராஜிடம் கேட்டோம்.

“இந்தியாவில் 1.4.2002 முன்னர் வரை மத்திய அரசுதான் ஆயில் விலையைத் தீர்மானித்து வந்தது. அப்போது வாஜ்பாய் பிரதமர், பெட்ரோலியத் துறை அமைச்சராக ராம்நாயக் இருந்தார். அவர்கள், ‘சந்தைதான் விலையைத் தீர்மானிக்கும்’ எனக் கொண்டுவந்தார்கள். `கச்சா எண்ணெய் விலை கூடும்போது கூடும், குறையும்போது குறையும்' என்றார்கள். ஆனால், அரசு அதைச் செய்யவில்லை. விலை குறையும்போது கண்துடைப்புக்காக விலை குறைப்பைச் செய்தார்கள். 24.05.2014-ல் மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு கச்சா எண்ணெய் விலை 107 டாலர். அன்றைக்கு பெட்ரோல் விலை 71 ரூபாய். அதற்கான கலால் வரி 9.48 பைசா என நிர்ணயித்து இருந்தனர். இப்போது கச்சா எண்ணெய் விலை 70 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆனால், கலால் வரியை 20 ரூபாய்க்கும் அதிகமாக நிர்ணயித்துவிட்டார்கள். கலால் வரியை ஏற்றாமல் இருந்தால் 20 ரூபாய்க்கு பெட்ரோலைக் கொடுக்க முடியும்.

இந்தியாவில் ஒரு நாளைக்கு 200 கோடி லிட்டர் பெட்ரோலும், 850 கோடி லிட்டர் டீசலும் விற்பனையாகின்றன. ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஒரு ரூபாய் லாபம் என்றால், 200 கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் வரும். டீசலில் 850 கோடி ரூபாய் வரும். 40 ரூபாய் என்றால், 8,000 கோடி ரூபாய் அரசுக்குச் செல்கிறது. நமது நாட்டில் வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயை மூன்று 'F'-களுக்கு மானியமாகத் தருகிறார்கள். ஒன்று எரிபொருள் (fuel) இரண்டாவது உணவு (food), மூன்றாவது உரம் (fertiliser). உரத்துக்கான மானியம் என்பது, யூரியாவைத் தவிர மற்ற எல்லாவற்றுக்கும் நீக்கிவிட்டார்கள். உணவுக்கான மானியத்தையும் பெரும் அளவு குறைத்துவிட்டார்கள். எரிபொருளுக்கு என அரசு ஒரு பைசாகூட மானியம் கொடுப்பது இல்லை என்பதுதான் இப்போதைய நிலை.

எல்.பி.ஜி காஸ் சிலிண்டருக்கு 22.48 ரூபாய் மானியம் கொடுக்கிறார்கள். இது மட்டும்தான் இவர்கள் வரிகள் மூலம் மக்களுக்கு நன்மை செய்யும் லட்சணம். சமீபத்தில் பொருளாதார அறிஞர் தாமஸ் பிக்கெட்டி பேசும்போது,

‘இந்தியாவில் சொத்து வரி கைவிடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சர்வதேச அளவில் ஏழை, பணக்காரர் இடைவெளி அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் இருக்கும்

50 சதவிகித மக்களுக்கு இருக்கும் சொத்து, முதல் வரிசையில் இருக்கும் பணக்காரர்களிடம் இருக்கிறது’ என்கிறார்.

சொத்து வரியைக் கைவிட வேண்டும் என யாரும் கேட்கவில்லை. ஆனால், கார்ப்பரேட் வரியை 25 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதத்துக்கு கொண்டுபோக மத்திய அரசு முனைப்போடு இருக்கிறது. இதனால் சாதாரண மக்கள் மீது வரிச்சுமை அதிகப்படியாக வரும். அரசாங்கம் என்பது, பிசினஸ் ஃப்ரெண்ட்லியாக இருக்கிறது. பீப்பிள் ஃப்ரெண்ட்லியாக அது மாற வேண்டும். ரிலையன்ஸ் மாதிரியான நிறுவனங்கள் சுத்திகரிப்பு வேலையை இந்தியாவில் செய்துவிட்டு, வெளிநாட்டுக்கு எரிபொருளை விற்கிறார்கள். ஏனெனில், இங்கு உற்பத்திக்கான விலை குறைவு. தனியார் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு எல்லா வசதிகளையும் செய்துகொடுத்துவிட்டு, பொதுமக்கள் தலையில் மிகப் பெரிய சுமையை இறக்கிவைக்கிறார்கள்” என எச்சரிக்கிறார்.

பெட்ரோல், டீசல் விலை உயரும்போது எல்லாம் அரசின் பதில் ஒன்றுதான், ‘ எரிபொருள் விலை உயர்வுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், உள்நாட்டிலும் உயரும். உலகச் சந்தையில் குறைந்தால்,  உள்நாட்டிலும் குறையும்’ என்கிறது. இப்படிச் சொல்லிக் கொண்டே, வரியின் மூலம் பல லட்சம் கோடி ரூபாயை வருமானமாகப் பெறுகிறது மத்திய அரசு. இந்த ஆயில் ஆட்டத்தில் ஒன்றும் புரியாமல் விழி பிதுங்கி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறான் வரி கட்டும் குடிமகன்!

எப்படி கை வைக்கிறார்கள்?

ஆயில் அரசியல்!

ரு பேரல் கச்சா எண்ணெய் என்பது 159 லிட்டர். இந்தக் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்க, 21.67 ரூபாய் செலவாகிறது. பெட்ரோல் பங்க் டீலருக்கு லிட்டர் பெட்ரோல் 24.50 காசுக்கு விற்கப்படுகிறது. இதற்கு கலால் வரி லிட்டருக்கு ரூ.20.48, விற்பனை கமிஷன் ரூ.2.25, வாட் வரி ரூ.11.81. மொத்தமாகக் கூட்டினால் ரூ.59.04 பைசா ஒரு லிட்டர் பெட்ரோலுக்குக் கொடுக்கிறோம். கொள்முதல் விலை வெறும் 21.67 ரூபாய்தான். சாமானிய மனிதன் 60 சதவிகிதத்துக்கும்மேல் வரியைக் கட்டி எரிபொருளைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறான். வரியை, மத்திய-மாநில அரசுகள் பங்கு போட்டுக்கொள்கின்றன!